தொட்டில் குழந்தை திட்டம்
தொட்டில் குழந்தை திட்டம் என்பது தமிழ்நாட்டில் சில மாவட்டங்களில் மட்டும் நடைபெற்று வந்த பெண் குழந்தைக் கொலையை முற்றிலும் ஒழித்திடும் நோக்கத்தில் கொண்டு வரப்பட்ட திட்டமாகும். இத்திட்டம் 1992 ஆம் ஆண்டில் இந்தியாவிலேயே முதன்முறையாக தமிழ்நாட்டில் அறிமுகம் செய்யப்பட்டது. முதன்முதலாக சேலம் மாவட்டத்தில் நடைமுறைப்படுத்தப்பட்ட இத்திட்டம், 2001 ஆம் ஆண்டில் மதுரை, தேனி, திண்டுக்கல் மற்றும் தருமபுரி மாவட்டங்களுக்கு விரிவுபடுத்தப்பட்டது. தமிழ்நாட்டில் பெண் குழந்தைகள் பிறந்த பின்னர் அவர்களைப் பல்வேறு காரணங்களுக்காக சுமை என்று எண்ணுவோர் அவர்களைக் கொலை செய்வது அல்லது பொது இடங்களில் வீசி எறிவது போன்ற செயல்கள் சில மாவட்டங்களில் அதிக அளவில் நடந்து வருகிறது. இதனைத் தடுக்க அரசு மருத்துவமனைகள், ஆதரவற்றோர் இல்லங்கள், ஆரம்ப சுகாதார மையங்கள் போன்ற இடங்களில் தொட்டில்கள் வைக்கப்படுகின்றன. பெண் குழந்தைகளைக் கொலை செய்வதற்கு பதில், இத்தொட்டில்களில் குடும்பத்தார் இட்டுச் செல்கின்றனர். இக்குழந்தைகள் தமிழ்நாடு அரசால் ஏற்படுத்தப்பட்டுள்ள தொட்டில் குழந்தை மையங்களால் வளர்க்கப்படுகின்றன.
பெண் குழந்தை அதிகரிப்பு
தொகுதமிழ்நாட்டில் 2001 ஆம் ஆண்டில் 1000 குழந்தைகளுக்கு 942 பெண் குழந்தைகள் என இருந்த பாலின விகிதம் 2011 ஆம் ஆண்டில் 946 ஆக அதிகரித்துள்ளது. தொட்டில் குழந்தைத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்ட சேலம், மதுரை, திண்டுக்கல், தேனி மற்றும் தருமபுரி மாவட்டங்களில் பெண் குழந்தை விகிதங்கள் அதிகரித்துள்ளது. 2001 ஆம் ஆண்டிலிருந்து 2011 ஆம் ஆண்டு கணக்கெடுப்பில் 1000 ஆண் குழந்தைகளுக்கு பெண் குழந்தைகளின் விகிதம் தொட்டில் குழந்தைத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்ட மாவட்டங்களில் கீழ்கண்டவாறு அதிகரித்துள்ளது. [1]
- சேலம் - 851 லிருந்து 917
- மதுரை - 926 லிருந்து 939
- தேனி - 891 லிருந்து 937
- திண்டுக்கல் - 930 லிருந்து 942
- தருமபுரி - 826 லிருந்து 911
விரிவாக்கம்
தொகு2011 ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் தமிழ்நாட்டில் பெண் குழந்தைகள் விகிதம் குறைந்துள்ள கடலூர், அரியலூர், பெரம்பலூர், விழுப்புரம் மற்றும் திருவண்ணாமலை ஆகிய 5 மாவட்டங்களுக்கு தொட்டில் குழந்தைத் திட்டம் விரிவாக்கம் செய்திட தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதா உத்தரவிட்டார். [2]
மேற்கோள்கள்
தொகு- ↑ தொட்டில் குழந்தை திட்டம் மேலும் விரிவாக்கம்: முதல்வர் (தினமணி செய்தி)
- ↑ தொட்டில் குழந்தை திட்டம் மேலும் விரிவாக்கம்: முதல்வர் (தினமணி செய்தி)