நெல்லூர் ஆடு

நெல்லூர் ஆடு (Nellore Sheep) என்பது இந்தியாவில் இப்போது உள்ள 37 இனச் செம்மறி ஆடுகளுல் ஒன்றாகும். ஓர் இனம் என்பது குறிப்பிட்ட பகுதியில் எளிதில் அடையாளம் கண்டு கொள்ளக்கூடிய வெளித்தோற்றத்தையும், இயல்பையும் பெற்றிருக்கும். செம்மறி ஆட்டைக் கம்பள இன ஆடு, இறைச்சி ஆடு எனப் பிரிக்கலாம். இவற்றுள் நெல்லூர் ஆடு இறைச்சி இனத்தைச் சார்ந்தது.[1][2]

நெல்லூர் ஆடு

உடலமைப்பு

தொகு

நெல்லூர் ஆடுகள், ஆந்திர மாநிலத்திலுள்ள நெல்லூர் மாவட்டத்தில் காணப்படுகிறது. இந்தியாவில் காணப்படும் செம்மறி ஆடுகளில் இது மிக உயரமாக்வும் அதிக உடல் எடையும் கொண்டது. கொம்புகள் பின்னோக்கி வளைந்து காணப்படும். பொதுவாக இரண்டு வளைவுகள் காணப்படும். நீண்ட முகமும் நீளமான காதுகளும் கொண்டது. தாடி அல்லது மணி என்று கூறப்படும் சிறிய உறுப்புகள் வெள்ளாடுகளின் கழுத்தின் கீழ்ப்புறத்தில் காணப்படும். இவை செம்மறியாடுகளில் காணப்படாது. ஆனால் நெல்லூர் இன ஆடுகளில் இவை காணப்படும்.[3]

வகைகள்

தொகு

1. பாலா நெல்லூர் இனம்: வெண்மை நிறத்தில் இருக்கும். சில சமயம் வெண்மை நிறத்தில் பழுப்பு நிறத் திட்டுகளுடன் காணப்படும். பெரும்பாலும் இந்தத் திட்டு தலை, கழுத்து, முதுகு, கால் ஆகிய இடங்களில் காணப்படும்.

2. ஜோடிப்பூ அல்லது ஜோடிப்பூ நெல்லூர் இனம்: வெண்மை நிறத்தில் கறுப்புப் புள்ளிகளோடு காணப்படும். இப்புள்ளி பெரும்பாலும் வாயைச் சுற்றிலும், கால், கீழ்த்தாடைகளிலும் காணப்படும். சில ஆடுகளில் இப்புள்ளிகள் வயிற்றுப் பகுதிகளில் காணப்படும்.

3. டேரா நெல்லூர் ஆடு: பழுப்பு நிறத்தில் காணப்படும். நெல்லூர் மாவட்டத்திலும் அதைச் சுற்றியுள்ள பிரகாசம், ஓங்கோல், கடப்பா, குண்டூர், நல்கொண்டா மாவட்டங்களிலும் மிகுதியாகக் காணப்படுகிறது. [4]

தனித்தன்மை

தொகு

பருவமடைந்த ஆண், பெண் ஆடுகள் முறையே 30முதல் 40 கிலோ வரை உடல் எடையுடன் இருக்கும். உடலின் நீளம் 67 முதல் 76 செ. மீட்டரும், மார்புச் சுற்றளவு 72 முதல் 75 செ.மீட்டரும் இருக்கும். தோலில் முடி குறைவாகவே இருக்கும். மார்பும், கழுத்தின் கீழ்ப்புறமும் சந்திக்கும் இடத்திலும், கழுத்துக்கு மேற்புறமும், தொடையின் பின்பிறமும் முடி மிகுந்து காணப்படும். கொம்புகள் ஆண் ஆடுகளில் மட்டும் காணப்படும். காது 15 செ.மீ நீண்டு தொங்கும். வால் மிகவும் மெலிந்து 10 செ.மீ. அளவில் சிறியதாகக் காணப்படும். 20-23 மாத வயதில் பருவமடைந்து முதல் குட்டியை 28 மாத வயதில் ஈனுகிறது. பொதுவாக ஒரு முறை ஒரு குட்டி மட்டுமே ஈனும். குட்டி ஈன்ற பிறகு அடுத்த குட்டி ஈனுவதற்கு ஏறத்தாழ 428 நாள்கள் ஆகும். பொதுவாகப் பல காரணங்களினால் 14% குட்டிகள் 3 மாத வயதிற்குள் இறந்துவிடுகின்றன. 4% குட்டிகள் 3-12 மாத வயதில் மடிந்துவிடுகின்றன. பிறந்த குட்டியின் எடை ஏறத்தாழ 2.5 கி.கி இருக்கும். மூன்று மாத வயதில் 12 கி.கி எடையும், 6 மாத வயதில் 16 கி.கி எடையும், 12 மாத வயதில் 23 கி.கி எடையும் இருக்கும்.[5]

மேற்கோள்கள்

தொகு
  1. அறிவியல் களஞ்சியம் தொகுதி 14
  2. https://www.sheepfarm.in/nellore-sheep-breed-profile-information
  3. "Breeds of Livestock - Nellore Sheep — Breeds of Livestock, Department of Animal Science". afs.okstate.edu. பார்க்கப்பட்ட நாள் 2022-12-31.
  4. "District-wise forest cover". Andhra Pradesh Forest Department. 28 October 2015. Archived from the original on 28 October 2015. Retrieved 23 June 2016
  5. Mason, I.L. 1996. A World Dictionary of Livestock Breeds, Types and Varieties. Fourth Edition. C.A.B International. 273 pp.
"https://ta.wikipedia.org/w/index.php?title=நெல்லூர்_ஆடு&oldid=3628967" இலிருந்து மீள்விக்கப்பட்டது