தமிழகத்தின் அடிமை முறை (நூல்)

தமிழகத்தின் அடிமை முறை நூல் , பொற்காலம் என்று புகழப்பட்ட அந்தக் காலத்திலிருந்து 21ம் நூற்றாண்டின் காலம் வரையிலும் தமிழ்நாட்டில் நிலவிய அடிமைமுறையை கல்வெட்டுகள், செப்பேடுகள், ஓலைச்சுவடிகள், காகித ஆவணங்கள், இலக்கியம் ஆகியவற்றின் துணையுடன் ஆராய்கிறது. இந் நூலின் ஆசிரியர் ஆ.சிவசுப்பிரமணியன் .[1]

முன்னுரை

தொகு

இந்நூலின் முன்னுரையிலேயே தமிழ்ச் சமுதாயத்தில் நிலவி வந்த கொத்தடிமை முறையினைப் பற்றி சொல்லுகிறபோது, அமிஞ்சி, அடிமை, அடியான், மூப்படியான், படியான், பண்புசாலியான், குடிப்பறையன், கொத்தடிமை என பல்வேறு பெயர்களில் தமிழர்களில் ஒரு பிரிவினர் அடிமைகளாய் அல்லல்பட்டு ஆற்றாது அழுது மடிந்த துயர நிகழ்ச்சிகள் மறக்க முடியாத வரலாற்றுண்மைகளாகும் என்கிறார். இத்தகைய வரலாறு இன்னும் முடிந்து போகவில்லை. இன்றும் புதிய வடிவில் பல்வேறு தொழில்களில் அடிமைநிலை நீக்கமற நின்று நிலவுகிறது என்கிறார். ஆதி பொதுவுடமை சமுதாயத்தில் கிடைத்த உணவை இனக்குழுக்கள் சமமாகப் பகிர்ந்து உண்டன; பட்டினி என்றாலும் பகிர்ந்து கொண்டனர். அன்று உற்பத்தி முறை மிகக் கீழாக இருந்த காலம். ஆகவேதான் ஆதி பொதுவுடமை சமுதாயத்தில் ஒரு இனக்குழு மற்றொரு இனக்குழு மீது போர் தொடுத்த போது, தோற்றுவிட்ட போர்க் கைதிகளைக் கொன்று போட்டார்கள்.உற்பத்தி முறையில் மாற்றம் வந்தபோதுதான் தேவைக்கு அதிகமான உபரி உற்பத்தி மெல்ல மெல்ல வளர்ச்சியுற்ற போதுதான் போர்க் கைதிகளைக் கொல்லுவதற்கு பதிலாக அவர்களை உற்பத்தியில் ஈடுபட வைத்து, உபரி உற்பத்தியை மேலும் மேலும் பெருக்கினார்கள். போர்க் கைதிகள் அடிமைகள் ஆக்கப்பட்டார்கள்.வேதகால இந்தியாவில் தயூ அல்லது தா என்ற சொல் முதலில் பகைவரையும், பின்னர் தாஸர் என்ற சொல் அடிமையையும் குறித்தது என்கிறார்.[2]

போரின் அடிமைகள்

தொகு

சேரன் செங்குட்டுவன் கனக விசயர் தலையில் கல்லேற்றி கொண்டு வந்ததை தமிழர்களின் வீரத்தின் விளை நிலத்திற்கு அடையாளம் என்று பேசினாலும், தோற்றவர்களை அடிமைகளாக்கி அவர்களைக் கொண்டு தமிழகத்தில் கற்கோவில் கட்டியதும், காவற் கோட்டை கட்டியதும், அணை கட்டியதும் அன்றைய சமூகத்தின் அவசியமாக இருந்தது .உற்பத்தி சக்திகள் உயராத, வளராத அன்றைய சமுதாயம் இயங்க, வளர அடிமை முறை தேவைப்பட்டது. அத்தியாவசியமாக இருந்தது; இந்த அடிமைக்களும் உற்பத்திக் கருவிகளாகவே, பேசும் கருவிகளாகவே கருதப்பட்டார்கள்.தமிழகத்தில் அன்றைய நிலையில் சிறை பிடித்து கொண்டு வரப்பட்ட பெண்களைப் பற்றி குறிப்பிடுகிற பட்டினப் பாலை ஆசிரியர் அவர்களை கொண்டி மகளிர் என்று சொல்கிறார்.கொண்டி என்பதற்கு கொள்ளை என்று பொருள். கொண்டு, பிறர் நாட்டில் கொள்ளையிட்டுக் கொணர்ந்த பெண்டிர்கள் என்பதற்கு கொண்டி மகளிர் என்று அர்த்தப்படும். இந்தப் பெண்கள் காவிரிப் பூப்பட்டினத்திலுள்ள அம்பலங்களில் விளக்கேற்றும் பணி செய்தவர்கள்.சங்க காலத்தில் வாணிபம் செழித்து வளர்ந்த நெய்தல் பகுதிகளிலும், உணவு உற்பத்தி செய்து வாழ்ந்த மருத நிலப் பகுதிகளிலும் உபரி உற்பத்தியைக் பெருக்க இன்றையது போல் இயந்திரங்கள் வளரா அக்கலாத்தில் அடிமைகளைப் பயன்படுத்தியது தவிர்க்க முடியாத சமூக விளைவாக இருந்தது. அன்றைய தமிழகத்திலும், கேரளத்தில் பெரும்பகுதியும் மூவேந்தர்களாலும், பல குறுநில மன்னர்களாலும் ஆளப்பட்டது என்பதனை நினைவில் கொண்டால், பிறர் நாடு என்பது பெரும்பாலும் தமிழகத்தின் ஏதாவது ஒரு பகுதியினையே குறிக்கும். எனவே, போரில் தோற்ற தமிழ் மன்னர்களின் மனைவியர்களும், அந்நாட்டு மகளிரும் அடிமைகளாகப் பகைவர் நாட்டில் பணி புரிந்துள்ளது தெளிவு என நூலாசிரியர் ஆ.சிவசுப்ரமணியம் குறிப்பிடுகிறார்.[2]

வீட்டடிமை முறை

தொகு

தமிழர் வீடுகளிலும் வீட்டடிமை முறை இருந்தது என்பதை முல்லைக் கலியில் ஒரு பாடலைக் காட்டி நூலாசிரியர் விளக்குகிறார்.தலைவன் (காதலன்) தலைவியிடம் (காதலியிடம்) தன்னுடைய நெஞ்சை இருப்பிடமாகக் கொடுத்து அங்கே அவளுக்கு அடிமையாக தஞ்சம் அடைந்து விட்டதாகக் கூறுகிறானாம். அதற்கு தலைவி அவனிடம் கேட்கும் கேள்விகள்

உன்னை எனக்கு அடிமையாக்குதல் அவ்வளவு எளிதான செயலாகுமா? உன் நெஞ்சானது திணைப்புனத்தில் இருக்கும் என் தமையனுக்கு உணவு கொண்டு சென்று கொடுக்குமா? பசுக் கூட்டங்களை மேய்த்துக் கொண்டிருக்கும் என் தந்தைக்குக் கறவைக் கலன் கொண்டு செல்லுமா?அறுத்த திணைத்தாளிடையே என் தாய் மேயவிட்டிருக்கும் கன்றை மேய்குமா?

— தலைவி, முல்லைக் கலி

சமூக விஞ்ஞானப்படி, இதை எப்படிப்பார்க்க வேண்டும் என்பதை நூலாசிரியர் சிறப்பாக விவரிக்கிறார். மேய்ச்சல் நில வாழ்க்கையில் தனிச் சொத்துரிமை உருவாகிறது என்ற சமூகவியல் உண்மையின் அடிப்படையில் மேற்கூறிய வரிகளை நோக்கினால் தனிச் சொத்துரிமையின் துணைப்படையாக அடிமைமுறை உருவாகியுள்ளதை நாம் உணரலாம் என்கிறார்.[2]

பக்தி இலக்கியங்களில் அடிமை முறை குறித்த சான்று

தொகு

இரும்பு விலங்குகளால் பூட்டப்பட்ட கால்களை உடையவர்களாக அடிமைகள் விளை நிலத்தில் தொழில் புரிவர் என்று நாலடியார் கூறுவதாகவும், அதே நூலில் பெண்ணடிமைகளை தொழுத்தை என்று குறிப்பிட்டுள்ளதாகவும் ஆதாரம் காட்டுகிறார்.திவாகர நிகண்டு அடிமைகளின் மறு பெயர்களை ஆளும், தொழும்பும் அடிமை யாகும் என்று குறிப்பிடுவதையும், விலைக்கு வாங்கப்பட்ட அடிமை என்ற பொருளில் விலையாள் என்று பெரிய திருமொழியில் குறிப்பிடுவதையும் ஆசிரியர் ஆதாரமாகக் காட்டுகிறார்.[2]

சோழர் கால ஆட்சியில் அடிமைமுறை

தொகு

சோழர் கால ஆட்சியில் அடிமைமுறை பற்றிய ஏராளமான தகவல்களை கல்வெட்டுச் சான்றுகள் தெரிவிக்கின்றன.காரணம் கி.பி. பத்தாம் நூற்றாண்டு முதல் பதிமூன்றாம் நூற்றாண்டு வரை உள்ள காலம் பிற்கால சோழர்கள் ஆதிக்கம் செலுத்திய காலம். நிலவுடமை முறை இறுக்கமடைந்த காலம். சோழர் ஆட்சி விரிவடைந்த காலம்.அடிமையை வாங்கும் போதோ, விற்கும் போதோ எழுதப்படும் அடிமைப் பத்திரத்தைக் குறிக்க ஆளோலை என்ற சொல்லைச் சோழர் காலத்தில் வாழ்ந்த சேக்கிழாரும் பயன் படுத்தியுள்ளார் என்பதை நூலாசிரியர் குறிப்பிட்டுள்ளார்.[2] சுந்தரமூர்த்தி நாயனாரின் வாழ்வோடு சம்பந்தப்பட்ட வழக்கையை ஆய்வு செய்து கீழ்க்கண்ட முடிவுக்கு வருகிறார்.

  1. அடிமை முறை சோழர் காலத்தில் நிலவியது.
  2. அந்தணர் அடிமையாகும் வழக்கமில்லை.
  3. அடிமையாவோர் அடிமையாளருக்கு ஓலை எழுதிக் கொடுக்கும் பழக்கமுண்டு; இதற்கு ஆளோலை என்று பெயர்.
  4. ஆளோலையில் எழுதிக் கொடுத்தவரின் கையெழுத்துடன் சாட்சிகளின் கையெழுத்தும் இடம் பெற்றிருக்கும்.
  5. தன்னை மட்டுமின்றி, தன் பரம்பரையினரையும் அடிமையைக எழுதிக் கொடுக்கும் பழக்கம் உண்டு.
  6. அடிமை தன் பணியில் தவறினால் அது குறித்து அடிமையாளன் ஊர் வழக்கு மன்றங்களில் முறையிடலாம்.
  7. தக்க ஆளோலை இருப்பின் அடிமையாளனுக்கு அடிமையின் மேலுள்ள உரிமையினை ஊரவை உறுதிப்படுத்தும்.

நூலின் கடைசிப் பாகம்

தொகு

தமிழகத்தில் அடிமைகள் இருந்தார்கள். ஆனால், அடிமைச் சமுதாயம் இருத்தில்லை என முடிவுக்கு வருகிறார்.[2]

மேற்கோள்கள்

தொகு
  1. "தமிழகத்தின் அடிமை முறை". மார்க்சிஸ்ட்,தத்துவார்த்த மாத இதழ். 2005-10-06. பார்க்கப்பட்ட நாள் 20 அக்டோபர் 2013.[தொடர்பிழந்த இணைப்பு]
  2. 2.0 2.1 2.2 2.3 2.4 2.5 ஆ., சிவசுப்பிரமணியன் (2010). தமிழகத்தில் அடிமை முறை. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9788189359089.