பண்டாரக்குளம்

பண்டாரக்குளம் (Pandarakulam), இந்தியாவின் தமிழ்நாட்டில் அமைந்துள்ள திருநெல்வேலி மாவட்டத்தில் இருக்கும் ஒரு சிறிய கிராமம் ஆகும். இராதாபுரம் வட்டத்தைச் சார்ந்த இவ்வூர், வள்ளியூரில் இருந்து மூன்று கிலோமீட்டர் தொலைவில் திருச்செந்தூர் செல்லும் வழியில் அமைந்துள்ளது. இங்குள்ள புனித தோமையார் ஆலயம் சுற்றுப்பகுதி மக்களிடையே புகழ்பெற்றது.

பண்டாரக்குளம்
—  கிராமம்  —
பண்டாரக்குளம்
இருப்பிடம்: பண்டாரக்குளம்

, தமிழ்நாடு , இந்தியா

அமைவிடம் 8°23′14″N 77°38′00″E / 8.3872806°N 77.6332251°E / 8.3872806; 77.6332251
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் திருநெல்வேலி
ஆளுநர் ஆர். என். ரவி[1]
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்[2]
மாவட்ட ஆட்சியர்
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
குறியீடுகள்

ஊரின் வரலாறு தொகு

இயேசு கிறிஸ்துவின் பன்னிரு திருத்தூதர்களில் ஒருவரான புனித தோமா, கேரளாவில் இருந்து இலங்கைக்கு செல்லும் வழியில் இவ்வூர் அமைந்துள்ள இடத்துக்கு வந்ததாக இங்குள்ள மக்கள் நம்புகின்றனர்.[3] வடமலையான் கால்வாயை ஒட்டி அமைந்துள்ள இவ்வூரில் சில நாட்கள் தங்கியிருந்த திருத்தூதர் தோமா, அக்காலத்தில் இங்கு வாழ்ந்த மக்களுக்கு நற்செய்தி அறிவித்து திருமுழுக்கு கொடுத்தார்.[4] பின்னர் இங்கிருந்து புறப்பட்டு, கணக்கன் குடியிருப்பு, திருச்செந்தூர், மணப்பாடு உள்ளிட்ட இடங்களுக்கு அவர் சென்றார். தோமாவிடம் திருமுழுக்கு பெற்ற மக்கள் தங்கள் வழிபாட்டுக்காக பயன்படுத்திய கற்சிலுவையைப் பாதுகாக்க உறுதியேற்று, தங்களை 'சிலுவை பண்டாரங்கள்' என்று அழைத்துக் கொண்டனர். 'தோமையார் குருசு' என்று அழைக்கப்படும் இந்த சிலுவை, திருத்தூதர் தோமாவால் செதுக்கப்பட்டது என்று நம்பப்படுகிறது.[4]

இங்கு வாழ்ந்த பண்டார மக்கள், வடமலையான் கால்வாயில் நீரோட்டம் குறைந்த காலத்தில் தண்ணீர் தேவையை சமாளிக்க குளம் ஒன்றை வெட்டினர். பண்டார மக்கள் வெட்டிய குளம் என்பதால், அது பண்டாரக்குளம் என்றப் பெயர் பெற்றது. 18ஆம் நூற்றாண்டில் ஏற்பட்ட வறட்சி காரணமாக, இப்பகுதியில் வாழ்ந்த பண்டார மக்கள் வேறு இடத்திற்கு சிறிது சிறிதாக இடம் பெயர்ந்தனர். ஆனால், தோமையார் சிலுவையைத் தாங்கிய குருசடி மட்டும் அதே இடத்திலேயே இருந்தது. வெளியிடங்களில் சென்று குடியேறிய பண்டார மக்கள், ஆண்டுக்கொரு முறை செப்டம்பர் மாதத்தில் இந்த குருசடிக்கு வந்து வழிபாடு நடத்திவிட்டு சென்றனர்.[5]

 

1850ஆம் ஆண்டளவில், திருவிதாங்கோட்டில் இருந்து வந்த நாடார் இனத்தைச் சேர்ந்த வைத்தியமுத்து - மலையாயி என்ற கிறிஸ்தவ தம்பதியர் பண்டாரக்குளத்தில் குடியேறினர். அப்போது வழிபாடு நடத்த வந்த பண்டார மக்களின் கடைசி வாரிசு, தோமையார் சிலுவையைத் தொடர்ந்து பாதுகாக்குமாறு இந்த தம்பதியரிடம் உறுதி பெற்றுச் சென்றார்.[5] இதையடுத்து, அவர்கள் குடும்பத்தினரின் வழிபாட்டு இடமாக தோமையார் சிலுவை இருந்த குருசடி மாறியது. அவர்களது உறவினர்கள் சிலரும், பண்டாரக்குளத்தில் குடியேறியதால் இவ்வூர் ஒரு சிறிய கிராமமாக உருவெடுத்தது.[3] பின்னர் சில இந்து குடும்பங்களும் வடமலையான் கால்வாயின் மேற்கு பகுதியில் குடியேறின. அது மேலூர் என்றும், கிறிஸ்தவர்கள் வாழும் பகுதி கீழூர் என்றும் அழைக்கப்படுகின்றன.

ஆலய வரலாறு தொகு

திருத்தூதர் தோமா தமது கரங்களால் செதுக்கியதாக நம்பப்படும் 'தோமையார் குருசு' பழங்காலத்தில் இருந்தே, பண்டாரக்குளத்தின் மையமாக இருந்து வருகிறது. முதலில் வாழ்ந்த பண்டார மக்களும், பின்னர் குடியேறிய நாடார் கிறிஸ்தவர்களும் தோமையார் சிலுவை இருந்த குருசடியிலேயே வழிபாடு நடத்தி வந்தனர். 1543ல் புனித பிரான்சிஸ் சேவியர், 1685ல் புனித ஜான் தெ பிரிட்டோ ஆகியோர் பண்டாரக்குளம் வந்து இந்த சிலுவையை வணங்கியதாக பாரம்பரியமாக கூறப்படுகிறது.[6] 1920களில் ஊர் தலைவராக இருந்த தொம்மை நாடாரின் முயற்சியால், ஊர் மக்கள் அனைவரின் ஒத்துழைப்புடன் தற்போதுள்ள புனித தோமையார் ஆலயம் 1927ஆம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்டது. அப்போது, 'தோமையார் குருசு' ஓரமாக ஒதுக்கி வைக்கப்பட்டது. அப்போது பக்தியுள்ள ஒருவரின் கனவில் தோன்றிய புனித தோமா, அந்த சிலுவைக்கு உரிய மரியாதை அளிக்கப்பட வேண்டும் என்று கூறினார்.[3]

இதையடுத்து, ஆலயத்தின் வடக்கு திசையில் பிரதான தெருவை நோக்கிய வண்ணம் சிறிய பீடம் எழுப்பி 'தோமையார் குருசு' நிறுவப்பட்டது. பின்னர், கிழவநேரி பங்கின் கிளை ஆலயமாக இது இணைக்கப்பட்டது. இவ்வூரில் செப்டம்பர் மாதத்தில் கொண்டாடப்பட்டு வந்த புனித தோமையார் திருவிழா ஜூலை 3ந்தேதிக்கு மாற்றப்பட்டதை அடுத்து, செப்டம்பர் 14ந்தேதி திருச்சிலுவை விழாவை சிறப்பாகக் கொண்டாடும் வழக்கம் உருவானது.[3] 1978ல் புனித தோமையார் ஆலயத்தின் பொன்விழாவும், 2002ல் பவள விழாவும் சிறப்பாக கொண்டாடப்பட்டன. இதையொட்டி, ஆலயத்தின் வடக்கில் புதிதாக கட்டப்பட்ட கூடத்தில் 'தோமையார் குருசு' நிறுவப்பட்டது. தற்போது பண்டாரக்குளம் புனித தோமையார் ஆலயம், ஆனைகுளம் பங்கின் கிளைப்பங்காக உள்ளது.[6]

மக்கள் நிலை தொகு

இருபது ஆண்டுகளுக்கு முன்பு வரை, விவசாயமே பண்டாரக்குளத்தின் முக்கியத் தொழிலாக இருந்தது. வறட்சி உள்ளிட்ட சில காரணங்களால், தற்போது விவசாயத் தொழிலில் பல பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. இங்கு வாழும் மக்களில் 99% மக்கள் கல்வியறிவு பெற்றவர்கள். ஒரு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியும், நியாயவிலைக் கடையும், கூட்டுறவு வங்கியும் இங்கு செயல்படுகின்றன. வேலை, தொழில் போன்ற காரணங்களுக்காக பலர் வெளியூர் மற்றும் வெளிநாடுகளுக்கு சென்றாலும், தற்போதும் இங்கு நூறு குடும்பங்கள் வசித்து வருகின்றன. சிறிய கடைகள் இருந்தாலும், சந்தை, மருத்துவம் போன்றவற்றிற்கு இவ்வூர் மக்கள் வள்ளியூர், திருநெல்வேலி, நாகர்கோவில் போன்ற இடங்களுக்கு செல்கின்றனர். இந்த ஊரில் தயாராகும் 'கைச்சுற்று அரிசி முறுக்கு' சுற்றுப்பகுதிகளில் மிகவும் புகழ் பெற்றது. வள்ளியூர் மற்றும் மடப்புரம் வழியாக இவ்வூருக்கு செல்ல பேருந்து வசதி உள்ளது.

ஆதாரங்கள் தொகு

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  3. 3.0 3.1 3.2 3.3 பண்டாரக்குளம் புனித தோமையார் ஆலய பொன் விழா மலர் நூல், 1978.
  4. 4.0 4.1 பண்டாரக்குளம் புனித தோமையார் அற்புத சிலுவை பக்தி மலர் நூல், 2005.
  5. 5.0 5.1 தொம்மையார் பரம்பரை நூல், ம. செல்வராயர் & சி. பெல்சியான், 2019.
  6. 6.0 6.1 புனித தோமையார் ஆலய வலைப்பதிவு
"https://ta.wikipedia.org/w/index.php?title=பண்டாரக்குளம்&oldid=3675728" இலிருந்து மீள்விக்கப்பட்டது