பண்டாரு அச்சமாம்பா
பண்டாரு அச்சமாம்பா (Bandaru Acchamamba 1874– 1905) பெண்கள் இயக்கத்தின் ஆரம்பகால முன்னோடிகளில் ஒருவராவார். இவர் இந்தியாவின் ஆரம்பகால பெண்ணிய வரலாற்றாசிரியர்களில் ஒருவராகக் கருதப்படுகிறார். [1] அச்சமாம்பா தனது சகோதரரின் வழிகாட்டுதலின் கீழ் தெலுங்கு, ஆங்கிலம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் உள்ள பழங்கால நூல்களைப் படித்தார், மேலும் இலக்கியம் மற்றும் பெண்கள் பிரச்சினைகளைப் பற்றி புரிந்துகொண்டார். தெலுங்கு மற்றும் ஐக்கிய இராச்சியப் பெண்களின் பல சுயசரிதைகளை எழுதினார், இது எதிர்கால வரலாற்றாசிரியர்களுக்கு இலக்கியப் பாதையை அமைத்தது. இவரது கதைகள் அந்த காலத்தின் சமூக நிலைமைகளையும் பெண்களின் பிரச்சினைகளையும் பிரதிபலிக்கின்றன.
ஆரம்ப வாழ்க்கை மற்றும் பின்னணி
தொகுபண்டாரு அச்சமாம்பா 1874 ஆம் ஆண்டு ஆந்திராவின் கிருஷ்ணா மாவட்டத்தில் உள்ள பெனுகஞ்சிப்ரோலு என்ற சிறிய கிராமத்தில் பிறந்தார். திவானாக (மாநில அரசாங்கத்தில் அமைச்சர்) இருந்த இவரது தந்தை இவருக்கு ஆறு வயதாக இருந்தபோது காலமானார். தனது தாய்வழி மாமா பண்டாரு மாதவ ராவினை தனது பத்தாம் வயதில் திருமணம் செய்து கொண்டார், மேலும் பதினேழாவது வயதில் அவருடன் குடும்ப வாழ்க்கையைத் தொடங்கினார். இவரது சகோதரர் நாக்பூருக்குப் படிப்பைத் தொடரச் சென்ற பிறகு, அச்சமாம்பா வங்காளம் மற்றும் குசராத்தி மற்றும் சிறிது சமஸ்கிருதம் ஆகியவற்றைக் கற்றுக்கொண்டார்.
ஒருகண்டி சுந்தரி ரத்னமாம்பாவுடன் சேர்ந்து, அச்சமாம்பா கடலோர ஆந்திராவில் 1902 ஆம் ஆண்டு மச்சிலிப்பட்டினத்தில் பிருந்தாவன இசுதிரீலா சமாசம் (பிருந்தாவனா பெண்கள் சங்கம்) என்ற பெயரில் முதல் பெண்கள் சங்கத்தை நிறுவினார். 1903 ஆம் ஆண்டில், மாநிலம் முழுவதும் பயணம் செய்தார் மற்றும் பல பெண்கள் அமைப்புகளை நிறுவ மற்றவர்களுக்கு உதவினார்.
அச்சமாம்பா 18 சனவரி 1905 அன்று தனது 30வது வயதில் இறந்தார்.
இலக்கியப் பணி
தொகுஅச்சமாம்பா பல சிறுகதைகள், பெண்கள் பிரச்சனைகள் பற்றிய கட்டுரைகளை எழுதினார். அபாலா சச்சரித்ர ரத்னமாலா என்றழைக்கப்படும் 34 பெண்களின் வாழ்க்கை வரலாறுகளின் தொகுப்பினால் இவர் பரவலாக அறியப்படுகிறார்.
- தன திரயோதசி
- அபாலா சச்சரித்ர ரத்னமாலா
- பீடா குடும்பம் (ஏழை குடும்பம்)
- கானா
- சதகம் ( நூறு கவிதைகளின் சுழற்சி )
இந்து சுந்தரி மற்றும் சரஸ்வதி இதழ்களில் வெளியான கட்டுரைகள்,
- தம்பதுல பிரதம கலஹமு (ஒரு ஜோடியின் முதல் தகராறு)
- வித்யாவந்துலகு யுவத்துலகோக விண்ணபமு (படித்த பெண்களுக்கு ஒரு வேண்டுகோள்)
- ஸ்த்ரிவித்யா பிரபாவம் (பெண் கல்வியின் பலம்)
இவர் நீண்ட பயணம் செய்து பல அறிஞர்களுடன் உரையாடினார். [2]
சான்றுகள்
தொகு- ↑ Susie Tharu & K.Lalita (8 October 1991). Bandaru Acchamamba. தெ பெமினிஸ்டு பதிப்பகம். பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781558610279.
- ↑ Satyavati. Kondaveeti. Bhandaru Acchamamba. First Telugu Story Writer. www.thulika.net/2007January/acchamamba.htm.