பதாரா குரு அல்லது தேவதா பதாரா குரு, இந்தோனேசிய இந்து சமயத்தில், அவர்களது முழுமுதற்கடவுளைக் குறிப்பிடப் பயன்படும் சொல்லாடலாகும். இந்தோனேசியாவின் சில இடங்களில், இந்து மரபின் தேவகுரு பிரகஸ்பதியைக் குறிக்கப்பயன்படும் இப்பெயர், இன்னும் சில இனக்குழுக்களிடம் சிவனைக் குறிக்கப் பயன்படுகின்றது.[1]

சாவகத் தொன்மம்

தொகு
 
பதாரா குரு

சாவகத்தில் புழங்கும் தொன்மங்களின் படி, மகாதேவனின் அம்சமாக, கஹ்யாங்கனை ஆளும், முழுமுதற் பரம்பொருளே பதாரா குரு. பதாரி உமாவின் கணவரான பதாரா குரு, கோரைப்பற்களும் நீலக்கழுத்தும், நொண்டிக் கால்களும் கொண்டவர். நந்தினிப்பசுவை வாகனமாகக் கொண்ட பதார குருவுக்கு, சங்யாங் மாணிக்கமயன், சங்யாங் சதுர்புஜ, சங்யாங் ஓதிபதி, சங்யாங் ஜகத்நாத, நீலகண்ட, திரிநேத்ர, கிரிநாத போன்ற பல பெயர்கள் உண்டு.

துங்காலுக்கும், தேவி ரேகதாவதிக்கும் மகனாகப் பிறந்த பதாரா குருவுக்கு, சங்யாங் புங்குங், சங்க்யாங் இஸ்மயன் என்று இரு சகோதரர்கள். ரேகதாவதி இட்ட முட்டையிலிருந்து பிறந்த புங்குங், இஸ்மயன், குரு ஆகிய மூவரையும், முறையே அசுரர், மனிதர், தேவர் ஆகியோரை ஆள்வதற்காக துங்கால் படைத்ததாக சாவகக் கதைகள் விவரிக்கின்றன.[2]

பதாரா சம்பு, பதாரா பிரஹ்மா, பதாரா இந்த்ர, பதாரா பாயு, பதாரா விஷ்ணு, பதாரா கால, ஹனோமான் ஆகியோர் பதாரா குருவின் மைந்தர்கள் என்று, சாவக நிழலாட்டக்கலை மரபுரைகள் பாடுகின்றன.[3][4]

பதக் தொன்மம்

தொகு

தென் சுமாத்திராவின் பதக் இனக்குழுமங்களில் காணப்படும் தொன்மங்களின் படி, பரம்பொருள் தேவதா அசிஅசி (சிவன்) , மனுக்பதிய ராஜா எனும் கோழியாகத் தோன்றி இட்ட மூன்று முட்டைகளில் இருந்து, பதாரா குருவும், அவரது இரு சகோதரர்களான தேவதா சூரிபாதனும், தேவதா மங்கலபூலனும் தோன்றினார்கள். சிவோரி போர்த்தி பூலன் எனும் தேவியை மணந்த அவருக்கு, இரு மகன்களும், இரு மகள்களும் பிறந்தனர். இவர்களே, பூவுலகில் தோன்றிய மனித இனத்தின் மூதாதையர் ஆனார்கள். மூலஜாதி நாபோலன், ஞானம், நீதி, அரசநீதி, அறிவு, தலைவிதி முதலியவற்றை ஆளும் வரத்தை பதாரா குருவுக்கு அளித்தார். ஹரி அரா மரம் வளர்கின்ற ஏழடுக்கு மாளிகையில் வதியும் பதாரா குரு, கப்பல் வடிவிலான மூவண்ணத் தலைப்பாகையும், கறுப்புச் சால்வையும் அணிந்து, கையில் தராசு ஒன்றுடன், கருநிறக் குதிரையில் வீற்றிருப்பார்.[5]

பூகித் தொன்மம்

தொகு

சுலாவெசியில் வாழும் பூகிக்களின் மரபுரைகளின் படி, சங் பதோலோக்கிற்கும் தது பலிங்கெக்கிற்கும் பிறந்த பதாரா குரு, பூவுலகு முழுவதும் மனிதர் நிரம்பவேண்டும் என்பதற்காக தோற்றுவிக்கப்பட்டவர். அவரது தேவியான வே நைலிகிக் திமோக்கிற்கு ஒரு பிறந்த ஒரு மகனும், அவரது ஐந்து ஆசை நாயகியருக்குப் பிறந்த பத்திற்கும் மேற்பட்ட பிள்ளைகள் மூலமும் உலகில் உயிர்கள் தளைத்தன.[6]

மேலும் காண

தொகு


உசாத்துணைகள்

தொகு
  1. Sunarto H., Viviane Sukanda-Tessier, eds. (1983). Cariosan Prabu Silihwangi. Naskah dan dokumen Nusantara (in Indonesian and French). 4. Lembaga Penelitian Perancis untuk Timur Jauh. p. 383. Statuette tricéphale assise, cuivre rouge moulé d'une beauté rarement égalée. C'est Batara Guru, un super dieu équivalent au Jupiter des Romains et au Brahma des Hindous.
  2. Weiss, Jerome (1977). Folk psychology of the Javanese of Ponorogo. 2. Yale University. p. 522.
  3. Sunardi,(1982),Arjuna Sasrabahu,பக்கம்.7
  4. Fisher, Martini (2014). The Three Realms (Wayang: Stories of the Shadow Puppets). CreateSpace Independent Publishing. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1505734118.
  5. Wendy Doniger, Yves Bonnefoy, eds. (1993). "Divine Totality and Its Components: The Supreme Deity, the Divine Couple, and the Trinity in Indonesian Religions". Asian Mythologies (2d ed.). University of Chicago Press. pp. 161–170, 179. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0226064565.
  6. Claire Holt, (1939), Dance Quest in Celebes, பக்கம் 27.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பதாரா_குரு&oldid=2924612" இலிருந்து மீள்விக்கப்பட்டது