பாதாள பொன்னியம்மன் கோயில்

சென்னையிலுள்ள அம்மன் கோயில்

பாதாள பொன்னியம்மன் கோயில் என்ற அம்மன் கோயிலானது, இந்தியா தீபகற்பத்தின் தமிழ்நாடு மாநிலத்தில் சென்னை மாவட்டத்தின் கீழ்ப்பாக்கம் நகரில் அமைந்துள்ளது. இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் இக்கோயில் நிர்வகிக்கப்படுகிறது.[1] இக்கோயில் கீழ்ப்பாக்கம் பகுதியில் அமைந்திருந்தாலும், புரசைவாக்கம் மற்றும் கீழ்ப்பாக்கம் சந்திக்கும் எல்லையில் உள்ளதால், 'புரசைவாக்கம் பாதாள பொன்னியம்மன் கோயில்' என்றும் அழைக்கப்படுகிறது. மூலவர் பெண் தெய்வமான பாதாள பொன்னியம்மன். வலது கையில் சூலமும், இடது கையில் அன்ன பாத்திரமும் கொண்டு, அம்மன் சாந்த முகம் தாங்கி அருள்பாலிக்கிறார். சென்னை மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் வாழும் மக்களில் சில லட்சம் குடும்பங்களின் குலதெய்வமாக இக்கோயிலின் மூலவரான பெண் தெய்வமான பாதாள பொன்னியம்மன் விளங்குகிறது. இக்கோயிலினை பெண் பக்தர்கள் அதிகம் தரிசிக்கின்றனர். தினமும் கோயில் திறந்தவுடன் 'திருக்காப்பு பூசை' காலையில் சுமார் 06:15 மணி முதல் 06:45 மணி வரை நடைபெறுகிறது.[2]

பாதாள பொன்னியம்மன் கோயில்
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:தமிழ்நாடு
மாவட்டம்:சென்னை மாவட்டம்
அமைவு:கீழ்ப்பாக்கம்
ஏற்றம்:33 m (108 அடி)
ஆள்கூறுகள்:13°04′52.4″N 80°14′56.1″E / 13.081222°N 80.248917°E / 13.081222; 80.248917
கோயில் தகவல்கள்
இணையதளம்:hrce.tn.gov.in

அமைவிடம் தொகு

கடல் மட்டத்திலிருந்து சுமார் 33 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள பாதாள பொன்னியம்மன் கோயிலின் புவியியல் ஆள்கூறுகள்: 13°04'52.4"N, 80°14'56.1"E (அதாவது, 13.081226°N, 80.248924°E) ஆகும்.

பயன் பெறும் ஊர்கள் தொகு

கீழ்ப்பாக்கம், புரசைவாக்கம், எழும்பூர், சேத்துப்பட்டு, அயனாவரம், கெல்லீஸ், ஓட்டேரி ஆகிய முக்கிய ஊர்களின் பக்தர்கள் தினமும் இக்கோயிலினைத் தரிசனம் செய்கின்றனர்.

கோயில் வரலாறு தொகு

தொண்டை மண்டலத்தின் ஒரு பகுதியாக இருந்த இன்றைய சென்னையை, விசய நகர சாம்ராச்சியத்தைச் சேர்ந்த 'சென்னப்ப நாயக்கர்' ஆட்சி புரிந்து வந்த காலத்தில், வியாபாரம் செய்ய வந்த ஆங்கிலேயர்கள், அவரிடம் குத்தகைக்கு நிலங்களைப் பெற்று, அந்நிலப் பகுதிகளில் ஆட்சியுரிமை செலுத்தி வந்தனர். தற்போதைய கோயில் பகுதியில், அப்போது மாந்தோப்புகள், பூவரசு மரங்கள் அதிகமாகக் காணப்பட்டன. அப்பகுதியையும் குத்தகைக்குப் பெற்றிருந்த ஆங்கிலேயர்கள், விவசாயப் பாசனத்திற்காக அதிக அளவில் தேவைப்பட்ட தண்ணீருக்காக, இங்கிருந்த தோட்டத்தின் வடக்கு மூலையில் கிணறு தோண்ட உத்தரவிட்டனர். முப்பது அடிக்கும் கீழே பாதாளத்தில் தோண்டும் போது, கடப்பாரையில் இடர்ப்பட்ட பாறைத் துண்டை வெளியே எடுக்க, அது அமர்ந்திருந்த கோலத்தில் இருந்த அம்மன் சிலை என்பதையும், அதற்கும் கீழே ஐம்பொன் விக்கிரகம் ஒன்று இருப்பதையும் அறிந்து, சுற்றியிருந்த மக்கள் அபிசேகம், ஆராதனை, நைவேத்தியம் செய்து வழிபாடு செய்தனர். அதன் பின்னர், கல் சிலையை மூலவராகவும், ஐம்பொன் விக்கிரகத்தை உற்சவராகவும் பிரதிட்டை செய்து, பாதாளத்தில் இருந்து வெளிப்பட்டதால், 'பாதாள பொன்னியம்மன்' என்று நாமம் சூட்டி வழிபடத் தொடங்கினர்.[3]

மற்ற தெய்வங்கள் தொகு

மகா விஷ்ணு, சிவன், பார்வதி, நடராசர், தட்சிணாமூர்த்தி, விநாயகர், பிரம்மா, துர்க்கை, நர்த்தன கணபதி, முருகன், அனுமன், நவக்கிரகங்கள், கால பைரவர், நாகர்கள், அண்ணன்மார், பரிவார தேவதைகள் என்று அழைக்கப்படும் ஆண் வீரர்கள் எழுவர் ஆகியவை இக்கோயிலின் மற்ற முக்கிய தெய்வங்கள்.

தொகுப்பு சுற்றுலா தொகு

இந்து சமய அறநிலையத் துறை மற்றும் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் சார்பில், சென்னையிலுள்ள முக்கிய அம்மன் கோயில்களை பக்தர்கள் தரிசனம் செய்யும் பொருட்டு, 2022 ஆம் ஆண்டில் ஆடி மாதத்தில் தொகுப்பு சுற்றுலா செல்ல ஏற்பாடு செய்யப்பட்டது.[4] இரண்டு வகையான சுற்றுலாக்களில், பயணம் காலை 08:30 மணி முதல் இரவு 08:30 மணி வரை கொண்ட ஒரு தொகுப்பு சுற்றுலாவில், ரூபாய் 700 கட்டணமாக செலுத்தி, கீழ்ப்பாக்கம் பாதாள பொன்னியம்மன் கோயில் உட்பட சென்னையிலுள்ள முக்கிய 10 கோயில்களைத் தரிசனம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.[5] விரைவான சிறப்பு தரிசனம், கோயில் பிரசாதம், மதிய உணவு ஆகியவை அத்தொகுப்பில் அடங்கும்.[6]

மேற்கோள்கள் தொகு

  1. "Arulmigu Pathala Ponniamman Temple, Kilpauk, Chennai - 600010, Chennai District [TM000272].,Pathalaponniamman,Pathalaponniamman". hrce.tn.gov.in. பார்க்கப்பட்ட நாள் 2022-10-18.
  2. "Arulmigu Pathala Ponniamman Temple, Kilpauk, Chennai - 600010, Chennai District [TM000272].,Pathalaponniamman,Pathalaponniamman". hrce.tn.gov.in. பார்க்கப்பட்ட நாள் 2022-10-18.
  3. மலர், மாலை (2021-11-29). "பாதாள பொன்னியம்மன் கோவில்- புரசைவாக்கம்". www.maalaimalar.com. பார்க்கப்பட்ட நாள் 2022-10-18.
  4. "ஆன்மிக பயணிகள் பயன்பெறும் வகையில் ஆடி அம்மன் தொகுப்பு சுற்றுலா: தமிழக அரசு ஏற்பாடு". www.dinakaran.com. பார்க்கப்பட்ட நாள் 2022-10-18.
  5. "ஆடி மாதத்தை முன்னிட்டு அம்மன் கோயில் ஒருநாள் தொகுப்பு சுற்றுலா: சென்னையில் சுற்றுலா வளர்ச்சிக் கழகம் ஏற்பாடு". Hindu Tamil Thisai. பார்க்கப்பட்ட நாள் 2022-10-18.
  6. "ஆடி அம்மன் ஆன்மீக சுற்றுலா தொகுப்பு - தமிழக அரசு அறிவிப்பு." www.toptamilnews.com. 2022-07-21. பார்க்கப்பட்ட நாள் 2022-10-18.