முதன்மை பட்டியைத் திறக்கவும்

தென்சீனக் கடல்

(தென்சீனக்கடல் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

30°0′N 125°0′E / 30.000°N 125.000°E / 30.000; 125.000

தென்சீனக்கடலின் ஒரு தோற்றம்

சீனாவின் தெற்குப்புறம் உள்ள கடல் தென்சீனக் கடல் (South China Sea) என அழைக்கப்படுகிறது. இது பசிபிக் பெருங்கடலின் ஒரு பகுதியாகும். சிங்கப்பூருக்கும் தைவான் நீரிணைக்கும் இடையில் இது அமைந்துள்ளது. இக்கடலின் பரப்பளவு 3,500,000 ச.கி.மீ. உலகின் ஐந்து மாக்கடல்களுக்கு அடுத்துள்ள பெரிய கடல்களுள் இதுவும் ஒன்று. உலகின் கப்பல் போக்குவரத்தில் மூன்றில் ஒரு பங்கு இந்தக் கடல் வழியே செல்வதால் முக்கியத்துவம் பெறுகிறது. மேலும் இந்தக் கடலின் அடிப்பகுதியில் பெரும் எண்ணெய் மற்றும் எரிவாயு இருப்பு உள்ளதாக நம்பப்படுகிறது.[1]

இந்தப் படல் பகுதியின் அமைவிடம்

இக்கடலில் பலநூறு சிறு தீவுகளைக் கொண்ட தீவுக்கூட்டமும் உள்ளது. பல்வேறு நாடுகள் இந்தக் கடலுக்கும் இதிலுள்ள பெரும்பாலும் மக்களில்லாத தீவுகளுக்கும் உரிமை கொண்டாடுகின்றன.

புவியியல்தொகு

தென் சீனக் கடலைச் சுற்றியுள்ள நாடுகளும் ஆட்சிப்பகுதிகளும் (வடக்கில் துவங்கி கடிகாரச்சுற்றில்):மக்காவு மற்றும் ஃகொங்கொங் உள்ளிட்ட சீன மக்கள் குடியரசு, சீனக் குடியரசு (தைவான்), பிலிப்பீன்சு, மலேசியா, புருணை, இந்தோனேசியா, சிங்கப்பூர், மற்றும் வியட்நாம்.

இந்தக் கடலில் விழும் பெரும் ஆறுகள்: பவழ ஆறு , மின் ஆறு, ஜியுலொங் ஆறு, சிவப்பு ஆறு, மேக்கொங், ரஜங் ஆறு, பகாங் ஆறு, பம்பங்கா ஆறு, மற்றும் பாசிக் ஆறு.

வளங்கள்தொகு

இந்த கடல்பகுதி உலக புவிசார் அரசியலில் மிக முக்கியமான நீர்ப்பகுதியாகும். உலகின் இரண்டாவது மிகவும் பயன்படுத்தப்படும் கடல் வழி ஆகும். உலகின் வருடாந்திர வணிக கப்பல் சரக்குப் போக்குவரத்தில் 50%க்கும் மேலான எடையளவு மலாக்கா நீரிணை, சுந்தா நீரிணை மற்றும் லோம்பொக் நீரிணைகள் வழியாக எடுத்துச் செல்லப்படுகிறது. ஒருநாளைக்கு 1.6 மில்லியன் க.மீ (10 மில்லியன் பீப்பாய்கள்) பெட்ரோலியம் எடுத்துச் செல்லப்படுகிறது. அடிக்கடி கடற்கொள்ளை நிகழ்வுகள் பதியப்பட்டபோதும் இருபதாம் நூற்றாண்டின் நடுக்காலங்களில் இருந்ததைவிட குறைந்துள்ளது.

இந்தப் பகுதியில் உறுதிசெய்யப்பட்ட பாறை எண்ணெய் இருப்பு ஏறத்தாழ 1.2 கன கி.மீ (7.7 பில்லியன் பீப்பாய்கள்) அளவிலும், மொத்தம் மதிப்பிடப்பட்ட இருப்பு 4.5 கன கி.மீ (28 பில்லியன் பீப்பாய்கள்) அளவிலும் உள்ளது. இயற்கை எரிவளி வளங்கள் மொத்தம் 7,500 கன கி.மீ (266 டிரில்லியன் கன அடி) எனவும் மதிப்பிடப்பட்டுள்ளது.

பிலிப்பீன்சு நாட்டு சுற்றுச்சூழல், இயற்கை வளங்கள் துறையின் ஆய்வுகள் உலகின் கடல்சார் உயிரிப் பன்மியத்தில் மூன்றில் ஒருபங்கு இந்தக் கடல்பகுதியில் இருப்பதாக வெளிப்படுத்தியுள்ளது. எனவே உலகச் சூழ்நிலைத் தொகுப்பில் இப்பகுதி மிகவும் குறிப்பிடத்தக்கதாக விளங்குகிறது.

ஆட்சி எல்லைக் குறித்த உரிமைக்கோரல்கள்தொகு

 
இசுபிராட்லி தீவுகளை ஆக்கிரமித்திருக்கும் பல நாடுகளைக் குறித்த வரைபடம்
 
தென்சீனக் கடல் மீதான கடல்சார் உரிமைகள்

தென்சீனக் கடல் பகுதிகளின் மீது பல நாடுகள் ஒருவருக்கொருவர் எதிராக ஆட்சிஎல்லை உரிமைகளை வலியுறுத்தியுள்ளனர். இந்தப் பிணக்குகள் ஆசியாவிலேயே எந்த நேரத்திலும் பெரிதாகக் கூடிய பிரச்சினையாக நோக்கப்படுகிறது. சீன மக்கள் குடியரசும் (PRC) சீனக் குடியரசும் (ROC) இந்த முழுமையான கடல் பரப்பும் தங்களுடையதாக உரிமை கொண்டாடுகின்றனர். இவர்களது ஒன்பது புள்ளி எல்லைக்கோடு இந்தப் பகுதியில் உள்ள அனைத்து நாடுகளின் உரிமைகளுடன் குறுக்கிடுகிறது. இந்த எதிர் உரிமைக்கோரல்கள் :

  • நதுனா தீவுகளின் வடகிழக்கு கடல்பகுதி குறித்து இந்தோனேசியா, சீனா, மற்றும் தைவான்
  • மலம்பாயா மற்றும் கமாகோ எரிவளி களம் குறித்து பிலிப்பீன்சு,சீனா மற்றும் தைவான்.
  • இசுகார்பரோ திட்டு குறித்து பிலிப்பீன்சு. சீனா மற்றும் தைவான்.
  • இசுபிராட்லித் தீவுகளின் மேற்கு கடல்பகுதி குறித்து வியட்நாம், சீனா மற்றும் தைவான். சில அல்லது அனைத்துத் தீவுகளைக் குறித்தும் வியட்நாம், சீனா,தைவான், புருணை,மலேசியா மற்றும் பிலிப்பீன்சு நாடுகளுக்கிடையே பிணக்கு உண்டு.
  • பராசெல் தீவுகளைக் குறித்து சீனா, தைவான் மற்றும் வியட்நாம் இடையே.
  • தாய்லாந்து வளைகுடா பகுதிகள் குறித்து மலேசியா, கம்போடியா, தாய்லாந்து,வியட்நாம்.
  • சிங்கப்பூர் நீரிணை மற்றும் யோகோர் நீரிணை குறித்து சிங்கப்பூருக்கும் மலேசியாவிற்கும்

இந்திய கடற்படையின் வருகை மற்றும் எண்ணெய்வள ஆய்வுகள் குறித்த சீன எதிர்ப்புதொகு

சூலை 22, 2011 அன்று வியட்நாமிற்கு நட்புக்காகச் சென்றிருந்த இந்தியாவின் போக்குவரத்து போர்க்கப்பல் ஐஎன்எஸ் ஐராவத் வியட்நாம் கடலோரத்திலிருந்து 45 கடல் மைல்கள் தொலைவில் தென் சீனக்கடலில் இருக்கும்போது அனைவருக்குமான வானொலி அலையில் சீனக் கப்பற்படை தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டு தொடர்புகொண்டது. இந்தியப் போர்க்கப்பல் சீனாவிற்கு உரிமையுள்ள பகுதியில் பயணிப்பதாக எச்சரித்தது.[2][3] இந்தியக் கப்பற்படையின் தகவலாளர்கள் ஐராவத்தின் பாதையில் எந்தவொரு கப்பலையோ வானூர்தியையோ சந்திக்கவில்லை என்றும் அது தனது திட்டமிட்ட வழியில் பயணித்தது என்றும் விளக்கமளித்தனர். " ஐஎன்எஸ் ஐராவத்தைப் பொறுத்தமட்டில் எந்தவொரு மோதலும் நிகழவில்லை. இந்தியா பன்னாட்டு கடல்களில், தென் சீனக்கடல் உட்பட, கடல்போக்குவரத்துக்கான சுதந்திரத்தையும், ஏற்கப்பட்ட பன்னாட்டு சட்ட கோட்பாடுகளின்படி பயணிப்பதற்கான உரிமையையும் ஆதரிக்கிறது. இந்தக் கொள்கைகளை அனைவரும் மதிக்க வேண்டும்." என மேலும் விளக்கினர்.[2]

செப்டம்பர் 2011இல் சீனாவும் வியட்நாமும் தென் சீனக் கடலில் தங்கள் பிணக்குகளை குறைத்துக்கொள்ள உடன்பாடு கண்டபின்னர், இந்தியாவின் பொதுத்துறை நிறுவனம் ஓஎன்ஜிசியின் வெளிநாட்டு முதலீட்டு நிறுவனம் ஓஎன்ஜிசி விதேஷ் தென் சீனக்கடலின் குறிப்பிட்ட பகுதிகளில் எண்ணெய்வள ஆய்வுகள் மேற்கொள்ளவும் நில எண்ணெய்த் துறையில் நெடுநாள் கூட்டுறவிற்காகவும் பெட்ரோவியட்நாம் நிறுவனத்துடன் மூன்றாண்டு உடன்பாடு கண்டது.[4] இதற்கு எதிர்வினையாக சீன அயலுறவு அமைச்சகத்தின் தகவலாளர் ஜியாங் யூ, இந்தியாவைப் பெயரிடாது, கீழ்வருமாறு கூறினார் :"தென் சீனக்கடல் மற்றும் தீவுகள் மீது சீனாவிற்கு பூசலுக்கு இடமற்ற ஆளுமை உள்ளது. சீனாவின் நிலை வரலாற்றுச் சான்றுகளின்படியும் பன்னாட்டு சட்டத்தின்படியும் ஆனது. சீனாவின் ஆளுமை உரிமைகளும் நிலைகளும் வரலாற்று நிகழ்வுகளால் ஏற்பட்டவை; இந்த நிலையை சீன அரசு பன்னெடுங்காலமாக எடுத்துள்ளது. இதனடிப்படையில், தென் சீனக்கடல் பகுதியில் அமைதி நிலவ நேர்மறையாக பங்கெடுக்கும் வண்ணம், ஆட்சிப்பகுதிகளைக் குறித்தும் கடல்சார் உரிமைகள் குறித்தும் உள்ள பூசல்களுக்கு அமைதியான பேச்சு வார்த்தைகள் மூலமும் நட்பான கலந்துரையாடல்கள் மூலமும் தீர்வுகாண சீனா தயாராக உள்ளது. சீன நிலையை தொடர்புடைய நாடுகள் மதிக்கும் என்றும் ஒருதரப்பான செயல்களில் ஈடுபட்டு பிரச்சினையை சிக்கலாக்காதும் பெரிதுபடுத்தாதும் இருக்கும் என்றும் நம்புகிறோம். மேலும் இந்தப் பகுதியில் உள்ள நாடுகள் தங்களுக்குள் இருதரப்பு பிணக்குகளை இருதரப்பு பேச்சுக்களின் மூலம் தீர்த்துக்கொள்ள பிற நாடுகள் ஆதரவளிக்கும் என நம்புகிறோம். எண்ணெய் மற்றும் எரிவாயு ஆய்வுகளைப் பொறுத்தவரை எங்களது தொடர்ந்தநிலை சீனாவின் எல்லைக்குள் உள்ள கடல்களில் எந்த நாடும் ஆய்வுகள் மற்றும் மேம்பாடுகளை மேற்கொள்ளுவதை எதிர்க்கிறோம் என்பதாகும். வெளி நாடுகள் இந்த தென் சீனக்கடல் பிணக்குகளில் இணைந்து கொள்ளாது என்றும் நம்புகிறோம்.”[5][6] இந்திய அரசின் அயலுறவு அமைச்சக தகவலாளர் இதற்கு பதிலளிக்கையில் “சீனர்களுக்கு இதில் கவலை இருந்தாலும் நாங்கள் வியட்நாம் அதிகாரிகளின் கூற்றுப்படி செயல்படுகிறோம்; இதனை சீன அரசிற்கும் தெரிவித்து விட்டோம்.”[5] இந்திய -வியட்நாமிய வணிக நடவடிக்கையை சீன அரசின் நாளிதழ் குளோபல் டைம்சும் பழித்துரைத்துள்ளது.[4][6]

மேலும் பார்க்கதொகு

மேற்கோள்கள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=தென்சீனக்_கடல்&oldid=2834571" இருந்து மீள்விக்கப்பட்டது