பயனர்:Neyakkoo/மணல்தொட்டி
வெள்ளியங்காட்டான் | |
---|---|
பிறப்பு | என். கே. இராமசாமி 1904 வெள்ளியங்காடு |
இறப்பு | 1991 கோயமுத்தூர் |
இருப்பிடம் | ஆவாரம்பாளையம் |
தேசியம் | இந்தியர் |
பணி | தையல், வேளாண்மை |
வாழ்க்கைத் துணை | குட்டியம்மாள் |
பிள்ளைகள் | (1) மனோகரன் (2) வசந்தாமணி (3) நளினி |
வெள்ளியங்காட்டான் (1904 - 1991) என்னும் தமிழ்க் கவிஞரின் இயற்பெயர் என். கே. இராமசாமி.[1] தன்னுடைய வாழ்க்கைப்பாட்டிற்காக விவசாயியாக, தையல்காரராக, ஆசிரியராக, இதழொன்றில் மெய்ப்புப் பார்ப்பவராக (Proof Reader) பணியாற்றியர். பகுத்தறிவாளராக, ஒடுக்கப்பட்டவர்களின் விடுதலைப் போராளியாக, கவிஞராக இனங்காணப்படுபவர்.[2]
பிறப்பும் கல்வியும்
தொகுஇவர், கோவை மாவட்டத்தில் காரமடையில் இருந்து குந்தாவிற்குச் செல்லும் வழியில் நீலமலை அடிவாரத்தில் உள்ள வெள்ளியங்காடு என்னும் சிற்றூரில் 1904ஆம் ஆண்டில் பிறந்தவர். தன்னுடைய ஊரை அடியாகக்கொண்டு வெள்ளியங்காட்டான் என்னும் புனைப்பெயரில் கவிதைகள் எழுதினார். திண்ணைப் பள்ளியில் மூன்றாண்டுகள் தமிழ் நெடுங்கணக்கைப் பயின்றார். பின்னர் தன் முயற்சியால் தமிழ் இலக்கண, இலக்கியங்களைக் கற்றுத் தேர்ந்தார். வயிற்றுப்பாட்டிற்காக கர்நாடகவில் சிலகாலம் வாழ்ந்தபொழுது கன்னடமொழியைக் கற்றுக் கொண்டார்.
தொழில்
தொகுவெள்ளியங்காட்டான் தன் வாழ்நாளில் பல்வேறு பணிகளைச் செய்தார். 1945- 1946 ஆம் ஆண்டுகளில் வரதராஜபுரத்தில் தையல்காரர் வாழ்க்கை. அப்பொழுது கலரா நோய்க்கு ஆளான பக்கத்துத்தோட்டப் பணியாளர் குடும்பத்தை தன்னுடைய குடிகிடப்பில் வைத்துக் காப்பாற்றியதால் ஊரை விட்டு வெளியேற்றப்பட்டார். பின்னர் கெம்பனூரில் காந்தியவாணரான லிங்கம் என்பவரில் உதவியால் திண்ணைப் பள்ளி ஆசிரியராக இருந்தார். அதன் பின்னர் கந்தே கவுண்டம்பாளையத்தில் ஆசிரியர் வேலை.
இடையில் சிறிதுகாலம் கோவை சிங்காநல்லூரில் நவஇந்தியா இதழில் மெய்ப்புப் பார்க்கும் பணியாற்றினார். 1951 ஆம் ஆண்டில் கோவையிலிருந்து 16 கிலோமீட்டர் தொலைவில் வையம்பாளையம் என்னும் ஊரில் இருந்த சுதந்திர வித்தியாலயம் என்ற உயர்நிலைப் பள்ளியில் விடுதிக் காப்பாளராக வேலைபார்த்தார். குழந்தைகளுக்கு காய்ந்த காய்கறிகளை சமைத்து வழங்குவதை எதிர்த்துத் தொடர்ந்த் சர்ச்சையில் அங்கிருந்து விலகினார்.[3]
வாழ்வின் இறுதியில் சில ஆண்டுகள் கர்நாடக மாநிலத்தில் மைசூர் நகருக்கு அருகில் உள்ள சிற்றூர் ஒன்றில் தோட்ட மேலாளராகப் பணியாற்றினார்.
குடும்பம்
தொகுவெள்ளியங்காட்டான் கோவை மாவட்டத்தில் உள்ள செங்காளிபாளையம் என்னும் ஊரில் பிறந்த குட்டியம்மாள் என்பவரை மணந்தார்.[4] ;இவர்களுக்கு மனோகரன் என்னும் மகனும் வசந்தாமணி, நளினி என்னும் மகள்களும் பிறந்தனர்.[5] 1950 ஆம் ஆண்டில் குட்டியம்மாள் காசநோயால் மரணமடைந்தார்.[6]
மறைவு
தொகுவெள்ளியங்காட்டான் புற்றுநோய்க்கு ஆட்பட்டு 1991ஆம் ஆண்டில், தனது 87 ஆவது அகவையில், கோவையில் மறைந்தார். இவருடைய படைப்புகளை 2010-11ஆம் நிதியாண்டில் தமிழ்நாடு அரசு நாட்டுடைமை ஆக்கியது.
படைப்புகள்
தொகுவ.எண் | ஆண்டு | நூலின் பெயர் | பொருள் | குறிப்பு |
01 | 1948 | இனிய கவிவண்டு | கவிதை | குமணன் பதிப்பகம், சென்னை |
02 | 1950 சூன் | எச்சரிக்கை | கவிதை | வறுமையின் காரணமாக இந்நூல் கவிஞரால் எடைக்குப் போடப்பட்டது. நூலின் படியொன்றுகூட தற்பொழுது கிடைக்கவில்லை. |
03 | 1967 பெப்ருவரி | கவிஞன் | காவியம் | குமணன் பதிப்பகம், சென்னை |
04 | 1964 | தாயகம் | காவியம் | |
05 | 1977 சூலை | அறிஞன் | காவியம் | குமணன் பதிப்பகம், சென்னை |
06 | 1979 செப்டம்பர் | தமிழன் | காவியம் | குமணன் பதிப்பகம், கோவை |
07 | துணைவி | கவிதை | கையெழுத்துப்படி | |
08 | பாட்டாளி | கவிதை | ||
09 | நண்பன் | கவிதை | ||
11 | 1982 | பரிசு | காவியம் | கலைமணி கல்வி டிரஸ்ட், கோவை |
10 | 1984 | புரவலன் | காவியம் | குமணன் பதிப்பகம், கோவை |
12 | 2005 சூலை | வெள்ளியங்காட்டான் கவிதைகள் | கவிதைகள் | யதி வெளியீடு, கோவை |
13 | 2005 சூலை | கவியகம் | கவிதை | யதி வெளியீடு, கோவை |
14 | 2005 திசம்பர் | நெஞ்சை உருக்கும் நீதிக்கதைகள் | கதைகள் | நளினி வெளியீடு, கோவை |
15 | 2006 திசம்பர் | புது வெளிச்சம் | கவிதைகள் | யதி வெளியீடு, கோவை |
16 | அறநெறிக்கதைகள் | கதைகள் | ||
17 | 2007 அக்டோபர் | ஒரு கவிஞனின் இதயம் | கடிதங்கள் | வசந்தாமணி, மனோகரன், நளினி ஆகியோருக்கு 11.10.1947 ஆம் நாள் முதல் 29.12.1962 ஆம் நாள் வரை வெள்ளியங்காட்டான் எழுதிய 37 கடிதங்களும் அவர்தம் மனைவி குட்டியம்மாள் எழுதிய கடிதம் ஒன்றும் அடங்கிய தொகுப்பு. தொகுத்தவர் நளினி. |
18 | துறவி | கவிதை | கையெழுத்துப் படி | |
19 | 1990 | தலைவன் | காவியம் | வெண்பா வடிவில் எழுதப்பட்டது. தட்டச்சுப் படி |
20 | கால சந்தன் | குறும்புதினம் | 1989ஆம் ஆண்டில் கஸ்தூரி மாத இதழில் வெளிவந்த கன்னட குறும்புதினங்களின் மொழிபெயர்ப்பு. கையெழுத்துப்படி |
வெள்ளியங்காட்டானின் படைப்புகள் அனைத்தையும் தொகுத்து 1716 பக்கங்களில் இரண்டு தொகுதிகளாக, வெள்ளியங்காட்டான் படைப்புகள் என்னும் தலைப்பில் 2011 ஆம் ஆண்டில் காவ்யா பதிப்பகத்தால் வெளியிடப்பட்டு உள்ளன.[5]
பிற மொழியில்
தொகுகோவை தமிழ் எழுத்தாளர் மன்றம் வெளியிட்ட எழுக! கவிஞ! என்னும் தொகுப்பில் உள்ள இவருடைய துணிவு என்னும் கவிதையை பேராசிரியர் முனைவர் சாலை இளந்திரையன் உருது மொழியில் மொழிபெயர்க்கச் செய்தார். அக்கவிதை அம்மொழி இதழொன்றில் வெளிவந்துள்ளது.[7]
இயற்றிய சில கவிதைகள்
தொகுதீட்டி வீசிடும் கத்திக் கெதிர்செலின்
- தீமை நேருமென் றுள்ளம் உணரினும்
நாட்டுநன் மையைக் கோரி யழைத்திடின்
- நகைமுகத் துடன்தாங் கத்துணிகிறேன்!
மாபெரு மிந்த வுலகம் முழுவதும்
- மக்களுடைமையடா - அடா
- மக்களுடைமையடா - கொடும்
பாபிக ளான வொருசில ரேயிதைப்
- பங்கிட்டுக் கொண்டாரடா - அடா
- பங்கிட்டுக் கொண்டாரடா
மதிப்புரைகள்
தொகு"ஒரு எழுச்சி, ஒரு நுழைவு, ஒரு நெகிழ்வு, ஒரு பொறி, ஒரு ஏக்கம், ஒரு வியப்பு, ஒரு தோற்றம், ஒரு மின்னல், இவற்றுக்கு வண்ணம் கொடுத்து வெளிப்படுத்தும் கவிதைக்கு "லிரிக்' என ஆங்கில இலக்கியத்தில் அடையாளம் கூறப்படுகிறது. வெள்ளியங்காட்டான் கவிதைகளைப் படித்தபோது "லிரிக்' கவிதைகளுக்கு வேண்டிய கனல் மூண்டிருப்பதைக் கண்டேன்' - கவிஞர் திரிலோக சீதாராம்
"வயல் வெளிகளிலே அன்பு / வடிவநெல்லெல்லாம் / சுயநல எருமை அந்தோ / சூரையாடுதே' என்ற வெள்ளியங்காட்டான் பாடலையும் இதர பாடல்களையும் குறிப்பிட்டு எளிமையும், உண்மையான உணர்ச்சியும் உள்ள பாடல்கள் வெள்ளியங்காட்டான் பாடல்கள் - பேராசிரியர் அ. சீனிவாசராகவன்
“வெள்ளியங்காட்டானை யார் என்று எனக்குத் தெரியாது. அவர் பாடல்களோ எனக்கு பழக்கமிருக்கிறது. அவர் பாடல்களில் நாட்டின் பண்பு நன்றாக இருக்கிறது. உண்மைகளையே சொல்லியிருப்பதனால் பாட்டுகள் பொருளுடையாவாக இருக்கின்றன - கொத்தமங்கலம் சுப்பு
சான்றடைவுகள்
தொகு- ↑ நளினி வெ. இரா. (தொகு), ஒரு கவிஞனின் இதயம், யதி வெளியீடு - கோயமுத்தூர், மு.பதி. 2007 அக்டோபர், பக்.16
- ↑ வெ.இரா.நளினி தொகுத்த ஒரு கவிஞனின் எழுத்தும் வாழ்வும்.
- ↑ நளினி வெ. இரா. (தொகு); ஒரு கவிஞனின் இதயம்; யதி வெளியீடு, கோயமுத்தூர்; மு.பதி. 2007 அக்டோபர்; பக்.50
- ↑ நளினி வெ. இரா. (தொகு), ஒரு கவிஞனின் இதயம், யதி வெளியீடு - கோயமுத்தூர், மு.பதி. 2007 அக்டோபர், பக்.17
- ↑ 5.0 5.1 நளினி வெ. இரா; நொந்தவர் நோய் துடைக்கும் அறப்போரில் என் கரத்தை இணைத்துக் கொள்கிறேன்; 04 மே 2012 12:46
- ↑ நளினி வெ. இரா. (தொகு), ஒரு கவிஞனின் இதயம், யதி வெளியீடு - கோயமுத்தூர், மு.பதி. 2007 அக்டோபர், பக்.48
- ↑ கவிஞர் சக்திகனல் 08.05.1982இல் எழுதிய கவிஞரைப் பற்றி... என்னும் கட்டுரை.