பழனி சுப்பிரமணிய பிள்ளை

பழனி சுப்பிரமணிய பிள்ளை (1908–1962) என்பவர் தென்னிந்தியாவைச் சேர்ந்த மிருதங்க இசைக் கலைஞர் ஆவார். இவர் கஞ்சிரா வாசிப்பதிலும் வல்லவராகத் திகழ்ந்தவர்.

"பழனி சுப்புடு" அவர்களைப் பற்றிய சிறப்பிதழ் ஒன்றைச் சுருதி (Sruti) என்னும் ஆங்கில இசை இதழ் வெளியிட்டது. அதன் முகப்புப் பக்கத்தில் உள்ள பழனி சுப்பிரமணியரின் படம். சுருதிச் சிறப்பிதழ் 33/34 (காலம் சூன்/சூலை 1987)

ஆரம்பகால வாழ்க்கை தொகு

தமிழ்நாட்டில் ஏப்ரல் 20, 1908 அன்று இவர் பிறந்தார். பெற்றோர்: முத்தையா பிள்ளை - உண்ணாமலை அம்மாள். தந்தை முத்தையா பிள்ளையும் ஒரு மிருதங்க இசைக் கலைஞர் என்பதால் அவரிடமிருந்து இசை கற்கத் தொடங்கினார். தொடர்ந்து புதுக்கோட்டை தட்சிணாமூர்த்தி பிள்ளையிடம் மாணவராக மிருதங்கம் கற்றார். தனக்கு 20 வயது ஆவதற்கு முன்பே புகழ்வாய்ந்த பாடகர்களான காஞ்சிபுரம் நாயினாப் பிள்ளை, மழவரயேந்தல் சுப்பராம பாகவதர் மற்றும் முடிகொண்டான் வேங்கடராம ஐயர் ஆகியோருக்கு பக்கவாத்தியமாக மிருதங்கம் வாசித்தார்.

தொழில் வாழ்க்கை தொகு

இவர், கீழே குறிப்பிடப்பட்டுள்ள புகழ்மிக்க கருநாடக இசைப் பாடகர்களுக்கு பக்க வாத்தியமாக மிருதங்கம் வாசித்திருக்கிறார்:

புல்லாங்குழல் கலைஞர் டி. ஆர். மகாலிங்கம் மற்றும் வீணைக் கலைஞர் காரைக்குடி சாம்பசிவ ஐயருக்கு இவர் பக்க வாத்தியம் வாசித்திருக்கிறார்.

இவரின் குறிப்பிடத்தக்க மாணவர்கள்:

சிறப்பு தொகு

பழனி சுப்ரமணிய பிள்ளை, இடதுகையால் வாசிப்பவர். இதனால் ஆரம்பகாலத்தில் மேடையில் அமர்வதில் பல சிக்கல்களை அவர் எதிர்கொண்டார். என்ன சிக்கல் என்பது கீழே விவரிக்கப்பட்டுள்ளது:

கச்சேரி மேடையில் நாயகமாக 'வாய்ப்பாட்டுக்காரர்' இருக்க, அவரின் இடது பக்கத்தில் வயலின்; வலது பக்கத்தில் மிருதங்கம்... இதுவே நடைமுறை. வயலின் இசைக் கலைஞர் அமரும் இடத்தில் பழனி சுப்ரமணிய பிள்ளை அமர்ந்தால்தான் இடது கையால் சபை நோக்கியபடி வாசிக்க முடியும். ஆனால், எதிர்பக்கம் அமர்ந்து வாசிக்க புகழ்வாய்ந்த வயலின் இசைக் கலைஞர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

மேடை நடைமுறையில் ஏற்பட்ட பிணக்கை தீர்த்து வைத்து இவருக்கு தொடர்ந்து தனது கச்சேரிகளில் வாய்ப்பளித்தார், செம்பை வைத்தியநாத பாகவதர். திறமைக்கு முன்னால் நடைமுறைச் சிக்கல்கள் தொலைந்து போயின.

இவரின் மற்றொரு சிறப்பு இவர் தனது தோற்றத்தில் எடுத்துக்கொண்ட கவனமாகும். எப்போதும் வெள்ளை வேட்டி, வெள்ளை சட்டை அணிவார். வாசனைப் பொருட்களை விரும்பி உபயோகிப்பார். இவரைப் போலவே பாடகர் ஜி. என். பாலசுப்பிரமணியம், வயலின் வித்துவான் மாயவரம் வி. ஆர். கோவிந்தராஜ பிள்ளை இருவரும் நல்ல தோற்றம் கொண்டவர்களாகவும் வாசனைத் திரவியங்கள் பயன்படுத்துபவர்களாகவும் இருந்தார்கள். இவர்கள் மூவரும் சேர்ந்து பங்குபற்றும் கச்சேரிகளின்போது அரங்கில் நறுமணம் கமழும்.

உசாத்துணை தொகு

'லய மேதை பழனி சுப்பிரமணிய பிள்ளை' கட்டுரை, எழுதியவர்:அரங்க.செல்லராமன்; வெளியீடு: தினமணி - இசை விழா மலர் (2011 - 2012)

"https://ta.wikipedia.org/w/index.php?title=பழனி_சுப்பிரமணிய_பிள்ளை&oldid=3291481" இலிருந்து மீள்விக்கப்பட்டது