சகுந்தலை (திரைப்படம்)

எல்லிஸ் டங்கன் இயக்கத்தில் 1940 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்

சகுந்தலை 1940 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம் ஆகும். எல்லிஸ் டங்கனின் இயக்கத்தில் வெளிவந்த இப்படம் மகாகவி காளிதாசன் இயற்றிய சாகுந்தலம் என்ற காவியத்தை அடிப்படையாக வைத்துத் தயாரிக்கப்பட்டது.[1] சகுந்தலையாக எம். எஸ். சுப்புலட்சுமி, துஷ்யந்தனாக ஜி. என். பாலசுப்பிரமணியம் ஆகியோரும் நடித்துள்ளனர். சென்னை நியூடோன் ஸ்டூடியோவில் தயாரிக்கப்பட்டது.[2]

சகுந்தலை
இயக்கம்எல்லிஸ் ஆர். டங்கன்
தயாரிப்புசந்திர பிரபா சினிடோன் & மதுரை இராயல் டாக்கீஸ்
நடிப்புஎம். எஸ். சுப்புலட்சுமி
ஜி. என். பாலசுப்பிரமணியம்
செருக்களத்தூர் சாமா
டி. பி. எஸ். மணி
கல்யாணம்
ரமணி
என். எஸ். கிருஷ்ணன்
டி. எஸ். துரைராஜ்
சங்கர்
கே. சாரங்கபாணி
ராதா
தவமணிதேவி
கோல்டன் சாரதாம்பாள்
சகுந்தலா தேவி
டி. ஏ. மதுரம்
கலையகம்நியூட்டோன்
விநியோகம்ராயல் டாக்கி டிஸ்ட்றிபியூட்டர்ஸ், மதுரை
வெளியீடு1940
நாடுஇந்தியா
மொழிதமிழ்

இத்திரைப்படம் முதலில் எம். எஸ். சுப்புலட்சுமியின் கணவர் தி. சதாசிவம் தனது சந்திர பிரபா சினிடோன் என்ற திரைப்பட தயாரிப்பு நிறுவனம் மூலம் துவக்கப்பட்டது. பின்னர் மதுரை இராயல் டாக்கீஸ் நிறுவனத்தினர் வழங்கிய நிதியுதவியுடன் திரைப்படம் முடிக்கப்பட்டது.[3] இத்திரைப்படத்தை மதுரை ராயல் டாக்கீஸ் நிறுவனம் நாடு முழுவதும் விநியோகம் செய்தனர்.

கதைச்சுருக்க எச்சரிக்கை: கதைச்சுருக்கம் மற்றும்/அல்லது கதை முடிவு விவரங்கள், கீழே தரப்பட்டுள்ளன.

கண்ணுவ முனிவரின் (செருக்களத்தூர் சாமா) ஆசிரமத்துக்கு அடுத்த வனத்தில் துஷ்யந்தன் (ஜி. என். பாலசுப்பிரமணியம்) ஒரு மானைத் துரத்தி வருகிறான். அந்நேரம் சகுந்தலை (எம். எஸ். சுப்புலட்சுமி) தோழிகள் பிரியம்வதை (டி. ஏ. மதுரம்), அனுசூயை (சகுந்தலா பாய்) ஆகியோருடன் மலர்ச்செடிகளுக்குத் தண்ணீர் விடுகிறாள். அப்போது அங்கு வரும் துஷ்யந்தனைக் கண்டு காதல் கொள்கிறாள். காதல் வயப்பட்டவர்கள் காந்தர்வ முறைப்படி திருமணம் புரிகின்றனர். துஷ்யந்தன் தனது மோதிரத்தை சகுந்தலையின் கையிலிட்டு விட்டு அத்தினாபுரம் செல்கிறான்.[2]

மன்னன் திரும்ப வரவில்லை. கவலையில் ஆழ்ந்திருந்த சகுந்தலை ஆசிரமத்துக்கு விருந்தினராக வந்த துருவாச முனிவரைக் (டி. பி. எஸ். மணி) கவனிக்கவில்லை. முனிவர் கோபம் கொண்டு "நீ யாருடைய தியானத்தில் என்னை அலட்சியம் செய்தாயோ அவன் உன்னை அடியோடு மறக்கட்டும்" என்று சபிக்கிறார். கவலையில் ஆழ்ந்த சகுந்தலையின் தோழிகள் முனிவரை சமாதானப்படுத்துகிறார்கள். கோபம் தணிந்த முனிவரும் கொடுத்த சாபத்திற்கு ஒரு பரிகாரமும் சொல்லிப் போகிறார்.[2]

 
மேனகையுடன் (தவமணி தேவி) சகுந்தலை (எம்.எஸ்.)

சகுந்தலை கர்ப்பிணி ஆகிறாள். சகுந்தலையை கண்ணுவர் அத்தினாபுரம் அனுப்புகிறார். அவளுடன் அவரது சீடர்கள் சாரங்கரவனும் (ரமணி), சாரத்வதனும் (கல்யாணம்) அன்னை கௌதமியும் (கோல்டன் சாரதாம்பாள்) செல்கின்றனர். அத்தினாபுரத்தில் துஷ்யந்தனைக் காண்கின்றனர். ஆனால் அவன் சகுந்தலையை அடையாளம் காணவில்லை. அவன் கொடுத்த மோதிரமும் ஆறு குளிக்கும்போது தொலைந்து விடுகின்றது. சகுந்தலையுடன் வந்தவர்கள் அவளை அங்கேயே விட்டு விட்டுச் செல்கின்றனர். சகுந்தலை மயங்கி விழ ஒரு மின்னல் தோன்றி மேனகை (தவமணி தேவி) வந்து சகுந்தலையைத் தூக்கிக் கொண்டு செல்கிறாள்.[2]

ஆண்டுகள் ஐந்து செல்கின்றன. ஒரு நாள் நகரக் காவலாளி இரு செம்படவர்களை (என். எஸ். கிருஷ்ணன், டி. எஸ். துரைராஜ்) பிடித்துக் கொண்டு அரசனிடம் வருகிறான். அவர்கள் கடலில் கண்டெடுத்த மோதிரத்தைக் காட்டுகிறார்கள். பழைய நினைவுகள் திரும்பப் பெற்ற துஷ்யந்தன் சகுந்தலையைத் தேடிச் செல்கிறான்.[2]

கண்ணுவ முனிவரின் ஆசிரமத்தில் சிங்கக் குட்டியைத் துரத்திக்கொண்டு ஐந்து வயது பாலகன் சர்வதமனன் (ராதா) ஓடி வருகிறான். அவனுடன் அளவளாவுகிறான் துஷ்யந்தன். அப்போது அங்கு வந்த சகுந்தலையைக் கண்டு இருவரும் இணைகின்றனர்.[2]

கண்ணுவர், இருவரையும் ஆசீர்வதித்து சர்வதமனனுக்கு பரதன் என்ற பெயரையும் இடுகிறார். "அவன் பெயர்ப்பட அந்நாடும் அன்று முதல் பாரத பூமி என வழங்கும்" என்று கூறி வாழ்த்துகிறார்.[2]

நடிகர்கள்

தொகு
நடிகர் பாத்திரம்
எம். எஸ். சுப்புலட்சுமி சகுந்தலை
ஜி. என். பாலசுப்பிரமணியம் துசியந்தன்
செருக்களத்தூர் சாமா கண்ணுவர்
ராதா பரதன்
கே. சாரங்கபாணி மாடவ்யன்
டி. பி. எஸ். மணி துர்வாசர்
கல்யாணம் சாரத்வதன்
ரமணி சாரங்காவன்
சங்கர் ஆத்ரேயர்
என். எஸ். கிருஷ்ணன் செம்படவர்
டி. எஸ். துரைராஜ் செம்படவர்
பி. ஜி. வெங்கடேசன் வண்டிக்காரன்
டி. ஏ. மதுரம் பிரியம்வதை, குறத்தி
சகுந்தலா பாய் அனுசூயை
கோல்டன் சாரதாம்பாள் கௌதமி
தவமணி தேவி மேனகை

பாடல்கள்

தொகு

இப்படத்தில் மொத்தம் 24 பாடல்கள் இடம்பெற்றிருந்தன.[2]

படல் பாடியவர்(கள்) தகவல்கள்
நிறை இன்பமே பாங்கி - இதோ பார் எம். எஸ். சுப்புலட்சுமி, தோழிகள் -
ஆனந்தமென் சொல்வேனே எம். எஸ். சுப்புலட்சுமி பாரத்மாதே பிரணாம் மெட்டு
எங்கும் நிறை நாத ப்ரம்மம் எம். எஸ். சுப்புலட்சுமி மேரே கிரிதர மெட்டு
பாகங்கள் பூர்ணமாக வேண்டும் எம். எஸ். சுப்புலட்சுமி, தோழிகள் -
அனல நாத ஜய ஜய சுர எம். எஸ். சுப்புலட்சுமி, தோழிகள் இராகம்: தேவமனோகரி, ஏக தாளம்
எனை மறந்தனன் மாதவர் வாழ் ஜி. என். பாலசுப்பிரமணியம் விருத்தம் - காம்போதி
மிகக் குதூகலிப்பது மேனோ எம். எஸ். சுப்புலட்சுமி -
எந்தனிடது தோளும்கண்ணும் துடிப்பதென்ன எம். எஸ். சுப்புலட்சுமி இராகம்: கரகரப்பிரியா, ஆதி தாளம்
மீளவும் வருவாரோ எம். எஸ். சுப்புலட்சுமி -
பச்சை குத்தி குறி சொல்லுவோம் டி. ஏ. மதுரம் -
சுகுமாரா என் தாபந்தனை எம். எஸ். சுப்புலட்சுமி மோகினிகே மெட்டு
மனமோகனாங்க அணங்கே எம். எஸ். சுப்புலட்சுமி, துஷ்யந்தன் -
சிருங்கார ரசவல்லியே ஜி. என். பாலசுப்பிரமணியம் இராகம்: குந்தவராளி, ஆதி தாளம்
ப்ரேமையில் யாவும் மறந்தேனே எம். எஸ். சுப்புலட்சுமி, துஷ்யந்தன் -
என தன்னை கருணை தானே எம். எஸ். சுப்புலட்சுமி -
இறைவா நானோர் பேதை அன்றோ எம். எஸ். சுப்புலட்சுமி அபமைனே மெட்டு
கைலாச வாசா கருணா விலாசா செருக்களத்தூர் சாமா, கண்ணுவரின் மாணவர்கள் பஜனை
மனக்குளிர கண்குளிர எம். எஸ். சுப்புலட்சுமி விருத்தம் - இராகமாலிகை
மன்னனுக்கே உரைப்பீர் செருக்களத்தூர் சாமா இராகம்: காம்போதி, ஆதி தாளம்
பொல்லாதையோ பெரும் சம்சார பந்தமே பி. ஜி. வெங்கடேசன் -
வெகு தூரங் கடல் தாண்டி என். எஸ். கிருஷ்ணன், டி. எஸ். துரைராஜ் -
இன்னிக்கு காலையிலே எழுதிருச்சு என். எஸ். கிருஷ்ணன், டி. எஸ். துரைராஜ் -
நெஞ்சில் எனை நொந்து மறந்தனனோ ஜி. என். பாலசுப்பிரமணியம் காகதகை மெட்டு
அம்மம்மா மனம் தாளேனே எம். எஸ். சுப்புலட்சுமி இராகம்: நாதநாமக்ரியை, திரிபுடை தாளம்

உசாத்துணை

தொகு
  1. Blast from the past: Sakunthalai 1941, ரண்டோர் கை, த இந்து, சனவரி 29, 2010
  2. 2.0 2.1 2.2 2.3 2.4 2.5 2.6 2.7 'சகுந்தலை' பாட்டுப் புத்தகம். ராஜேசுவரி பிரஸ், மதுரை-40. 1940.
  3. [1]
"https://ta.wikipedia.org/w/index.php?title=சகுந்தலை_(திரைப்படம்)&oldid=3725805" இலிருந்து மீள்விக்கப்பட்டது