பசைக் காகிதம் (தாவரம்)

பசைக் காகிதம்
பிங்குய்குலா மொரானென்சிஸ்
உயிரியல் வகைப்பாடு
திணை:
தரப்படுத்தப்படாத:
தரப்படுத்தப்படாத:
இருவித்திலை
தரப்படுத்தப்படாத:
Asterids
வரிசை:
Lamiales
குடும்பம்:
லண்டிபுளோரேசியீ
பேரினம்:
பிங்குய்குலா

இனம்

ஏறத்தாழ 80.

பசைக்காகிதச்செடி (Pinguicula, பிங்குய்குலா அல்லது butterwort) என்பது ஊனுண்ணித் தாவரம் ஆகும். லண்டிபுளோரேசியீ என்னும் குடும்பத்தைச் சார்ந்தது. இவை ஈரம் நிறைந்த சதுப்பு நிலப் பகுதிகளில் நன்கு வளர்கின்றன. இச்செடிகள் தரையை ஒட்டி வளருபவை. அடுக்கிய இதழ்கள் போன்ற இலைகள் அமைந்துள்ளன. இச்செடியில் சல்லி வேர்கள் மட்டுமே இருக்கின்றன. இத்தாவரங்கள் பூச்சியைப் பிடிக்க பசைக்காகிதம் போன்ற (fly paper) இலைகளைப் பெற்றுள்ளன.

இலை அமைப்பு தொகு

 
இலை அமைப்பினைக் காட்டும் படம்

பசைக் காகிதம் தாவரத்தின் இலைகள் கொத்து கொத்தாக இருக்கும். இத்தாவரத்தின் இலையின் மேற்பரப்பில் இரண்டு வகையான சுரப்பி முடிகள் உள்ளன. ஒன்று சீரண சுரப்பி. மற்றொன்று பசைப்பொருளைச் சுரக்கும் சுரப்பி. சீரண சுரப்பி இரண்டு செல்கள் கொண்ட காம்பும் 8 செல்கள் கொண்ட தலைப்பகுதியும் உடையது. பசை சுரக்கும் முடிகள் நீண்ட காம்பும், குடை போன்ற தலையும் கொண்டது.

பூச்சிகளைப் பிடிக்கும் முறை தொகு

 
பூச்சி பசைகளில் ஒட்டியுள்ளது

இலைப்பரப்பு முழுவது பசைப்பொருளைச் சுரக்கும் காம்புள்ள சுரப்பி முடிகள் உள்ளன . இப்பசையால் பூச்சிகள் கவரப்படுகின்றன. கவரப்பட்ட பூச்சிகள் இலைப் பரப்பில் வந்து அமரும்போது பசையில் பூச்சி ஒட்டிக் கொள்கிறது. மீண்டும் பூச்சியால் பறக்க முடிவதில்லை. இலையின் விளிம்புகள் உள்நோக்கி சுருண்டு பூச்சியை சிறைப்படுத்துகின்றன. பிறகு செரிமானச் சுரப்பிகள் செரிமான நீரைச் சுரந்து பூச்சிகள் செரிக்கப்படுகிறன்றன. பூச்சிகள் செரிக்கப்பட்ட பிறகு இலை மீண்டும் மெல்லத் திறந்துகொள்கிறது

காணப்படும் இடங்கள் தொகு

பசைக் காகிதம் செடிகள் மெக்சிகோ, தென் அமெரிக்கா, ஜப்பான் மற்றும் ஐரோப்பாவில் வளர்கின்றன. பொதுவாக இச்செடிகளை வீடுகளில் வளர்ப்பதில்லை. பூங்காக்களில் மட்டுமே வளர்க்கப்படுகின்றன.

வகைகள் தொகு

இந்த இனத்தில் 30 முதல் 40 வகைத் தாவரங்கள் உள்ளன.

பிங்குய்குலா அல்பினா( p. alpina) தொகு

இது இமய மலையில் காணப்படுகிறது. இதன் இலைகள் ரோஜா இதழடுக்கு போல் அமைந்துள்ளது. இந்தச் செடியின் இலைகள் நீண்ட தொட்டி போன்ற அமைப்பு கொண்டது. இவ்விலைகள் மஞ்சள் நிறத்தில் இருக்கும். சதைப் பற்றுடன் எண்ணெய் பசை நிறைந்ததாக இருக்கும். இதனால் பூச்சிகள் கவரப்பட்டு, பிடிக்கபடுகின்றன.

பிங்குய்குலா காடேட்டா(p.caudata) தொகு

இதை வால் கொண்ட பசைச் செடி (Tailed butter wort) என்று அழைப்பார்கள். இச்செடியில் உள்ள பூக்களில் வால் போன்ற பகுதி தொங்கிக் கொண்டிருக்கும். இதனால் இதற்கு இப்பெயர் வந்தது. மேலும் இதனை " மெக்சிகன் பசைச் செடி” என்றும் அழைப்பர். இந்த இனத்தில் இச்செடி மிகவும் அறியப்படும் ஒன்றாகும்.

இது மிகவும் ஈரமான சேறு நிறைந்த பகுதியில் நன்கு வளர்கிறது. தரையை ஒட்டி இதன் அடுக்கடுக்கான இலைகள் அமைந்திருக்கும். இவை பார்ப்பதற்கு தலைகீழ் முட்டை வடிவத்திலும், வெளிர் பச்சை நிறத்திலும் இருக்கும். இலையில் சிக்கிய பூச்சிகளைக் கொஞ்சம் கொஞ்சமாக செரிக்கும்.

இச்செடியின் வளர்ச்சி இரண்டு விதமாக இருக்கும். இதில் உள்ள மிகச்சிறிய செடி, ஓய்வு பெறும் செடியாகும். இது 2 செ. மீ அளவே உடையது. இதன் இலைகள் தடித்து சதைப்பற்று உடையதாக இருக்கும். இலைகள் மிகச் சிறிய ரோஜாப்பூப் போல இருக்கும். இதன் இலைகள் முழு வளர்ச்சி பெறாமல் இருக்கும். மற்றொரு செடி வளர்ச்சி பெற்ற செடியாகும். இது 6 முதல் 8 செ. மீ. நீளமும், 4 முதல் 6 செ. மீ. அகலமும் கொண்ட இலைகளை உடையது.

ஓய்வும் வளர்ச்சியும். தொகு

இந்தச் சிறிய ஓய்வு பெறும் செடியை பிப்ரவரி மாதத்தில் தொட்டிகளில் நடலாம். 4 முதல் 6 வாரங்களில் புதிய இளம் நாற்று உருவாகிறது. செடி நன்கு வளர்ந்த பிறகே இலை முழுவதும் பசை சுரக்கிறது. அக்டோபர் மாதத்தில் இச்செடிகளில் வளர்ச்சி குறைந்து விடுகிறது. இதன்பிறகு சிறிய செடியாக 5 மாத காலம் ஓய்வு எடுக்கிறது.

பயிரிடும் முறை தொகு

இச்செடியில் உள்ள மிகச்சிறிய , விறைப்பான இலையை மையத்தண்டிலிருந்து கவனமாகப் பிரித்து எடுக்க வேண்டும். எடுக்கும் போது அடிபடாமல் நல்ல நிலையில் எடுத்த இலைகளே புதிய செடிகளை உருவாக்கும். இந்த இலையை மணல் தட்டில் வைத்து, இலை முழுவதும் மூடும்படி மணல் பரப்ப வேண்டும். இதைக் கண்ணாடித் தட்டால் காற்று புகாமல் மூடிவைக்க வேண்டும். இதனால் ஈரப்பசை உள்ளே பாதுகாத்து வைக்கப்படுகிறது. செடிக்குத் தண்ணீர் விடும்போது இலையின் மீது படாமல் பார்த்து விட வேண்டும். தண்ணீர் இலையின் மீது பட்டால் ஒட்டகூடிய பசை அழிந்து விடும்.

பயன்கள் தொகு

இச்செடிகளை "ஆர்க்கிட்"தாவரங்கள் வளர்க்கும் சிறப்பு வீடுகளில் வளர்க்கிறார்கள். "ஆர்க்கிட்" செடிகளில் முட்டையிட்டு இனப்பெருக்கம் செய்யும் ஈக்களை ஒழிப்பதற்கு இச்செடிகள் பயன்படுகின்றான. ஆர்கிட்டுகளைத் தாக்கும் பூச்சிகள் இதன் இலைகளில் ஒட்டிக்கொண்டு மடிகின்றன. இதனால் ஆர்க்கிட் தாவரங்கள் அழியாமல் பாதுகாக்கப்படுகின்றன.

பிங்குய்குலா லூட்டி(p. Lutea) தொகு

இது தெற்கத்திய பசைச் செடி என அழைக்கப்படுகிறது.இது கரோலினா முதல் தெற்கு புளோரிடா வரை வளர்கிறது. இதன் இலைகள் முட்டை வடிவத்திலும் மஞ்சள் கலந்த பச்சை நிறத்திலும் இருப்பதால் இதனை மஞ்சள் பசைச் செடி என அழைக்கிறார்கள். இதன் இலைகள் 6 முதல் 8 செ. மீ நீளம் வரை வளரும். இதில் மஞ்சள் நிறப் பூக்கள் பூக்கும்.

பிங்குய்குலா வல்காரிஸ் (p. valgaris) தொகு

இது வட அமெரிக்கா, ஐரொப்பா, ஆசியா ஆகிய நாடுகளில் வளர்கிறது. இதன் பூக்கள் பல நிறங்கள் கொண்டதாக இருக்கும். வெள்ளை மற்றும் இளஞ்சிவப்பிலிருந்து ஊதா சிவப்பாகவும், பின்னர் ஊதா நிறமாகவும் மாறும் .

பிங்குய்குலா கைப்சிகோலா (pi. gypsicola) தொகு

இதனை ஈக்கள் பிடிக்கும் செடி என்பர். இது மெக்சிகோ நாட்டில் வளர்கிறது. இதன் இலைகள் நீண்டு, மேல் நோக்கி நீட்டிக் கொண்டு இருக்கும். இதன் பூக்கள் ஊதா சிவப்பு நிறத்தில் இருக்கும்.

ஊனுண்ணித் தாவரங்களின் பகுப்பு அட்டவணை தொகு

வரிசைஎண் குடும்பம் பேரினம் வகைகள்
1 பிப்ளிடேசியீ பிப்ளிஸ் 2
ரோரிடுலா 1
2 செப்பலோடேசியீ செபலோட்டசு 1
3 திரோசிரேசியீ ஆல்ட்ரோவாண்டா 1
டயோனியா 1+1
திரோசிரா 90
திரொசோபில்லம் 2
4 லண்டிபுளோரேசியீ பிங்குவிக்குலா 40
ஜென்லிசியா 1
பயோவுலேரியா 1
யூட்ரிக்குளோரியா 275
பாலிபாம்போலிக்ஸ் 2
5 நெப்பந்தேசியீ நெப்பந்திசு 70
6 சாரசீனியேசியீ டார்லிங்டோனியா 1+1
ஹிலியாம்போரா 3
சாரசீனியா 6

உசாத்துணை தொகு

  • ஏற்காடு இளங்கோ. 'அதிசயத் தாவரங்கள் ', அறிவியல் வெளியீடு. 2002.

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=பசைக்_காகிதம்_(தாவரம்)&oldid=3219306" இலிருந்து மீள்விக்கப்பட்டது