தமிழ்நாடு மகளிர் நல மேம்பாட்டு நிறுவனம்

தமிழ்நாடு மகளிர் நல மேம்பாட்டு நிறுவனம் (Tamil Nadu Corporation for Development of Women) தமிழகத்தில் உள்ள பெண்களின் சமூக மற்றும் பொருளாதார நிலையை மேம்படுத்தும் நோக்கில் செயல்பட்டு வரும் ஓர் அரசு நிறுவனமாகும். 1983 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட இந்நிறுவனம் சூலை 2006 ஆம் ஆண்டில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் (Rural Development and Panchayat Raj Department) கீழ் கொண்டு வரப்பட்டது. இதன் தலைமையகம் சென்னையில் அமைந்துள்ளது.

முதலீடு

தொகு

தமிழக அரசின் முதலீடு 40 இலட்சமும் நடுவணரசின் முதலீடு 38.42 இலட்சமும் கொண்டு இந்நிறுவனம் துவங்கப்பட்டது. இந்நிறுவனத்திற்குத் தேவையான பணம் தமிழக அரசு மூலமும் தெரிவு செய்யப்பட்ட அரசு சாரா அமைப்புகள் மூலமும் கிடைக்கிறது.

செயல்பாடுகள்

தொகு

தமிழகத்தில் மகளிர் சுய உதவிக் குழுக்கள் மிகப்பெரும் சக்தி வாய்ந்த அமைப்பாக உருவெடுத்துள்ளமைக்கு இந்த நிறுவனம் எடுத்த முயற்சிகளே காரணமாகும். முதல் மகளிர் சுயஉதவிக் குழு தர்மபுரி மாவட்டச் சிற்றூர் ஒன்றில் துவங்கப்பட்டது. பின்னர் சேலம் மாவட்டம், கடலூர், மதுரை, இராமநாதபுரம் எனத் தமிழகம் முழுமையிலும் செயல்படுத்தப்பட்டது.

முற்றம் எனும் பெயரில் மகளிர் சுயஉதவிக்குழுவினருக்கான மாத இதழ் வெளியிடப்படுகிறது.

தமிழ்நாடு அரசு அரசு சாரா நிறுவனங்கள் மற்றும் தன்னார்வத் தொண்டர்களுக்கான வளமையம் (TAMILNADU STATE NON GOVERNMENTAL ORGANISATIONS AND VOLUNTEER RESOURCE CENTRE) ஒன்று சென்னை அண்ணா சாலையில் இந்நிறுவனத்தால் நடத்தப்படுகிறது.

வங்கிக்கடன்

தொகு

மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்குக் கடன் அளிப்பதில் வங்கிகள் முக்கியப் பங்காற்றுகின்றன. 2006-07 ஆம் ஆண்டில் வங்கிகளால் வழங்கப்பட்ட கடன் 593.45 கோடி ஆகும். 2009-10 ஆண்டில் இது 2791.65 கோடியாக உயர்ந்தது. இந்தியன் வங்கியே தமிழக அளவில் மகளிர் சுயஉதவிக்குழுக்களுக்கு அதிக கடன் வழங்கும் வங்கியாக உள்ளது.

விருதுகள்

தொகு

இந்நிறுவனத்தால் இரண்டு விருதுகள் வழங்கப்படுகின்றன. அவை,

1. மணிமேகலை விருது (சிறந்த மகளிர் சுயஉதவிக் குழுவுக்கான விருது)

2. மகளிர் சுயஉதவிக்குழுக்களுக்கு அதிக கடன் தரும் வங்கிக்கான விருது

வெளியிணைப்புகள்

தொகு

தமிழ்நாடு மகளிர் நல மேம்பாட்டு நிறுவனத்தின் இணையதளம் பரணிடப்பட்டது 2022-07-02 at the வந்தவழி இயந்திரம்