நடைபாதை
நடைபாதை என்பது, கால்நடையாகப் பயணம் செய்பவர்களுக்காக உருவாக்கப்படும் பாதைகள் ஆகும். பொதுவாக நடைபாதையில், வண்டிகள், ஈருருளிகள், குதிரைகள், போன்றவை அனுமதிக்கப்படுவதில்லை. இவ்வாறான பாதைகளை நகரின் மையப்பகுதிகள், ஊர்கள், பண்ணைநிலங்கள், மலைப் பகுதிகள் போன்ற பல்வேறுபட்ட இடங்களில் காணமுடியும். நகரப் பகுதிகளில் அமைக்கப்படும் நடைபாதைகள் பாவப்பட்டிருப்பது வழக்கம். இவற்றின் மேற்பரப்புகள் மட்டப்படுத்தப்பட்டுத் தேவையான இடங்களில் படிகளும் அமைக்கப்பட்டிருக்கும். தேசியப் பூங்காக்கள், இயற்கைக் காப்பிடங்கள், காக்கப்பட்ட பகுதிகள் போன்ற காக்கப்பட்ட காட்டுப் பகுதிகளிலும் கால்நடையாகச் செல்பவர்கள் மட்டும் பயன்படுத்தக்கூடிய நடைபாதைகள் இருப்பது உண்டு.[1] பெரிய சாலைகளின் இருமருங்கும் நடப்பதற்காக அமைக்கப்படும் பாவு செய்த பாதைகளையும் நடைபாதைகள் என அழைப்பதுண்டு.
நடைபாதை உருவாக்கம்
தொகுநகரங்களில் பெரும்பாலும் பழமையான நகரங்களில், நெருக்கமாக அமைந்த கட்டிடங்களுக்கு இடையே நடைபாதைகள் காணப்படுகின்றன. திட்டமிடப்பட்ட நகரங்களில் மக்கள் பாதுகாப்பாக நடமாடுவதற்காக நடைபாதைகள் உருவாக்கப்படுவது உண்டு. வெளியான நாட்டுப்புறப் பகுதிகளில், ஓரிடத்தில் இருந்து இன்னோரிடத்துக்குச் செல்ல மக்கள் ஒரே வழியைப் பயன்படுத்தும்போது நடைபாதைகள் உருவாகின்றன. வயல் வரப்புகள், நிலங்களின் எல்லைகளை அண்டிய பகுதிகள், நீர்நிலைகளின் கரையோரங்கள் ஆகிய இடங்களில் இவ்வாறு பாதைகள் உருவாவதுண்டு. நடந்து செல்பவர்கள் செங்குத் திருப்பங்களை விரும்புவதில்லை. இதனால் வெளிகளில் மக்கள் நடக்கும்போது குறுக்கு வழிகளைப் பயன்படுத்துவதால் இயல்பாக உருவாகும் நடைபாதைகளில் 90 பாகைத் திருப்பங்கள் இருப்பதில்லை. வெளிகளில் உருவாகும் நடைபாதைகள் மென்மையான, சகதியான இடங்களை விடுத்து உறுதியான நிலப் பகுதிகளிலேயே உருவாகின்றன. இவ்வாறாக உருவாகும் நடைபாதைகள் காலப்போக்கில் சாலைகளாகவும் மாற்றமடைகின்றன. காட்டுப் பகுதிகளில் யானை போன்ற பெரிய விலங்குகள் செல்லும் வழிகளை மக்கள் நடைபாதையாகப் பயன்படுத்துவதும் உண்டு.
பிரச்சினைகள்
தொகுநகரப் பகுதிகளில் அமையக்கூடிய நடைபாதைகள் சில, குறிப்பாக நகரங்களின் வசதி குறைந்த பகுதிகளில் காணப்படும் பாதைகள் ஒடுக்கமாகவும், போதிய வெளிச்சம் இல்லாமலும் இருப்பதால் குற்றச் செயல்கள் இடப்பெறக்கூடிய இடங்களாக அமைகின்றன. அத்துடன் இவ்வாறான நடை பாதைகள் போதிய பராமரிப்பு இன்றி குப்பை கூளங்கள் சேரும் இடமாக மாறி உடல்நலத்துக்குக் கேடாக அமையக்கூடிய வாய்ப்புகளும் உள்ளன. நகரங்களுக்கு வெளியே தொடர்ச்சியான கவனிப்பு இல்லாத வேலிகளால் பாதுகாக்கப்படாத தனியார் நிலங்களூடாக மக்களின் இயல்பான முறையில் நடைபாதைகளை உருவாக்குவதால் சட்டப்பிரச்சினைகள் ஏற்படுவது உண்டு.
மேற்கோள்கள்
தொகு- ↑ "Trails - Valley Forge National Historical Park (U.S. National Park Service)". Nps.gov. பார்க்கப்பட்ட நாள் 2015-04-05.