தேவிகாபுரம் பெரியநாயகி அம்மன் கோயில்

தேவிகாபுரம் பெரியநாயகி அம்மன் கோயில் திருவண்ணாமலைமாவட்டத்தில் ஆரணி வட்டத்தில் இருக்கும் தேவிகாபுரம் எனும் கிராமத்தில் அமைந்துள்ளது. இக்கோயிலில் வீற்றிருக்கும் அன்னையின் திருநாமம் பெரியநாச்சியார் என்னும் பெரியநாயகி என்று கல்வெட்டுகளால் அறியப்படுகிறது. தற்போது வடமொழி சொல்லால் ப்ருகதாம்பாள் என்று வழங்குகின்றனர்.

பெரியநாயகி அம்மன் திருக்கோயில்
பெரியநாயகி அம்மன் கோயில், தேவிகாபுரம்
அமைவிடம்
நாடு:இந்தியா
மாகாணம்:தமிழ்நாடு
மாவட்டம்:திருவண்ணாமலை
அமைவு:தேவிகாபுரம்
கோயில் தகவல்கள்
மூலவர்:பெரியநாயகி அம்மன் (பிரகாதாம்பாள்)

கோயில் அமைப்புதொகு

தேவிக்குரிய இவ்வாலயம் ஊரின் நடுவே அமைந்துள்ளது. கிழக்கு மேற்காக 475 அடி நீளமும் வடக்கு தெற்காக 250 அடி அகலமும் 30 அடி உயரம் கொண்ட அழகிய சித்திர வேலைப்பாடுகளுடன் கூடிய மதில் சுவர்களுடன் விளங்குகிறது. இம்மதிலின் முகப்பில் இராஜகோபுரம் சுமார் 150 அடி உயரம் உடையதாகவும் ஏழு நிலைகளையும் ஒன்பது கலசங்களையும் கொண்டுள்ளது. இக்கோபுரத்திற்கு எதிரே நான்கு கால்களைக் கொண்ட உயர்ந்த மண்டபம் ஒன்றுள்ளது. இக்கோபுரத்திற்கு வடக்குப்பக்கம் சித்திர வேலைப்பாடுகளுடன் கூடிய தேர்மண்டபம் காணப்படுகிறது. இத்தேர் மண்டபம் கிழக்கு தெற்கு ஆகிய இரு திசைகளையும் நோக்கின வகையில் அமைந்துள்ளது.

புடைப்புச் சிற்பங்கள்தொகு

 
தேவிகாபுரம் பெரியநாயகி அம்மன் கோயிலில் காணப்படும் சிற்பம்

ஆலயத்தின் நுழைவு வாயிலின் இருபுறமும் புடைப்புச் சிற்பங்களாக அமைந்த லிங்கோற்பவர், நரசிம்மர், காலபைரவர், அதிகாரநந்தி, நடன மாதர், துவாரக பாலகர் போன்ற அற்புதமான சிற்பங்களைக் காணலாம். முகம்மதியர் படையெடுப்பால் இவற்றில் சில சிற்பங்கள் சிதைந்து காணப்படுகின்றன.

கல்யாண மண்டபம்தொகு

 
தேவிகாபுரம் பெரியநாயகி அம்மன் கோயில் கல்யாண மண்டபம்

இவ்வாலயத்துள் 3 பிரகாரங்கள் (சுற்றுகள்) உள்ளன. நுழைவு வாயிலைக் கடந்து உள்ளே செல்லும் போது முதலாவதாக ஆலயத்தின் வலப்புறம் ஓர் அழகிய திருக்குளம் அமைந்துள்ளது. அதன் கரையில் நான்கு கால்களைக் கொண்ட குதிரைகள் இழுத்துச்செல்வது போன்ற கல்யாண மண்டபம் மிக அற்புதமான சிற்ப எழிலுடன் அமைந்துள்ளது. இதில் மனுநீதிச் சோழன் வரலாற்றைச் சித்தரிக்கும் சிற்பங்கள் பொற்புடன் விளங்குகின்றன. இது காணவேண்டிய அழகிய மண்டபம் ஆகும்.

இவை இரண்டிற்கும் இடையில் பலிபீடமும் கொடிமரமும் உள்ளன. இதை அடுத்து திருநந்தி தேவர் அன்னையை நோக்கிய வண்ணம் வீற்றிருக்கிறார். கோயிலின் வலப்புறம் விநாயகப் பெருமானும், இடப்புறம் ஆறுமுகப்பெருமானும் உள்ளனர். இம்மூன்றாம் பிரகாரத்தின் இருபுறங்களிலும் பண்டை நாளில் நறுமணங்கமழும் சோலைகள் இருந்தனவாக எண்ணுவதற்கு இடமளிக்கிறது.

ஐந்து நிலைக்கோபுரம்தொகு

அடுத்து மகாமண்டபத்துடன் கூடிய ஐந்து நிலைக்கோபுரம் உள்ளது. இம்மகாமண்டபம் 36 கால்களைக் கொண்டது. இம்மண்டபத்தில் நவக்கிரக சந்நிதி இருந்தது. அது தற்போது வடக்குப்பிரகாரத்தில் தனிக்கோயிலாக அமைக்கப்பட்டுள்ளது. இதைக்கடந்து உள்ளே சென்றால் இரண்டாம் பிரகாரத்தை அடையலாம். அங்கு வலப்புறம் விநாயகர் சந்நிதியும் மற்றும் நவராத்திரி கொலு மண்டபமும் உள்ளன. இந்தப்பிரகாரத்தில் தான் மிகுதியான கல்வெட்டுகள் காணப்படுகின்றன.

இதனைக்கடந்து அர்த்த மண்டபத்தின் உள்ளே தெற்கு நோக்கியவாறிருக்கும் நடராசமூர்த்தி உள்ளார். மேற்படி மண்டபத்தின் தென்பகுதியில் உற்சவமூர்த்திகளும் அடுத்து விநாயகர், நால்வர், சேக்கிழார் ஆகியோரின் திருவுருவங்களும் (மூலவர்கள்) முதல் பிரகாரத்தின் நுழைவு வாயிலின் இருபுறமும் துவாரபாலகிகளின் உருவங்களும் உள்ளன. இதையுங்கடந்து உள்ளே சென்றால் முதல் பிரகாரத்தை அடையலாம். இப்பிரகாரத்தில் விநாயகர், திருமால், வள்ளி தெய்வானையுடன் கூடிய முருகப்பெருமான், சண்டீஸ்வரர் ஆகிய உருவங்களைக் காணலாம்.

பெரியநாயகி அம்மன்தொகு

இவ்வாறு அனைத்து தெய்வங்களையும் அடுத்து உள் மண்டபத்தில் மேற்கில் அமைந்த கருவறையில் அருளே வடிவான அன்னை பெரியநாயகி காட்சி தருகிறாள். அன்னை மேல் இருகரங்களில் அபயம், வரதம் ஆகிய முத்திரைகளைக் கொண்டு நின்ற கோலத்தில் அழகுறக் காட்சியளிக்கின்றாள்.