நவீன சாரங்கதரா
நவீன சாரங்கதரா 1936-ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கே. சுப்பிரமணியம் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எம். கே. தியாகராஜ பாகவதர், எஸ். டி. சுப்புலட்சுமி மற்றும் பலரும் நடித்திருந்தனர்.[1]
நவீன சாரங்கதரா | |
---|---|
இயக்கம் | கே. சுப்பிரமணியம் |
தயாரிப்பு | முருகன் டாக்கீஸ் |
நடிப்பு | எம். கே. தியாகராஜ பாகவதர் எஸ். எஸ். மணி பாகவதர் எம். எஸ். சுப்பிரமணியம் ஜி. பட்டு ஐயர் எஸ். டி. சுப்புலட்சுமி எஸ். எஸ். மாணிக்கவல்லி இந்துபாலா |
வெளியீடு | 1936 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
கதைச் சுருக்கம்
தொகுஅத்தினாபுர மன்னன் நரேந்திரன் தன் மகன் சாரங்கதரனின் 21-வது ஆண்டு நிறைவிழாவன்று, அவனுக்கு மணமுடிக்க எண்ணுவதைக் கூறி, பெண் தேடிவர அவனது ஆத்தான குருவை அயல் தேசங்களுக்கு அனுப்புகிறார். குருவும் பல தேசங்களும் சுற்றி, கடைசியில் சித்திராங்கதனின் நகர் வந்து அரண்மனைப் பூங்காவில் தங்கி இளைப்பாறிக் கொண்டிருக்கும் போது சித்திராங்கதனின் மகள் சித்திராங்கி தன் தோழிகளுடன் அங்கு வந்து குரு கொண்டுவந்த சாரங்கதரனின் படத்தைக்கண்டு மோகித்து, ஆத்தான குருவை தன் தந்தையிடம் அழைத்துச்செல்ல, நடந்தவற்றை அறிந்த சித்திராங்கதன் தன் மகளுக்கு ஆசி கூறி சித்திராங்கியை அத்தினாபுரம் அனுப்புகிறார். சித்திராங்கியைக் கண்ட மன்னன் நரேந்திரன் மதிமயங்கி அவள் மீது மோகம்கொண்டு தன்னை மணக்கும்படி கேட்க அவள் அரசனின் மோசமறிந்து தான் அந்த ஆபத்திலிருந்து தப்ப அரசனை சிலநாட்கள் தன் விரதத்தின் பொருட்டு பொறுத்துக்கொள்ளும்படி சொல்லி ஏமாற்றுகிறாள். சுமந்திரன் என்னும் சாரங்கதரனின் தோழனால் இவ்விடயம் மகாராணி ரத்தினாங்கிக்கு தெரிந்து விடுகிறது.[1]
சாரங்கதரனும், சுமந்திரனும் ஒரு நாள் புறாவிட்டு விளையாட, சாரங்கதரனின் புறா, பறந்து சித்திராங்கியின் மாளிகையில் இறங்க அவள் அதைப்பிடித்து வைத்துக்கொண்டு இளவரசன் நேரில் வந்தாலன்றி புறாவைக் கொடுக்கமுடியாதென்று மறுக்க, சுமந்திரன் தடுத்தும் கேளாது சாரங்கதரன் அவள் அரண்மனை செல்லுகிறான். சித்திராங்கியின் அந்தப்புரத்தில் அவளிடம் தன் புறாவைக் கொடுக்கும்படி கேட்க அவள் அவனிடம் தன் காதலைத் தெரிவித்து தன்னையே மணக்கும்படி வற்புறுத்த சாரங்கதரன் அதனை மறுத்துச் செல்லுகிறான். நரேந்திர மன்னரும், அச் சமயம் அங்கு வந்து சந்தேகித்து நிற்க, தோழி கமலா சாரங்கதரனே வலிய வந்து சித்திராங்கியை பலாத்காரம் செய்ததாகப் பழி கூற, அரசன் தன் மகனைச் சிறையிலிட்டு கைகளை வெட்டிவிட உத்திரவிடுகிறான். உண்மைக்காதல் கொண்ட சித்திராங்கி தன் காதலனுக்கு நேரவிருக்கும் ஆபத்தை அறிந்து நடுநடுங்கி வெட்டுப்பாறைக்கு ஓடி, அவனைக்கட்டி அணைக்கும் தருணம் சாரங்கதரன் மேல் விழவிருந்த வாளால் இவள் அடிபட்டு மூர்ச்சையாகிறாள்.[1]
சாரங்கதரனுக்கு இழைத்த தீங்கை கேள்வியுற்ற அந்நாட்டு மக்களும் சேனைகளும் அரசன்மீது கோபங்கொண்டு அரண்மனையைத் தாக்குகிறார்கள். அரசன் ஆணைப்படி சாரங்கதரனின் கைகளை வெட்டியவுடன் அவ்விடத்திற்கு வந்த ஒரு சந்நியாசினி தன் ஞான திருட்டியால் சாரங்கதரனின் வெட்டுண்ட இருகரங்களையும் திரும்ப சேரும்படி செய்கிறார். சந்நியாசினி சித்திராங்கியையும் மூர்ச்சை தெளிவித்து சாரங்கதரனின் தந்தையின் ஆபத்தான நிலைமையைக் கூறி உடனே அரண்மனை போகச்சொல்லி ஆசீர்வதிக்கிறார். சாரங்கதரன் சித்திராங்கி இருவரும் ஓடிவந்து அரசனுக்கும் மகாராணிக்கும் பக்கத்தில் நின்று மக்களை அமரிக்கையாய் இருக்க சைகை செய்ததும் அவர்கள் மகிழ்ச்சி பெற மறுநாள் சாரங்கதரனுக்கும் சித்திராங்கிக்கும் திருமணம் நடக்கிறது.[1]
பாடல்கள்
தொகுஇத்திரைப்படத்தில் மொத்தம் 41 பாடல்கள் இடம்பெற்றிருந்தன. அனைத்தையும் பாபநாசம் சிவன் இயற்றியிருந்தார்.[1] பெரும்பாலான பாடல்களை தியாகராஜ பாகவதர், எஸ். டி. சுப்புலட்சுமி ஆகியோர் பாடினர். சிவபெருமான் கிருபை வேண்டும், ஞானகுமாரி நடன சிங்காரி, அபராதம் செய்தறியே போன்ற பாடல்கள் அக்காலத்தில் பிரபலமான பாடல்களாக அமைந்தன.
- போய் வாரீர் குருவே (ராகம்: சாமா, தாளம்: ஆதி)
- காணக்கண் கூசுதடி - கரடிபோல தோணுதே
- வானோர்களும் தேடியே தினம் - நாடும் நந்தவனமதில்
- எத்தனை அழகு பாரடி (மாயாமாளவகௌளை, ஆதி)
- மின்னல் எழிலுடையாள் இவள் (பந்துவராளி, ரூபகம்)
- இன்னும் வராததேனோ என்னுயிர்க்கினியன் (நடபைரவி, ஆதி)
- எனக்கே தாரமாவாய் ஏந்திழையே (கேதாரம், ஆதி)
- என்ன மோசம் எனதரண் (தோடி, ஆதி)
- ரதி சுந்தரி கல்யாணி (கல்யாணி, ஆதி)
- படத்திலுள்ள வடிவம் அடியாள் (மோகனம், ஆதி)
- பெரும்புனை சுருட்டீதே எனது மனம் (பியாகடை, ஆதி)
- ஆசைக்குகந்த மன்னவா அதிசுந்தர மிகுந்தவென (கமாஸ், ஆதி)
- அறியீரோ அம்மணி நீரும் (சிறீரஞ்சனி, ஆதி)
- ஞான குமாரி நடன சிங்காரி (தேவகாந்தாரி, ஆதி)
- கூடித்திரிகின்ற ஜோடிப் புறாக்களை
- போடன்னா போடா நீ போக்கிரித்தனமா
- மடப்பய போலே தடித்தனமாய்
- மேக மண்டலம் தான்டிக் கண்ணுக்கும் தெரியாமல் (கானடா, ஆதி)
- நீலமுகிலினிடை மறைந்து
- சஞ்சலந்தீர்தின்பமுற வெண்புறாவே (குந்தவராளி, மிச்ரசாப்பு)
- வாங்க அத்தான் வாங்க
- ஆசைக்குகந்த எந்தன் ஆருயிர்க் காதலன் சாரங்கதாரன்
- சொல்லும் வார்த்தை தன்னை தள்ளிச் செல்லவேண்டாம் (சாரங்கா, ஆதி)
- பரிகாசமா நண்பா (தேவகாந்தாரி, ஆதி)
- அன்னையே இதென்ன நீரெனைப்பணிந்த விந்தையே (சிந்துபைரவி, சாப்பு)
- தாயே எனக்கு விடை தாரும் என் அம்மணி (காபி, ஆதி)
- இருகண் விருந்தே எனது மனம் கோயில்கொண்டாய்
- மன்மதன்போலும் பெற்ற மகனிருந்தாலு மன்னை (கரகரப்பிரியா-விருத்தம்)
- மாபாவச்செயலே செய்யவு மெனையே (ஆனந்தபைரவி, ஆதி)
- என்னுடையவிதி கிணறுவெட்ட வொரு பூதமெழும் (காம்போதி-விருத்தம்)
- அபராதமும் செய்தறியேன் மனமறிந்து (ரசாளி, ஆதி)
- புலிவாழும் வனமுமிரு நரகும் மேலாம் (கானடா-விருத்தம்)
- தகுமா தோழரே தருணம்
- என்ன வார்த்தை மொழிந்தாய் என்னையறிந்தும் (மாண்டு, ஆதி)
- பேதை மதியினறியாது மறிந்துஞ்செய்த (பூர்விகல்யாணி, ஆதி)
- மாயாவிலாசம் நானறியேன் (இந்து காபி, ஆதி)
- சிவபெருமான் கிருபை வேண்டும் அவன் (சுருட்டி, ஆதி)
- கிருஷ்ணஜீ கிருஷ்ணஜீ கிருஷ்ணஜீ
- வயது சென்ற கிழவன் நானே (செஞ்சுருட்டி, ரூபகம்)
- மேரே கிரி தர கோபால மேரே
- நாளை நம் சாரங்கதரனுக்கு நல்விவாகம் (இந்து பீம்பிளாசு, ஆதி)