தி. த. கனகசுந்தரம்பிள்ளை

தி. த. கனகசுந்தரம் பிள்ளை என்றும் அறியப்படும் திருக்கோணமலை தம்பிமுத்துப்பிள்ளை கனகசுந்தரம்பிள்ளை, ஆகத்து 24, 1863 - சூன் 1922) ஈழத்தில் திருக்கோணமலையில் பிறந்து தமிழ் இலக்கிய, பதிப்புத் துறையில் குறிப்பிடத்தகுந்த பங்கினை ஆற்றிய ஆளுமையாவார். தமிழறிஞர். தமிழ் நாட்டுக்கு தமது பதினேழாவது வயதில் சென்று அங்கு அறிஞர் பெருமக்களால் பெரிதும் மதிக்கப்பட்ட ஒரு கல்விமானாக அவர் திகழ்ந்தார்.

தி. த. கனகசுந்தரம் பிள்ளை
தி. த. கனகசுந்தரம் பிள்ளை
பிறப்புதம்பிமுத்துப்பிள்ளை கனகசுந்தரம்
(1863-08-22)22 ஆகத்து 1863
திருக்கோணமலை, பிரித்தானிய இலங்கை
இறப்பு1922 (அகவை 58–59)
சென்னை
பணிபேராசிரியர்
அறியப்படுவதுதமிழறிஞர், பதிப்பாளர்
சமயம்சைவம்
பெற்றோர்தம்பிமுத்துப் பிள்ளை
வாழ்க்கைத்
துணை
சுந்தரம்பாள்
பிள்ளைகள்இராசராசன், இராசசேகரன், இராசேசுவரன், இராசமார்த்தாண்டன், செல்வநாயகி
உறவினர்கள்தி. த. சரவணமுத்துப்பிள்ளை

வாழ்க்கைச் சுருக்கம் தொகு

இளமைக் காலம் தொகு

திருக்கோணமலை தமிழ் அறிஞர் தி.த.கனகசுந்தரம்பிள்ளை 1863 ஆவணி 24 ஆம் நாள் பிறந்தார். திருகோணமலை அரச உத்தியோகத்தரான தம்பிமுத்துப்பிள்ளை என்பவரின் மகன். தி. த. சரவணமுத்துப்பிள்ளையின் தமையனார். திருகோணமலையின் சிறப்பு வாய்ந்த ஆசிரியர்களான கணேசபண்டிதரிடம் தமிழையும், வடமொழியையும் கதிரைவேற்பிள்ளை அவர்களிடம் ஆங்கிலத்தையும் கற்றார். மிகச் சிறு வயதிலேயே திருவாதவூரர் புராணம், மறைசையந்தாதி ஆகியவற்றிற்குப் பொருள் கூறும் ஆற்றலைப் பெற்றார்.[1] பதினான்கு வயதுக்குள்ளாகவே தமிழ், ஆங்கிலம், வடமொழி ஆகிய மும்மொழிகளிலும் செறிந்த அறிவினைப் பெற்று, அவ்வூரிலேயே 'இளந்தமிழ்ப் புலவர்' என்ற பாராட்டையும் பெற்றார்.[1]

உயர் கல்வி தொகு

ஆங்கிலக் கல்வியை மேலும் கற்க விரும்பி, 1880 ஆம் ஆண்டில் சென்னை சென்றார். சென்னை வந்ததும், தாம் தங்குவதற்கென தற்போது இந்து தியாலஜிக்கல் உயர்நிலைப்பள்ளி உள்ள கட்டடத்தைக் குடிக்கூலிக்கு எடுத்துக் கொண்டார்.[1] சென்னையில் சூளை என்ற பகுதியில் உள்ள செங்கல்வராய நாயகர் பாடசாலையில் சேர்ந்து, சென்னைப் பல்கலைக்கழக மத்திய பாடசாலைத் தேர்வில் தேறினார்.[1] தொடர்ந்து அவர் பச்சையப்பன் கல்லூரியில் எஃப்.ஏ தேர்வில் சிறப்புச் சித்தி பெற்றார். பின்னர் சென்னை மாநிலக் கல்லூரியில் சேர்ந்து இளங்கலைப் பட்டம் பெற்று, தமிழ், மெய்யியல் ஆகிய துறைகளில் சிறப்புத் தேர்ச்சியுடன், பல பரிசில்களையும் பெற்றார்.[1]

அரசுப் பணி தொகு

கனகசுந்தரம் ஆங்கிலத்தில் பட்டம், தமிழில் செம்புலமை பெற்றிருந்தும், தகுந்த வேலை கிடைக்காமல் சிறிதுகாலம் மனந் தளர்வுற்றார். சித்தூர் எனும் ஊரில் ஒரு பாடசாலையில் தலைமை ஆசிரியர் வேலை கிடைத்தது.[1] பின்னர் சைதாப்பேட்டை ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் ஆங்கில ஆசிரியராகப் பணியில் சேர்ந்தார். அப்பணியும் அவருக்குத் தக்கதாக அவருக்குத் தோன்றவில்லை. இறுதியில் நுங்கம்பாக்கத்தில் உள்ள கல்வி இலாக அலுவலகத்தில் கணக்காலர் பணியை ஏற்றுக் கொண்டார்.[1] அதன் பின்னர் சென்னையில் உள்ள அரசியலார் செயலகத்தில் கல்விப் பகுதியில் அவருக்கு வேலை கிடைத்தது. இப்பணியில் அவர் மிகவும் விருப்புடன் செயலாற்றினார். மேலதிகாரிகளின் பெருமதிப்பைப் பெற்று மேற்பார்வை நிலைக்கு உயர்ந்தார்.[1]

குடும்பம் தொகு

இந்நிலையில், பெற்றோர் அவருக்கு தெல்லிப்பழை சிதம்பரநாத முதலியார் என்பவரின் மகள் சுந்தரம்பாள் என்பவரை அவரது 32-வது அகவையில் திருமணம் செய்து வைத்தார்கள். இவர்களுக்கு இராசராசன், இராசசேகரன், இராசேசுவரன், இராசமார்த்தாண்டன் என நான்கு ஆண் பிள்ளைகளும், செல்வநாயகி என பெண் பிள்ளையும் பிறந்தனர்.[1] சென்னை ஆயலூர் முத்தையா முதலியார் வீதியில் இவர் வசித்து வந்தார்.[1]

கனகசுந்தனாருக்கு அடுத்ததாகப் பிறந்த தி. த. சரவணமுத்துப்பிள்ளையும் தமையனாரைப் போலவே ஆங்கிலத்திலும், தமிழிலும் பட்டம் பெற்றவர். சென்னை மாநிலக் கல்லூரி நூலகத்தில் பணியாற்றிக் கொண்டிருந்தார். சென்னையில் பல சொற்பொழிவுகளை நிகழ்த்திப் பெரும் புகழ் பெற்றவர். தமிழில் தத்தை விடுதூது, மோகனாங்கி ஆகிய நூல்களை எழுதியவர்.[1] இவர் திடீரென நோய் வாய்ப்பட்டு 1902 இல் தனது 37-வது அகவையில் இறந்தார். இளவலின் இறப்பு கனகசுந்தரனாரைப் பெருந்துயரில் ஆழ்த்தியது.[1] அது மட்டுமல்லாமல், அடுத்த சில ஆண்டுகளில் கனகசுந்தரனார் தனது 42-வது அகவையில் மனைவியையும் இழந்தார். இதனால் அவர் மனமுடைந்து போனாலும், மறுமணம் செய்யவில்லை. அவரது மகளை ராவ்பகதூர் க. வைத்தியலிங்கம் பிள்ளை என்பவரின் புதல்வர் அரங்கநாதன் என்பாருக்குத் திருமணம் செய்து கொடுத்தார்.[1]

தமிழ்ப் பேராசிரியப் பணி தொகு

மனைவியை இழந்து வாழ்ந்து வந்த கனகசுந்தனாருக்கு அரசுப் பணி கசக்கவே, சென்னைக் கிறித்துவக் கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியர் பதவி கிடைத்தது. பெரு விருப்புடன் பணியாற்றினார். பின்னர் பச்சையப்பன் கல்லூரித் தலைமைத் தமிழ்ப் பேராசிரியராக இருந்த தி. செல்வகேசவ முதலியார் மறைந்ததை அடுத்து, அப்பதவி கனகசுந்தரம்பிள்ளைக்குக் கொடுக்கப்பட்டது. சென்னைப் பல்கலைக்க்ழகத் தேர்வுக்குழு உறுப்பினராகவும் நான்கு ஆண்டுகள் பணியாற்றினார். மதுரைத் தமிழ்ச் சங்கமும் அதன் தேர்வாளர்களில் ஒருவராக இவரை நியமித்தது.[1]

இவரது மாணாக்கர்களில் சோமசுந்தர முதலியார், மணி திருநாவுக்கரசு முதலியார், மோசூர் கந்தசாமி, வித்துவான் சுப்பிரமணிய ஆச்சாரி ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள்.[1]

பதிப்பாளராக தொகு

தொல்காப்பியம் முழுவதையும் ஆராய்ந்து வெளியிட விரும்பிய கனகசுந்தரம் பிள்ளை, ஏட்டுப்பிரதிகள், அச்சுப் பிரதிகள் பலவற்றையும் சேர்த்தெடுத்து அவற்றை ஆராயும் பணியில் ஈடுபட்டார். முதலில் எழுத்ததிகாரப் பணியை மேற்கொண்டார். ஏட்டுப்பிரதிகளையும் நூற் பிரதிகளையும் ஒப்பு நோக்கி ஆராய்ந்து சூத்திரங்கள் சிலவற்றில் காணப்பட்ட பிழைகளையும் திருத்தியும் உரையாசிரியர்களால் எடுத்தாளப்பட்ட உதாரணச் செய்யுள்கள் எந்தெந்த நூல்களிலிருந்து எடுக்கப்பட்டுள்ளனவென எடுத்துக்காட்டியும் கனகசுந்தரத்தால் தயாரிக்கப்பட்ட நச்சினார்க்கினியர் உரையுடன் எழுத்ததிகாரத்தை திருநெல்வேலி சைவ சித்தாந்த பதிப்புக் கழகம் வெளியிட்டுள்ளது. மேற்படி கழகம் அந்நூலுக்கு எழுதிய பதிப்புரையில் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளது. "மதுரையாசிரியர் பாரத்துவாசி நச்சினார்க்கினியர் உரையுடன், திருகோணமலை த.கனகசுந்தரம்பிள்ளை B.A அவர்கள் பல ஏட்டுச்சுவடிகளைக்கொண்டு செய்து வைத்திருந்த திருத்தங்களுடன் பதிப்பிக்கப்படுகிறது".

தொல்காப்பியம் - சொல்லதிகாரம் கனகசுந்தரத்தால் பரிசோதனை செய்யப்பட்டு, திருநெல்வேலி சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தினால் வெளியிடப்பட்டது.

கனகசுந்தரம்பிள்ளை சுன்னாகம் குமாரசுவாமி புலவருடன் சேர்ந்து நம்பியகப் பொருளுக்கு ஒரு அரிய உரையை எழுதி வெளியிட்டும், கம்பராமாயணத்தை பிழையறப் பரிசோதித்து கூடியமட்டில் ஏட்டுப்பிரதிகள் பலவற்றோடு ஒப்பு நோக்கிச் சுத்த பாடம் கண்டு முழுவதையும் அரும்பதவுரையுடன் அச்சிட முயன்று முதலில் பாலகாண்டத்தை அவ்விதம் வெளியிட்டனர். அயோத்திய காண்டத்துக்கு அரும்பதவுரை பூர்த்தியாகும் முன்பே இவர்கள் இருவரும் ஒருவர் பின் ஒருவராக காலமாகினர். மேற்கூறிய பாலகாண்டப்பதிப்புப்பற்றி எஸ்.வையாபுரிப்பிள்ளை "...ஆறு காண்டங்களுள் சுன்னாகம் குமாரசுவாமிப்பிள்ளையும், தி.த.கனகசுந்தரம்பிள்ளையும் பதிப்பித்த 'பாலகாண்டம்' ஒன்றே இன்றுவரை சுத்தப்பதிப்பாக வெளிவந்துள்ளது" என்று கூறியுள்ளார்.

”தமிழ் நாவலர் சரிதை” எனும் நூலினை இயற்றியவர் யாரென்பது தெரியவில்லை. எனினும் தமிழ் புலவர் வரலாற்றினைக் கூறப்புகுந்த முதல் நூல் எனப்பெருமை பெற்றது. கம்பர், புகழேந்தி, ஒட்டக்கூத்தர் முதலிய பல்வேறு தமிழ் புலவர்களின் வாழ்க்கை வரலாற்றினைக் கூறும் இந்நூலில் வரும் பாடபேதங்கள், பிரதிபேதங்கள், புதிதாகப் புகுத்தப்பட்ட பாடல்கள் ஆதியனவற்றையும் புலவர்கள் காலம், அவர்களின் பாடல்கள் முதலியனவற்றையும் ஆராய்ந்து கனகசுந்தரம்பிள்ளை தாம் திருத்தித் தயாரித்த நூலை 1921 இல் வெளியிட்டுள்ளார். தமிழ் நாவலர் சரிதையை நாராயணசாமி முதலியார் என்பவர் ஏற்கனவே 1916 இல் பதிப்பித்து வெளியிட்டுள்ளார்.

பதிப்பித்த நூல்கள் தொகு

  • தொல்காப்பியம் (எழுத்ததிகாரம்) நச்சினார்க்கினியார் உரை
  • தொல்காப்பியம் (சொல்லதிகாரம்) சேனாவரையர் உரை (திட்டவட்டமான ஆதாரங்கள் இதற்கில்லை)
  • கம்பராமாயணம் - பாலகாண்டம்
  • தமிழ் நாவலர் சரிதை

தி.த.க விடம் ஏடுகள் பெற்று பதிப்பிக்கப்பட்ட நூல்கள் தொகு

மறைவு தொகு

1922 ஆம் ஆண்டில் கனகசுந்தரம்பிள்ளை கடும் நோய்வாய்ப்பட்டு, ஆனி மாதம் ஒரு புதன்கிழமை அன்று அவரது சென்னை இல்லத்தில் காலமானார்.[1] இவரது மறைவை ஒட்டி கா. நமச்சிவாய முதலியார் பின்வரும் இரங்கற்பா மூலம் அஞ்சலி செலுத்தினார்.[1]

மேற்கோள்கள் தொகு

  1. 1.00 1.01 1.02 1.03 1.04 1.05 1.06 1.07 1.08 1.09 1.10 1.11 1.12 1.13 1.14 1.15 1.16 மணி. திருஞானசம்பந்த முதலியார் (பெப்ரவரி 1951). சென்னைத் தமிழ்ப் புலவர்கள் (1-வது பதிப்பு ). திருநெல்வேலி: திருநெல்வேலித் தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம். பக். 1-34. 

உசாத்துணை நூல்கள் தொகு

  • 'ஈழத்து தமிழ்ச்சான்றோர்' வித்துவான், தமிழ் ஒளி க.செபரத்தினம் B.A,M.litt,Dip in Edu.. மணிமேகலை பிரசுரம். சென்னை, 2002.
  • திறனாய்வாளர் திருகோணமலை த.கனகசுந்தரம்பிள்ளை.தொகுப்பு: கலாபூசணம் த. சித்தி அமரசிங்கம், ஈழத்து இலக்கியச் சோலை, திருகோணமலை 2003. (வித்துவான் நடராசா, நா. பாலேஸ்வரி, பேரா. செ. யோகராசா ஆகியோரின் கட்டுரைகளை உள்ளடக்கி - முன்னுரை வழங்கியுள்ளார் கா.சிவபாலன்.
  • தமிழ்நாடும், ஈழத்துத் தமிழ்ச் சான்றோரும் வித்துவான் தமிழ் ஒளி க.செபரத்தினம் B.A,M.litt,Dip in Edu. மணிமேகலைப் பிரசுரம். சென்னை, 2005.
"https://ta.wikipedia.org/w/index.php?title=தி._த._கனகசுந்தரம்பிள்ளை&oldid=3842099" இலிருந்து மீள்விக்கப்பட்டது