தமிழ்நாடு மாநில வாணிபக் கழகம்

டாஸ்மாக் (டாசுமாக், TASMAC) எனப்படும் தமிழ்நாடு மாநில வாணிபக் கழகம் (Tamil Nadu State Marketing Corporation) தமிழ் நாட்டில் மது வகைகளை வர்த்தகம் செய்யும் அரசு நிறுவனம். இந்நிறுவனம் தமிழ் நாட்டில் மதுபானங்களை மொத்த மற்றும் சில்லறை வர்த்தகம் செய்ய ஏகபோக உரிமை பெற்றுள்ளது.

டாஸ்மாக்
வகைமாநில அரசு நிறுவனம்
நிறுவுகைமே 23,1983
தலைமையகம்சென்னை, இந்தியா
முதன்மை நபர்கள்வே. செந்தில்பாலாஜி(தமிழ்நாட்டின் சுங்க வரி மற்றும் மதுவிலக்குத் துறை அமைச்சர்)
டாக்டர் எல். சுப்பிர மணியன், இ.ஆ.ப (நிருவாக இயக்குநர்)
தொழில்துறைமதுபான வர்த்தகம் (மொத்த மற்றும் சில்லறை விற்பனை)
நிகர வருமானம்26,794 கோடி ரூபாய் (2016–17 நிதியாண்டில்)
மொத்தச் சொத்துகள்5410 கடைகள்,
43 கிடங்குகள்
உரிமையாளர்கள்தமிழ் நாடு அரசு
பணியாளர்29,297
இணையத்தளம்http://tasmac.tn.gov.in/

வரலாறு

தொகு

தமிழ்நாடு மாநில வாணிபக் கழகம், 1983 ஆம் ஆண்டு எம். ஜி. ராமச்சந்திரன் (எம். ஜி. ஆர்) தலைமையிலான அதிமுக அரசாங்கத்தால், தமிழகத்தில் மதுவகைகளின் மொத்த விற்பனைக்காக தொடங்கப்பட்டது. இந்திய நிறுவனச் சட்டம் - 1956 இன் படி இந்நிறுவனம் மாநில அரசின் கட்டுப்பாட்டின் கீழியங்கும் அமைப்பாக நிறுவப்பட்டது. தமிழ்நாட்டில் நீண்ட காலமாக மதுவிலக்கு அமலில் இருந்து வந்துள்ளது. முதன் முதலில் 1937 ஆம் ஆண்டு சென்னை மாகாணத்தில் சி. ராஜகோபாலச்சாரியின் காங்கிரசு அரசாங்கத்தினால் மதுவிலக்கு அமல் படுத்தப்பட்டது. அன்றிலிருந்து 2001 வரை, 1971–74, 1983–87, 1990–91 ஆகிய சிறு கால இடைவெளிகளைத் தவிர தமிழகத்தில் மது விற்பனை தடை செய்யப்பட்டிருந்தது. விஸ்கி, பிராந்தி, ரம், ஓட்கா, வைன் போன்ற இந்தியாவில் தயாரிக்கப்படும் வெளிநாட்டு மது வகைகளும் கள், சாராயம் போன்ற உள்நாட்டு மதுவகைகளும் தடை செய்யப்பட்டிருந்தன. 2001 இல் மதுவிலக்கு விலக்கப்பட்டபோது, மாநில அரசு டாஸ்மாக் நிறுவனத்தை மீண்டும் மொத்த விற்பனை நிறுவனமாக பயன்படுத்தியது. சில்லறை விற்பனைக்கு மதுக்கடைகள் தனியாருக்கு ஏலம் விடப்பட்டன. ஆனால் பல கடை முதலாளிகள் தங்களுக்குள் குழு அமைத்து செயல்பட்டதால் (cartelisation) கடைகள் குறைவான ஏலத்திற்குச் சென்றன. இதனால் அரசுக்குப் பெரும் வருவாய் இழப்பு ஏற்பட்டது. இதனை எதிர்கொள்ள 2002-03 ஆம் நிதியாண்டில் அரசு ஏலமுறையை மாற்றியமைத்தது. ஒரே சீரான வருவாயுள்ள மதுக்கடைகள் ஏலம் விடப்பட்டு பின் குலுக்கல் முறையில் பிரித்தளிக்கப்பட்டன. ஆனால் முதலாளிகள் இம்முறையை எளிதில் முறியடித்து விட்டனர். ஏலம் முடிந்தபின் பிறருக்காக விட்டுக் கொடுத்தல், பல கடைகளை முன் திட்டமிட்டபடி எவரும் ஏலம் எடுக்காமல் விடுதல் போன்ற உத்திகளைக் கையாண்டனர். எனவே மாநில அரசு சில்லறை விற்பனையையும் தானே செய்ய முன் வந்தது. அக்டோபர் 2003 இல் தமிழ்நாடு மதுவிலக்குச் சட்டம் - 1937 இல் ஒரு திருத்தத்தை செய்ததன் மூலம் தமிழ்நாடு மாநில வாணிபக் கழகத்திற்கு மது விற்பனையில் மாநிலம் முழுவதும் ஏகபோக உரிமையை அளித்தது. ஜெயலலிதா தலைமையிலான அதிமுக அரசால் செய்யப்ப்பட்ட இம்மாற்றம் நவம்பர் 29, 2003 இல் அமலுக்கு வந்தது. தொடக்கத்தில் திமுக இதை எதிர்த்தாலும், 2006 ஆம் ஆண்டு மு.கருணாநிதி தலைமையிலான அரசு பொறுப்பேற்ற பின்னர், தமிழ்நாடு அரசு நிறுவனமான தமிழ்நாடு மாநில வாணிபக் கழகத்தின் ஏகபோக மது விற்பனையால் அரசுக்கு அதிகமான வருவாய் கிட்டியதால் இம்முடிவை மாற்ற விருப்பமின்றி தொடர்ந்து செயல்படுத்தியது. இதனால் மது விற்பனையில் தமிழ்நாடு மாநில வாணிபக் கழகத்தின் தனியுரிமை தொடர்கிறது.[1][2][3][4][5]

நிறுவன அமைப்பு

தொகு
 
கோவையில் ஒரு டாஸ்மாக் பார்

தமிழ்நாடு மாநில வாணிபக் கழகம் ஒரு மாநில அரசு நிறுவனம். தமிழ் நாடு அரசே இதன் நூறு சதவிகித உரிமையாளர். இந்நிறுவனம் அரசின் மதுவிலக்கு மற்றும் சுங்கவரித்துறையின் கட்டுப்பாட்டில் இருந்து வருகிறது. இதன் இயக்குநர் குழுமத்தில் உள்ளவர்கள் அனைவரும் இந்திய ஆட்சிப் பணி (இ.ஆ.ப) அதிகாரிகள். இதன் தலைமை அலுவலகம் சென்னை, எழும்பூரில் உள்ள சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமக் கட்டிடத்தில் அமைந்துள்ளது. தமிழ்நாடு மாநில வாணிபக் கழகம் ஐந்து நிர்வாக மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. சென்னை, கோவை, மதுரை, திருச்சி மற்றும் சேலம் ஆகிய இவ்வைந்து மண்டலங்களும் மண்டல மேலாளர்களின் தலைமையில் நிர்வகிக்கப்படுகின்றன. இவை மேலும் 33 வருவாய் மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு மாவட்டமும் ஒரு மாவட்ட மேலாளரின் கீழ் இயங்குகின்றது.

2010 ஆம் ஆண்டுவாக்கில் தமிழ்நாடு மாநில வாணிபக் கழகத்திற்குத் தமிழகமெங்கும் 6500 மதுக்கடைகளும், 41 சேமிப்புக் கிடங்குகளும் இருந்தன. இந்நிறுவனத்தில் மொத்தம் 36,000 ஊழியர்கள் பணியாற்றுகின்றனர். இவர்கள் அரசு நிறுவனத்தில் பணிபுரிந்தாலும் ஏனைய அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் சலுகைகளும் உரிமைகளும் (எட்டு மணி நேர வேலைநாள், ஊதியத்துடன் விடுமுறைகள் போன்றவை) இவர்களுக்குக் தரப்படவில்லை; மேலும் இவர்களுக்குத் தொகுப்பூதியமே வழங்கப்படுகிறது. மிகைநேர வேலைக் கூலி கூட நீதிமன்றத் தலையீட்டிற்குப் பின்னரே வழங்கப்பட்டது.

தமிழ்நாடு மாநில வாணிபக் கழகத்தின் மதுக் கடைகளுக்குத் தனிப் பெயர்கள் எதுவும் கிடையாது; முன்பு ”டாஸ்மாக் கடை” என்று பெயர்ப்பலகை வைக்கப்பட்டதுடன் அவ்வாறே அழைக்கப்பட்டன. பின்னர் இது கோயம்புத்தூரில் நடைபெற்ற உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டை ஒட்டி "தமிழ்நாடு மாநில வாணிபக் கழகம்" என்கிற பெயர்ப்பலகைக்கு மாற்றப்பட்டது.[6] இக்கடைகளில் அதிகமான கடைகளில் மது அருந்த தனி இடவசதி (பார்) செய்து தரப்பட்டுள்ளது. இந்த மது அருந்தும் இடம் மற்றும் சிறு உணவக வசதிகளைச் செய்து அதற்கான கட்டணத்தைப் பெற்றுக் கொள்ளும் உரிமை தனி நபர்களுக்கு வழங்கப்படுகிறது. இந்த உரிமை ஆண்டுதோறும் தனி ஏலம் மூலம் விடப்படுகிறது. இக்கடைகள் பொதுமக்களால் "வைன் ஷாப்" என்று பரவலாக வழங்கப்பட்டாலும் பிற மதுவகைகளும் இங்கு விற்கப்படுகின்றன.[7][8][9][10][11]

வளர்ச்சி

தொகு
டாஸ்மாக்கின் ஆண்டு வருவாய்
நிதியாண்டு வருவாய்
(கோடிகளில்)
% மாற்றம்
2002–03
2,828.09
2003–04
3,639
  28.67%
2004–05
4,872
  33.88%
2005–06
6,086.95
  24.94%
2006–07
7,300
  19.93%
2007–08
8,822
  20.85%
2008–09
10,601.5
  20.17%
2009–10
12,491
  17.82%
2010–11
14,965
  19.80%
2011–12
18,081.16
  20.82%
2012–13
21,680.67
  19.91%
2013–14
23,401
  7.93%
2014–15
26,188
  11.91%

அரசு மதுக்கடைகளைக் கையகப்படுத்தியபின் டாஸ்மாக்கின் வருவாய் ஆண்டுதோறும் 20 சதவிகித அளவில் அதிகரித்து வந்துள்ளது. இந்நிறுவனம் தொடங்கப்பட்ட 1983 ஆம் ஆண்டில் இதன் மொத்த வருவாய் 183 கோடி ரூபாயாக இருந்தது. சில்லறை விற்பனையில் ஈடுபடுவதற்கு முந்தைய நிதியாண்டில் (2002-03) இதன் மொத்த வருவாய் 3499.75 கோடி. இதில் அரசுக்குக் கிட்டிய வரி வருவாய் 2,828.09 கோடி. மதுக்கடைகளை நடத்த ஆரம்பித்த பின் 2003-04 நிதியாண்டிற்கான வரி வருவாய் 3,639 கோடியாக உயர்ந்தது. இதில் சுங்கவரியும், விற்பனை வரியும் தலா 50 சதவிகிதம். நிர்வாகச் செலவுகளையும், பணியாளர் ஊதியத்தொகையையும் கழித்த பின்னர், எஞ்சியுள்ள வரி வருவாய் முழுக்க அரசுக்கு லாபமே. ஏனெனில் அரசே மொத்த விற்பனையாளராகவும், சில்லறை விற்பனையாளராகவும் உள்ளதால், இரு விலைகளுக்கும் உள்ள வித்தியாசம் அரசின் கைக்கே வந்து சேர்கிறது. அடுத்த நான்கு நிதியாண்டுகளில் வரி வருவாய் முறையே 4872, 6087, 7300 மற்றும் 8822 கோடி ரூபாய்களாக இருந்தது. 2005-06 ஆம் நிதியாண்டில் 23 ஆண்டுகளாக நிலைத்து வந்த மது விற்பனை வருவாய் சாதனை முறியடிக்கப்பட்டது. 2008-09 நிதியாண்டில் 10,601.5 கோடியாக உயர்ந்து, 10,000 கோடி இலக்கு எட்டப்பட்டது. 2009-10 மற்றும் 2010-11 நிதியாண்டுகளில் வருவாய் முறையே 12,491 மற்றும் 14,965 கோடிகளாக இருந்தது. மது விற்பனையில் 80 சதவிகிதம் விஸ்கி, பிராந்தி, ரம், வோத்கா போன்ற "ஹாட்" மது வகைகளும், மிச்சமுள்ள 20 சதவிகதத்தை பீர்களும் பிடித்துள்ளன. வரி வருவாயைத் தவிர, பார் உரிமங்களை ஆண்டுதோறும் தனியாருக்கு ஏலம் விடுவதன் மூலமும் அரசுக்கு வருவாய் கிடைக்கிறது. மாநிலத்தில் பெருகி வரும் குடிநுகர்வும், அவ்வப்போது நிகழும் மது விலையேற்றமும் இச்சீரான வருவாய் வளர்ச்சிக்குக் காரணங்களாகக் கருதப்படுகின்றன.[12][13][14][15][16][17][18][19][20][21]

தாக்கம்

தொகு
 
கோவையில் ஒரு டாஸ்மாக் கடை

தமிழகத்தில் மது வர்த்தகம் புனரமைக்கப்பட்ட பின்னர் அரசுக்கு ஆண்டுதோறும் பெருவாரியான வருவாய் கிட்டத் தொடங்கியுள்ளது. எனவே நலத்திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீட்டை அரசால் உயர்த்த முடிந்துள்ளது. மது வர்த்தகத்தில் கிட்டும் வரி வருவாய், அரசின் மொத்த வரி வருவாயில் சரிபாதிக்குச் சற்றே குறைவாக உள்ளது. இந்திய மாநிலங்களிலேயே மது விற்பனை மூலம் வருவாய் ஈட்டுவதில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது. இதனால் மக்களிடையே குடிப்பழக்கம் அதிகமானாலும், விஷச்சாராயச் சாவுகள் பெருமளவு குறைந்துள்ளன. (மதுவிலக்கு அமலில் உள்ள காலகட்டங்களில் கள்ளச்சாராயச் சாவுகள் மிகுந்திருந்தன).[1][2][4][22][23]

ஏகபோக வர்த்தகத்தின் பலனாக டாஸ்மாக் நிறுவனத்தில் முறைகேடுகள் மலிந்து விட்டன. கள்ளக் கடத்தல், ஊழல், கலப்படம், அதிக விலைக்குச் சரக்குகளை விற்றல் போன்ற குற்றங்கள் மிகுந்து விட்டன. டாஸ்மாக் கடைகள் உள்ள இடங்களின் சுற்றுப்புறங்களில், போதையேறிய மதுக்கடை வாடிக்கையாளர்கள் பொதுமக்களுக்குத் தொந்தரவு செய்கின்றனர் என்ற குற்றச்சாட்டுகள் பெருகியுள்ளன.[24] டாஸ்மாக் ஊழியர்களுக்கு அரசுப் பணியாளர்களின் உரிமைகள் வழங்கப்படாமல் சுரண்டப்படுகின்றனர் என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.[13][15][25][26] "டாஸ்மாக் விற்பனை மூலம் அரசுக்கு கிடைக்கும் வருவாயைவிட, பொதுமக்களின் அமைதி என்பது மிகவும் முக்கியம். அரசின் வருவாயை அதிகரிப்பதற்காக, பொதுமக்கள் தங்கள் அமைதியான வாழ்வை விலையாகக் கொடுக்க முடியாது" என்று சென்னை உயர்நீதி மன்றம் கருத்து தெரிவித்துள்ளது.[27]

அண்டைய மாநிலங்களைக் காட்டிலும் மதுவகைகளின் விலை அதிகமாக இருப்பதாலும், வாடிக்கையாளர் விரும்பிப் பருகும் பல அயல்நாட்டு மதுவகைகளை டாஸ்மாக் விற்பனை செய்வதில்லை என்பதாலும், அருகிலுள்ள ஒன்றியப் பகுதியான புதுச்சேரிக்கு வார இறுதியில் மது அருந்தப் போகும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து விட்டது. புதுச்சேரியில் மது விலை வெகு குறைவாக இருப்பதுடன், பலவித மதுவகைகள் எளிதில் கிடைப்பதே இதற்குக் காரணம். வெளிநாட்டு மதுவகைகள் தமிழகத்தினுள் கடத்தப்படுவதை எதிர்கொள்ள டாஸ்மாக்கும் பல புதிய மதுவகைகளை அறிமுகப்படுத்தத் தொடங்கியுள்ளது.[28][29]

எதிர்ப்பு

தொகு

டாஸ்மாக் கடைகளால் சமுதாயத்தில் குடிப்பழக்கம் பெருகி வருகிறது, இதனால் பண்பாடு சிதைவதாகவும் பொதுமக்கள் உடல் நலத்திற்கு ஊறு விளைவதாகவும் பாட்டாளி மக்கள் கட்சி போன்ற சில அமைப்புகள் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றன.[30] இந்திய அரசியல் சாசனம் 47ம் பிரிவின்படி, போதைப் பொருட்களை அரசு கட்டுப்படுத்த வேண்டும். ஆனால் அதற்கு முரணாக மதுபானத்தை அரசே விற்பனை செய்வதை தடைசெய்யக்கோரி டிராபிக் இராமசாமி என்பவர் தொடர்ந்த வழக்கை விசாரிக்க தகுதியற்றது என்று கூறி சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.[31] தமிழகத்தின் பல பகுதிகளில் இத்தகைய மதுபானக்கடைகளில் மது அருந்திவிட்டு தகராறு செய்வோரின் தொல்லை பொறுக்காமல் அவ்வப்பகுதி பெண்களே டாஸ்மாக் கடைகள் மீது முட்டை வீசுதல், அடித்து நொறுக்குதல், சாலைமறியல் செய்வது போன்ற சம்பவங்களில் ஈடுபடுகின்றனர்.[32][33][34][35]

அதிக அளவில் சாலை விபத்து நடப்பதற்குக் காரணமாக டாஸ்மாக் கடைகள் இருப்பதால், தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள மதுபானக் கடைகளை நீக்கச் சொல்லி மத்திய தரைவழிப் போக்குவரத்து அமைச்சகம் 15 ஆண்டுகளுக்கு மேலாகச் சொல்லிவந்தும் தமிழக அரசுகள் நடவடிக்கை எடுக்கவில்லை. 2013 ஆம் ஆண்டு மார்ச்சு 31 ஆம் தேதிக்குள் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள 504 டாஸ்மாக் கடைகளையும் மாநில நெடுஞ்சாலைகளில் உள்ள 1500க்கு மேற்பட்ட கடைகளையும் நீக்கக் கூறி உயர் நீதிமன்றம் கெடுவிதித்தது. எனினும் தமிழக அரசு அனைத்துக் கடைகளையும் மூடவில்லை.[36][37]

நட்டத்தில் இயங்கும் டாஸ்மாக் நிறுவனம்

தொகு

தஞ்சாவூரில் 13, 14 அக்டோபர் 2021 ஆகிய நாட்களில் டாஸ்மாக் பணியாளர்கள் சங்கத்தின் 40-வது ஆண்டு நிறைவு விழா நடைபெற்றது. இவ்விழாவில் பேசிய சங்கத்தின் மாநில தலைவர் சரவணன் என்பர், தமிழ்நாடு அரசு மது ஆலை உற்பத்தியாளர்களிடமிருந்து, ஒரு குவாட்டர் மது பானத்தை ரூபாய் 20-க்கு கொள்முதல் செய்து, மதுப்பிரியர்களிடம் ரூபாய் 120 வரை விற்பனை செய்தாலும், டாஸ்மாக் நிறுவனம் நட்டத்தில் இயங்கி வருவதாகவும்[38][39][40], அதனால் ஊழியர்களுக்கு போனஸ் வழங்கவும், பணிநிரந்தரம் மற்றும் ஊதிய வழங்கவும் அரசு மறுக்கிறது என்றார். எனவே தமிழ்நாடு அரசு இது குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட சங்கத்தின் சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டது.[41]

இதனையும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
 1. 1.0 1.1 Subramanian, T. S. "Deadly concoctions". Frontline. Archived from the original on 23 மே 2010. பார்க்கப்பட்ட நாள் 4 June 2010.
 2. 2.0 2.1 Anand, S. "Rotgut Blues". Outlook. பார்க்கப்பட்ட நாள் 4 June 2010.
 3. "TASMAC, coops alone to retail trade IMFL in TN". பிசினஸ் ஸ்டாண்டர்ட். பார்க்கப்பட்ட நாள் 4 June 2010.
 4. 4.0 4.1 Ramesh, Niranjana. "Politics influences DMK on disinvestment in central PSUs". Economic Times. பார்க்கப்பட்ட நாள் 4 June 2010.
 5. Nambath, Suresh. "A dangerous mix". The Hindu. Archived from the original on 6 ஜூன் 2011. பார்க்கப்பட்ட நாள் 4 June 2010. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
 6. தினமலரில் வெளியான செய்தி
 7. "TASMAC Organisation chart". Govt of Tamil Nadu. Archived from the original on 13 ஜூன் 2010. பார்க்கப்பட்ட நாள் 4 June 2010. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
 8. "TASMAC outlets to down shutters on March 17". தி நியூ இந்தியன் எக்சுபிரசு. பார்க்கப்பட்ட நாள் 4 June 2010.[தொடர்பிழந்த இணைப்பு]
 9. "Tasmac told to pay 42 staff Rs 2.29L overtime wages". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. பார்க்கப்பட்ட நாள் 4 June 2010.
 10. "Rs 20 crore loss for state after Tasmac staff strike". தி டெக்கன் குரோனிக்கள். பார்க்கப்பட்ட நாள் 4 June 2010.[தொடர்பிழந்த இணைப்பு]
 11. Reddy, Ajay. "Elixir to the elite?". Indian Express. பார்க்கப்பட்ட நாள் 4 June 2010.[தொடர்பிழந்த இணைப்பு]
 12. "Revenue from liquor sale grows significantly". தி இந்து. Archived from the original on 2 ஜூன் 2007. பார்க்கப்பட்ட நாள் 4 June 2010. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
 13. 13.0 13.1 "Tipplers in TN cough up much more than retail price – Rs 500 cr a year". Times of India. பார்க்கப்பட்ட நாள் 4 June 2010.
 14. "TASMAC finalises list of licensees for 221 wine shops". The Hindu. Archived from the original on 28 மே 2010. பார்க்கப்பட்ட நாள் 4 June 2010.
 15. 15.0 15.1 "Staff fleece tipplers of Rs 5,000 cr at Tasmac". Deccan Chronicle. Archived from the original on 24 பிப்ரவரி 2018. பார்க்கப்பட்ட நாள் 4 June 2010. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
 16. "Consumption of liquor rises in TN". Times of India. பார்க்கப்பட்ட நாள் 4 June 2010.
 17. "Excise, sales tax from liquor trade yield Rs.15,000 crore". The Hindu. 8 September 2011. http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-tamilnadu/article2434212.ece?css=print. பார்த்த நாள்: 10 October 2011. 
 18. "Tamil Nadu's liquor revenue rises to Rs 18K cr". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. 27 April 2012 இம் மூலத்தில் இருந்து 3 ஜனவரி 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20130103103609/http://articles.timesofindia.indiatimes.com/2012-04-27/chennai/31439825_1_liquor-sales-foreign-liquor-liquor-prices. பார்த்த நாள்: 31 October 2012. 
 19. "Tamil Nadu earns revenue of over Rs 21,680 crore from liquor sale". Economic Times. 14 May 2013. http://articles.economictimes.indiatimes.com/2013-05-14/news/39256462_1_excise-revenue-nadu-state-marketing-corporation-crore. பார்த்த நாள்: 30 September 2013. 
 20. "TASMAC to Net Additional Rs 3,000 Crore". The New Indian Express. 14 February 2013 இம் மூலத்தில் இருந்து 4 டிசம்பர் 2014 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20141204165953/http://www.newindianexpress.com/states/tamil_nadu/TASMAC-to-Net-Additional-Rs-3000-Crore/2014/02/14/article2055525.ece. பார்த்த நாள்: 19 October 2014. 
 21. "TASMAC to Net Additional Rs 3,000 Crore". Business Standard. 25 March 2015. http://www.business-standard.com/article/politics/liquor-sales-through-tasmac-in-tamil-nadu-to-touch-rs-29-672-crore-in-2015-16-115032500563_1.html. பார்த்த நாள்: 12 December 2015. 
 22. "TN alcohol revenues up 20%". பிசினஸ் லைன். பார்க்கப்பட்ட நாள் 4 June 2010.
 23. "60 pc increase in alcohol consumption among youths". The Hindu. Archived from the original on 6 நவம்பர் 2012. பார்க்கப்பட்ட நாள் 4 June 2010.
 24. "TASMAC outlets nearby keep residents spiritless". The Hindu. Archived from the original on 15 அக்டோபர் 2007. பார்க்கப்பட்ட நாள் 4 June 2010.
 25. "Govt urged to detach bars from TASMAC shops". இந்தியன் எக்சுபிரசு. பார்க்கப்பட்ட நாள் 4 June 2010.[தொடர்பிழந்த இணைப்பு]
 26. "48 bottles of adulterated liquor seized from TASMAC outlet, 4 suspended". Times of India. பார்க்கப்பட்ட நாள் 4 June 2010.
 27. டாஸ்மாக் வருமானத்தைவிட மக்களின் அமைதியே முக்கியம்- செய்தி
 28. "For A Foster's Or Two". Outlook. பார்க்கப்பட்ட நாள் 4 June 2010.
 29. "Beer guzzling in TN up by 22%". Times of India. பார்க்கப்பட்ட நாள் 4 June 2010.
 30. People are poor as they spend on liquor: PMK's Ramadoss[தொடர்பிழந்த இணைப்பு]
 31. [dinamani.com/edition/story.aspx?artid=609091&SectionID=164&MainSectionID=164&SEO=&SectionName=Latest "டாஸ்மாக் கடைக்கு எதிர்ப்பு : டிராபிக் ராமசாமி மனு தள்ளுபடி"]. 05 மே 2012. {{cite web}}: Check |url= value (help); Check date values in: |date= (help); Unknown parameter |name= ignored (help)
 32. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2020-09-30. பார்க்கப்பட்ட நாள் 2014-09-22.
 33. http://www.dinamalar.com/news_detail.asp?id=726825&Print=1
 34. http://www.dinamani.com/edition_coimbatore/tirupur/2013/08/23/மதுப்-பிரியர்களால்-பெண்கள்-/article1747720.ece
 35. http://www.nakkheeran.in/Users/frmnews.aspx?N=106908[தொடர்பிழந்த இணைப்பு]
 36. Relocate highway liquor shops by March 31, says court
 37. Shifting of TASMAC outlet to residential area flayed
 38. டாஸ்மாக்: ரூ.312.43 கோடி நஷ்டம் ஏற்பட்டது எப்படி?!
 39. தமிழகத்தில் 5 ஆண்டுகள் நஷ்டத்தில் இயங்கிய டாஸ்மாக்
 40. "நஷ்டத்தில் இயங்கும் டாஸ்மாக்". Archived from the original on 2021-11-20. பார்க்கப்பட்ட நாள் 2021-11-20.
 41. டாஸ்மாக் வருமானம்: வெள்ளை அறிக்கை கேட்ட சங்கத் தலைவர், இடை நீக்கம் செய்த தமிழ்நாடு அரசு

வெளி இணைப்புகள்

தொகு