தோமசு சங்காரா
தோமசு இசிடோரே நோயல் சங்காரா (Thomas Isidore Noël Sankara; பிரெஞ்சு உச்சரிப்பு: [tɔma sɑ̃kaʁa], தோமா சங்காரா, டிசம்பர் 21, 1949 – அக்டோபர் 15, 1987) என்பவர் புர்க்கினா பாசோவின் இராணுவத் தலைவரும், மார்க்சியப் புரட்சிவாதியும் பேராப்பிரிக்கவாதியும் ஆவார். இவர் புர்க்கினா பாசோவின் அரசுத்தலைவராக 1983 முதல் 1987 வரை பதவியில் இருந்தார்.[1][2] இவர் பொதுவாக "ஆப்பிரிக்காவின் சே குவேரா" என அழைக்கப்பட்டவர்.[1][3][4]
தோமசு சங்காரா Thomas Sankara | |
---|---|
புர்க்கினா பாசோவின் 5வது அரசுத்தலைவர் | |
பதவியில் ஆகத்து 4, 1983 – அக்டோபர் 15, 1987 | |
முன்னையவர் | சான்-பாப்திஸ்ட் ஊடிரோகோ |
பின்னவர் | பிளைசு கொம்பாரே |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | யாக்கோ, பிரெஞ்சு மேல் வோல்ட்டா | திசம்பர் 21, 1949
இறப்பு | அக்டோபர் 15, 1987 வாகடூகு, புர்க்கினா பாசோ | (அகவை 37)
தேசியம் | புர்க்கினர் |
துணைவர் | மரியாம் சங்காரா |
சங்காரா தனது 33வது அகவையில் 1983 ஆம் ஆண்டில் மக்கள் ஆதரவுடன் புர்க்கினா பாசோவின் ஆட்சியை இராணுவப் புரட்சி மூலம் கைப்பற்றினார். ஊழலை நீக்குவது, முன்னாள் பிரெஞ்சு குடியேற்றவாத ஆதிக்கத்தைக் குறைப்பது ஆகிய குறிக்கோள்களுடன் இவர் பதவிக்கு வந்தார்.[1][5] ஆப்பிரிக்காவில் முன்னெப்போதும் மேற்கொள்ளப்படாத பல சமூகப் பொருளாதார மாற்றங்களை இவர் உடனடியாகவே அறிவித்தார்.[5] அத்துடன் நாட்டின் பிரெஞ்சு குடியேற்றவாதப் பெயரான மேல் வோல்ட்டா என்பதை புர்க்கினா பாசோ ("ஊழலற்ற மக்களின் நிலம்") என மாற்றினார்.[5] ஏகாதிபத்திய எதிர்ப்புக் கொள்கையைத் தனது வெளிநாட்டுக் கொள்கையாக அறிவித்தார். வெளிநாட்டு நிதியுதவிகளைத் தவிர்த்தல், கடன்களைக் குறைத்தல், நிலம், மற்றும் கனிம வளங்களைத் தேசியமயமாக்கல், அனைத்துலக நாணய நிதியம் மற்றும் உலக வங்கியின் செல்வாக்கைக் குறைத்தல் ஆகியன வெளிநாட்டுக் கொள்கைகளில் அடங்கின. நாட்டில் வறுமையைப் போக்கல், நிலச் சீர்திருத்தம், நாடு தழுவிய எழுத்தறிவுத் திட்டம், 2.5 மில்லியன் குழந்தைகளுக்கு மஞ்சள் காய்ச்சல், தட்டம்மை போன்ற தொற்று நோய்களுக்கு எதிரான தடுப்பூசி ஏற்றல் போன்ற பல முக்கிய திட்டங்களை இவர் அறிமுகப்படுத்தினார்.[6] நாடு பாலைவனமாதலைத் தடுக்க பத்து மில்லியன் மரங்கள் நடும் திட்டம், நிலக்கிழார்களின் வசமிருந்த நிலங்களை உழவர்களுக்குக் கையளித்தல், தரை வழி மற்றும் தொடருந்து சேவைகளை அமைத்தல் போன்ற வேறு பல திட்டங்களையும் இவர் அறிமுகப்படுத்தினார்.[5] அத்துடன், பெண்களின் உரிமைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்தார். பெண் உறுப்பு சிதைப்பு, கட்டாயத் திருமணம், பலதுணை மணம், போன்றவற்றை சட்டரீதியாக நிறுத்தினார். உயர் அரசப் பதவிகளுக்குப் பெண்களை நியமித்தார்.[5]
இத்த்தகைய சமூகத் திட்டங்களை முன்னெடுப்பதற்காக தோமசு சங்காராவிற்கு நாட்டை அதிகாரவய மேலாண்மையில் வைத்திருக்க வேண்டிய தேவையிருந்தது. இதனால், தொழிற்சங்கங்கள் முடக்கப்பட்டன, ஊடக சுதந்திரம் பறிக்கப்பட்டது.[5] இதனால், நகரங்களிலும், பணியகங்களிலும் எதிர்ப்புகள் கிளம்பின. ஊழல் அதிகாரிகள், புரட்சி-எதிர்ப்பாளர்கள் போன்றோர்களுக்கு எதிராக புரட்சித் தீர்ப்பாயங்களில் வழக்குப் பதியப்பட்டு விசாரிக்கப்பட்டனர்.[5] அத்துடன், பிடல் காஸ்ட்ரோவின் கூபப் புரட்சியின் தாக்கத்தால் உந்தப்பட்டு கூபாவில் அமைக்கப்பட்டதைப் போன்ற புரட்சியைப் பாதுகாக்கும் குழுக்களை உருவாக்கினார்.[1]
சங்காராவின் புரட்சித் திட்டங்கள் வறுமையில் வாடிய ஆப்பிரிக்க பெரும்பான்மை மக்களுக்கு அவர் ஒரு செயல் வீரராகத் தெரிந்தார்.[5] ஆனாலும், இவரது கொள்கைகள் நாட்டின் சிறுபான்மையின, ஆனால் செல்வாக்குள்ள மத்திய தர மக்கள், மற்றும் இனக்குழுத் தலைவர்களிடையே செல்வாக்கிழந்தன.[1][7] இதனால், 1987 அக்டோபர் 15 இல் பிரான்சின் உதவியுடன், பிளைசு கொம்பாரே என்பவர் இராணுவப் புரட்சி ஒன்றின் மூலம் சங்காராவின் ஆட்சியைக் கவிழ்த்து அரசைக் கைப்பற்றினார். அதே நாளில் சங்காரா படுகொலை செய்யப்பட்டார். படுகொலை செய்யப்படுவதற்கு ஒரு வாரத்திற்கு முன்னர் சங்காரா இவ்வாறு தெரிவித்திருந்தார்: "தனிப்பட்ட புரட்சியாளர்கள் கொலை செய்யப்படுவார்கள், ஆனால் அவர்களின் எண்ணங்களைக் கொல்ல முடியாது."[1]
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 1.2 1.3 1.4 1.5 Burkina Faso Salutes "Africa's Che" Thomas Sankara by Mathieu Bonkoungou, ராய்ட்டர்ஸ், அக். 17 2007
- ↑ Thomas Sankara Speaks: the Burkina Faso Revolution: 1983-87, by Thomas Sankara, edited by Michel Prairie; Pathfinder, 2007, pg 11
- ↑ Thomas Sankara, Africa's Che Guevara பரணிடப்பட்டது 2012-07-02 at Archive.today by Radio Netherlands, அக். 15, 2007
- ↑ Africa's Che Guevara by Sarah in Burkina Faso
- ↑ 5.0 5.1 5.2 5.3 5.4 5.5 5.6 5.7 Thomas Sankara: The Upright Man by California Newsreel
- ↑ Commemorating Thomas Sankara by Farid Omar, Group for Research and Initiative for the Liberation of Africa (GRILA), November 28, 2007
- ↑ BBC NEWS | Africa | Burkina commemorates slain leader
வெளி இணைப்புகள்
தொகு- பொதுவகத்தில் தோமசு சங்காரா தொடர்பாக ஊடகக் கோப்புகள் உள்ளன.
- Thomas Sankara Archive at marxists.org