தமிழ் பெயரிடல்
தமிழ் பெயரிடல் என்னும் இக்கட்டுரை, தமிழர் மத்தியில் நடைமுறையில் உள்ள பெயரிடல் மரபு பற்றியது.
தமிழர் பெயரிடல் மரபு
தொகுபொதுவாக தமிழர்களின் பெயரிடல் மரபு தந்தையின் பெயரை முன்னாலும் பின்பகுதியாக பிள்ளைக்கு இடப்பட்ட பெயரையும் கொண்டமைந்ததான முழுப் பெயரைக் கொண்டது. பெயரிடலின் முதலெழுத்து என்பது தந்தையின் பெயரை குறிக்கும் முன்னெழுத்து ஆகும். வேறு பல சமூகத்தவர்களைப் போல் குடும்பப் பெயரோ, நடுப்பெயர், முதற் பெயர் போன்ற கூறுகளைக் கொண்ட பெயரிடல் முறைமையோ தமிழர்கள் மத்தியில் இருக்கவில்லை. ஐரோப்பிய இனத்தவரின் குடியேற்றவாத ஆட்சிக்காலத்தில் ஏற்பட்ட சில சூழ்நிலைகள் காரணமாக, முக்கியமாகச் சட்டம் சார்ந்த தேவைகளுக்காக ஐரோப்பியர் முறைமையைப் போன்ற, ஒரு முதற் பெயர், இறுதிப் பெயர் ஆகியவற்றைத் தழுவிய முறைகள் தமிழர் மத்தியில் புழக்கத்துக்கு வந்ததாகக் கூறுகிறார்கள். பொதுவாகத் தந்தையுடைய பெயரையும் சேர்த்துக்கொண்டு இரண்டு கூறுகளைக்கொண்ட பெயர் புழக்கத்துக்கு வந்தது. (எ.கா: முத்துவேலு கருணாநிதி). தமிழ் நாட்டில் ஊர்ப் பெயர்களைச் சேர்த்துக் கொள்ளும் வழக்கமும் உண்டு. (எ.கா: சி. என். அண்ணாதுரை - காஞ்சிபுரம் (Conjeevaram) நடராஜன் (Natarajan) அண்ணாதுரை). அண்ணாமலைச் செட்டியார், முத்துராமலிங்கத் தேவர் எனச் சாதிப் பெயர்களைச் சேர்த்துக்கொள்ளும் வழக்கமும் இருந்தது. இலங்கை ,மட்டக்களப்பு பிரதேசங்களில் சாதி வழி குறியீடாக அமையும் 'போடியார்' முதலான ( எ.கா: மாணிக்கப் போடியார்) பிற்கூறுகள் கொண்ட பெயர்கள் வழக்கத்திலுள்ளன.ஆயினும் இற்றை வரை மேற்கத்தேய பெயரிலுக்கு மாற்றாக அமையும் தமிழர் பெயரிடல் முறைமையை விளங்கிக் கொள்ளமுடியாமையால் கடவுச் சீட்டு விண்ணப்பம் முதலான தேவைகளில் தமிழர்கள் சிரமங்களை எதிர்கொள்வதும் இத்தகைய இரட்டைப் பெயரிடலிலுள்ள கடைசிக்கூறான குறித்த நபருக்குரிய பெயரையே குடும்பப் பெயராகக் கொள்வதும் நடந்து வருகிறது.
பெயர்களில் சந்த அசைவு
தொகுதமிழர்களிடையே ஒரே குடும்பத்தில் காணப்படும் பெயர்களுக்கிடையே சந்த அசைவு காணப்படும் மரபு காணப்படுகிறது. (எ.கா: இராசேந்திரன், இராசேசுவரி.. சந்திரகுமார், சிவகுமார்....)
பெயர்களில் பொருளார்த்தம்
தொகுபெயர்கள் அர்த்தம் பொதிந்ததாக இருக்கவேண்டும் என்ற மரபு காணப்பட்டு வந்த போதிலும் நாகரிகம் என்ற பெயரில் தமிழ் சாரா ஓசையிலுள்ள ஈர்ப்பினால் வேறுபல பெயர்களும் புழக்கத்திலுள்ளன.சோதிட நம்பிக்கைகளும் இதற்கு காரணமாகின. இந்து சோதிட முறைமையில் குறித்த இராசிக்கான பெயரிடல் முன்னெழுத்து சில வேளைகளில் மொழிக்கு முதலில் அமையாத எழுத்துக்களையும் கொண்டிருப்பதும் எண்சோதிட சீர்படுத்தலிலும் பொருளுள்ள பெயர்களை வைத்தல் சாத்தியமற்றுப் போகிறது.
பெயர் தலைப்பு
தொகுதமிழில் ஆங்கில வழக்குக்கு மாறாக திருமணமாகாத ஆண்கள் செல்வன் என்ற தலைப்பினாலும் திருமணமான நிலையில் திரு என்ற தலைப்பிட்டும் அழைக்கப்படுவர்.இதே போல் திருமணமாகாத பெண்கள் செல்வி என்ற தலைப்பினாலும் திருமணமான நிலையில் திருமதி என்ற தலைப்பிட்டும் அழைக்கப்படுவர்.
சிறப்புப்பட்டங்களுக்கான பெயர்த் தலைப்புகள்
தொகு- பேராசிரியர் :- Professor
- முனைவர் / கலாநிதி :- Doctor
- புலவர் :- Scholar
- பண்டிதர் :- Pandit
- சங்கைக்குரிய:- Venerable
- கௌரவ:-Honerable
- வணக்கத்திற்குரிய:-Reverend