தாரா சிலை

பௌத்த சமயத்தின், இலங்கையைச் சேர்ந்த தாரா சிலை

தாரா சிலை என்பது இலங்கையின் 7- 8 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த தங்க முலாம் பூசப்பட்ட ஒரு வெண்கலச் சிலையாகும். இது பௌத்த சமய பெண் தெய்வமான தாராவின் சிலையாகும். பத்தொன்பதாம் நூற்றாண்டில் பிரித்தானியர் கண்டியின் கடைசி மன்னரை வென்று கண்டி இராச்சியத்தை கைப்பற்றினர். அப்போது இலங்கையின் பிரித்தானியத் தேசாதிபதியாக இருந்தவர் ராபர்ட் பிரௌன்ரிக் என்பவர். இவரது பதவிக்காலம் முடிந்து இவர் பிரிட்டன் சென்றபோது தன்னுடன் இந்தச் சிலையையும் கொண்டு சென்றார். பின்னர் இச்சிலையை இவர் 1830 இல் பிரித்தானிய அருங்காட்சியகத்துக்கு வழங்கினார். [1]

தாரா சிலை
Statue of Tara
செய்பொருள்வெண்கலம்
அளவு143 செமீ உயரம்
உருவாக்கம்கி. பி. 7வது-8வது நூற்றாண்டு
தற்போதைய இடம்இலண்டன், பிரித்தானிய அருங்காட்சியகம்
அடையாளம்1830,0612.4
தாரா சிலை

பின்னணி

தொகு

கி.மு மூன்றாம் நூற்றாண்டில் இருந்து இலங்கைத் தீவில் பௌத்த சமயமானது தொடர்ச்சியான வரலாற்றைக் கொண்டுள்ளது. இந்து தாய் தெய்வமான தாரா, பௌத்த சமயத்தினுள் ஒரு புதிய பாத்திரமாக மறுவடிவம் பெற்றது. [2] மகாயான பௌத்தத்தில் தாரா ஒரு முக்கியத்துவம் வாய்ந்த ஒரு பெண் தெய்வமாவார். இலங்கையில் ஒரு காலத்தில் மகாயான பௌத்தப் பிரிவானது தழைத்தோங்கியது. ஆனால் பிற்காலத்தில் தேரவாத பௌத்தம் தலையெடுத்தது. தென்கிழக்கு ஆசியாவின் பல நாடுகளைப் போலவே இலங்கை ஒரு தேராவத பௌத்த நாடாக உள்ளது. [3] இச்சிலையானது ஒரு காலத்தில் காவல் தெய்வமான பத்தினி தெய்வமான கண்ணகியின் சிலையாக கருதப்பட்டது. ஆனால் தறோபோது இந்த சிலை தாராவினுடையது என ஒப்புக் கொள்ளப்பட்டுள்ளது. [4]

விளக்கம்

தொகு

இது ஆள் உயரத்தில் வெண்கலத்தால் வடிக்கப்பட்ட ஒரு பெண் தெய்வச் சிலையாகும். இது மெழுகுமண் வார்ப்பில் உருவாக்கப்பட்ட கெட்டியான சிலையாகும். நாகாசு வேலை செய்யப்பட்டு தங்கச் சிலைபோன்று தோன்ற தங்க முலாம் பூசப்பட்டுள்ளது. தாராவின் வலது கையானது வரத முத்திரையுடனும், இடது கையானது தாமரை மலரை ஏந்தி இருப்பதைப் போலவும், தொங்கிய காதுகளுடனும், மூடிய கண்களுடனும், வடிவமைக்கப்பட்டுள்ளது. தற்போது அந்த தாமரை மலர் கையில் இல்லை. இச்சிலையானது உயரமான ஒரு மணிமுடியைக் கொண்டதாக உள்ளது. அந்த மணிமுடியியன் முன் பக்கத்தில் ஒரு துளையுள்ளது அதில் விலை மதிப்புமிக்க இரத்தினக் கல் பதிக்கப்பட்டிரிந்திருக்கும். [4] நின்ற கோலத்தில் அனுராதபுரம் கலையம்ச தாரா சிலையின் ஓரேஒரு மாதிரி இந்தச் சிலையாகும். இந்தச் சிலை அதன் தோற்றத்தில் மட்டுமல்லாமல், இதன் செய்முறையாலும் மதிப்புமிக்கதாக உள்ளது. மேலும் இந்த கனமாக சிலையானது மெழுகுமண் வார்ப்பு என்ற உயர்ந்த தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி விலையுயர்ந்த உலோகக் கலவையில் இருந்து உருவாக்கப்பட்டது. [2]

பிரதி

தொகு

இந்த சிலையின் ஒரு மாதிரியானது இலங்கையின் கொழும்பு தேசிய அருங்காட்சியகத்தில் உள்ளது . [5]

குறிப்புகள்

தொகு
  1. Greenfield, Jeanette (1996). The return of cultural treasures (2nd ed.). கேம்பிரிட்ச்: Cambridge university press. p. 132. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0521477468.
  2. 2.0 2.1 Episode 54 – Statue of Tara, BBC, retrieved 25 July 2014
  3. Buddhism in Sri Lanka, buddhanet.net, retrieved 9 December 2013
  4. 4.0 4.1 Statue of Tara, Highlights, British Museum, accessed 9 December 2013
  5. The female as Cult Object in Buddhism, Digital Library, retrieved 10 December 2013
"https://ta.wikipedia.org/w/index.php?title=தாரா_சிலை&oldid=2923564" இலிருந்து மீள்விக்கப்பட்டது