திருமழிசையாழ்வார்

பன்னிரு ஆழ்வார்களுள் ஒருவர்

திருமழிசையாழ்வார் வைணவ நெறியைப் பின்பற்றிப் பக்தியில் சிறந்து விளங்கிய பன்னிரு ஆழ்வார்களுள் ஒருவர்[1][2]. தை மாதம் மக நட்சத்திரத்தில் திருமாலின் ஆயுதங்களுள் ஒன்றான சக்கரத்தின் அம்சமாகத் திருமழிசை என்னும் ஊரில் பிறந்தவர்.

திருமழிசையாழ்வார்
பிறப்புதிருமழிசை
தத்துவம்வைணவம்
குருசேனை முதலியார்
இலக்கிய பணிகள்நான்முகன் திருவந்தாதி
குறிப்பிடத்தக்க சீடர்(கள்)கனிக்கண்ணன்

பிற பெயர்கள் தொகு

  • பக்திசாரர்
  • உறையில் இடாதவர் - வாளினை உறையில் இடாத வீரன் எனும் பொருள்பட (இங்கு ஆழ்வாரின் நா வாள் எனப்படுகிறது)
  • குடமூக்கிற் பகவர் - என யாப்பருங்கல விருத்திகாரர் குறிப்பது இவரையே என்றும் சொல்லப்படுகிறது.
  • திருமழிசையார்
  • திருமழிசைபிரான்

பிறப்பின் அற்புதம் தொகு

பார்க்கவர் என்னும் முனிவர் திருமழிசையில் யாகம் புரிகையில் அவர் மனைவியார் கருவுற்று பன்னிரண்டு திங்கள் கழித்து, கை, கால், முதலிய உறுப்புகள் இல்லாத ஒரு பிண்டத்தைப் பெற்றெடுத்தார். தம்பதியர் மனம் தளர்ந்து அதனைப் பிரம்புத்தூற்றின் கீழ் விட்டுச் சென்றுவிட்டார்கள். ஆண்டவன் அருளால் அப்பிண்டம் எல்லா உறுப்புகளும் அமையப்பெற்ற ஓர் அழகிய ஆண்குழந்தையாகி அழத் தொடங்கியது. அக்கணம் அவ்வழியே வந்த மகப்பேறு இல்லாத தம்பதிகளான பிரம்புத் தொழில் புரியும் திருவாளன், பங்கயச்செல்வி என்பவர்கள் குழந்தையைக் கண்டெடுத்து வளர்க்க தீர்மானித்தனர். என்ன விந்தை! அக்குழந்தையை அவளே பெற்றாள் என்னும்படி அவள் மார்பில் பால் சுரந்தது. ஆயினும் அப்பாலைக் குழந்தை குடிக்க மறுத்தது. பலநாள் வரை பால் உண்ணாமல் இருந்தும் உடல் சிறிதும் வாடவில்லை. இவரின் புகழைக் கேள்வியுற்று அருகில் உள்ள சிற்றூரில் இருந்துவந்த வயதான தம்பதியர் அன்புமிக கொடுத்த பாலை உண்ண ஆரம்பித்தார். சிறிதுகாலம் இவ்வாறு செல்கையில் தமக்குப் பால் கொண்டுவந்து தரும் இத்தம்பதிக்கு ஏதேனும் கைமாறு செய்யும் பொருட்டு ஒருநாள் தனக்குக் கொடுத்த பாலில் மீதத்தை அவர்கள் சரிபாதி உண்ணுமாறு செய்தார். இதன் மூலம் இளமை மீண்ட அத்தம்பதிகளுக்குப் பிறந்த ஆண்மகவே பின்னாளில் கணிகண்ணன் எனும் பெயரில் திருமழிசையாருக்கு அணுக்க சீடரானார்.

கால நிர்ணயம் தொகு

ஆதாரம் திருமழிசையாரின் காலம்[3]
முனைவர் மா. இராசமாணிக்கனார் பொ.ஊ. 7ம் நூற்றாண்டின் பிற்பகுதி
சாமி சிதம்பரனார் பொ.ஊ. 7ம் நூற்றாண்டின் இடைப்பகுதி
பூர்ணலிங்கம் பிள்ளை பொ.ஊ. 7ம் நூற்றாண்டு
கலைக்களஞ்சியம் பொ.ஊ. 6ம், 7ம் நூற்றாண்டின் பிற்பகுதி
மு. இராகவ அய்யங்கார் பொ.ஊ. 6ம் நூற்றாண்டு

இவரது பிரபந்தங்கள் தொகு

நான்முகன் திருவந்தாதி என்னும் நூறு வெண்பாக்கள் கொண்ட நூலையும் திருச்சந்த விருத்தம் என்னும் 120 விருத்தங்களைக் கொண்ட நூலையும் இயற்றியுள்ளார். இவை இவர் கும்பகோணத்தில் யோகத்தில் ஆழ்ந்திருக்கும் காலத்தில் யோகத்தின் பயனாக வெளிவந்தன. இவை நாலாயிரத்திவ்ய பிரபந்தத்தில் முறையே மூன்றாவதாயிரத்திலும், முதலாயிரத்திலும் சேர்க்கப்பட்டிருக்கின்றன. இவருடைய பிரபந்தங்கள் தான் முதன்முதலில் வேறு தெய்வங்களுக்கு மேலாகத் திருமாலை உயர்வாகச்சொல்லியவை. இவருக்கு முன்தோன்றிய முதலாழ்வார்கள் சமரசப்பான்மையுடன் சிவனையும் உயர்வாகச் சொல்லியவர்கள்.

பரமயோகி தொகு

இளமையிலேயே பரஞான முதிர்ச்சி பெற்றுப் பரமயோகியாக விளங்கியவர். உண்மைத் தத்துவம் என்னவென்று அறிய முயன்று சாக்கியம், சமணம், சைவம், நாத்திகம்(வேத மறுப்பு) உட்பட ஒவ்வொரு சமயமாகப் புகுந்து ஆராய்ந்தார். சைவசமயத்தைச் சார்ந்திருக்கும்போதுதான் திருமயிலையில் பேயாழ்வாரை ஆசிரியராகப் பெற்றார். பக்தியில் தலை சிறந்தவராக இவர் விளங்கியதால் பக்திசாரர் என பெயர் பெற்றவராவார்

சொன்னவண்ணம் செய்த பெருமாள்[4] தொகு

திருவெஃகா தலத்தில்(காஞ்சிபுரம்) கணிகண்ணனோடு திருமழிசையார் சிறிதுகாலம் தங்கித் திருவெஃகாவில் குடிகொண்டுள்ள இறையாகிய யதோத்காரிக்குக் கைங்கரியம் செய்துவரலானார்கள். அவ்வாறிருக்கையில் அவர்களின் குடிலைத் தினமும் தூய்மைசெய்துவரும் கைம்மாறு கருதாத வயது முதிர்ந்த பெண்ணையழைத்து ஆசியளிக்க விரும்பினார் ஆழ்வார். "வேண்டுவன கேள் !" என ஆழ்வார் கேட்க, வயது முதிர்வால் ஏற்பட்ட இயலாமையையும் அதனால் தன்னுடைய சேவை முழுமையடையாமல் இருப்பதையும் கூற என்றும் இளமையாக இருக்கும்படி வரம் நல்கினார் ஆழ்வார். என்றும் யவனமும், ஈடில்லா எழிலும் பெற்ற அப்பெண்ணைக் கச்சிப்பதியில் அரசுபுரிந்த பல்லவராயன் எனும் அரசன் விரும்பி மணம்புரிந்தான். பன்னாட்கள் கழிந்தும் மாறாத தன் மனையாளின் யவனத்தின் காரணம் வினவ, அப்பெண் ஆழ்வாரின் புகழை எடுத்துரைத்தாள். அரசன் ஆழ்வாரின் சீடரான கணிகண்ணனிடம் தன் விருப்பத்தைச் சொல்ல, ஆழ்வார் ஒருநாளும் அரசனின் இவ்வற்ப ஆசைக்கு அருளமாட்டார் என்று பதிலளிக்க, குறைந்தபட்சம் தன்னை ஏற்றிக் கவிதையாவது பாடுமாறு கணிகண்ணனை வேண்ட "அவர் நாராயணனையன்றி எந்த நரனையும் பாடேன்" எனக் கூறித் திருமாலைப் பாடினார். கோபமுற்ற அரசன் கணிகண்ணனை நகரைவிட்டு வெளியேறுமாறு உத்தரவிட்டான். யாவும் கேள்வியுற்ற அவருடைய குரவர் திருமழிசைப்பிரான், 'உம்முடன் நானும் வருவேன்' என்று சொன்னதோடு மட்டுமல்லாமல் கச்சிப்பதிக்கோவிலுக்குச்சென்று ஆண்டவனை நோக்கி,

கணிகண்ணன் போகின்றான் காமருபூங்கச்சி
மணிவண்ணா நீ கிடக்கவேண்டா - துணிவுடைய
செந்நாப்புலவனும் போகின்றேன் நீயுமுன்றன்
பைந்நாகப் பாய்சுருட்டிக் கொள்

என்று விண்ணப்பம் செய்தார். அப்பெருமானும் அப்படியே செய்து திருமழிசைப்பிரானைத் தொடர்ந்து சென்றார். இதை மறுநாள் அறிந்த அரசன் வருத்தமுற்றுக் கணிகண்ணனைத் தேடிச்சென்று அவரையும் அவர் குரவரையும் கச்சிப்பதிக்குத் திரும்பும்படி வேண்டிக் கொண்டனர். கணிகண்ணன் திருமழிசைப் பிரானை வேண்ட அவரும் ஆண்டவனை நோக்கி,

கணிகண்ணன் போக்கொழிந்தான் காமருபூங்கச்சி
மணிவண்ணா நீ கிடக்கவேண்டும் - துணிவுடைய
செந்நாப்புலவனும் போக்கொழிந்தேன் நீயுமுன்றன்
பைந்நாகப் பாய்படுத்துக் கொள்.

என்று வேண்ட திருமகள்நாதனும் அவ்வண்ணமே செய்தான் என்பது வரலாறு.அவ்வாறு அவர்கள் ஒருநாள் தங்கியிருந்த இடம் "ஓர் இரவு இருக்கை" என்று அழைக்கப்பட்டு இன்று மருவி "ஓரிக்கை" என அழைக்கப்பட்டுவருகிறது.

மேற்கோள்கள் தொகு

  1. ஆன்மிகம், ed. (31 அக்டோபர் 2014). ஆழ்வார்கள் 12 பேர்: ஓர் அறிமுகம். தினமணி.
  2. 12 ஆழ்வார்கள், ed. (09 பிப்ரவரி 2011). திருமழிசையாழ்வார். தினமலர். {{cite book}}: Check date values in: |year= (help)CS1 maint: numeric names: editors list (link)
  3. நாலாயிர திவ்யப் பிரபந்தம். நயவுரை: டாக்டர் ஜெகத்ரட்சகன். ஆழ்வார்கள் ஆய்வு மையம். சென்னை 17. இரண்டாம் பதிப்பு. 1997
  4. ஆழ்வார்கள் வரலாறு (இரண்டாம் புத்தகம்) : புலவர் கா. ர. கோவிந்தராச முதலியார். திருநெல்வேலிதென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக்கழகம். சென்னை. 1967

வெளியிணைப்பு தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=திருமழிசையாழ்வார்&oldid=3668620" இலிருந்து மீள்விக்கப்பட்டது