தமிழ்நாட்டில் சாலை விபத்துகள்

தென்னிந்திய மாநிலமான தமிழ்நாட்டில் சாலை விபத்துகள் (Road accidents in Tamil Nadu) இந்தியாவிலேயே மிகவும் உயர்ந்து காணப்படுகின்றது. 2013இல் இம்மாநிலத்தில் பதிவான 14,504 விபத்துகளில் 15,563 உயிரிழப்புகள் நேர்ந்துள்ளன. கடந்த பத்தாண்டுகளில், 2002 முதல் 2012 வரை, மிகவும் கூடுதலான விபத்துக்கள் நிகழ்ந்துள்ள மாநிலங்களின் பட்டியலில் தமிழ்நாடு முதலில் வந்துள்ளது. மேலாண்மை மற்றும் தொழினுட்ப ஆய்வு பன்னாட்டு இதழில் பதிப்பிக்கப்பட்ட இரு வல்லுநர்களின் அறிக்கைகளின்படி இந்த விபத்துகளில் 70% குடிமயக்கத்தில் வாகனம் ஓட்டுதல் காரணமாக நிகழ்ந்தவையாக அறியப்படுகின்றன. இதன் காரணமாக அரசுத்துறை தமிழ்நாடு மாநில வாணிபக் கழகம் மூலமாக விற்கப்படும் மதுக்கடைகள் விலக்கிக்கொள்ளப்பட்டு முழுமையான மதுவிலக்கு செயற்படுத்தப்பட வேண்டும் என சில அரசியல் கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. இருப்பினும் அடுத்தடுத்த அரசு நிர்வாகங்கள் மதுவிலக்கு கள்ளச்சாராயத்திற்கு வழி வகுக்கும் என்றும் சுற்றியுள்ள மற்ற மாநிலங்களில் மதுவிலக்கு கடைபிடிக்கப்படாத நிலையில் கடத்தல் சாராயத்திற்கு அல்லது சாராயச் சுற்றுலாவிற்கு காரணமாகும் என்றும் எதிர்த்து வந்துள்ளன. 2007இல் 82 இலட்சமாக (8.2 மில்லியன்) இருந்த வாகனத்தொகை 2012இல் 1.6 கோடியாக (16 மில்லியன்) உயர்ந்துள்ளதும் அதற்கான சாலைக் கட்டமைப்பு இல்லாமையும் பெரும்பாலான விபத்துக்களுக்கு காரணமாகக் கூறப்படுகின்றது.

சாலை விபத்துகள் தொகு

விபத்துத் தரவுகள்
ஆண்டு விபத்துகள் உயிரிழப்புகள்
2000 8,269 9,300
2001 8,579 9,571
2002 9,012 9,939
2003 8,393 9,275
2004 8,733 9,507
2005 8,844 9,760
2006 10,055 11,009
2007 11,034 12,036
2008 11,813 12,784
2009 12,727 13,746
2010 14,241 15,409
2011 14,359 15,422
2012 15,072 16,175
2013 14,504 15,563
அடிக்குறிப்பு: மூலங்கள்:[1]

தமிழ்நாடு காவல்துறையின் அறிக்கையின்படி 2013இல் 14,504 விபத்துக்கள் பதிவாகியுள்ளன; இவற்றில் 15,563 பேர் உயிரிழந்துள்ளனர். 4,715 விபத்துக்களில் 6,513 நபர்கள் தீவிரக் காயமடைந்துள்ளனர்; 44,158 விபத்துக்களில் 69,168 நபர்கள் சிறு காயத்தினால் பாதிக்கப்பட்டுள்ளனர். மொத்தமாக 2,861 நபர்கள் காயமேதும் இன்றி தப்பித்துள்ளனர்.[2] ஒவ்வொரு மணிக்கும் எட்டு விபத்துக்கள் நேர்வதாகவும் நாட்டில் நேரும் அனைத்து விபத்துகளிலும் 15% தமிழ்நாட்டில் நடப்பதாகவும் மதிப்பிடப்படுகிறது. தேசியக் குற்றவியல் பதிவகத்திலிருந்து பெறப்பட்ட தகவல்களின் படி மாநிலத் தலைநகரம், சென்னையில் 9,663 விபத்துக்கள் நேர்ந்துள்ளன; 2012இல் நாட்டின் மற்றெந்த நகரத்து விபத்துகளை விட இது மிகக் கூடியதாகும்.[3] பதிவான 6,693 விபத்துக்களுடன் 1990இல் நாட்டில் உத்தரப் பிரதேசத்திற்கு அடுத்தநிலையில் இருந்தது.[4]

2013இல் மாநில போக்குவரத்துத் துறை வெளியிட்ட அறிக்கையின்படி 66,238 விபத்துகளில், இரு-சக்கர வாகனங்கள் 22,496 விபத்துக்களிலும், மகிழுந்துகள், ஜீப்கள், வாடகை உந்துகள், தானிகள் 18,658 விபத்துகளிலும், சரக்குந்துகள் 9,192 விபத்துகளிலும் அரசுப் பேருந்துகள் 3,765 விபத்துகளிலும், தனியார் பேருந்துகள் 3,564 விபத்துகளிலும், மூன்று-சக்கர வாகனங்கள் 2,983 விபத்துகளிலும் மற்றவை 5,580 விபத்துகளிலும் தொடர்புற்றிருந்தன.[5] இதே அறிக்கையின்படி, 20,686 விபத்துகள் தேசிய நெடுஞ்சாலைகளிலும் 20,984 விபத்துகள் மாநில நெடுஞ்சாலைகளிலும் 17,401 விபத்துகள் மாவட்டச் சாலைகளிலும் ஏனைய 7,167 விபத்துகள் சிற்றூர் சாலைகளிலும் நேர்ந்தன.[6]

மேற் சான்றுகள் தொகு

  1. "Accident details for Tamil Nadu in certain years" (PDF). State transport authority, Government of Tamil Nadu. 2013. பார்க்கப்பட்ட நாள் 22 March 2014.
  2. Handbook on Police Department 2013 (PDF) (Report). Tamil Nadu Police Department. 1 January 2014. p. 22. பார்க்கப்பட்ட நாள் 1 January 2014.
  3. Hemalatha, Karthikeyan (24 June 2013). "For 10th year in a row, Tamil Nadu tops India in road accidents". TNN (The Times of India). http://timesofindia.indiatimes.com/india/For-10th-year-in-a-row-Tamil-Nadu-tops-India-in-road-accidents/articleshow/20735444.cms. பார்த்த நாள்: 1 January 2014. 
  4. Agrawal 1993, p. 9
  5. "Accident details for Tamil Nadu by type of vehicles" (PDF). State transport authority, Government of Tamil Nadu. 2013. பார்க்கப்பட்ட நாள் 22 March 2014.
  6. "Accident details for Tamil Nadu according to type of roads" (PDF). State transport authority, Government of Tamil Nadu. 2013. பார்க்கப்பட்ட நாள் 22 March 2014.

உசாத்துணை தொகு