பத்த குண்டலகேசா
பத்த குண்டலகேசா (Bhadda Kundalakesa) முன்னாள் சமணத் துறவியும் சாரிபுத்திரரால் புத்த மதத்திற்கு மாற்றப்பட்டவரும் ஆவார். இவர் கௌதம புத்தரின் இரண்டு முக்கிய பெண் சீடர்களில் ஒருவர். வேறு எந்த பிக்குணியையும் விட வேகமாக அரஹந்த் தன்மையைப் (ஆன்ம விடுதலையை நோக்கிய பயணத்தில் நான்காம் படிநிலை) பெற்ற இவர், கிமு 6 ஆம் நூற்றாண்டில் தற்போதைய இந்தியாவின் பீகார் மற்றும் உத்தரப் பிரதேசத்தில் வாழ்ந்தார்.
பத்த குண்டலகேசா | |
---|---|
சுய தரவுகள் | |
பிறப்பு | கி.பி 6 ஆம் நூற்றாண்டு |
சமயம் | பௌத்தம் |
Occupation | பிக்குணி |
பதவிகள் | |
Teacher | கௌதம புத்தர், சாரிபுத்திரர் |
தொடக்க ஆண்டுகள்
தொகுகுண்டலகேசி மன்னர் பிம்பிசாரனின் மகத நாட்டின் தலைநகரான ராஜகிரகம் என்ற இடத்தில் "பத்தா" என்ற பெயரில் பிறந்தார். நல்ல செழிப்பான குடும்பத்தில் பிறந்த பத்தா தனது பெற்றோரின் பாதுகாப்பில் நன்கு வளர்ந்தார். பத்தா ஒரு உணர்ச்சிபூர்வமான இயல்பைக் கொண்டிருந்தார் மேலும் ஆண்கள் மீதான இவருடைய வலுவான ஈர்ப்பு காரணமாக இவர் காதல் வயப்படுவார் என்று அவர்கள் பயந்தனர். ஒரு நாள், திருடன் ஒருவனை தூக்கிலிடப்படும் இடத்திற்கு அழைத்துச் செல்லப்படுவதை தனது வீட்டின் ஜன்னல் வழியாக இவர் கண்டார். ஒரு பிராமணரின் மகனான அவன் நீண்டகாலமாகவே திருட்டுத் தொழிலைக் கொண்டிருந்தான். பத்தா முதல் பார்வையிலேயே அவனைக் கண்டதும் காதலித்தார். அவன் இல்லாமல் வாழ முடியாது என்று தனது தந்தையிடம் கூறினாள். எனவே சிறைக் காவலர்களுக்கு இலஞ்சம் கொடுத்து அவனை தப்பிக்க வைத்தார்.
திருமணம்
தொகுபின்னர் இருவருக்கும் திருமணம் நடந்தது. மரண தண்டனையிலிருந்து தனனைக் காப்பாற்ரினால் மலை தெய்வத்திற்கு காணிக்கைகளை வழங்குவதாக வேண்டிக் கொண்டதாக அவன் பத்தாவிடம் கூறி தனது மனைவியின் நகைகளைப் பெறுவதில் தீவிரமாக இருந்தான். தனது வேண்டுகோளை நிறைவேற்றுவதற்காக அவன் பத்தாவை வீட்டிலிருந்து வெளியேற்றி ஒரு மலை மீது அழைத்துச் சென்றான். இவரது மதிப்புமிக்க ஆபரணங்களைத் திருடுவதற்காக அவன் ஒரு உயரமான குன்றிலிருந்து தள்ளிவிட முயன்றான். அவர்கள் மலை உச்சிக்கு வந்தபோது, அவன் தனது நோக்கத்தைப் பற்றி அவளிடம் கூறினான். இதனால் துயரமடைந்த பத்தா தனது கணவனின் சூழ்ச்சிக்கு ஆளாகாமல் அவனை மலையிலிருந்து தள்ளிவிடுகிறாள்.
சமணத் துறவி
தொகுதனது கணவனைக் கொன்ற குற்ற உணர்ச்சியால் பத்தா தனது இயல்பு வாழ்க்கைக்குத் திரும்ப விரும்பவில்லை. புலனுணர்வு இன்பங்களும் உடைமைகளும் கவனத்தை ஈர்க்கவில்லை. எனவே, இவர் அலைந்து திரியும் துறவியாக ஆனார். துறவியாக சமணர்களின் வரிசையில் சேர்ந்தார். துறாவிக் கோலம் பூண்டபோது தனது தலைமிடியை அடியோடு மழித்துக் கொண்டார். பின்னர் முடி மீண்டும் வளர்ந்த போது மிகவும் சுருள் சுருளாக இருந்ததால் இவருக்கு குண்டலேகேசி (சுருள்-கேசம்) என்ற பெயரைக் கொடுத்தது. பத்த குண்டலேகேசி சமணக் கோட்பாட்டால் திருப்தி அடையவில்லை. எனவே அவர் தனிமையில் அலைந்து திரிந்த துறவியாக ஆனார். ஐம்பது ஆண்டுகளாக இவர் பண்டைய இந்தியா முழுவதும் பயணம் செய்து பல ஆன்மீக குருக்களைச் சந்தித்தார். இதன் மூலம் மத வேதங்கள் மற்றும் தத்துவங்களைப் பற்றிய பரந்த அறிவைப் பெற்றார். தான் பெற்ற அறிவால், தனது காலத்தின் முன்னணி விவாதக்காரர்களில் ஒருவராக ஆனார். தான் ஒரு நகரத்திற்குள் நுழையும் போதெல்லாம், ஒரு மணல் குவியலை உருவாக்கி, அதில் ஒரு ரோஜா-ஆப்பிள் கிளையை நடுவார். விவாதத்தில் ஆர்வமுள்ள எவரும் மணல் குவியலை மிதிக்க சவால் விட்டு ஈர்க்கும் விதமான ஒரு குறியீடாகப் பயன்படுத்தப்பட்டது.
சரிபுத்திரருடன் விவாதம்
தொகுஒரு நாள் அவர் சிராவஸ்தி சென்று மீண்டும் தனது மணல் குவியலை அமைத்தார். அந்த நேரத்தில், கௌதம புத்தரின் இரண்டு முக்கிய சீடர்களில் ஒருவரும், மிகப் பெரிய பகுப்பாய்வு சக்தியைக் கொண்ட சீடருமான சாரிபுத்திரர், நகரத்தில் உள்ள ஜெதவனா மடாலயத்தில் தங்கியிருந்தார். பத்தாவின் வருகையைப் பற்றி கேள்விப்பட்ட இவர், அவருடன் விவாதிக்க தயாராக இருந்ததன் அடையாளமாக, மணல் குவியலை மிதிக்க பல குழந்தைகளை அனுப்பினார். பின்னர் பத்தா அனதபிண்டிகாவின் மடாலயமான ஜெதவானாவுக்குச் சென்றார். அதைத் தொடர்ந்து ஏராளமான பார்வையாளர்கள் வந்தனர். அனைத்து விவாதங்களிலும் வெற்றி பெறுவது தனக்கு பழக்கமாகிவிட்டதால், வெற்றி பெறுவதில் மிகுந்த நம்பிக்கையுடன் இருந்தார். பத்தா சாரிபுத்திரரிடம் பல கேள்விகளை எழுப்பினார். அவர் அனைத்திற்கும் பதிலளித்தார். பின்னர் சாரிபுத்திரரின் முறை வந்தது. சாரிபுத்திரர் அவளைக் கேள்வி கேட்கும் முறை வந்தது. “ஒன்று என்பது என்ன?” என்ற அவரது முதல் கேள்வி பத்தாவை ஆழமாக பாதித்தது. பத்தா அமைதியாக இருந்தார். அவர் என்ன கேட்கிறார் என்பதை தெரிந்துகொள்வதில் ஆர்வமாக இருந்தார். தான் கடவுள் அல்லது பிரம்மம் அல்லது “எல்லையற்றவர்” என்று பதிலளித்திருக்கலாம். இது நல்ல பதிலாகவும் இருந்திருக்கும். ஆனால் பத்தா ஒரு பதிலை உருவாக்க வேண்டாம் என்று முடிவு செய்தார். இதனால் விவாதத்தில் தோற்றுப் போனார். அரை நூற்றாண்டு காலமாக இந்தியா முழுவதும் சுற்றித் திரிந்தது தான் தேடியதை அவரிடம் கண்டுகொண்டார். பின்னர் சாரிபுத்திரரை தனது ஆசிரியராகத் தேர்ந்தெடுத்தார். ஆனால், அவர் இவரை கௌதம புத்தரிடம் ஆற்றுப்படுத்தினார். அவர் கழுகுச் சிகரம் என்ற இடத்தில் தருமத்தை விளக்கி, பின்வரும் வசனங்களுடன் முடித்தார். ஆயிரம் செய்யுள்கள் பொருளற்ற வரிகளால் ஆக்கப்பட்டிருந்தாலும், அமைதியில் கேட்கப்படும் ஒரு பொருள் பதிந்த வரி மேன்மையானது
வேறு எவரையும் விட வேகமாக முக்தியை நோக்கிய பயணத்தில் அலைந்து திரிந்து நான்காம் படிநிலையான அரஹந்த்தன்மையை அடைந்த பிக்கு பாஹியா என்பவரைப் போலவே, பிக்குனிகளில் பத்தா மிக வேகமானவராக இருந்தார். இருவரும் புத்தரின் போதனையின் சாராம்சத்தை மிக விரைவாகவும் மிக ஆழமாகவும் புரிந்துகொண்டனர். தங்களின் அரஹந்த்தன்மையை அடைந்த பிறகு சங்கத்தில் இவர்கள் நியமனம் செய்யப்பட்டனர். இர்களின் மனம் மற்றும் உணர்ச்சி சுயக்கட்டுப்பாடு நீண்ட காலமாக பயிற்சியளிக்கப்பட்டு தயாராக இருந்ததால், இவர்களின் இந்நிலை மிக விரைவாக வந்தது.
மேற்கோள்கள்
தொகு- Hecker, Hellmuth (2006-09-23). "Buddhist Women at the Time of The Buddha". Buddhist Publication Society. Archived from the original on 5 April 2007. பார்க்கப்பட்ட நாள் 2007-03-30.