நிறுத்தல் நேரம்

காற்பந்தாட்டத்தில் நிறுத்தல் நேரம் (stoppage time ) அல்லது காயமடைந்த நேரம் ( injury time) எனவும் பிஃபாவின் ஆவணங்களில் மேற்பட்ட நேரம் எனவும் குறிக்கப்படும் கால அளவு விளையாட்டாளர் மாறுதல்களுக்காகவும் காயப்பட்ட வீரர்களுக்கு சிகிச்சை அளிக்கவும் மற்றும் பிற நிறுத்தங்களுக்குமான நேரத்தை சரிக்கட்டுவதற்காக ஆடும் நேரத்துடன் கூட்டப்படும் நேரத்தைக் குறிக்கின்றது. [1][2] பொதுவாக 45 நிமிடங்கள் கொண்ட இரு பாதிகளாக விளையாடப்படும் ஆட்டத்தில் பந்து வெளியே செல்லும்போதெல்லாம் ஆட்டம் நிறுத்தப்படுவதில்லை. இரு பாதிகளுக்கும் இடையில் 15 நிமிட இடைவேளை விடப்படுகிறது. ஆட்டத்தின் இரு பாதிகளும் முடிந்த நேரம் முழு-நேரம் எனப்படுகிறது.[3] ஆட்டநடுவர் அவ்வப்போது நிறுத்தற்கூடிய கடிகாரத்தை வைத்துக்கொண்டு அலுவல்முறை நேரக்காப்பாளராக பொறுப்பாற்றுகிறார். அணிப் பயிற்றுனர்கள் ஆட்டப்போக்கை கருத்தில்கொண்டு தங்கள் அணி வீரர்களை மாற்றும்போது நிறுத்தப்படும் நேரம், காயமடைந்த வீரர்களுக்கு சிகிச்சை அளிக்கவும் வெளியே எடுத்துச் செல்லவும் நேர்கின்ற நேரம் மற்றும் பிற காரணங்களுக்காக நிறுத்தல்களைக் கணக்கில் கொண்டு முழு-நேர முடிவில் கூடுதலாக ஒதுக்கப்படும் நேரத்தை ஆட்டநடுவர் அறிவிக்கிறார்.

நான்காவது நடுவர் அறிவிப்புப் பலகையை காட்டுதல்

இந்த நிறுத்தற் நேரத்தின் அளவைத் தீர்மானிக்க நடுவருக்கு மட்டுமே அதிகாரம் உண்டு. அவரே ஆட்டம் முடிந்ததாக அறிவிக்க முடியும். நான்காவது நடுவர் பொறுப்பாற்றும் ஆட்டங்களில் பாதிநேரம் முடியுந்தருவாயில் ஆட்ட நடுவர் எத்தனை நிமிடங்களைக் கூடுதலாகத் தரலாம் என்பதை சைகைகள் மூலம் அறிவிக்கிறார். நான்காம் நடுவர் அறிவிப்புப் பலகை ஒன்றில் கூட்டப்பட்ட எண்ணைக் காட்டுவதன் மூலம் விளையாடும் வீரர்களுக்கும் பார்வையாளர்களுக்கும் இதனை அறிவிக்கிறார். இவ்வாறு காட்டப்பட்ட நேரத்தை ஆட்டநடுவரால் மேலும் கூட்டிட இயலும். [3]

1891இல் நடந்த நிகழ்ச்சி ஒன்றினால் இவ்வாறு நிறுத்தற் நேரம் அறிமுகப்படுத்தப்பட்டது. இசுடோக்கு காற்பந்துக் கழகத்திற்கும் ஆசுடன் வில்லா காற்பந்துக் கழகத்திற்குமிடையேயான ஓர் ஆட்டத்தில் ஆட்ட முடிவுக்கு இரண்டே நிமிடங்கள் இருந்த நேரத்தில் 1-0 என்று பின்தங்கியிருந்த இசுடோக்குக்கு தண்ட உதை வழங்கப்பட்டது. வில்லாவின் கோல்காப்பாளர் பந்தை ஆடுகளத்திலிருந்து வெளியே உதைத்தார். பந்தை மீட்டு வருவதற்குள் 90 நிமிடங்கள் கழிந்தமையால் ஆட்டம் முடிவுற்றது.[4] ஆட்ட விதிகளின்படி எந்தப் பாதியின் ஆட்டத்திலும் தண்ட உதை எடுக்கும் போதும் அல்லது மீண்டும் எடுக்கும்போதும் நேரம் கூட்டப்பட வேண்டும். இதனால் தண்ட உதை முழுமையடையாமல் ஆட்டம் நிறுத்தப்படவியலாது.[5] இதனால் எழுந்த சர்ச்சையினாலேயே நிறுத்தற் நேரம் அறிமுகப்படுத்தப்பட்டது.

உசாத்துணைதொகு

ஃபிஃபா ஆட்டச் சட்டங்கள்

மேற்சான்றுகள்தொகு

  1. "Interpretation of the Laws of the Game - Law 07". FIFA.com.
  2. "Law 7 - The Duration of the Match". FIFA.com.
  3. 3.0 3.1 "Laws of the game (Law 7.2–The duration of the match)". FIFA. மூல முகவரியிலிருந்து 11 October 2007 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 24 September 2007.
  4. The Sunday Times Illustrated History Of Football Reed International Books Limited 1996. p.11 ISBN 1-85613-341-9
  5. "Laws of the game (Law 7.3–The duration of the match)". FIFA. மூல முகவரியிலிருந்து 3 June 2008 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 3 March 2010.
"https://ta.wikipedia.org/w/index.php?title=நிறுத்தல்_நேரம்&oldid=2697512" இருந்து மீள்விக்கப்பட்டது