பாதல் குப்தா
பாதல் குப்தா (Badal Gupta) ( வங்காள மொழி: বাদল গুপ্ত Badol Gupto), உண்மையான பெயர் சுதிர் குப்தா (1912 - 8 திசம்பர் 1930), இந்தியாவில் பிரித்தானிய ஆட்சிக்கு எதிரான தீவிரமாக இருந்த ஓர் இந்திய புரட்சியாளர் ஆவார். தினேஷ் குப்தா, பினாய் பாசு ஆகியோருடன் சேர்ந்து இவர் கொல்கத்தாவின் செயலகக் கட்டடத்தின் மீது தாக்குதலில் ஈடுபட்டார்.
பாதல் குப்தா | |
---|---|
தாய்மொழியில் பெயர் | বাদল গুপ্ত |
பிறப்பு | 1912 பூர்பா சிமுலியா, விக்ரம்பூர், வங்காள மாகாணம், பிரித்தானிய இந்தியா (தற்போது வங்காளதேசம்) |
இறப்பு | 8 திசம்பர் 1930 கொல்கத்தா, வங்காள மாகாணம், பிரித்தானிய இந்தியா (தற்போது இந்தியா) |
அறியப்படுவது | எழுத்தாளர்களின் கட்டிடத் தாக்குதல் |
ஆரம்ப நடவடிக்கைகள்
தொகுபாதல் குப்தா, தற்போதைய வங்காளதேசத்தின் டாக்கா மாவட்டத்திலுள்ள (தற்போதைய முன்சிகஞ்ச் மாவட்டம்) விக்ரம்பூர் பகுதியில் உள்ள பூர்பா சிமுலியா (கிழக்கு சிமுலியா) என்ற கிராமத்தில் பிறந்தார்.[1] ஆலிப்பூர் வெடிகுண்டு வழக்கில் தொடர்புடைய மற்றும் இரிஷி அரவிந்த கோசுடன் சிறையில் இருந்த இவரது இரண்டு தந்தை வழி மாமாக்களான மறைந்த தரணிநாத் குப்தா, நாகேந்திரநாத் குப்தா ஆகியோரின் புரட்சிகர நடவடிக்கைகளால் இவர் தாக்கமடைந்தார். 1928இல் இவர், சுபாஷ் சந்திர போஸால் ஏற்பாடு செய்யப்பட்ட வங்காள தொண்டர் படையில் சேர்ந்தார்.
கடைசித் தாக்குதல்
தொகுசிறைச்சாலைகளில் உள்ள கைதிகளை கொடூரமாக ஒடுக்குவதில் பிரபலமாக இருந்த சிறைத்துறை காவல்துறை இயக்குநர் கர்னல் என்.எஸ். சிம்ப்சனை தொண்டர் படை குறிவைத்தது. புரட்சியாளர்கள் அவரை கொலை செய்ய மட்டுமே நினைத்தனர். ஆனால் செயலகக் கட்டிடம் மீது ஒரு தாக்குதலைத் துவங்குவதன் மூலம் பிரித்தானிய அதிகாரிகள் வட்டாரங்களில் ஒரு பயத்தை ஏற்படுத்த நினைத்தனர்.
8 டிசம்பர் 1930 இல், இவர், தினேஷ் குப்தா, பினாய் பாசு ஆகியோருடன் ஐரோப்பிய உடையில், எழுத்தாளர் கட்டிடத்திற்குள் நுழைந்து சிம்ப்சனை சுட்டுக் கொன்றனர். அருகில் இருந்த காவல்துறையினர் இவர்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர்.
விரைவில் காவலர்கள் இவர்களை வளைத்தனர். எனினும், மூவரையும் கைது செய்ய விரும்பவில்லை. இவர் பொட்டாசியம் சயனைடு அருந்தினார். அதே நேரத்தில் தினேஷ் குப்தாவும் பினாய் பாசுவும் தங்கள் சொந்த துப்பாக்கியால் சுட்டுக்கொண்டனர். தினேஷ் உயிருக்கு ஆபத்தான காயத்திலிருந்து தப்பினார். பின்னர் குற்றம் சாட்டப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்டார். இவர் சம்பவ இடத்திலேயே இறந்தார். இந்தச் சம்பவம் நடந்தபோது இவருக்கு 18 வயதுதான் நிரம்பியிருந்தது.
முக்கியத்துவம்
தொகுபினாய், பாதல், தினேஷ் ஆகியோரின் தியாகம் குறிப்பாக வங்காளத்திலும் பொதுவாக இந்தியாவில் மேலும் புரட்சிகர நடவடிக்கைகளை ஊக்குவித்தது.
இந்திய சுதந்திரத்திற்குப் பிறகு, டல்கௌசி சதுக்கத்திற்கு பினாய்-பாதல்-தினேஷ் மூவரின் பெயரால் 'பிபிடி பாக்' என்று பெயரிடப்பட்டது. இவர்களின் எழுத்தாளர்களின் தாக்குதலின் நினைவாக, எழுத்தாளர்கள் கட்டிடத்தின் முதல் தளத்தின் சுவரில் ஒரு தகடு பொறிக்கப்பட்டது.
இதையும் பார்க்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ Mohanta, Sambaru Chandra (2012). "Gupta, Badal". In Islam, Sirajul; Jamal, Ahmed A. (eds.). Banglapedia: National Encyclopedia of Bangladesh (Second ed.). Asiatic Society of Bangladesh.
நூலியல்
தொகு- Hemendranath Dasgupta, Bharater Biplab Kahini, II & III, Calcutta, 1948;
- ரமேஷ் சந்திர மஜும்தார், History of the Freedom Movement in India, III, Calcutta 1963;
- Ganganarayan Chandra, Abismaraniya, Calcutta, 1966.
- Aamar Mama Badal Gupta: A memoir by Biswanath Dasgupta 2020