தால்மிடிஸ்
தால்மிடிஸ் (Tolmides, கிரேக்கம் : Τολμίδης) என்பவர், டோல்மேயசின் மகனும், முதல் பெலொப்பொன்னேசியப் போரின் முன்னணி ஏதெனியன் தளபதியும் ஆவார். கிமு 450 மற்றும் 440 களின் முற்பகுதியில் ஏதென்சின் இராணுவத் தலைமைக்கு பெரிக்கிள்ஸ் மற்றும் மைரனைட்ஸ் ஆகியோருடன் இவரும் போட்டியிட்டார். [1]
கிமு 455 இல், எசுபார்த்தான்கள் மற்றும் அவர்களது கூட்டாளிகளைத் தாக்கும் நோக்கத்துடன் பெலொப்பொன்னேசியாவின் கரையோரங்களில் போர்ப் பயணம் மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டடது. அதற்காக தால்மிடிசின் தலைமையில் ஒரு கடற்படை மற்றும் 4,000 வீரர்களைக் கொண்ட ஒரு படை அனுப்பப்பட்டது. தால்மிடிசு மெசேனியாவில் உள்ள மெத்தோன் நகரைக் கைப்பற்றினார், ஆனால் எசுபார்த்தன் படையின் வருகையால் அதைக் கைவிட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. [2] இவர் முக்கியமான எசுபார்த்தன் துறைமுகமான கிதியோனைத் தாக்கி கப்பல் பட்டறைகளை எரித்தார். [3] மேலும் இவர் சைத்தரா தீவையும் தாக்கினார்.
தால்மிடிஸ் அயோனியன் கடலில் உள்ள தீவான ஜாசிந்தசுடன் ஒரு கூட்டணியை உருவாக்கி, [4] கொரிந்து வளைகுடாவிற்குள் பயணம் செய்தார். பின்னர் இவர் வளைகுடாவின் வடக்கு கடற்கரையில் உள்ள கொரிந்திய குடியேற்றமான சால்சிசை [5] கைப்பற்றினார். பின்னர் ஓசோலியன் லோக்ரிசில் உள்ள நவ்ப்பாக்ட்டசைக் கைப்பற்றி மெசேனியாவிலிருந்து அகதிகளை குடியேற்றினார். [6] அவர்கள் கேந்திரிய முக்கியத்துவம் வாய்ந்த இடத்தில் ஏதெனியன் கூட்டாளிகளாக செயல்படுமாறு ஏற்பாடு செய்தார். மேலும் இவர் சிசியோன் பிரதேசத்தில் தரையிறங்கி அவர்களுக்கு எதிராக அனுப்பப்பட்ட ஹாப்லைட்களின் படையை தோற்கடித்தார். [7]
பின்னர் தால்மிடிஸ் ஏதெனியன் குடியிருப்பை நக்சஸ் மற்றும் யூபோயாவில் உருவாக்கினார். [8] கிமு 447 இல், ஏதெனிய ஆட்சிக்கு எதிரான எழுச்சியை அடக்குவதற்காக 1,000 ஏதெனியர்கள் மற்றும் சில நட்பு நாட்டுப் படைகளுடன் இவர் போயோட்டியாவிற்கு அணிவகுத்துச் சென்றார். செரோனியாவில் பாசறையை அமைத்த பிறகு, இவர் கொரோனியாவில் போயோடியன், லோக்ரியன், யூபோயன் படையை எதிர்கொண்டார். போரில் தால்மிடிஸ் இறந்ததால் ஏதெனியர்கள் கடுமையான தோல்வியை சந்தித்தனர். [9]
கொரோனியா போரில் ஏதெனியன் தோல்வியானது 'ஏதெனியன் நிலப் பேரரசின்' முடிவை முன்ன்றிவித்தாதக இருந்தது.