பகவந்தி நவானி
பகவந்தி நவானி (Bhagwanti Navani) (1 பிப்ரவரி 1940-22 அக்டோபர் 1986) என்பவர் ஒரு இந்தியப் பாடகரும் நடிகையும் ஆவார். இவர் சிந்தி மொழி இசை மற்றும் திரைப்படங்களில் பணியாற்றியதற்காக நன்கு அறியப்படுகிறார். இவர் ஒரு நாட்டுப்புறப் பாடகராகவும் பின்னணிப் பாடகராகவும் இருந்தார். இவரது மெல்லிசை, இனிமையான குரல் காரணமாக, இவர் "சிந்தி கோயல்" (சிந்தி குயில்) என்று பிரபலமாக அறியப்பட்டார். "லாடா" என்று அழைக்கப்படும் இவரது திருமணப் பாடல்கள் இந்தியாவிலும் பாக்கித்தானிலும் பிரபலமாக உள்ளன. சிந்துவா ஜே கினாரே படத்தில் கதாநாயகியாக நடித்த இவர், எட்டு திரைப்படங்களில் பின்னணிப் பாடகராக நடித்தார்.
பகவந்தி நவானி | |
---|---|
பிறப்பு | நசேர்பூர், சிந்து மாகாணம், பிரித்தானிய இந்தியாவின் மாகாணங்களும், ஆட்சிப் பகுதிகளும் | 1 பெப்ரவரி 1940
இறப்பு | 22 அக்டோபர் 1986 இந்தியா | (அகவை 46)
தேசியம் | இந்தியர் |
மற்ற பெயர்கள் | சிந்தி கோயல் (சிந்தி குக்கூ) |
பணி | பின்னணிப் பாடகர், கிராமிய இசை, நடிகர் |
செயற்பாட்டுக் காலம் | 1960–1980 |
வாழ்க்கை வரலாறு
தொகுபகவந்தி 1 பிப்ரவரி 1940 அன்று பிரித்தானிய இந்தியாவின் சிந்து மாகாணத்தின் கராச்சியில் (இப்போது பாக்கித்தானில் உள்ளது) பிறந்தார். [1] பெற்றோர் சிந்துவின் வரலாற்று சிறப்புமிக்க நகரமான நாசர்பூரைச் சேர்ந்தவர்கள். [2] இவரது தந்தையின் பெயர் ஜசு மால் நவானி, தாயின் பெயர் விஷ்னி பாய் ஆகும். இவருக்கு மூன்று சகோதரர்களும் இரண்டு சகோதரிகளும் இருந்தனர். பாக்கித்தான் உருவாக்கப்பட்டபோது இவருக்கு ஏழு வயது மட்டுமே ஆகியிருந்ததால், இவர் தனது பெற்றோருடன் இந்தியாவின் பம்பாய்க்கு (இப்போதைய மும்பை) குடிபெயர வேண்டியிருந்தது.[3] இடம்பெயர்ந்த நேரத்தில், இவர் கராச்சியில் உள்ள இந்திய பெண்கள் தொடக்கப்பள்ளியில் படித்து வந்தார். மும்பையில், கமலா பெண்கள் உயர்நிலைப் பள்ளியிலும், பின்னர் சிந்திகளுக்கான உயர்நிலைப் பள்ளியிலும் படித்தார். 1957 ஆம் ஆண்டில் பத்தாம் வகுப்புத் தேர்வில் தேர்ச்சி பெற்றார்.
அருண் சங்கீத் வித்யாலாவின் தேவ்கர் இசைப் பள்ளியில் முறையான இசைக் கல்வியைப் பெற்றார். இவர் பீப்பிள் தியேட்டர் அசோசியேஷனில் சேர்ந்த பிறகு, அங்கு கனு கோஷ் மற்றும் கனு ரே ஆகியோரின் வழிகாட்டுதலின் கீழ் இவரது இசைத் திறமை செழித்தது. பஜனை, கலாம், தோஹிராக்கள், ஓரான்ஸ், லாரிஸ், லாடாஸ், சாகியூன் மற்றும் சஹ்ராஸ் போன்ற சிந்தி நாட்டுப்புற இசையின் வல்லுநராக இவர் அங்கீகரிக்கப்பட்டார். மகேந்திர கபூர், சி. எச். ஆத்மா மற்றும் இவரது காலத்தின் பிற பெரும் பின்னணிப் பாடகர்களுடன் இணைந்து இருகுரலிசைப் பாடல்களைப் பாடினார்.
1960கள் மற்றும் 1970களில் சிந்தி திரைப்படங்களில் மிகவும் பிரபலமான பின்னணிப் பாடகர்களில் ஒருவராக இருந்தார். இவரது புகழ்பெற்ற திரைப்படங்களில் ஜுலேலால், லாட்லி, சிந்துவா ஜே கினாரே, [4] ஷால் தியார் நா ஜமான், ஹோஜாமலோ, கன்வார் ராம், ஹாலு தா பாஜி ஹலூன் மற்றும் பர்தேசி ப்ரீத்தம் ஆகியவை அடங்கும்.
பகவந்தி ஒரு பல்துறை நடிகையும் ஆவார். இவர் சிந்தி மொழி எழுத்தாளர் கோபிந்த் மல்ஹி நிறுவிய கலாகர் மண்டலின் ஒரு பகுதியாக இருந்தார். இந்தியாவிலும் வெளிநாட்டிலும் 3,000 க்கும் மேற்பட்ட மேடை நிகழ்ச்சிகளை வழங்கினார். இவரது மிகவும் பிரபலமான நாடகங்கள் மெஹ்மான், குஸ்தாகி மாஃப், துஹிஞ்சோ சோ முஹிஞ்சோ மற்றும் தேஷ் ஜி லால்கர் ஆகும். 1968-ஆம் ஆண்டு வெளியான சிந்து திரைப்படமான சிந்துவா ஜே கினாரே (சிந்து நதியின் கரையில்) என்ற படத்தில் கதாநாயகியாக நடித்தார்.
இறப்பு
தொகுஇவர் 1986 அக்டோபர் 22 அன்று இறந்தார். [5] இவரின் நினைவாக, "பகவந்தி நவானி அறக்கட்டளை" அக்டோபர் 3,1987 அன்று உருவாக்கப்பட்டது.
மேற்கோள்கள்
தொகு- ↑ "Bhagwanti Navani". Sindhyat (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-05-25.
- ↑ Dr Asha, Dayal (2021-01-31). "سنڌين جي ڪوئل ڀڳونتي نواڻي". Hindvasi: 2. http://epaper.hindvasi.com/31-01-2021/2.
- ↑ "سنڌوءَ جي ڪناري". Encyclopedia Sindhiana (in சிந்தி). பார்க்கப்பட்ட நாள் 2020-05-25.
- ↑ "Sindhu-a Je Kinare". sindhiwiki.org. Encyclopedia of Sindhi.
- ↑ "Bhagwanti Navani Trust". gobindmalhi.com. பார்க்கப்பட்ட நாள் 2020-05-25.