நேரு அருங்காட்சியகமும் கோளகமும்

தீன் மூர்த்தி பவன்

நேரு அருங்காட்சியகமும் கோளகமும் இந்தியாவின் தலைநகரான புது டில்லியில் தீன் மூர்த்தி பவன் என அழைக்கப்படும் கட்டிடத்தில் அமைந்துள்ளது. பிரித்தானியர் ஆட்சியில் பிரித்தானிய படைத்தளபதி வாழ்ந்த இந்தக் கட்டிடம், பின்னர் விடுதலை பெற்ற இந்தியாவின் முதல் பிரதமரான ஜவகர்லால் நேருவின் வசிப்பிடமாக இருந்தது. நேரு இறந்ததின் பின்னர் இக் கட்டிடம் தேசிய நினைவுச் சின்னம் ஆக்கப்பட்டு, அதில் ஒரு நூலகமும், ஒரு அருங்காட்சியகமும் அமைக்கப்பட்டது. இதிலுள்ள பல அறைகள் 1964 ஆம் ஆண்டில் நேரு இறப்பதற்கு முன் இருந்தவாறே விடப்பட்டுள்ளன. நூலகத்தில், இந்திய விடுதலைப் போராட்டத்தில் நேருவின் பங்கு, விடுதலை பெற்ற இந்தியாவின் முதல் பிரதமராக அவரது பணிகள் என்பன குறித்தவை உட்பட அவரது வாழ்க்கை குறித்த பல நூல்களும் ஆவணங்களும் உள்ளன. இந்தியாவின் தற்கால வரலாறு தொடர்பான தகவல்களைப் பெறுவதற்கு இந் நூலகம் மிகச் சிறந்ததாகக் கருதப்படுகிறது.

இக் கட்டிடத்தில் 1984 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 6ஆம் தேதி ஒரு கோளகம் திறந்துவைக்கப்பட்டது. முன்னாள் பிரதமரும், ஜவகர்லால் நேருவின் மகளுமான இந்திரா காந்தி அதனைத் திறந்து வைத்தார். இக் கோளகம் கட்டிடத்தின் நிலத் தளத்தில் உள்ளது. இங்கே பொதுமக்களுக்கு ஆர்வத்தைத் தூண்டக்கூடிய அண்டத்தைக் குறித்த நிகழ் படங்களையும், இந்திய விண்வெளித் திட்டம் குறித்த பல நிகழ் படங்களையும் பார்க்க முடியும். விரிவுரைகளும் நிகழ்த்தப்படுகின்றன. இந்தியாவின் முதல் விண்வெளிவீரரான ராகேஷ் சர்மா பயணம் செய்த விண்கலமான சோயுஸ் டி 10 இங்கே காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.

வெளியிணைப்புக்கள்தொகு