திருக்கோணேச்சரம்

இலங்கையில் உள்ள இந்து கோவில்
(திருக்கோணேஸ்வரம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

திருக்கோணேச்சரம் (திருக்கோணேசுவரம்) இலங்கையின் கிழக்கு மாகாணத்தின் தலை நகரமான திருக்கோணமலையில் உள்ள ஒரு சிவன் கோயில் ஆகும். இலங்கையில் உள்ள இரண்டு தேவாரப் பாடல் பெற்ற தலங்களுள் இதுவும் ஒன்று. பொ.ஊ. 7 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த திருஞானசம்பந்தர் இக்கோயிலின் மீது ஒரு பதிகம் பாடியுள்ளார். வருடா வருடம் ஆலயத்தில் எழுந்தருளியிருக்கும் இறைவனின் விக்கிரகம் நகர்வலம் வருவதும் குறிப்பிடத்தக்கது. மேலும் இக்கோவில் பதினெட்டு மகா சக்தி பீடங்களில் தேவியின் இடுப்புப் பகுதி விழுந்த பீடமாகவும் தந்திர சூடாமணி கூறும் 51 சக்தி பீடங்களில் தேவியின் சிலம்புகள் விழுந்த பீடமாகவும் கருதப்படுகிறது. ஒரு சிலர் உண்மையான சக்தி பீடக் கோவில் போர்த்துகீசியப் படையெடுப்பில் இடிக்கப்பட்டு விட்டதால் இந்தக் கோவிலின் அம்மன் சன்னதியே சக்தி பீடமாக வணங்கப்படுகிறது என்றும் கூறுகிறார்கள்.[2]

திருக்கோணேச்சரம்
திருக்கோணேச்சரம்
திருக்கோணேச்சரம்
திருக்கோணேச்சரம் is located in இலங்கை
திருக்கோணேச்சரம்
திருக்கோணேச்சரம்
தேசப்படத்தில் திருக்கோணேச்சரம்
ஆள்கூறுகள்:8°34′57″N 81°14′44″E / 8.58250°N 81.24556°E / 8.58250; 81.24556
பெயர்
பெயர்:திருக்கோணேச்சரம்
அமைவிடம்
நாடு:இலங்கை
மாகாணம்:கிழக்கு மாகாணம்
மாவட்டம்:திருக்கோணமலை
அமைவு:சுவாமிமலை
கோயில் தகவல்கள்
மூலவர்:சிவன்
கட்டிடக்கலையும் பண்பாடும்
கட்டடக்கலை வடிவமைப்பு:தமிழர் கட்டிடக்கலை
வரலாறு
கட்டப்பட்ட நாள்:அறியப்படவில்லை; மிகமுந்திய குறிப்பு கி.மு. 6ம் நூற்றாண்டு,[1] பிந்திய மீள்கட்டுமானம் 1952 CE
திருக்கோணேச்சரத்தில் இராவணன் சிலை

வரலாறு

தொகு

இது இலங்கையின் புகழ்பெற்ற ஆலயங்களுள் ஒன்றாக விளங்குகின்றது. உலகில் உள்ள வழிபாட்டுத்தலங்களில் மிகப்பழமையான[சான்று தேவை] இவ்வாலயத்தை இலங்கையை ஆண்ட மனு மாணிக்கராசா[சான்று தேவை] என்ற மன்னன் பொ.ஊ.மு. 1300ஆம் ஆண்டிற்கு முன்னர் இக்கோயிலைக் கட்டினான் என்று சான்றுகள் கூறுகின்றன[சான்று தேவை]. இது தேவாரப் பாடல் பெற்ற ஈழ நாட்டுத் தலங்களில் ஒன்றாகும்.

போர்த்துக்கேயர் கோவிலை அழித்தமை

தொகு

பொ.ஊ. 1624 ஆம் ஆண்டில் போர்த்துக்கேயத் தளபதியாகவிருந்த கொன்சுடண்டைன் டீ சா கோயிலை இடித்து கோவிலில் இருந்த கல்வெட்டுப் பிரதியொன்றினை போர்த்துக்கேய மன்னனுக்கு அனுப்பி வைத்தான்[சான்று தேவை].கோயிலின் மூல விக்கிரகம் நகர உலா சென்றபோது போர்த்துக்கேயர் கோவில் குருமார் போன்று வேடம் தரித்து கோயிலினுள் புகுந்து அதன் சொத்துக்களை கொள்ளையிட்டதுடன் கோயிலையும் அழித்தனர்[சான்று தேவை]. அழிக்கப்பட்ட கற்களைக் கொண்டு திருக்கோணமலைக் கோட்டையையும் கட்டினர். இந்தக்காலப்பகுதியில் பல பெளத்த இந்து ஆலயங்கள் போர்த்துக்கேயரால் அழிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

கோட்டை சுவரில் "முன்னே குளக்கோட்டன் ..." எனும் கல்வெட்டு காணப்படுவதும், கயல் சின்னம் (பாண்டியருடயது) பொறிக்கபெற்றிருப்பதும் இக்கோவிலின் தொன் பெருமையை உணர்த்தும்.

கல்வெட்டு

தொகு

காலவோட்டத்தில் கல்வெட்டு சிதைந்த போதும் பலர் அக்கல்வெட்டினை வெற்றிடம் நிரப்பி புரிந்து கொள்ள முயற்சி செய்துள்ளனர். அவற்றில் ஒன்றே கீழ்க் காணுவது:

இங்கு குளக்கோட்டன் என்பானே இக்கோவிலிற்கு திருப்பணி செய்தான் (திருத்தியமைத்தான்.) எனப்படுகிறது. குளமும் (கந்தளாய்க் குளம்), கோட்டமும் கட்டுவித்ததால் இயற்பெயர் மறைந்து குளக்கோட்டன் எனும் பெயர் வழங்குவதாயிற்று.

ஆதி கோணேச்சரம்

தொகு

திருக்கோணமலையிலிருந்து கொழும்பு செல்லும் வழியில் தம்பலகாமம் எனும் தமிழ் கிராமம் உள்ளது. இங்கே ஆதி கோணேச்சரம் என ஒரு கோயில் உள்ளது. போர்த்துக்கேயர் திருக்கோணமலையில் ஆலயத்தை அழித்தபோது சில நலன் விரும்பிகள் சில விக்கிரகங்களை மறைத்து காப்பாற்றினர். அவ்வாறு காப்பாற்றப்பட்ட விக்கிரகமே பின்பு தம்பலகாமத்தில் பிரதிட்டைசெய்யப்பட்டது. ஆதிகோணேச்சரம் என்றறியப்படும் இக்கோவிலை தம்பலகாமத்தில் காணலாம்.

மீள் கட்டுமானம்

தொகு

மீண்டும் இலங்கை சுதந்திரம் பெற்ற பின்பு சுமார் 450 வருடங்களின் பின்னர் 1952இல் திருக்கோணமலையில் உள்ள பெரியார்களால் மீள கட்டுவிக்கப்பட்டது. முன்னைய கோயிலுடன் ஒப்பிடும் போது இப்போது இருக்கும் கோயில் மிகச்சிறியதே[சான்று தேவை].

மூர்த்தி, தல, தீர்த்தச் சிறப்பு

தொகு

திருக்கோணேச்சர ஆலயம் மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகியவற்றால் சிறப்பு மிகுந்தது. இத்தலத்தில், இறைவன் கோணேச்சரரும், இறைவி மாதுமையாளும் வீற்றிருந்து அருள் புரிகின்றனர். இக்கோயிலின் தீர்த்தம் பாவநாசம் என அழைக்கப் படுகின்றது. அதன் அர்த்தம் பாவங்களை கழுவித் தீர்க்க வல்லது. தலவிருட்சமாக கல்லால மரம் விளங்குகின்றது.

இத்தலதின் மீது திருஞானசம்பந்தரால் தேவாரப் பதிகம் பாடப் பெற்றுள்ளது. அவ்வாறே, அருணகிரிநாதரும் இத்தலத்தின் மீது திருப்புகழ் பாடியுள்ளார்.

பூசைகளும் விழாக்களும்

தொகு

இந்த ஆலயத்தில் ஆகம முறைப்படி பூசைகள் இடம்பெறுகின்றன. மகோற்சவம் பங்குனி உத்தரத்தில் கொடியேற்றத்துடன் ஆரம்பித்து, பதினெட்டு நாட்களுக்கு நடைபெறுகின்றது. இந்த ஆலயத்தில் சிவராத்திரி தினம் மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றது.

திருக்கோணமலைப் பதிகம்

தொகு
 
நுழையும் வழியிலுள்ள இராவணன் வெட்டு
 
கடலிலிருந்து பார்க்கும்போது இராவணன் வெட்டு

இது திருஞான சம்பந்தர் தன் ஞானக் கண்ணால் கோணமாமலையாரை கண்டு களித்து பாடியருளியது. சேதுவின்கண் செங்கண்மால் பூசைசெய்த சிவ பெருமானைப் பாடிப் பணிந்து போற்றி வாழ்ந்திருந்த காலத்தில், ஆழிபுடைசூழ்ந்து ஒலிக்கும் ஈழத்தில் மன்னு திருக்கோண மலையை மகிழ்ந்த செங்கண்மழவிடையாரை வணங்கிப் பாடியருளியது இத்திருப்பதிகம்.[3]

123 திருக்கோணமலை, மூன்றாம் திருமுறை

திருஞான சம்பந்தர் தேவாரம்

எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

(விளம் மா விளம் மா / விளம் விளம் மா)

நிரைகழ லரவஞ் சிலம்பொலி யலம்பும்

..நிமலர்நீ றணிதிரு மேனி

வரைகெழு மகளோர் பாகமாப் புணர்ந்த

..வடிவினர் கொடியணி விடையர்

கரைகெழு சந்துங் காரகிற் பிளவு

..மளப்பருங் கனமணி வரன்றிக்

குரைகட லோத நித்திலங் கொழிக்குங்

..கோணமா மலையமர்ந் தாரே! 1

இதிலே,

  • "குரைகடலோதம் நித்திலம் கொழிக்கும் கோணமாமலை அமர்ந்தாரே" என்றும்;
  • "குடி தனை நெருக்கி பெருக்கமாய் தோன்றும் கோணமாமலை அமர்ந்தாரே" என்றும்;
  • "தெழித்துமுன் னரற்றுஞ் செழுங்கடற் றரளஞ் செம்பொனு மிப்பியுஞ் சுமந்து கொழித்து வன்றிரைகள் கரையிடைச் சேர்க்குங் கோணமாமலை அமர்ந்தாரே" என்றும்;
  • "கோயிலுஞ் சுனையும் கடலுடன் சூழ்ந்த கோணமாமலை அமர்ந்தாரே" என்றும்;
  • "விரிந்துயர் மௌவல் மாதவி புன்னை வேங்கை வன்செருத்தி செண்பகத்தின் குருந்தொடு முல்லை கொடிவிடும் பொழில் சூழ் கோணமாமலை அமர்ந்தாரே" என்றும்;
  • "துன்றுமொண் பௌவ மவ்வலுஞ் சூழ்ந்து தாழ்ந்துறு திரைபல மோதிக் குன்றுமொண் கானல் வாசம் வந்துலவுங் கோணமாமலை அமர்ந்தாரே" என்றும் கோவிலை போற்றி பாடுகிறார்.

இவற்றையும் பார்க்கவும்

தொகு

இலங்கையின் நான்கு திசைகளிலும் நான்கு ஈச்சரங்கள் இருந்து இலங்கையைக் காவல் காத்ததாகக் கூறப்படும் நான்கு ஈச்சரங்கள்.

கோணேச்சரத்தின் நிழல் படங்கள் சில

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. Dr.Paul E.Pieris declared in 1917, at a meeting of the Royal Asiatic Society (Ceylon Branch), there was in Lanka five recognized ‘Eeswararns’ of Siva, which claimed and received adoration of all India. These were Tiruketheeswaram near Mahathitha, Munneswaram, Thondeswaram, Tirukoneswaram and நகுலேச்சரம். Royal Asiatic Society (Ceylon Branch)
  2. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2015-05-18. பார்க்கப்பட்ட நாள் 2015-05-16.
  3. [1]
  • ஈழத்துச் சிவாலயங்கள், வித்துவான் வசந்தா வைத்தியநாதன்

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=திருக்கோணேச்சரம்&oldid=4048497" இலிருந்து மீள்விக்கப்பட்டது