முதன்மை பட்டியைத் திறக்கவும்

ஸ்ரீ விக்கிரம ராஜசிங்கன் (1780 - ஜனவரி 30, 1832) இலங்கையின் கண்டி அரசை ஆண்ட கடைசி மன்னன் ஆவான். முன்னைய அரசன் ஸ்ரீ ராஜாதி ராஜசிங்கன் பிள்ளைகள் இன்றி இறந்தபோது இவன் சிம்மாசனம் ஏறினான். இறுதியாகக் கண்டிப் போரில் 1815ல் பிரித்தானியரால் தோற்கடிக்கப்பட்ட இவன் சிறை பிடிக்கப்பட்டான்.

ஸ்ரீ விக்கிரம ராஜசிங்கன்
கண்டி அரசன்
Sri Vikrama Rajasinha.jpg
கடைசிக் கண்டியரசன் ஸ்ரீ விக்கிரம ராஜசிங்கன்
ஆட்சி1798 - பெப்ரவரி 10 1815
முடிசூட்டு விழா1798
முன்னிருந்தவர்ஸ்ரீ ராஜாதி ராஜசிங்கன்
பின்வந்தவர்ஜோர்ஜ் IIIபிரிதானிய மன்னன்
மரபுநாயக்க மன்னர்கள்
தந்தைஸ்ரீ வேங்கடபெருமாள்
தாய்சுப்பம்மா
அடக்கம்இலங்கை

இவன் தமிழ் நாட்டின் தெலுங்கு நாயக்கர் வம்சத்தில் தோன்றிய ஒரு இளவரசன் ஆவான். இவனது இயற்பெயர் கண்ணுசாமி நாயுடு. இவனுக்கு முதலில் நாட்டை ஆண்ட ஸ்ரீ ராஜாதிராஜ சிங்கனின் மருமகன் ஆவான். முடிசூட்டலின்போது ஸ்ரீ விக்கிரம ராஜசிங்கன் என்னும் சிம்மாசனப் பெயருடன் கண்ணுசாமி முடி சூட்டப்பட்டான்.

அரசுரிமைப் போட்டிதொகு

எனினும், ராஜாதி ராஜசிங்கனின் வாரிசு உரிமைக்காக அவனது அரசியின் தம்பியும் போட்டியிட்டான். உண்மையில் அவனுக்கே கூடிய உரிமை இருந்ததாகக் கருதப்படுகிறது. ஆனால், பிலிமத்தலாவை என்னும் கண்டியரசின் அதிகார் எனப்படும் முதலமைச்சன், கண்ணுச்சாமியை அரசனாக்கினான். கண்டியரசைத் தானே கவர்ந்து கொள்ளும் நோக்கிலேயே பிலிமத்தலாவை இவ்வாறு செய்ததாகவும் கருத்து நிலவுகிறது. பதவியேற்ற ஸ்ரீ விக்கிரம ராஜசிங்கன் பல சதி முயற்சிகளைச் சந்திக்க வேண்டியிருந்தது. இவனது ஆட்சிக்காலம் இலங்கை வரலாற்றின் மிகவும் குழப்பமான காலங்களில் ஒன்றாகும்.

உள் முரண்பாடுகள்தொகு

பிலிமத்தலாவையின் சதிதொகு

இவனது காலத்தில் இலங்கையின் கரையோரப் பகுதிகளை ஒல்லாந்தரிடம் இருந்து கைப்பற்றிய பிரித்தானியர், கண்டி அரசில் தலையிடவில்லை. ஆனால், பிலிமத்தலாவையோ பிரித்தானியருடன் மறைமுகத் தொடர்புகளை வைத்துக்கொண்டு கண்டியரசனைப் பிரித்தானியருக்கு எதிராகத் தூண்டிவிடும் நடவடிக்கைகளில் ஈடுபட்டான். இதனால் பிரித்தானியர் கண்டியரசைக் கைப்பற்றுவதற்கான காரணம் கிடைக்கும் என அவன் கருதினான். கரையோர மாகாணங்களில் உறுதியான நிலையில் இருந்த பிரித்தானியருடன் போரில் ஈடுபடும்படி பிலிமத்தலாவை ஸ்ரீ விக்கிரம ராஜசிங்கனைத் தூண்டி விட்டான். 1803 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 22 ஆம் தேதி போர் அறிவிக்கப்பட்டது. பிரித்தானியர் எதிர்ப்புக்கள் இன்றிக் கண்டிக்குள் நுழைந்தனர். கண்டி அரசன் தப்பி ஓடினான். எனினும், அதிகார் பிரித்தானியப் படைகளைத் தோற்கடித்துக் கண்டியரசனை மீண்டும் பதவியில் அமர்த்தினான். பிலிமத்தலாவை இரண்டு முறை அரசனுக்கு எதிராகச் சதிசெய்து நாட்டைக் கவர முயன்றது கண்டுபிடிக்கப்பட்டாலும் அவன் மன்னிக்கப்பட்டான். மூன்றாவது தடவையும் அவன் பிடிபட்டபோது அவன் கொல்லப்பட்டான்.

எகலப்பொலையின் சதிதொகு

பிலிமத்தலாவைக்குப் பதிலாக அவனது மருமகனான எகலப்பொலை அதிகாராக நியமிக்கப்பட்டான். அவனும் தனது மாமனைப் போலவே அரசனுக்கு எதிராகச் செயற்பட்டுக் குழப்பங்களைத் தூண்டி விட்டான். இக்குழப்பங்கள் அடக்கப்பட்டன. இதனைத் தொடர்ந்து எகலப்பொலை தப்பிக் கொழும்புக்கு ஓடிப் பிரித்தானியருடன் சேர்ந்து கொண்டான்.

கண்டி கைப்பற்றப்படல்தொகு

இவனது தூண்டுதலின் பேரில், பிரித்தானியர் மீண்டும் 1815 பெப்ரவரி 10 ஆம் தேதி கண்டிக்குள் நுழைந்தனர். மார்ச் 2 ஆம் திகதி கண்டி ஒப்பந்தம் என இன்று வழங்கப்படும் ஒப்பந்தத்தின் மூலம் கண்டி அரசு பிரித்தானியருக்குக் கொடுக்கப்பட்டது. பிடிபட்ட ஸ்ரீ விக்கிரம ராஜசிங்கன் தென்னிந்தியாவில் உள்ள வேலூர்க் கோட்டைக்கு அனுப்பப்பட்டான் அங்கே பிரித்தானியரால் கொடுக்கப்பட்ட சிறிதளவு பணத்தில் இரு மனைவியருடன் வாழும் நிலை ஏற்பட்டது. 1832 ஆம் ஆண்டு ஜனவரி 30 ஆம் நாள் தனது 52 ஆவது வயதில் அவன் காலமானான்.

இவற்றையும் பார்க்கதொகு