நானமா
புதைப்படிவ காலம்:Early Miocene–Recent
Moschus moschiferus
உயிரியல் வகைப்பாடு
திணை:
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
துணைவரிசை:
உள்வரிசை:
குடும்பம்:
மோசுக்கிடே (Moschidae)

(Gray, 1821)
பேரினம்:
Moschus

இனம்

நானமா என்றும் கத்தூரி மான் (கஸ்தூரி மான்) என்றும் அழைக்கப்படும் மானினம் அரிதாகக் காணப்படும் ஒரு மானினம். இது இமயமலைப் பகுதிகளில் காணப்படும் ஒரு விலங்கு. இதன் அறிவியற்பெயர் மோசுக்கசு (Moschus) என்பதாகும். இவ்விலங்கினம் ஒன்றே மோசுக்கிடேயீ (Moschidae) என்னும் பேரினத்தில் இன்றும் இருக்கும் ஓர் இனம். இவற்றிக்குக் கொம்புகள் கிடையா, ஆனால் மேல் தாடையில் இருந்து நீண்ட கோரைப்பற்கள் கீழ்நோக்கி வளர்ந்து இருப்பதும் (ஆண் மான்களுக்கு), இதன் பின்புறம் மணம் தரும் பொரு'ட்கள் வெளியிடும் சுரப்பிகள் இருப்பதும் இவற்றின் சிறப்புக் கூறுகள். இது இரட்டைப்படைக் குளம்பி வகையைச் சேர்ந்த விலங்கு. இதன் மணம் தரும் பொருள் சுரக்கும் சுரப்பிகள் இனப்பெருக்க உறுப்புக்கும் தொப்புள் பகுதிக்கும் இடைப்பட்ட இடத்தில் உள்ளன. இவற்றை நறுமண நீர்மங்கள் (வாசனைத் திரவியங்கள்) செய்வோர் பயன்படுத்துகின்றனர்.

தமிழ் இலக்கியத்தில்

தொகு

தமிழிலக்கியத்தில் பல இடங்களில் மணம் கமழும் கவரி அல்லது கத்தூரியைப் பற்றி கூறப்படுகின்றது. இரண்டு எடுத்துக்காட்டுகள்:

[1] சூளாமணியில் (பாடல் 954)[1] கவரிகள் குறிப்பிடப்பெறுகின்றன:
கணங்கெழு கவரிகள் கலந்து காழகி
லணங்கிவர் நாவிகா லளைந்து நாறலால்
இணங்கிய கடற்படைப் பரவை யிவ்வழி
மணங்கம ழிமகிரி வருவ தொக்குமே.
இப்பாடலில் மணங்கமழ்தலையும், இமயமலையில் வாழ்வதையும் ("மணங்கமழ் இமகிரி") என்னும் செய்தியும், இது கூட்டமாக வாழ்வதையும் ("கணகெழு") குறிக்கின்றது.

[2] திருமந்திரத்தில் (பாடல் 30)
சாந்து கமழுங் கவரியின் கந்தம்போல்
வேந்தன் அமரர்க் கருளிய மெய்ந்நெறி

உடலமைப்பு

தொகு

கஸ்தூரி மான் உருவில் சிறியது. இதன் பின்னங்கால்கள் முன்னங்கால்களைவிட நீண்டவை. இவை ஏறத்தாழ 80 முதல் 100 செ.மீ நீளமும், 50-70 செ.மீ உயரமும் (தோளருகே) , ஏறத்தாழ 7-17 கி.கி எடையும் கொண்டதாக இருக்கும். இதன் பற்கள் அமைப்பைக் கீழ்க்காணுமாறு குறிப்பர்:  . இதன் தலை சிறியதாகவும் உடல் பகுதி பெரியதாகவும் ஏறத்தாழ முயலைப் போன்றிருக்கும். இதன் தலை வலிமை குறைந்தது. இதன் வாய் மற்ற மான்களிடமிருந்து வேறுபட்டது. இதன் உடல் முழுதும் நீண்டமயிர்கள் அடர்த்தியாகக் காணப்படும். காது பழுப்பு நிறத்துடன் நீள்வட்ட வடிவில் அமைந்திருக்கும். இந்த மான் நீண்ட ஓய்வுக்குப் பின்பு தன் உடலைக் குலுக்கும். அப்போது அதன் உடலிலிருந்து மயிர் உதிரும்.

பொதுவாக மானினங்களில் காணப்படும் கொம்புகள் கஸ்தூரி மானின் தலையில் வளர்வதில்லை. ஆனால் மற்ற வகை மான்களிடம் இல்லாத பித்தப் பையை இது பெற்றுள்ளது. கொம்பு இல்லாத கஸ்தூரி மான் தனது கூர்மையான கோரைப் பற்களைத் தற்காப்புக்காகப் பயன்படுத்துகிறது. இந்தப் பற்களே இதற்கு ஆயுதமாகப் பயன்படுகின்றது. கஸ்த்தூரி மான் மலைப் பாங்கான பகுதியில் வாழ்வதற்கேற்ப காலமைப்பைப் பெற்றுள்ளது. இதன் காலிலுள்ள குளம்புகள் வலிமையானதும் கூர்மையானதும் ஆகும். வழுக்குப் பாறைகள், பனி படர்ந்த பெருங்கற்கள் ஆகியவற்றின் மேல் ஏறுவதற்கு ஏற்றபடி இதன் கால்களில் குளம்புகள் அமைந்துள்ளன.

உணவு

தொகு

இவை இலைதழைகளை உண்ணும் தாவர உண்ணி. இவை புல்,தழை, மரக்குருத்து, வேர்கள் ஆகியவற்றை உணவாகக் கொள்ளும். கஸ்தூரி மானின் வயிற்றில் நான்கு உட்பிரிவுகளும் உள்ளன. இந்த வயிற்றமைப்புக் காரணமாகவும் முகத்தோற்றம் காரணமாகவும் இது மான் குடும்பத்தில் சேர்க்கப்பட்டுள்ளது. மற்ற வகை மான்களைப் போலவே, இம்மான் வயிற்றிலுள்ள புல் உணவை, வாய்க்குக் கொண்டு வந்து அசை போடுகிறது.

வாழ்க்கை

தொகு

கஸ்தூரி மான்கள் இமயமலைப் பகுதி யிலும், கிழக்கு ஆசிய நாடுகளிலும் வாழ்கின்றன. பிற மானினத்தைப் போல, கஸ்தூரி மான் கள் சமு தாய உணர்வுடன் கூட்டமாகச் சேர்ந்து வாழாமல் தனித்து வாழும் இயல்புடையவை. சில சமயம், ஆண் கஸ்தூரி மான் தன் துணை மற்றும் குட்டியுடன் ஒன்றாக இருப்பதும் உண்டு.கஸ்தூரி மான்கள் மலைப் பாறைகளின் மேல் தாவியும், சாய்வான மரத்தின் மீதும் ஏறி நடக்கவும் கூடியவை.

ஆண் கஸ்தூரி மான் தான் வாழும் இட அளவை வகுத்துக் கொள்ளும். தன் உடலின் சுரப்பி ஒன்று வெளிப்படுத்தும் நீர்ப்பொருளை வாழிட எல்லையிலுள்ள பாறை, செடியின் கிளை முதலியவற்றில் தடவி வைக்கும். இதன் மூலம் மற்ற மான்களுக்குத் தனக்குரிய இடத்தை அறிவிக்கும்.

பெண் மானுடன் இணைவதற்காக ஆண் கஸ்தூரி மான்களிடம் போராட்டம் நடைபெறும் இவற்றுக்குக் கொம்பு இல்லை. ஆனாலும் கடுமையான போட்டி நிலவும். இவை தம் கோரைப்பற்களை ஆயுதமாகப் பயன்படுத்தி, மற்ற ஆண் கஸ்தூரி மான்களின் கழுத்தை வளைக்கும். எதிரியின் கழுத்தில் தம் கூர்மையான, நீளமான கோரைப் பற்களை ஊன்றிப் புண் ஏற்படுத்தப் பெரு முயற்சி செய்யும். கடியின் ஆழ மிகுதி காரணமாக இரத்தம் வரும். வலி தாங்க முடியாத ஆண் மான் தோல்வியை ஒப்புக்கொண்டு ஒதுங்கிச் செல்லும். இப்படிப்பட்ட போராட்டம் காரணமாகப் பல ஆண் கஸ்துரி மான்களின் கழுத்தில் வடுக்கள் காணப்படும். சில சமயம் கழுத்தில் ஏற்பட்ட பெரிய புண் காரணமாக சில ஆண்மான்கள் இறந்து விடுவதும் உண்டு.

இனப்பெருக்கம்

தொகு

பெண் கஸ்தூரி மானின் கருக்காலம் ஐந்து மாதங்கள் ஆகும். பொதுவாக கஸ்தூரிமான் ஒரு குட்டியை ஈனும். சில சமயம் அது இரண்டு குட்டிகளை ஈனுவதும் உண்டு. தாய் மான் குட்டியைப் பாறைச் சந்தில் மறைத்து வைத்துவிட்டு உணவு தேடச் செல்லும். குறிப்பிட்ட நேரத்தில் அது குட்டி இருக்குமிடத்திற்குத் திரும்ப வந்து பாலூட்டும். நான்கு வாரங்கள் சென்ற பிறகு குட்டி மான் நடக்கும் ஆற்றலைப் பெறுகிறது. பின்பு அது தாயைப் பின்தொடரும். ஓராண்டு வரை குட்டி மான் தாயின் பாதுகாப்பில் இருக்கும். அது முழு வளர்ச்சி அடைந்த பிறகு தாயிடமிருந்து பிரிந்து தன் வாழ்க்கையை அமைத்துக்கொள்ளும்.

கஸ்தூரி

தொகு

ஆண் கஸ்தூரி மானின் வயிற்றின் அடிப்பாகத்தில் தனிச் சிறப்புடைய ஒரு பை உறுப்பு உள்ளது. அப்பையில் வாசனை நீர்ப் பொருள் சுரக்கிறது. அதுவே கஸ்தூரியாகும். இந்தக் கஸ்தூரியைச் சுரப்பதால், இது கஸ்தூரி மான் என்ற பெயரைப் பெற்றது.

கஸ்தூரி என்பது நறுமணம் வீசும் பொருள். இது சிவப்பும், பழுப்பும் கலந்த நிறம் கொண்டது. மனிதர்கள் இப்பொருளுக்காக கஸ்தூரி மானைக் கொல்கிறார்கள். கஸ்துரி சுரப்பியைத் தனியாகப் பிரித்தெடுத்து அதை உலர வைப்பார்கள். உலர்ந்த பின் இதிலிருந்து நீர்ப்பொருள் வற்றி, சிறுசிறு மணல் போன்ற வடிவம் பெறும். கஸ்தூரிப் பொருளில் ஐந்து வகைகள் உள்ளன என்றும், அவை, கரிகை, திலகை, குளுந்தை, பிண்டகை, நாயகை என்றும் தமிழ் லெக்சிகன் அகராதி அறிவிக்கின்றது.

கஸ்தூரியின் பயன்கள்

தொகு

கஸ்தூரியைக் கொண்டு வாசனைத் திரவியம் தயாரிக்கப்படுகிறது. மேலும் தமிழகத்தில் சித்த மருத்துவத்தில் சன்னி போன்ற நோய்களுக்குத் தயாரிக்கப்படும் மருந்தில் பயன்படுத்தப்படுவதாக அபிதான சிந்தாமணி என்ற தமிழ்க் கலைக்களஞ்சியம் கூறுகிறது. பாம்புக் கடி நஞ்சைப் போக்கும் மருந்து தயாரிப்பதிலும் இதன் பங்கு உள்ளது. கஸ்தூரி மாத்திரை என்ற சித்தமருத்துவ மருந்துகளில் இதன் பெயர் இடம் பெற்றுள்ளது.

உசாத்துணை

தொகு

வெளியிணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=நானமா&oldid=3896698" இலிருந்து மீள்விக்கப்பட்டது