நிறமாலையியல்

நிறமாலையியல் (Spectroscopy) என்பது ஒரு பொருளுக்கும் ஒளிக்கும் இடையே உள்ள நிகழ் உறவுகளைப் பற்றி ஆயும் அறிவுத்துறையாகும்.[1] அதாவது ஒரு பொருள் வெப்பமுறும் பொழுது வெளிவிடும் ஒளியின் பண்புகளைப்பற்றியோ, அல்லது ஒரு பொருள் மீது வீசப்படும் ஒளியை அப்பொருள் எப்படிக் கடத்துகின்றது, அப்பொருளுள் என்னென்ன விளைவுகள் ஏற்படுத்துகின்றன போன்ற எல்லா ஒளி - பொருள் உறவாட்ட நிகழ்வுகள் பற்றியும் இதில் ஆரயப்படுகின்றது.[2]

நிறமாலையியல் உதாரணம்: ஒரு பட்டகத்தின் உள்ளே பாய்ச்சப்படுகின்ற வெள்ளை நிற கதிர் ஒளிச்சிதறல் மூலம் அதன் கூறு நிறங்களாக பிரிகின்றது

நிறமாலை என்னும் இச்சொல்லில் உள்ள “நிறம்” என்பது மாந்தர்களின் கண்களுக்கு புலனாகும் ஒளியலைகள் மட்டுமல்லாமல் எல்லா அலைநீளங்களையும் கொண்ட மின்காந்த அலைவரிசையைக் குறிக்கும். வரலாற்று நோக்கில், கண்ணுக்குப் புலப்படும் ஒளியைத்தான் முதலில் குறித்து வந்தது இச்சொல். கண்ணுக்குப் புலனாகா மின்காந்த அலைகள் தவிர, ஆற்றல் அலைகளானது துகள்கற்றையாக இயங்கி ஒரு பொருளுடன் தொடர்புபடும் நிகழ்வுகளும் இத்துறையுள் அடங்கும்.[3]

ஒரு பொருளோடு தொடர்புறும் ஒளியின் பண்புகளைத் துல்லியமாய் அளவிட்டு அதன்வழி அப்பொருளைப் பற்றிய பண்புகளை அறியும் துறைக்கு நிறமாலை அளவையியல் அல்லது நிறமாலை அளவீட்டியல் எனப் பெயர். ஆனால் பொதுவாக அத்துறையும் நிறமாலையியல் என்னும் இத்துறையிலேயே அடங்கும்.[4]

ஒரு கண்ணாடி முக்கோணப் பட்டகத்தின் வழியாகப் பாயும் வெண்ணிற ஒளி எப்படி நிறப்பிரிகை அடைகிறது என்பதை இப்பக்கத்தில் உள்ள கருத்துப் படம் காட்டுகின்றது. ஒளி கண்ணாடியின் ஊடே பாயும் பொழுது வெவ்வேறு அலைநீள ஒளியலைகள் வெவ்வேறு அளவு விலகுகின்றன. குறைந்த அலைநீளம் கொண்ட, ஆனால் மிகுந்த ஆற்றலுடைய ஊதா நிறக்கதிர்கள் அதிகம் விலகுகின்றன. அதிக அலைநீளம் கொண்ட, ஆனால் ஆற்றல் குறைந்த சிவப்பு நிறக்கதிர்கள் குறைவாக விலகுகின்றன.

துல்லியமாய் நிறுவப்பட்ட ஒளி உள்வாங்கு (பற்றும்) பண்புகள், ஒளியுமிழ் பண்புகள் முதலிவற்றால், இயற்பியல், வேதியியல், மற்றும் பல்வேறு அறிவியல், பொறியியல், மருத்துவம் போன்ற துறைகளில் ஒரு வேதிப்பொருளை அடையாளம் கண்டுகொள்ள பயன்படுகின்றது. மிகு தொலைவில் உள்ள விண்மீன்களில் இருந்து வரும் ஒளியலைகளை அலசுவதன் வழியாக அங்கே என்னென்ன வேதிப்பொருள்கள் உள்ளன என்றும் அறிய உதவுகின்றது. ஒளிச்சிதறல் வழி பொருளுள் அணுக்கள் அமைந்துள்ள ஒழுங்கு முறையையும் அறிய இயலுகின்றது. இராமன் விளைவு போன்றவை இவற்றுக்குப் பயன்படுகின்றன.[5]

மேற்கோள்கள்

தொகு
  1. Duckett, Simon; Gilbert, Bruce (2000). Foundations of Spectroscopy. Oxford Science Publications. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-198-50335-4.
  2. The Oxford American College Dictionary. G.P. Putnam's Sons. 2002. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-399-14415-8. இணையக் கணினி நூலக மைய எண் 48965005.
  3. "1861: James Clerk Maxwell's greatest year". King's College London. 18 April 2011. Archived from the original on 22 June 2013. பார்க்கப்பட்ட நாள் 28 March 2013.
  4. Sutton, M. A. "Sir John Herschel and the Development of Spectroscopy in Britain". The British Journal for the History of Science, vol. 7, no. 1, [Cambridge University Press, The British Society for the History of Science], 1974, pp. 42–60.
  5. Lazić, Dejan. "Introduction to Raman Microscopy/Spectroscopy." Application of Molecular Methods and Raman Microscopy/Spectroscopy in Agricultural Sciences and Food Technology, edited by Dejan Lazić et al., Ubiquity Press, 2019, pp. 143–50, http://www.jstor.org/stable/j.ctvmd85qp.12.
"https://ta.wikipedia.org/w/index.php?title=நிறமாலையியல்&oldid=3959578" இலிருந்து மீள்விக்கப்பட்டது