ஜி. என். பாலசுப்பிரமணியம்

ஜி. என். பாலசுப்பிரமணியம் (G. N. Balasubramaniam, ஜனவரி 6, 1910 - மே 1, 1965), ஒரு தலை சிறந்த கருநாடக இசைப் பாடகர். "ஜி.என்.பி" என்று அழைக்கப்பட்ட அவர் தன் தனித்தன்மையான இசையாலும், இயற்கையாக அமைந்த குரல் வளத்தாலும் பல்லாயிரக்கணக்கான இரசிகர்களை ஈர்த்தவர்.

கர்நாடக இசைப்பாடகர் ஜி. என். பாலசுப்பிரமணியம்

இன்றைக்கு சங்கீத மேடைகளில் பின்பற்றப்படும் பாணியை வகுத்துக் கொடுத்து செம்மைப்படுத்தியவர் ஜி.என்.பி. இதனை "ஜி.என்.பி பாணி" என்று கருநாடக இசை உலகத்தில் அடையாளப்படுத்துகின்றனர்.

வாழ்க்கைக் குறிப்பு தொகு

அவர் கும்பகோணத்தை அடுத்துள்ள ஆடுதுறை அருகே அமைந்துள்ள கூடலூர் என்னும் ஊரில் ஜி.வி.நாராயணசாமி ஐயர், விசாலம் அம்மாள் தம்பதியினருக்கு மகனாகப் பிறந்தார். தந்தையார் ஜி. வி. நாராயணசாமி ஐயர் சென்னை திருவல்லிக்கேணி இந்து உயர்நிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியராகப் பணிபுரிந்தவர். சிறந்த இசை ரசிகரான அவர் ஒரு சபையை நடத்தி வந்தார். அதனால் சிறு வயதிலிருந்தே ஜி.என்.பி.க்கு பல முன்னணி இசைக் கலைஞர்களுடன் பழகி அவர்களின் இசையை அருகிலிருந்து கேட்கும் வாய்ப்புக் கிட்டியது. ஆங்கில இலக்கியத்தில் பி.ஏ (ஆனர்ஸ்) பட்டம் பெற்ற பாலசுப்பிரமணியம் கருநாடக இசையை தன் தொழிலாகத் தேர்ந்தெடுத்தார். இசையுலகில் அவருடைய நுழைவு தற்செயலாகத்தான் நிகழ்ந்தது என்றாலும் அவருடைய துடிப்பான "பிருகா"க்களும், அதிரடி சுரக் கோர்வைகளும், ஆழ்ந்த இசை அறிவும் அவரை புகழின் உச்சிக்கு உயர்த்திவிட்டன. பல ஆண்டுகள் அவர் கருநாடக இசை உலகின் முடிசூடா மன்னனாக விளங்கினார். இவருடைய மாணவர்களில் எம். எல். வசந்தகுமாரி, ராதா ஜெயலட்சுமி, எஸ். கல்யாணராமன், திருச்சூர் வி. இராமச்சந்திரன் ஆகியோர் சிறந்த பாடகர்களாகப் பெயர்பெற்றவர்கள்.

அவர் பாடி இசைத் தட்டாக வெளிவந்த "வாசுதேவயனி" என்று தொடங்கும் கல்யாணி இராகப் பாடல் அக்காலத்தில் விற்பனையில் சாதனை படைத்தது. அது பதிப்பிக்கப்பட்ட 1940 ஆம் ஆண்டில் பத்தாயிரம் ரூபாய் "ராயல்டி"யாக அவருக்கு இந்த இசைத்தட்டு விற்பனை மூலம் கிட்டியது!

விரிவாக இராக ஆலாபனைகள் புரிவதில் புதிய முறைகளை அவர் கையாண்டார். பல இராகங்களில் அதுவரை கையாளப்படாத புதிய பரிமாணங்களை அவர் தொட்டு தன் ஆழ்மனத்தில் தோன்றும் கற்பனைகளுக்கு குரல் வடிவம் கொடுத்தார்.

சகுந்தலை திரைப்படத்தில் இடம்பெற்ற "எனை மறந்தனன்” என்று தொடங்கும் விருத்தத்தில் காம்போதி ராகத்தில் வேறு ஒருவருமே கையாண்டிராத வகையில் இரண்டு நிமிடத்திற்கும் சற்றுக் குறைவான நேரத்தில் அந்த ராகத்தின் அனைத்து லட்சணங்களையும் குழைத்து ஜிஎன்பி பாடியுள்ளார்.[1][2]

திரைப்படத்துறை பங்களிப்புகள் தொகு

எம். எஸ். சுப்புலட்சுமியுடன் இணைந்து சகுந்தலை (1940) எனும் திரைப்படத்தில் நடித்தார். அடுத்து பாமா விஜயம் (1934), சதி அனுசுயா (1937), உதயணன் வாசவதத்தா (1946), ருக்மாங்கதன் (1947) போன்ற படங்களில் நடித்தார்.

விருதுகள் தொகு

மேற்கோள்கள் தொகு

உசாத்துணை நூல்கள் தொகு

வெளி இணைப்புகள் தொகு