பண்பாட்டுப் பொதுமை
பண்பாட்டுப் பொதுமை என்பது உலகில் உள்ள எல்லாப் பண்பாடுகளுக்கும் பொதுவாக இருக்கக்கூடிய, ஒரு கூறையோ ஒழுங்கமைப்பையோ (pattern) குணப்பாங்கையோ (trait) நிறுவனத்தையோ குறிக்கும். எடுத்துக்காட்டாக, திருமணம், மொழி, கலை முதலிய சமூக வழக்கங்கள், ஒரு குறிப்பிட்ட பண்பாட்டினரிடம் மட்டுமன்றி எல்லாப் பண்பாட்டினரிடமும் உள்ளன. இவை பண்பாட்டுப் பொதுமைகள் ஆகும். 250க்கும் மேற்பட்ட பண்பாடுகளைப் பற்றி ஆய்வு செய்த, ஜார்ஜ் பீட்டர் மர்டாக் என்பவர், ஏறத்தாழ இவ்வாறான 70 பொதுமைகளைப் பட்டியலிட்டுக் காட்டியுள்ளார். டொனால்டு பிரவுன் (Donald E Brown) என்பவர் கிட்டத்தட்ட 200 பொதுமைகளைத் தொகுத்துள்ளார்.
பண்பாட்டுப் பொதுமைகள் காணப்படுகின்றன எனினும், அவற்றைத் பாகுபடுத்திப் பார்ப்பது சிக்கலானது என்று தான் எழுதிய மனிதப் பொதுமைகள் என்னும் நூலில் பிரவுண் குறிப்பிட்டுள்ளார். இத்தகைய பொதுமைகளை விளக்குவதற்கு ஒருங்கிணைந்த ஒரே கோட்பாடு இருப்பதற்கான வாய்ப்பு இல்லை என்பது அவரது கருத்து. ஆனாலும், இப் பொதுமைகளுக்கான ஒரே மூலத்தை, மனித இயல்பில் தான் காணமுடியும் என்றும், அம் மனித இயல்பின் அடிப்படை மனித மனம் தான் என்றும் அவர் கருதுகிறார்.[1]
இவ்வாறு பொதுமைகள் காணப்படுவதற்கு, மனிதனுடைய அடிப்படைத் தேவைகள் ஒன்றாக இருப்பதே காரணம் என்று சிலர் கருதுகிறார்கள். உணவு ஈட்டுதல், உறுப்பினர்களை நெறிப்படுத்தல், உறைவிடம் மூலம் பாதுகாப்பளித்தல், இனம் தொடர்ந்து இருப்பதற்காக இனப்பெருக்கம் செய்தல், குழந்தைகளுக்குப் பண்பாடு கற்பித்தல் என்பன எல்லாப் பண்பாட்டினருக்குமே அடிப்படைத் தேவைகளாக இருப்பதால், இவற்றின் மூலம் பண்பாட்டுப் பொதுமைகள் ஏற்படுகின்றன என்பது அவர்கள் கருத்து [2]
குறிப்புகள்
தொகு- ↑ Wallace Woolfenden, Review of "Human Universals" by Donald E. Brown, http://www.ishkbooks.com/universals.pdf பரணிடப்பட்டது 2007-09-28 at the வந்தவழி இயந்திரம் 11-03-2007 இல் அணுகப்பட்டது.
- ↑ பக்தவச்சல பாரதி, ஜூலை 1999
உசாத்துணைகள்
தொகு- பக்தவச்சல பாரதி, பண்பாட்டு மானிடவியல், மெய்யப்பன் பதிப்பகம், சிதம்பரம், ஜூலை 1999.
- Wallace Woolfenden, Review of "Human Universals" by Donald E. Brown, http://www.ishkbooks.com/universals.pdf பரணிடப்பட்டது 2007-09-28 at the வந்தவழி இயந்திரம் 11-03-2007 இல் அணுகப்பட்டது.
வெளியிணைப்புகள்
தொகுபிரவுனால் தொகுக்கப்பட்ட பண்பாட்டுப் பொதுமைகள் (ஆங்கில மொழியில்)