பழனி மலைகள்

(பழநி மலைத்தொடர் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

பழனி மலைகள் என்பது தமிழ் நாட்டில் அமைந்துள்ள மலைப்பகுதியாகும். இது மேற்குத் தொடர்ச்சி மலைத்தொடரின் கிழக்கு நோக்கிய நீட்சியாக உள்ளது. இதன் மேற்கு பகுதியில் ஆனை மலை உள்ளது. கிழக்கு பகுதியில் தமிழ் நாட்டு சமவெளி உள்ளது. இதன் பரப்பு 2,068 சதுர கிமீ ஆகும். இதன் உயரமான பகுதிகள் தென் மேற்கே உள்ளன அங்கு இவற்றின் உயரம் 1,800-2,500 மீட்டர் (5,906-8,202 அடி). கிழக்குப்பகுதியில் மலையின் உயரம் 1,000-1,500 மீட்டர் (3,281-4,921 அடி) ஆகும்.[1]

பழனி மலைகள்
கொடைக்கானலுக்கு செல்லும் வழியில் பழனி மலைகள்
உயர்ந்த புள்ளி
உயரம்2,500 m (8,200 அடி)(அதிகபட்சம்)
ஆள்கூறு10°17′N 77°31′E / 10.283°N 77.517°E / 10.283; 77.517
புவியியல்
அமைவிடம்தமிழ் நாடு
மூலத் தொடர்மேற்குத் தொடர்ச்சி மலை
ஏறுதல்
எளிய வழிமா.நெ 156

பெயராய்வு

தொகு

பழனிமலை எனும்போது, முருகன் கோயில் கொண்டுள்ள கருமலையே அனைவரின் உள்ளத்திலும் தோன்றும். ஆனால் இங்குக் குறிப்பிடப்படும் பழனி மலைகள், பழனி நகருக்குத் தெற்கிலுள்ள மலைக் கூட்டமே ஆகும். வட மொழியில் இவற்றை 'வராக கிரி' என்பர். தமிழில் இதைப் பன்றி மலை என்று குறிப்பிடுவர். இம் மலைக்கு இப் பெயர் ஏற்பட்டதற்குக் காரணமாக ஒரு செவிவழி கதை வழங்குகிறது. இம் மலைமீது ஒரு முனிவர் தவம் செய்துகொண்டிருந்தாராம், அவ் வழி வந்த பன்னிரண்டு குறும்புக்கார இளைஞர்கள் அம் முனிவரை இகழ்ந்து பேசினார்களாம். இதனால் சினங்கொண்ட அம் முனிவர் அப் பன்னிருவரையும் பன்றிகளாகப் போகும்படி சபித்தாராம். அவர்களும் பன்றிகளாக மாறி அம் மலைமீது சுற்றித் திரிந்தார்கள் . அவர்களிடம் இரக்கம் கொண்ட சிவபெருமான் அவர்களுடைய பன்றியுருவை மாற்றி, பாண்டிய மன்னன் அவைக்களத்தில் அமைச்சர்களாக அமர்த்தினாராம். இக் காரணத்தினால் இம் மலை பண்டை நாட்களில் பன்றி மலை என்று பெருவழக்காக அழைக்கப்பட்டு வந்தது என்பர். பன்றி மலையின் திரிபே பழனி மலை என்றும் சிலர் கூறுகின்றனர். புகழ் மிக்க பழனி நகருக்கு அருகில் இருப்பதனால், இம் மலை பழனி மலை என்று பெயர் பெற்றதாகவும் வேறு சிலர் கூறுகின்றனர்.[2]

நிலவியல்

தொகு

பழனி மலைகளின் உயர்ந்த சிகரம் வண்டறாவு ஆகும். இதன் தென் பகுதியில் வைகை ஆறு பாயும் கம்பம் பள்ளத்தாக்கும் வட பகுதியில் கொங்கு நாடும் உள்ளன. காவிரி ஆற்றின் துணை ஆறுகளான சண்முகா நதி, நங்கஞ்சி ஆறு, கொடவனாறு நதி ஆகியவை இதன் வடக்கு சரிவுகளில் தோன்றுகின்றன. இம்மலையின் மேற்குப் பகுதியைத் தவிர பெரும்பாலான பகுதிகள் திண்டுக்கல் மாவட்டத்திலேயே உள்ளன. இதன் தெற்குப் பகுதி தேனி மாவட்டத்திற்கும் திண்டுக்கல் மாவட்டத்திற்கும், மேற்குப் பகுதி இடுக்கி மாவட்டத்திற்கும் எல்லையாக உள்ளது. புகழ் பெற்ற மலை நகரமான கொடைக்கானல் இதன் தென் நடுப்பகுதியில் உள்ளது. பழனி மலைகள் கேரள மாநிலத்தின் ஆனைமுடி சிகரத்தில் ஆனை மலை மற்றும் ஏலக்காய் மலை ஆகியவற்றுடன் இணைகிறது.

பழனி மலைகளானது கிழக்குப் பகுதி என்றும், மேற்குப் பகுதி என்றும் இரு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இப்பிரிவுகளை மேற்பழனி என்றும் கீழ்ப்பழனி என்றும் குறிப்பிடுவர். கீழ்ப்பழனி மலையில் 3000 அடியிலிருந்து 5000 அடிவரை உயரமுள்ள பல சிகரங்கள் சிதறிக் கிடக்கின்றன. இச் சிகரங்களிடையே குறுகிய பல பள்ளத்தாக்குகள் அமைந்துள்ளன. மேல் பழனிமலை 6000 அடி முதல் 8000 அடி வரையில் உயர்வுள்ளது. கொடைக்கானல் நகரம் மேற்பழனியின் தென்பாகத்தில் அமைந்துள்ளது. கீழ்ப்பழனியில் பரவியுள்ள அடர்ந்த காடுகளை இங்குக் காணமுடியாது. நிறைந்த பள்ளத்தாக்குகளும் இங்குக் கிடையாது. பயிர்த் தொழிலுக்குப் பயன்படாத நிலம் இங்கு அதிகம். இங்குள்ள பீடபூமிகளில் முரட்டுப் புல் முளைத்த பரந்த வெளிகள் (டவுன்ஸ்) மிகுந்து தோன்றும், ஒரு சில பள்ளத் தாக்குகளில் மக்களின் குடியிருப்புகளைச் சுற்றி உதகமண்டலத்தில் இருப்பவற்றைப் போன்று சோலைக்காடுகள் நிறைந்திருக்கும். இப் பள்ளத்தாக்குகளைத் தவிர மற்ற இடங்களிலுள்ள நிலங்களெல்லாம், புல் தாவரங்கள் அடர்ந்த மெல்லிய மண்படலத்தால் மூடப்பட்டிருக்கும்.[2]

சுற்றுச்சூழல்

தொகு

பழனி மலைகளின் சுற்றுச்சூழல் பகுதியில் 250 முதல் 1,000 மீ (820-3,281 அடி) உயரம் வரையிலான தாழ்ந்த உயரப்பகுதியானது தென்மேற்கு தொடர்ச்சி மலையின் ஈரமான இலையுதிர் காடுகள் உள்ளன. இலையுதிர் காடுகளானது 1,000 மீ (3,281 அடி) க்கு மேல், பசுமை மாறா தென் மேற்குத் தொடர்ச்சி மலைகளின் மாண்டேன் மழைக்காடுகளாக மாறுகின்றன. மலைப்பகுதியின் மிக உயர்ந்த பகுதிகளான, 2,000 மீ (6,562 அடி) க்கு மேல் உள்ள பகுதிகள், மான்ட்டேன் மழைக்காடுகள் சோலை-புல்வெளி என பல்லடுக்குகளுக்கு வழிவகுக்கின்றன. இது உறைபனியைத் தாங்க்கூடிய கொண்ட மாண்டேன் புல்வெளைக் கொண்டதாகவும், இடையிடையில் குறுகிய சோலைக்காடுகைக் கொண்டதாகவும் உள்ளது.

பாதுகாப்பு

தொகு

பழனி மலைகள் தற்போது வளர்ச்சி அதிகரிப்பின் அழுத்தங்களுக்கு ஆளாகியுள்ளது. கொடைக்கானலை தலைமையிடமாகக் கொண்ட அரசு சாரா அமைப்பான பழனி மலைகள் பூதுகாப்பு குழுவானது 1985 இல் நிறுவப்பட்டது. 1990 களின் முற்பகுதியில் தமிழக வனத்துறையானது பழனி மலைகள் காட்டுயிர் உய்விடம் மற்றும் தேசிய பூங்காவை உருவாக்க தமிழக அரசுக்கு முன்மொழிந்தது.[3] 2013 இல் இது உருவாக்கபட்டது.

மேற்கோள்கள்

தொகு
  1. R. P. Singh, Zubairul Islam. Environmental Studies. Concept Publishing Company. p. 172. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-8069-774-6. பார்க்கப்பட்ட நாள் 18 November 2012.
  2. 2.0 2.1 "தமிழகத்தில் குறிஞ்சி வளம், நூல், கவிஞர் முருகு சுந்தரம், பக்கம், 203-268". பழனியப்பா பிரதர்ஸ். பார்க்கப்பட்ட நாள் 17 நவம்பர் 2020.
  3. "On the danger list". Frontline. 2 August 2003 இம் மூலத்தில் இருந்து 2012-02-04 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20120204071315/http://www.frontlineonnet.com/fl2016/stories/20030815000106600.htm. பார்த்த நாள்: 7 April 2015. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=பழனி_மலைகள்&oldid=3066106" இலிருந்து மீள்விக்கப்பட்டது