முதன்மை பட்டியைத் திறக்கவும்
தோட்டமும் விலங்குகளும் பயன் பெறும் ஒரு நிலைகொள் வேளாண் தொகுதி.

நிலைகொள் விவசாயம் அல்லது நிலைகொள் வேளாண்மை (Permaculture) என்பது சூழலியல் மானிட வாழிடத்தையும், உணவு உற்பத்தி முறைகளையும் ஒன்றிணைத்து வடிவமைத்த வேளாண்மை முறை ஆகும். இது நிலைப்பேறான மனிதக் குடியிருப்பு மற்றும் வேளண்மை முறைமைகளை இயற்கையோடிணைந்ததாக வடிவமைக்க முயலும் சூழல்சார் வடிவமைப்புத் தத்துவம் ஆகும்.[1][2]

நிலைகொள் வேளாண்மை என்பது சேதனப் பண்ணையாக்கம், வேளாண்மைக் காடாக்கம், நிலைத்திரு அபிவிருத்தி மற்றும் பயன்பாட்டுச் சூழலியல் ஆகிய பல்வேறு துறைகளை ஒன்றிணைந்ததாகும். இதன் முக்கிய இலக்கு உற்பத்தித்திறனும் நிலைத்திருப்புமுள்ள பண்ணைமுறை ஒன்றை உருவாக்குவதன் மூலம் தன்னிறைவும் இயைபும் கொண்ட பயிராக்கத்தை ஏற்படுத்துவதாகும். இதன் அடிப்படையில் நிலைகொள் விவசாயத்தின் அடிப்படை எண்ணக்கரு தொகுதிச் சூழலியல் மற்றும் நிலைப்பேறான நிலப்பயன்படுத்துகையின் கைத்தொழிலாக்கத்திற்கு முந்திய எடுத்துக்காட்டுகள் என்பவற்றிலிருந்து பெறப்பட்டவையாகும்.[3] இம்முறையை முதன்முதலில் உலகிற்கு அறிமுகம் செய்தவர்கள் ஆஸ்திரேலிய நாட்டைச் சேர்ந்த பில் மோலிசான் மற்றும் டேவிட் ஹோல்ம்கிரன் ஆவர். இன்று உலகின் பல இடங்களில் இம்முறை வெற்றிகரமாக செயல்பாட்டில் உள்ளது. இம்முறையைத் தான் தமிழ்நாட்டின் இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வார் தொடர்ந்து தமிழகம் முழுதும் பரப்புரை செய்து வந்தார்.

பெயர்க்காரணம்தொகு

1978ஆம் ஆண்டு, ஆத்திரேலிய சூழலியலாளர்களான பில் மொலிசனும் அவரது மாணவரான டேவிட் கொல்மரனும் நிலைகொள் விவசாயம் என்ற பொருள் தரும் ஆங்கிலச் சொல் ஒன்றின் (PERMAnant AgriCULTURE) சுருக்கமாக நிலைகொள் வேளாண்மை (Permaculture) என்னும் சொல்லை உருவாக்கினர். தமிழில் நிலையான வேளாண்மை, நிரந்தர வேளாண்மை, நிலைகொள் வேளாண்மை ஆகிய சொற்கள் இதற்குப் பயன்படக் கூடியவை.

வரைவிலக்கணங்கள்தொகு

 • நிலைகொள் வேளாண்மை என்ற பதத்தினை முன்மொழிந்த பில் மொலிசன், நிலைகொள் வேளாண்மை என்பது நிலைப்பேறான மானிட சுற்றாடல்களை உருவாக்குவதற்கான வடிவமைப்புத் தொகுதி" என்பார். இதன்படி எரிபொருளுக்குப் பதிலாக உயிரியல் வளத்தைப் பயன்படுத்துவதும், வேலையாள் வினைத்திறனை உடையதுமான சிறிதான செறிந்த முறைத் தொகுதிகளுக்கான சிந்தனை பூர்வமான வடிவமைப்புகளை நிலைகொள் வேளாண்மை விபரிக்கிறது.
 • மைக்கல் பிளாக்சியின் விபரிப்பின்படி நிலைகொள் வேளாண்மை என்பது "நிலைப்பேறுடையதும் சுற்றாடலுக்கு ஏற்புள்ளதுமான நிலப்பயன்பாட்டு முறைமைகளுக்கான வடிவமைப்பாகும்." இது சமூக நிலைத்திருப்புக்கு உதவக்கூடிய பண்பாட்டு நோக்கில் பொருத்தப்பாடுடைய முறைமைகள், நிலப்பயன்பாட்டியல், சூழலியற் கொள்கைகளை ஒருங்கிணைத்ததாய் அமையும்.

வரலாறுதொகு

 • 1911இல், பிரான்கிளின் இராம் கிங் தனது நூலில் (Farmers of Forty Centuries: Or Permanent Agriculture in China, Korea and Japan) நிலைகொள் வேளாண்மை என்ற பதத்தை முதன்முதலில் எடுத்தாண்டார்.
 • 1929இல், யோசப்பு இரசல் சிமித் தனது நூலில் ஒரு துணைத் தலைப்பாகப் (Tree Crops: A Permanent Agriculture) பயன்படுத்தினார்.
 • நிலைகொள் வேளாண்மை வரைவிலக்கணத்தை வலுப்படுத்தக்கூடியதாக ஆத்திரேலியரான பி. ஏ. ஜியொமான் தனது என்ற நூலில் (Water for Every Farm (1973)) நீடித்து நிலைக்கக்கூடிய வேளாண்மை பற்றிக் கூறியுள்ளார். இவர் 1940களில் ஆத்திரேலியாவில் அவதானத்தை அடிப்படையாகக் கொண்ட நிலப்பயன்பாட்டு அணுகுமுறையை அறிமுகப்படுத்தியவர்.

நிலைகொள் வேளாண்மையின் விழுமியங்கள்தொகு

நிலைகொள் வேளாண்மை ஏனைய மாற்றுப் பண்ணை முறைகளான இயற்கை வேளாண்மை, நிலைப்பேறான வேளாண்மை, சூழல் வேளாண்மை ஆகியவற்றிலிருந்து தனித்துவமானது. இது தனித்தனிக் கொள்கைகளுக்குப் பதிலாக முழுப் பூகோள சமுதாயத்தினதும் வாழ்விருப்பு பற்றி கருதுகிறது.

 • புவியைப் பராமரித்தல்: அனைத்து உயிரினங்களும் வாழ்வதற்கான மூலம் புவி என்பதை ஒப்புதல். புவியின் பல்தன்மை கொண்ட நலனோம்புகையை (நீர், காற்று, உணவு, வாழிடம்) உணருதல். அதனைக் கேடுகளிலிருந்து பேணுதல். பயனுறுதி மிக்கதாகப் பேணுதல்.
 • மக்களைப் பராமரித்தல்: சமூகப் பொறுப்புணர்வையும் தன்னம்பிக்கையும் வளர்த்தல், வாழ்விருப்புக்கான வளங்களை அடைதல், ஒருவரை ஒருவர் தாக்கிக் கொள்வதால் புவிக்கோளம் ஊறுபடுவதைத் தவிர்த்தல்.
 • மக்கள்தொகைக்கும் நுகர்வுக்குமான எல்லைகளை வகுத்தல்: குறையக்கூடிய வளங்கள் மக்கள்தொகைப் பெருக்கத்துக்கு ஏற்ப பயன்படுதைத் திட்டமிடல். இதற்காக மக்களையும் நிலத்தையும் பாதுகாப்பதற்குத் தேவையான நேரம், வேலையாள், ஆற்றல், நிதி, தகவல் முதலியவற்றை ஒருங்கிணைப்பது.

நிலைகொள் வேளாண்மையின் இயல்புகள்தொகு

 • நிலைகொள் வேளாண்மை, முழுமை பெற்ற ஒருங்கிணைந்த முறைமைகளின் பகுப்பாய்வும் வடிவ முறையியலும் ஆகும்.
 • உற்பத்தித் திறனுள்ள சூழல் தொகுதியை உருவாக்குவதிலும் பாழடைந்த சூழல் தொகுதியை மனித நிலைத்திருப்புக்கு மீளுருவாக்குவதிலும் நிலைகொள் வேளாண்மை பயன்படும்.
 • மரபுவழி அறிவு, பட்டறிவை மதிப்பிடவும் வலுவூட்டவும் நிலைகொள் வேளாண்மை பயன்படுகிறது. உலகளாவிய பேண்தகு வேளாண்மை முறைகளையும் நில மேலாண்மை நுட்பங்களையும் நிலைகொள் வேளாண்மை உள்ளடக்குகின்றது.
 • வேதியியல் மாசாக்கத்தை ஏற்படுத்தும் பூச்சி மருந்துகளின் பயன்பாடற்ற இயற்கை வேளாண் முறையை நிலைகொள் வேளாண்மை மேம்படுத்துகின்றது.
 • நிலைகொள் வேளாண்மை, சூழல் கூறுகளுக்கிடையே ஒன்றுக்கொன்று துணையாகும் தன்மை முதலான அங்கித் தொடர்புகளை கூட்டுவதைக் குறிக்கோளாகக் கொண்டது.

நிலைகொள் வேளாண்மை வடிவமைப்பின் கோட்பாடுகள்தொகு

சூழலியல், ஆற்றல் சேமிப்பு, நிலக்காட்சிமை வடிவமைப்பு, சுற்றாடல் அறிவியல் எனப் பல்துறை சார்ந்ததாக இது வடிவமைக்கப்படுகிறது.

 1. தொடர்பு இடவமைவு.
 2. பன்மையான செயற்பாடுகளைக் கொண்ட கூறுகளின் உள்ளடக்கம்.
 3. ஆற்றல் செயல் திறன் மிக்க திட்டமிடல்.
 4. உயிரியல் மூலவளங்களின் பயன்பாடு.
 5. ஆற்றல் சுழற்சி.
 6. இயற்கைத் தாவர நிலைப்பேறும் மீள்சுழற்சியும்.
 7. இனப்பல்வகைமையும் பல்லின வளர்ப்பும்.
 8. இயற்கை வடிவங்களைக் குழப்பாமல் திட்டமிடல்.
 9. மன நிலை மாற்றத்தைத் திட்டமிடல்.

நிலைகொள்வேளாண்மையின் கோட்பாடுகள்தொகு

நிலத்தை தொடர்ந்து கவனித்து அதனுடனான தொடர்புகளைப் பேணுதல்தொகு

இயற்கைக்கு எதிரான செயல்களை செய்வதை தவிர்த்து, இயற்கையுடன் இணைந்து அதைத் தொடர்ந்து கவனித்தல் எ.கா: பூச்சிகளைக் கொல்ல பூச்சிக்கொல்லிகளுக்குப் பதிலாக மாற்று முறைகளைப் பயன்படுத்துதல்.

இயற்கையின் ஒவ்வொரு ஆற்றலையும சேமித்தல்தொகு

சூரிய வெளிச்சம், மழை, காற்று முதலான இயற்கை வளங்களை தக்க முறையில் பயன்படுத்தலும் பாதுகாத்தலும்.

மகசூலை முழுமையாகப் பயன்படுத்துதல்தொகு

முதன்மை விளைபொருள் தவிர்ந்த ஏனைய பக்க விளைபொருள்களையும் முடிந்தவரைபயன்படுத்துதல். எ.கா: அறுவடையின் பின்னான வைக்கோல்.

புதுப்பிக்கத்தக்க வளங்கள் மற்றும் சேவைகளைப் பயன்படுத்துதல்தொகு

மண்ணின் வளத்தை அழிவடையாமல் பாதுகாத்தல்.

வளங்கள் வீணாவதைத் தடுத்தல்தொகு

இயற்கை வளங்களை மதித்து அதனைப் பேணுதல்.

வடிவமைப்பும் வலயங்களும்தொகு

மானிடச் சூழலியலில் தொகுதியின் பயன்படி தன்மை மற்றும் தாவர விலங்கினத் தேவைகள் என்பவற்றின் அடிப்படையிலும் நிலைகொள் வேளாண்மைத் தொகுதி பல வலயங்களைக் கொண்டதாக வடிவமைக்கப்படும். தாவர விலங்குத் தொகுதிகளைப் பராமரிப்பதற்கான தேவையும் வலயங்களைத் தீர்மானிக்கும். இதன்படி கூடிய அல்லது செறிந்த பராமரிப்பு தேவையான பயிர்த் தொகுதி முதலாம் இரண்டாம் வலயங்களில் பெரிதும் இடம்பெறும். இதன் அடிப்படையில் 0 தொடக்கம் 5 வரையான வலயங்கள் வடிவமைக்கப்படும்.

வலயம் 0தொகு

இது வீடு அல்லது பண்ணை அலுவலகம் ஆகும். சூழலைப் பெரிதும் மாசாக்கம் செய்யாததும் சூழலை சமநிலை குலையாமல் பேணுவதுமான நடவடிக்கைகளைக் கொண்டதாக இருப்பதால் இது நிலைகொள் வேளாண்மை அணுகுமுறைக்குள் அடங்கும். இயற்கை சூரிய ஒளியைப் பயன்படுத்துதல், குறைந்த சக்தி மற்றும் நீர்ப் பயன்பாடு என்பன காணப்படும்.

வலயம் 1தொகு

இடு பண்ணை வீட்டுக்கு அடுத்து காணப்படக்கூடிய வலயம். இங்கு பைங்குடில் அமைப்பு, மூலிகைத் தாவரங்கள், சலாது வகைகள், கொடிகள் கொண்ட மரக்கறி வகைகள், சிறு பழத் தாவரங்கள் என்பன காணப்படும்.

வலயம் 2தொகு

இவ்வலயத்தில் பராமரிப்பு செறிவு குறைந்த பல்லாண்டுத் தாவரங்கள் பயிரிடப்படும். இவற்றுக்கு தினமும் நீரிட்டு பராமரிப்பதோ அல்லது அடிக்கடி களை கட்டும் தேவையோ இருக்காது. இவ்வலயம் தேனீ வளர்ப்புக்குரிய தேன்கூடு மற்றும் சேதனப் பசளை தயாரிக்கும் குழிகள் முதலானவற்றையும் கொண்டிருக்கும்.

வலயம் 3தொகு

இவ்வலயத்தில் முதன்மையான பயிரிடல் மேற்கொள்ளப்படும். பத்திரக்கலவை இடல் முதலான அணுகுமுறைகளால் நீர் வழங்கல் களைகட்டல் என்பன குறைக்கப்பட்டிருக்கும்.

வலயம் 4தொகு

இது ஓரளவு காடு சார்ந்ததாக இருக்கும். நேரடியாக விறகு மற்றும் உணவுப் பொருட்கள் இங்கிருந்து சேகரிக்கப்படும்.

வலயம் 5தொகு

இது மனிதத் தலையீடு இல்லாத காடாகக் காணப்படும்.

வெளி இணைப்புகள்தொகு

மேற்கோள்கள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=நிலைகொள்_வேளாண்மை&oldid=2747635" இருந்து மீள்விக்கப்பட்டது