துர்கா ராம் மேத்தா

துர்காராம் மேத்தா (Durgaram Mehta) அல்லது துர்காராம் மேத்தாஜி என்று பிரபலமாக அழைக்கப்படும் துர்காரம் மஞ்சாராம் தேவ் (1809-1876) இவர் ஓர் குசராத்தி சமூக சீர்திருத்தவாயும், கட்டுரையாளரும், நாட்குறிப்பாளரும் மற்றும் பிரிட்டிசு இந்தியாவைச் சேர்ந்த ஆசிரியரும் ஆவார். தனது தோழர்களுடன் சேர்ந்து குசராத்தின் முதல் சீர்திருத்த சங்கமான மானவ் தர்மசபையை 1844 இல் சூரத்தில் நிறுவினார். மேலும் குசராத்தில் சமூக சீர்திருத்த நடவடிக்கைகளுக்கு முன்னோடியாகவும் இருந்தார். மானவ் தர்ம சபையின் பரிவர்த்தனைகளின் திட்டங்களில் தனது விமர்சனம் மற்றும் கருத்துக்களுடன் முன் வைத்து குசராத்தி இலக்கியத்தில் சுயசரிதை முறையை முதன்முதலில் பயன்படுத்தினார்.

துர்காராம் மேத்தா
துர்காராம் மேத்தா
பிறப்புதுர்காரம் மஞ்சாராம் தேவ்
(1809-12-25)25 திசம்பர் 1809
சூரத்து, பிரிடிசு இந்தியா
இறப்பு1876 (அகவை 66–67)
பணிசமூக சீர்திருத்தவாதி, கட்டுரையாளர், நாட்குறிப்பாளர், பள்ளி ஆசிரியர்
அறியப்படுவதுமானவ் தர்மசபையை நிறுவியவர்

சுயசரிதை

தொகு

துர்காராம் 1809 திசம்பர் 25 அன்று சூரத்தில் வத்நகர நகர் பிராமண குடும்பத்தில் பிறந்தார். [1] இவரது தாயார் நானிகௌரி இவரது பதினொரு வயதிலேயே இறந்துவிட்டார். அதன் பிறகு இவரை இவரது அத்தை வளர்த்தார்.

இவர் தனது எட்டு வயதிலேயே இருபது வரை கணித அட்டவணைகளைக் கற்றுக் கொண்டார். பின்னர் ஒரு உள்ளூர் நிறுவனத்தில் கணக்குகளை எவ்வாறு கையாளுவது என்பதைக் கற்றுக் கொள்ளும் ஒரு பயிற்சியாளராக இருந்தார். தனது பன்னிரெண்டாவது வயதில், அதே நிறுவனத்தில் மிகக் குறைந்த சம்பளத்தில் பணிபுரிந்தார். இவர் புத்தகங்களைப் படிக்க விரும்பினாலும், எளிதில் கிடைக்கவில்லை. இவர் 1825 ஆம் ஆண்டில் தனது அத்தையுடன் மும்பைக்குச் சென்று ஆறு மாதங்கள் அரசு குசராத்தி பள்ளியில் இலவசமாகப் படித்தார். மேலும் ஒரு பள்ளியைக் கையாளும் திறன் கொண்டவராகக் காணப்பட்டார். எனவே 1826 ஆம் ஆண்டில், இவர் சூரத்துக்குத் திரும்பி, அரசாங்கத்தின் சார்பாக, செப்டம்பர் 13 அன்று அரிபுராவில், 20 ரூபாய் மாத சம்பளத்தில் குசராத்தி பள்ளியைத் திறந்தார். 1827 ஆம் ஆண்டில், மேலும் ஒரு புதிய பள்ளியைத் திறக்க சூரத்துக்கு அருகிலுள்ள ஓல்பாட் என்ற இடத்திற்கு அனுப்பப்பட்டார்.

1831ஆம் ஆண்டில், இவர் தனது 22 வயதில், 10 வயதேயான ஒரு சிறுமியை திருமணம் செய்து கொண்டார். ஆனால் அவர் 1838 இல் இறந்து போனார். பின்னர் துர்காராம் 11 வயதான ஒரு பெண்ணுடன் தனது 44 வயதில் இரண்டாவது முறையாக (1843 இல் [1] ) திருமணம் செய்து கொண்டார். துர்காராம் விதவை மறுமணத்தை வலுவாக ஆதரித்த காரணத்தால், இவரது இரண்டாவது திருமண நிகழ்வை துர்காராமின் வாழ்க்கை வரலாற்றாசிரியர் மகிபத்ராம் ருப்ராம் நீல்காந்த் விமர்சித்தார். துர்காராம் 1876 இல் இறந்தார்.

சமூக சீர்திருத்தம்

தொகு

குசராத்தில் சமூக சீர்திருத்த நடவடிக்கைகளின் முன்னோடியாக துர்காராம் கருதப்படுகிறார். இவர் விதவைகளின் பிரச்சினையில் தனது கவனத்தை செலுத்தினார். மேலும் விதவை மறுமணங்களை ஆதரிக்கும் ஒரு இயக்கத்தை வழிநடத்தினார். சமுதாயத்தின் மரபுவழிப் பிரிவின் கடுமையான எதிர்ப்பு இருந்தபோதிலும், இவர் தொடர்ந்து அத்தகைய சீர்திருத்த நடவடிக்கைகளுக்கு ஆதரவளித்தார், ஆனால் பின்னர் இவர் மனைவியை இழந்த பிறகு ஒரு சிறு வயது பெண்ணை மணந்தபோது இந்த நடவடிக்கையிலிருந்து பின்வாங்கினார்.

மானவ் தர்மசபை

தொகு

இந்துக்களிடையே பல பிரிவுகளும், சம்பிரதாயங்களும் இருப்பதாக துர்காராம் நம்பினார். இந்த நிலை அவர்களை ஒரே கடவுளை நம்புவதைத் தடுத்தது. எனவே, மக்கள் உண்மையை உணர சில முயற்சிகள் செய்யப்பட வேண்டும் என்று விரும்பினார், இதை மனதில் கொண்டு, தனது சொந்த ஊரான சூரத்தில் ஒரு சங்கத்தை நிறுவ நினைத்தார். 1842 ஆம் ஆண்டில், துர்காராம் மும்பையின் எல்பின்ஸ்டோன் நிறுவனத்திலிருந்து சூரத்தின் அரசு ஆங்கிலப் பள்ளிக்கு மாற்றப்பட்ட ததோபா பாண்டுரங் என்பவருடன் தொடர்பு கொண்டார். மும்பையின் சமூக சீர்திருத்தக் குழுவுடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்த ததோபா, ஒரு சீர்திருத்த சங்கத்தைத் தொடங்க துர்காராமை ஊக்குவித்தார். சூரத் ஆங்கிலப் பள்ளியின் தலைமை ஆசிரியரான ஹென்றி கிரீன் என்பவரும் துர்காராமையும் ஆதரித்தார். 1844 சூன் 22, அன்று துர்காராம், ததோபா, தல்பத்ரம் ஆசிரியர், தாமோதர்தாசு மற்றும் தின்மணிசங்கர் ஆகியோருடன் சேர்ந்து மானவ் தர்மசபையை நிறுவினார். இது சமூக சீர்திருத்த நடவடிக்கைகளுக்கு ஒரு முக்கிய மையமாக மாறியது. இது குசராத்தின் முதல் சீர்திருத்த சங்கமாக கருதப்படுகிறது. [1]

1843 பிப்ரவரி 10, அன்று, தாதோபாவின் ஆலோசனையுடன், துர்காராம் மானவ் தர்மசபையின் ஏழு அடிப்படைக் கொள்கைகளைத் தயாரித்திருந்தார். அவை: [1]

  1. இந்த பிரபஞ்சத்தின் படைப்பாளராக ஒரே கடவுள் மட்டுமே இருக்கிறார்.
  2. எல்லா மனிதர்களும் ஒரே சகோதரத்துவத்தைச் சேர்ந்தவர்கள்.
  3. எல்லா மனிதர்களுக்கும் மதம் ஒன்று : ஆனாலும், அவர்கள் ஒவ்வொருவரும் ஒருவரையொருவர் நம்புகிற பல நம்பிக்கைகளைப் பின்பற்றினால், ஒருவர் மனதின் வளைவை மட்டுமே பின்பற்றுகிறார்.
  4. ஆண்களிடம் இருக்கும் குணங்களால் தீர்மானிக்கப்பட வேண்டும்; அவர்களின் பரம்பரையால் (அல்லது சாதி) அல்ல.
  5. ஆண்கள் பாகுபாட்டுடன் செயல்பட வேண்டும்.
  6. எல்லா செயல்களின் பொருளும் கடவுளின் கிருபையை வெல்வதாக இருக்க வேண்டும்.
  7. அனைவருக்கும் நீதியின் பாதையின் முக்கியத்துவம் கற்பிக்கப்பட வேண்டும்.

1846 ஆம் ஆண்டில், ததோபா மும்பைக்கு மாற்றப்பட்டார். 1850ஆம் ஆண்டில், துர்காராம் சூரத்தை நிரந்தரமாக விட்டுச் சென்றார். பின்னர் மானவ் தர்மசபை கலைக்கப்பட்டது. [1]

எழுத்துக்கள்

தொகு

1843 முதல் 1845 வரையிலான மானவ் தர்மசபையின் பொது நடவடிக்கைகள் மற்றும் திட்டங்களை பதிவு செய்யும் நாட்குறிப்பில் துர்காராம் குறிப்பிட்டுள்ளார். கல்வித்துறையுடனும், இதுபோன்ற செயல்களுடனும் இவர் தனது அனைத்து யோசனைகளையும் அனுபவங்களையும் தவறாமல் நாட்குறிப்பில் குறிப்பிட்டுள்ளார். இந்த நாட்குறிப்பு குசராத்தியின் முதல் சுயசரிதைக் குறிப்புகளாக காணப்படுகிறது. பின்னர் இந்த நாட்குறிப்பின் அடிப்படையில் மகிபத்ராம் ரூப்ராம் நீல்காந்த் என்ற வரலாற்றாசிரியர் துர்காராமின் வாழ்க்கை வரலாற்றை மேத்தாஜி துர்காராம் மஞ்சரம்மு ஜீவன்சரித்ரா என்ற பெயரில் எழுதினார்.

துர்காராம் விஞ்ஞான் நு புஸ்தக் என்ற அறிவியல் பற்றிய புத்தகத்தையும் எழுதியுள்ளார். [2]

குறிப்புகள்

தொகு
  1. 1.0 1.1 1.2 1.3 1.4 Raval, R. L. (1986). "Social Environs and Refom Movement in 19th Century Gujarat : The Case of Durgaram Mehtaji". Proceedings of the Indian History Congress 47 (VOLUME I): 591–598. (subscription required)
  2. Chavda, Vijay Singh (1982). "Durgaram 'Mehtaji' and the Manav Dharma Sabha in 1844". Modern Gujarat. Ahmedabad: New Order Book Company. p. 167–. இணையக் கணினி நூலக மைய எண் 9477811.
"https://ta.wikipedia.org/w/index.php?title=துர்கா_ராம்_மேத்தா&oldid=2988001" இலிருந்து மீள்விக்கப்பட்டது