தமிழ்நாட்டின் புவியியல் அமைப்பு

தமிழ்நாடு 130,058 ச.கி.மீ பரப்பளவு கொண்டது.(50,216 sq mi) பரப்பளவில் பெரிய இந்திய மாநிலங்களுள் தமிழ்நாடு பதினொன்றாம் இடத்தில் உள்ளது. மேற்கே கேரளா மாநிலத்துடனும், வடமேற்கில் கர்நாடகா மாநிலத்துடனும் வடக்கில் ஆந்திரப்பிரதேசத்துடனும் தனது எல்லையைப் பகிர்ந்து கொள்கிறது. இதன் கிழக்கு எல்லையாக வங்காள விரிகுடாவும் தெற்கே இந்தியப் பெருங்கடலும் எல்லையாக உள்ளது. தீபகற்ப இந்தியாவின் தென்முனையான கன்னியாகுமரி வரை தமிழகம் பரவியுள்ளது. வங்காள விரிகுடாவும், அரபிக்கடலும் இந்தியப் பெருங்கடலும் சங்கமிக்கின்ற குமரிமுனை தமிழ்நாட்டில் உள்ளது.

தமிழ்நாட்டின் புவியியல் அமைப்பு

இயற்கை அமைப்பு

தொகு

தமிழ்நாட்டின் இயற்கையமைப்பு சற்றேறக்குறைய முக்கோண வடிவமான அமைப்பினைப் பெற்றாதாகும். மேற்கு மற்றும் வடமேற்குப் பகுதிகளில் மேற்கு மலைத்தொடர்களாலும், கிழக்குப் பகுதியில் வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள கிழக்குத் தொடர்ச்சி மலைகளாலும், தெற்கில் இந்தியப் பெருங்கடலாலும் சூழப்பட்டுள்ளது. தமிழகத்தின் இயற்கையமைப்பு பொதுவாக அகன்ற உயர் நிலப்பரப்பாகக் காணப்படுகிறது. இதில் அதிகமாக அரிக்கப்படாத மலைத்தொடர்களின் எஞ்சிய பகுதிகளும், அகன்ற ஆழம் குறைவான பள்ளத்தாக்குகளும் மற்றும் ஆற்றுச் சமவெளிகளும் காணப்படுகின்றன.

பொதுவாக தமிழ்நாட்டின் இயற்கை அமைப்பை நான்கு வகையாகப் பிரிக்கலாம்.

  1. மலைகள்(மேற்குத் தொடர்ச்சி மலைகள் மற்றும் கிழக்குத் தொடர்ச்சி மலைகள்)
  2. பீடபூமிப்பகுதி (மேட்டுநிலம்)
  3. சமவெளிப்பகுதிகள்
  4. கடலோரப்பகுதிகள்

மலைகள்

தொகு

தமிழ்நாட்டில் மேற்குத்தொடர்ச்சி மலை நீலகிரி மாவட்டம் வழியாக நுழைந்து கன்னியாகுமரி மாவட்டம் வரை நீண்டு பரவியுள்ளது. கிழக்குத் தொடர்ச்சி மலைகள் சற்றே மாறுபட்ட அமைப்புடன் காணப்படுகிறது. இதன் சராசரி உயரம் 1000 மீட்டர்கள் முதல் 1500 மீட்டர்கள் வரை உள்ளன. தமிழ்நாட்டின் மலைத்தொடரின் அதிகபட்ச உயரமான முகடுகள் (சிகரங்கள்) தொட்டபெட்டா (2620 மீ.) மற்றும் முக்கூர்த்தி( 2540 மீ) ஆகும்.

 
A semi-arid wasteland near திருநெல்வேலி. Monsoon clouds pour torrents of rain on windward-facing கேரளம், but are prevented from reaching Tirunelveli by the Agasthyamalai Range of the Western Ghats (background).

மேற்குத் தொடர்ச்சி மலைகள்

தொகு

மேற்கு மலைத்தொடரின் வடமேற்குப் பகுதியில் நீலகிரி உயர்நிலப்பகுதி சுமார் 2500 ச.மீ பரப்பில் பரவிக் காணப்படுகின்றது. இவ்வுயர் நிலப்பகுதியின் சராசரி உயரம் 1800 மீட்டர் முதல் 2400 மீட்டர் ஆகும். அவற்றில் தொட்டபெட்டா சிகரம் தமிழ்நாட்டின் மிக உயர்ந்த சிகரமாகும். மேற்கு மலைத் தொடரும் கிழக்கு மலைத்தொடரும் நீலகிரி மலைப்பகுதியில் ஒன்று கூடுகின்றன.[1]

 
ஆனைமுடி-மேற்கு மலைத்தொடரின் உயர்ந்த சிகரம் 2695 மீட்டர்கள்.

தமிழ்நாட்டின் நீலகிரியில் இருந்தும் கேரளாவின் ஆனைமுடி மலையில் இருந்தும் சுமார் 1500 மீட்டர்கள் முதல் 2000 மீட்டர் வரை உயரமுள்ள ஓர் கிளைத்தொடர் குன்று கிழக்கு நோக்கிச் செல்கின்றது. இதற்குப் பழனிக்குன்றுகள் என்று பெயர். பழனிக்குன்றுகளுக்குத் தெற்கே வருச நாடு, ஆண்டிப்பட்டி என்ற இரு மலைத்தொடர்கள் காணப்படுகின்றன. மேற்குத் தொடர்ச்சி மலைகள் இடைவெளியற்று காணப்பட்டாலும் பாலக்காடு அருகே 25.கி.மீ நீளத்தில் ஓர் கணவாய் காணப்படுகின்றது. இது பாலக்காட்டுக் கணவாய் எனப்படும். பாலக்காட்டுக் கணவாய்க்குத் தெற்கே ஆண்டிப்பட்டி மலை, ஏலமலை, அகத்தியமலை ஆகிய மலைகள் உள்ளன. ஏலமலைத் தொகுதியில் செழிப்பு மிக்கக் கம்பம் பள்ளத்தாக்கு அமைந்துள்ளது. வருச நாடு மலைக்கும் அகத்திய மலைக்கும் இடையே காணப்படும் இடைவெளி செங்கோட்டைக் கணவாய் என அழைக்கப்படுகிறது,

சமவெளிகளையும் பீட பூமிகளையும் பிரிக்கும் தமிழ்நாட்டின் மலைகளுக்கு இடையே இரண்டு குறிப்பிடத்தக்க இடைவெளிகள் காணப்படுகின்றன. அவை தெற்கில் ஆத்தூர் கணவாய் என்றும், வடக்கில் செங்கம் கணவாய் என்றும் அழைக்கப்படுகிறது. இக்கணவாய் கடலூர் மாவட்டத்தைச் சமவெளிப்பகுதியோடும், சேலம் மாவட்டத்தை பீடபூமிப் பகுதியோடும் இணைக்கிறது. இடைவெளியற்று நீளும் மேற்குத் தொடர்ச்சி மலைகளின் குறிப்பிடத்தக்க கணவாய்கள் பாலக்காடும் செங்கோட்டையும் ஆகும்.

மலைகளின் பெயர்கள் விரவியுள்ள மாவட்டங்கள்
பொதிகை மலை திருநெல்வேலி மாவட்டம்
சிறுமலை திண்டுக்கல் மாவட்டம்

கிழக்குத் தொடர்ச்சி மலைகள்

தொகு

மேற்குத் தொடர்ச்சி மலைகளோடு ஒப்பிடும்போது கிழக்குத் தொடர்ச்சி மலைகள் தொடர்ச்சியற்ற மலைகளாகக் காணப்படுகின்றன. இம்மலைகளின் சராசரி உயரம் 1100மீ முதல் 1600 மீ வரை ஆகும். கிழக்குத் தொடர்ச்சி மலைகளில் உயர்ந்த மலை சேர்வராயன் மலை. இதன் உயரம் 1500 மீ முதல் 1600 மீ வரை ஆகும். இடைவெளிவிட்டுக் காணப்படும் தனித்த மலைப்பகுதிகள் வடகிழக்கில் இருந்து தென்மேற்காக வேலூர், தருமபுரி மற்றும் ஈரோடு மாவட்டங்களில் பரவிக் காணப்படுகிறது. இவை அனைத்தும் தமிழ்நாட்டின் மலைகள் என அழைக்கப்படுகின்றன. இம்மலைப்பகுதிகள் வெவேறு பகுதிகளில் வெவேறு பெயர்களால் அழைக்கப்படுகின்றன. அவை:

மலைகளின் பெயர்கள் விரவியுள்ள மாவட்டங்கள்
சவ்வாது மற்றும் ஏலகிரிமலை வேலூர் மாவட்டம்
சேர்வராயன் மலை சேலம் மாவட்டம்
கல்ராயன்மலை கள்ளக்குறிச்சி மாவட்டம்
பச்சைமலை திருச்சி மாவட்டம்
கொல்லிமலை நாமக்கல் மாவட்டம்
சித்தேரி மலை தருமபுரி மற்றும் சேலம் மாவட்டங்கள்
செஞ்சிமலை திருவண்ணாமலை மாவட்டம்

தமிழ்நாட்டின் மேட்டு நிலங்கள்( பீடபூமி)

தொகு

மேற்குத் தொடர்ச்சி மலைகளும் கிழக்குத் தொடர்ச்சி மலைகளும் நீலகிரி மேட்டு நிலத்தில் சந்திக்கின்றன. இங்கிருந்து 24 கி.மீ. தொலைவில் கீழ்நோக்கிச் சுமார் 1800 மீ. உயரத்தில் கோயம்புத்தூர் மேட்டு நிலத்தை நோக்கி இவ்வுயர் நிலம் சரிகின்றது. அங்கிருந்து மேலும் சரிந்து சேர்வராயன் உயர்நிலங்களுக்கு மேற்காக பாராமகால் பீடபூமி என்றழைக்கப்படும் தருமபுரி பீடபூமி அமைந்துள்ளது. இம்மேட்டு நிலத்தின் சராசரி உயரம் 300 மீ. முதல் 700.மீ ஆகும். இது மேற்கில் மைசூர் மேட்டு நிலங்களை இணைக்கிறது. பொதுவாகத் தமிழ்நாட்டின் மேட்டுநிலங்களின் சராசரி உயரம் கிழக்கில் இருந்து சுமார்120 மீட்டர்களில் இருந்து மேற்காக 300 முதல் 400 மீ, வரை உயர்ந்து காணப்படுகிறது.

பொதுவாகத் தமிழ்நாட்டின் பீடபூமிகளைக் கோயமுத்தூர் பீடபூமி மதுரை பீடபூமி என இரு பிரிவுகளாகப் பிரிக்கலாம். இவ்விரு பீடபூமிகளுக்கிடையே பல தனித்த குன்றுகள் காணப்படுகின்றன. ஈரோடு மாவட்டத்தில் உள்ள சென்னிமலை இவ்வகைக் குன்றுகளுள் ஒன்றாகும்.

சமவெளிப்பகுதிகள்

தொகு

தமிழ் நாட்டின் சமவெளிகள் ஆற்றுச் சமவெளி மற்றும் கடலோரச்சமவெளி என இரு பிரிவுகளாகப் பிரிக்கப்படுகின்றன.

ஆற்றுச் சமவெளி

தொகு

ஆற்றுச் சமவெளிகளில் தமிழ்நாட்டின் முதன்மை ஆறுகளின் செய்கையால் அமையப் பெற்றுள்ளது. தமிழகத்தின் பெரும்பான்மை சமவெளிப்பகுதியின் வண்டல்மண் வளம் கிழக்கு நோக்கிப் பாயும் ஆறுகளால் உற்பத்தி செய்யப்பட்டதே ஆகும். வடக்கில் பாலாறு, செய்யாறு, பெண்ணாறு மற்றும் வெள்ளாறு ஆகிய ஆறுகளால் சமவெளிகள் ஏற்படுத்தப்படுகின்றன. நடு ஆற்றுச் சமவெளி காவிரி மற்றும் அதன் துணை ஆறுகளினால் ஏற்படுத்த்தப்படுகின்றன. தெற்கே பாயும் வைகை, வைப்பார் மற்றும் தாமிரவருணி ஆகிய ஆறுகள் தென்னக ஆற்றுச் சமவெளிகளை உருவாக்கியுள்ளன.

கடலோரச் சமவெளி

தொகு

திருவள்ளூர், காஞ்சிபுரம், கடலூர் மற்றும் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கடலோர சமவெளி தொன்று தொட்டு சோழமண்டலச் சமவெளி என்ற பெயரால் அழைக்கப்படுகிறது.

கடற்கரைகள்

தொகு

தமிழ்நாட்டில் இரண்டு கடற்கரைகள் குறிப்பிடத்தக்கவையாகும். அவை

  1. மெரீனாக் கடற்கரை
  2. இராமேஸ்வரம் கடற்கரை

 

மெரினாக் கடற்கரை

தொகு

மெரினாக் கடற்கரை உலகின் அழகிய இரண்டாவது பெரிய கடற்கரையாகும்.இக்கடற்கரை சுமார் 13 கி.மீ நீளம் வரை பரவியுள்ளது இது சென்னை நகரின் முக்கியச் சுற்றுலாத்தலம் மற்றும் பொழுதுபோக்குத் தலமும் ஆகும்.

இராமேஸ்வரம் கடற்கரை

தொகு
 
பாம்பன் பாலம்-இராமேஸ்வரம்

அழகிய கடல்நிலத் தோற்றங்களுக்கும் அலைகளே இல்லாத கடற்பரப்பிற்கும் இராமேஸ்வரம் கடற்கரை புகழ்பெற்றதாகும். இங்கு அலைகள் 3 செ.மீ க்கும் மிகாத அளவிற்கு மட்டுமே எழும்புவதால் இது பார்ப்பதற்கு மிகப்பெரிய ஓர் ஆறு போன்ற தோற்றத்தை அளிக்கின்றது.

மேற்கோள்கள்

தொகு