திருவூடல்
சிவபெருமான் மீது சிவகாமி கொண்ட ஊடலை திருவூடல் என்பர்.
ஊடல் நிலை
தொகுமார்கழி ஆதிரை நாளில் அலங்கரிக்கப்பெற்ற நடராசப் பெருமானின் திருமேனியும், சிவகாமி அம்மையாருடைய திருமேனியும் திருவீதிகளில் உலா வரும். திருநடனக் காட்சி முடிந்ததும் வீதிகளில் வலம் வந்து கொண்டிருக்கும் போதே அம்மன் திருமேனியைச் சுமப்பவர்கள், விரைவாக நடந்து கோயிலுக்குள் வந்து, இராசகோபுரக் கதவுகளைச் சாத்திவிடுவர். பின்னர் வரும் ஆடல்வல்லானைச் சுமந்து வருபவர்கள் கோயிலுக்குள் வரமுடியாமல் வெளியிலேயே நிற்பர். இது ஊடல் கொண்டே சிவகாமி சினந்தது கதவைத் தாழிடும் நிலையாகும். [1]
சுந்தரர் வருகை
தொகுபின்னர் சுந்தரமூர்த்தி நாயனாரின் திருவுருவத்தை அலங்கரித்துப் பரிவட்டம் கட்டி இறைவன் முன் கொண்டு நிறுத்தி அக்கோயில் ஓதுவார் மூலம் சில தேவாரப்பாடல்களைப் பாடுவர். பின்பு, கோயிலுக்குள் சென்று சிவகாமியின் முன்பு சில தேவாரப் பாடல்கள் பாடுவர். மாறி மாறி இரு இடங்களிலும் தேவாரப் பாடல்கள் பாடிய பிறகு நிறைவாக கதவைத் திறக்கவே ஆடல்வல்லான் திருமேனி கோயிலுக்குள் வந்து சேரும். இது இருவர் ஊடலையும் சுந்தரர் தலையிட்டுத் தீர்ப்பதாகவும் பாவிக்கப்பெறும் ஒரு விழா நிகழ்ச்சியாகும். [1] திருவூடல் கண்டால் மறுவூடல் இல்லை என்பர். [2]
ஓவியம், சுவடி
தொகுதஞ்சைப் பெரிய கோயிலின் அம்மன் மண்டப விதானத்தில் தேவி மகாத்மிய ஓவியக் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. அவற்றில் ஊடலை சுந்தரமூர்த்தி நாயனார் தீர்த்து வைக்கும் காட்சி தமிழில் எழுதப்பெற்ற விளக்கக் குறிப்புகளோடு காணப்பெறுகின்றது. இவ்வோவியம் கி.பி.1800இல் சரபோஜி மன்னரின் ஆக்கத்தால் தீட்டப்பெற்றதாகும். தஞ்சை அரண்மனை நூலகமான சரசுவதி மகால் நூலகத்தில் "தமிழ்த்துறையில் திருவூடல்" என்ற சிறிய ஏட்டுச்சுவடி உள்ளது. [1]
திருவண்ணாமலை
தொகுதிருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் திருவூடல் உற்சவம் வருடந்தோறும் நடைபெறும்.[3]
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 1.2 திருமதி ச.திலகம், திருவூடல், தஞ்சை இராஜராஜேச்சரம் திருக்குட நன்னீராட்டுப் பெருவிழா மலர், 1997
- ↑ திருவூடல் கண்டால் மறுவூடல் இல்லை, மாலை மலர், 11 சனவரி 2019[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ http://m.dinamalar.com/temple_detail.php?id=26948