தலித் எழில்மலை

தலித் எழில்மலை (Dalit Ezhilmalai, பிறப்பு: ஏழுமலை[1], சூன் 24, 1945 - மே 6, 2020) ஓர் இந்திய அரசியல்வாதியும், முன்னாள் மத்திய அமைச்சரும் ஆவார். இவர் பாட்டாளி மக்கள் கட்சி சார்பாகவும் மற்றும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் சார்பாகவும், இந்திய நாடாளுமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

பிறப்பு தொகு

இவர் சூன் 24, 1945 ஆம் ஆண்டு சென்னை மாகாணத்தின், செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் அருகே உள்ள இரும்பேடு கிராமத்தில் பிறந்தார். 1970 ஆம் ஆண்டு முதல் இராணுவத்தில் சேர்ந்து பணிபுரிந்த இவர், 1971 ஆம் ஆண்டு இந்தியா, பாகிஸ்தான் போரில் இராணுவ அதிகாரியாக சிறப்பாக பணியாற்றியவர். இராணுவத்தில் சிறந்த சேவை ஆற்றியதற்காக குடியரசுத் தலைவரிடம் கே. சைனிக் சேவா பதக்கம் பெற்றார். பின்னர் இராணுவத்தில் இருந்து ஓய்வு பெற்றார்.

அரசியல் வாழ்க்கை தொகு

இவர் பாமகவில் இணைந்து அக்கட்சியின் பொதுச்செயலாளராகவும், அந்த கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவராகவும் திகழ்ந்தவர். 1998 ஆம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில் பாமக சார்பில், சிதம்பரம் தொகுதியிலிருந்து, 12 வது மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் வாஜ்பாய் தலைமையிலான மத்திய அரசில் (தனிப்பொறுப்பு) சுகாதாரத்துறை இணை அமைச்சராக பணியாற்றினார்.[2][3]

பின்னர் இவர் அஇஅதிமுகவில் சேர்ந்தார். 2001 ஆம் ஆண்டு நடந்த இடைத் தேர்தலில் திருச்சி தொகுதியில், அஇஅதிமுகவின், நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர் இவர் அரசியலில் இருந்து ஒதுங்கினார்.

குடும்பம் தொகு

இவர் மனைவியின் பெயர் முனிரத்தினம். இவர்கள் மூன்று மகள்களையும் ஒரு மகனையும் ஈன்றனர். [4]

இறப்பு தொகு

உடல்நலக்குறைவால் அவதிபட்டு வந்த இவர், 06 மே 2020 ஆம் நாள் புதன்கிழமை சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் மாரடைப்பால் காலமானார்.[5][6]

மேற்கோள்கள் தொகு

  1. "சிதம்பரம் மக்களவை தொகுதி: இந்தி திணிப்பு, வீராணம், ஹைட்ரோ கார்பன் – போராட்ட நிலத்தின் தேர்தல் வரலாறு". https://www.bbc.com/tamil/india-47684844. பிபிசி தமிழ் (24 மே, 2019)
  2. "தலித் எழில்மலை ஆளுமைக் குறிப்பு" இம் மூலத்தில் இருந்து 2016-05-27 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20160527003323/http://parliamentofindia.nic.in/ls/lok12/biodata/12TN12.htm. 
  3. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" இம் மூலத்தில் இருந்து 2008-05-27 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20080527051945/http://www.bjp.org/news/profile1.htm. 
  4. தினமணி 2020 மே 7, பக்.5
  5. "முன்னாள் மத்திய அமைச்சர் தலித் எழில்மலை மாரடைப்பால் காலமானார்". https://tamil.oneindia.com/news/chennai/former-union-minister-dalit-ezhilmalai-passes-away-384639.html.  ஒன் இந்தியா (06 மே, 2020)
  6. "முன்னாள் மத்திய அமைச்சர் தலித் எழில்மலை காலமானார்...!". https://tamil.news18.com/news/tamil-nadu/former-union-minister-dalit-ezhilmalai-died-in-chennai-this-morning-from-a-heart-attack-vin-287729.html.  NEWS18 தமிழ் (06 மே, 2020)
"https://ta.wikipedia.org/w/index.php?title=தலித்_எழில்மலை&oldid=3557413" இருந்து மீள்விக்கப்பட்டது