தாராதாரிணி சக்தி பீடக் கோவில்
தாரா தாரிணி சக்தி பீட கோவில், இந்தியாவின் ஒடிசா மாநிலத்தின் பெர்காம்பூர் நகரத்திலிருந்து இருந்து நாற்பது கல் தொலைவில் உள்ள கஞ்சாம் மாவட்டத்தின் புருஷோத்தம்பூரில் ஓடும் ருசிகுல்ய ஆற்றின் அருகில் சுமார் 700 அடி உயரமான மலை மீது உள்ளது. இந்த சக்தி பீட ஆலயத்திற்கு நடந்து செல்ல வேண்டும் எனில் 999 படிகள் ஏற வேண்டும். கடைசி படியான ஆயிரமாவது படியேறினால் ஆலயத்தை அடையலாம். ஆனால் வாகனத்தின் மூலமும் செல்ல முடியும். ஒவ்வொரு படியையும் கடக்கும் பொழுது தேவியின் ஸ்லோகமாக தாராதாரிணி நமஹ எனக் கூறிக் கொண்டு நடப்பதினால் பலன் அதிகம் கிடைக்கும் என்பது ஐதீகம்.[1]
கோவிலின் வரலாறு
தொகுஇந்த ஆலயத்தில் இரண்டு தேவிகள் உள்ளனர். பெரியவளுடைய பெயர் தாரா, சிறியவள் தாரிணி. கல்லில் முகம் போன்று செதுக்கப்பட்டு உள்ள அந்த சிலைகளுக்கு அழகுற அணிகலன்கள் அணிவித்து பெண்ரூபமாக முதலில் அங்கு குடியேறி இருந்த ஆதிவாசிகள் வணங்கி வந்தனர். நாளடைவில் இக்கோவில் சக்தி பீடமென்று கண்டறியப்பட்டதால் அனைவரும் சென்று பூஜிக்கும் ஆலயமாகியது. பாறையில் உள்ள சிலைகளைப் போலவே பித்தளையில் இரு தேவிகள் செய்யப்பட்டு பூஜிப்பதற்கென வைக்கப்பட்டு உள்ளன. மூலவர் கற்சிலை பழுதடைந்துவிடக் கூடாது என்பதினால் ஆலய நுழைவாயிலில் உள்ள அந்த மாற்று சிலைகளுக்கு மட்டுமே பூஜைகள் செய்ய அனுமதி உள்ளது.[2]
இக்கோவிலைப் பற்றிய தகவல் காளிகா புராணத்தில் வருகிறது. அதில் தேவியின் மார்பகங்கள் விழுந்த சக்தி பீடமாகக் கூறப்படுகிறது. அதில் ’”ஸ்தன கண்டச்ச தாரிணி’’ என்று இக்கோவில் குறிப்பிடப்படுகிறது. ஆகவே இக்கோவில் ஆதி சக்தி பீடங்களில் ஒன்றாக விளங்குகிறது.
ஒடிசாவின் தெற்குப்புற ஒரியாப் பகுதிகளில் தாராதாரிணி கோவில் பலருக்கும் குலதெய்வமாக உள்ளது.
எவரையும் கர்பக்கிரகத்தினுள் அனுமதிப்பதில்லை. ஒரு காலத்தில் அந்த ஆலயம் உள்ள இடத்தின் பக்கத்தில் ஓடும் ருஷிகுல்யா என்ற நதியில் பயணம் செய்து வாணிபம் செய்தவர்கள், மீன் பிடிப்பவர்கள் என நதியை நம்பி வாழ்ந்து கொண்டு இருந்தவர்கள் அந்த தேவிகளை வழிபட்ட பின் பயணத்தைத் துவக்கினராம்.
மார்ச் - ஏப்ரல் மாதங்களில் நடக்கும் விழாக்காலத்தில் ஐந்து முதல் ஆறு லட்ச மக்கள் வரை அந்த ஆலயத்தில் தரிசனம்செய்ய வருகின்றனர். இருபதாம் நூற்றாண்டுகளுக்கு முன் சில சமயங்களில் அந்த ஆலயத்தில் பலிகள் தரப்பட்டு வந்தது. அதை தற்பொழுது தடை செய்து விட்டனராம். ஒவ்வொரு மாதமும் சங்கராந்தி தினத்தன்று விஷேச பூஜைகள் நடைபெறுகின்றன. ஏனெனில் தந்திர சாதகம் செய்ய அது நல்ல நாளாக கருதப்படுகின்றது. அந்த ஆலயத்தில் சென்று தலைமுடியை காணிக்கையாக செலுத்துபவர்களும் (மொட்டையடித்துக் கொள்ளுதல்), குழந்தைகளுடைய முதல் தலை முடியை காணிக்கையாகத் தரும் வழக்கமும் உள்ளன.
ஆலய வளாகத்திற்குள் திருமணங்களும், பூணூல் வைபவங்களும் நடைபெற அனுமதி உள்ளது. அந்த இரண்டு தேவிகளான பீடம் அங்கு வந்ததின் காரணம் வரலாற்று உண்மைகள் மூலம் தெரியவில்லை என்றாலும் இந்த ஆலயத்தைச் சுற்றி மூன்று தல வரலாறுகள் உள்ளன.
சக்தி பீட வரிசையில் சதியின் இரு மார்பகங்களும் இந்த இடத்தில் விழுந்தன. அதனால் இரண்டு தேவியான தாரா - தாரிணி இருவரும் அங்கு எழுந்தனராம்.
இரண்டாம் தல வரலாற்றின்படி அங்கிருந்த ஒரு கிராமத்தில் இரு இளம் பெண்கள் அதிசயம் நிகழ்த்தி வந்தனர். கிராமமக்களின் பல துயரங்களை, நோய் நொடிகளைத் தீர்த்து வைத்தனர். அவர்களுடைய தாய் - தந்தை எவர் என எவருக்கும் தெரியவில்லை என்பதினால் சிறு வயது முதலே ஒரு பிராமணர் அவர்களைப் போற்றி வளர்த்து வந்தார். வளர்ந்து வந்த அவர்கள் ஒரு கால கட்டத்தில் தம் இருவருக்கும் அந்த இடத்தில் ஆலயம் அமைக்குமாறு அவரிடம் கூறிவிட்டு மறைந்து போனார்கள். அதனால் அந்த பிராமணர் மூலம் அந்த ஆலயம் எழுந்தது.
மூன்றாவது தல வரலாற்றின்படி அந்த தேவிகள் இருவரும் புத்தர் மதத்தவர்கள் வணங்கி வந்த சக்தி தேவதைகள். ஒரு கால கட்டத்தில், அதாவது முதலாம் நூற்றாண்டில் மகாமாய புத்தப் பிரிவினர் தந்திரக் கலைகளைக் கற்றறியத் துவங்கிய கால கட்டத்தில் அந்த தேவிகளை ஆராதித்து தந்திரக் கலைகளை வளர்த்துக் கொண்டனர். அதனால்தான் அந்த ஆலயத்தில் ஒரு சிறிய புத்தர் சிலை தியானம் செய்யும் கோலத்தில் உள்ளது என அந்த கதைக்கான காரணம் கூறப்படுகின்றது. ஆனால் தாரா தேவியின் தோற்றம் இந்து மதத்திலேயே நிகழ்ந்தது. புத்த மதத்தில் இந்து மதக் கடவுளர்களான ஸ்ரீதேவி (மஹா லக்ஷ்மி), வைஷ்ரவணன் (குபேரன்) போன்றோர் இணைக்கப்பட்டது போல தாரா தேவி வழிபாடும் புகுத்தப்பட்டது. இத்தகைய காரணங்களால் இக்கோவில் புத்த மதத்தினருக்கும் வழிபாட்டுத் தலமாக இருக்கிறது.[3]
இரட்டை அம்மன்களான தாரா மற்றும் தாரிணி ஆகியோருக்கு பெர்ஹாம்பூரில் இருந்து 32 கிமீ தொலைவில் உள்ள இந்தக் கோவில் அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. ருஷிகுல்யா நதி இவ்வழியாக ஓடுவதால் காண்பதற்கும் இக்கோவில் அழகாக காட்சியளிக்கிறது. சித்திரை மாதத்தில் ஏராளமான பக்தர்கள் இங்கு குவிகிறார்கள். வருமான ஆணையத்தின் பங்களா இந்த இடத்தில் உள்ளதால் பயணிகள் அதில் தங்கிக்கொள்ளலாம். பெர்ஹாம்பூரில் இருந்து இங்கு பேருந்து சேவைகள் உள்ளன. புருஷோத்தம்பூரில் உள்ள கோவில் இருக்கும் தாராதாரிணி குன்று ஏறத்தாழ 180 ஏக்கரில் அமைந்துள்ளது.[4]
இவற்றையும் பார்க்கவும்
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2012-04-23. பார்க்கப்பட்ட நாள் 2015-05-11.
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2012-04-23. பார்க்கப்பட்ட நாள் 2015-05-11.
- ↑ http://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE_%28%E0%AE%AA%E0%AF%8C%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D%29
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2012-04-23. பார்க்கப்பட்ட நாள் 2015-05-11.
வெளி இணைப்புகள்
தொகு- www.shaktipeethas.org பரணிடப்பட்டது 2015-05-18 at the வந்தவழி இயந்திரம்
- www.shaktipith.com பரணிடப்பட்டது 2015-03-17 at the வந்தவழி இயந்திரம்
- தாரா தாரிணி கோவில் பரணிடப்பட்டது 2012-04-23 at the வந்தவழி இயந்திரம்