பாத்திமா பேகம் (அரசியல்வாதி)

பாத்திமா பேகம் (11 பிப்ரவரி 1890 – 1958) பாக்கித்தான் இயக்கத்தின் மதிப்பிற்குரிய பெண் ஆவார். [1]

ஆரம்பகால வாழ்க்கையும் கல்வியும் தொகு

இவர், லாகூரின் ஒரு கௌரவமானக் குடும்பத்தில் பிறந்தார். பைசா அக்பர் (பென்னி செய்தித்தாள்) என்ற ஒரு பைசா செய்தித்தாளுக்குச் சொந்தமான முன்ஷி மௌல்வி மெஹபூப் ஆலமின் மகளாவார். [2] பாத்திமா பேகம் தனது ஆரம்பக் கல்வியை வீட்டிலேயே பெற்று பஞ்சாப் பல்கலைக்கழகத்தில் முதுகலைப் பட்டப்படிப்பை முடித்தார். பின்னர் இவர் லேடி மக்லாகன் பள்ளியில் ஆசிரியரானார்.

சமூக மற்றும் அரசியல் நடவடிக்கைகள் தொகு

1909 ஆம் ஆண்டில், ஷெரீப் பீபி என்ற பெண்களுக்கான வாரமிருமுறை வெளியான இதழின் ஆசிரியராக இருந்தார். 1908 இல், இசுலாமிய பெண்கள் சங்கம் நிறுவப்பட்டது. பேகம் மியான் முஹம்மது ஷாஃபி என்பவர் அதன் முதல் தலைவராகவும், பாத்திமா பேகம் அதன் பொதுச் செயலாளராகவும் நியமிக்கப்பட்டார். 1921ஆம் ஆண்டில், இவர் ஹசாரா மவட்டத்திலுள்ள மரியாதைக்குரிய குடும்பத்தில் திருமணம் செய்து கொண்டார். ஆனால் சில வருடங்களுக்குப் பிறகு, இவரது கணவர் இறந்துவிட்டார். பின்னர், இவர் லாகூரில் உள்ள தனது தந்தையின் வீட்டிற்கு திரும்பினார். பின்னர், மும்பை மாநகராட்சியின் கௌரவ ஆய்வாளராக நியமிக்கப்பட்டார். [3]

அதன்பிறகு, காயிதே-அசாம் முகம்மது அலி ஜின்னாவின் ஆலோசனையின் பேரில், அகில இந்திய முஸ்லிம் லீக்கின் சின்னத்தின் நிலையை உயர்த்துவதற்காக இவர் லாகூருக்குச் சென்றார். இவர் ஏற்கனவே மும்பையின் அகில இந்திய முஸ்லிம் லீக்கின் மகளிர் பிரிவில் பணிபுரிந்து வந்தார். அவர் கதுன் (பத்திரிகை) என்ற வார இதழையும் வெளியிடார். இந்த இதழ் மத, சமூக, கல்வி மற்றும் இலக்கிய தலைப்புகளை உள்ளடக்கியது. அஞ்சுமான்-இ-கவாதின்-இ-இஸ்லாம் (இசுலாமிய பெண்கள் சங்கம்), அகில இந்திய மகளிர் மாநாடு மற்றும் அகில இந்திய முஸ்லிம் லீக் உள்ளிட்ட பல சமூக மற்றும் அரசியல் அமைப்புகளில் அவர் தீவிரமாக செயல்பட்டார். முஸ்லிம் லீக் மற்றும் முகம்மது அலி ஜின்னாவின் சித்தாந்தத்தை ஊக்குவிப்பதற்காக இவர் பயன்படுத்தப்பட்டார். [2][4]

பாத்திமா பேகம் 1937இல் மும்பையிலிருந்து லாகூர் திரும்பி அரசியல் நடவடிக்கைகள் மற்றும் பொது எதிர்ப்பில் ஈடுபட்டார். இந்திய முஸ்லிம்களை மீண்டும் எழுப்புவதிலும், பஞ்சாப், வடமேற்கு எல்லைப்புற மாகாணம், பீகார் போன்ற பகுதிகளின் பெண்கள் மத்தியில் அரசியல் விழிப்புணர்வை ஏற்படுத்துவதிலும் இவர் மிகவும் தீவிரமாக இருந்தார். [2][4] பிரித்தானிய இந்தியாவின் லாகூரில் உள்ள ஜின்னா இஸ்லாமியா பெண்கள் கல்லூரியின் நிறுவனர்-முதல்வராகவும் இருந்தார். [4][5] ஜின்னா பெண்கள் கல்லூரி இவரது நடவடிக்கைகளின் பிரதான மையமாகவும் , முஸ்லிம் லீக்கின் பெண்கள் பிரிவின் முக்கிய புள்ளியாகவும் இருந்தது. ஒவ்வொரு நாள் காலையிலும், பாத்திமா பேகம் பாக்கித்தான் இயக்கத்தில் தங்கள் பொறுப்புகள் குறித்து இளம் பெண்களிடையே உரையாற்றுவார்.

1940ஆம் ஆண்டில், இவர் அகில இந்திய முஸ்லிம் லீக்கின் வருடாந்திரக் கூட்டத்தை ஏற்பாடு செய்தார். லாகூரில் இந்த எல்லாப் பணிகளையும் செய்தபின், இவர் வடமேற்கு எல்லைப்புற மாகாணத்திற்கு செல்ல முடிவு செய்தார். 1943ஆம் ஆண்டில், பெசாவருக்குச் சென்று, அகில இந்திய முஸ்லிம் லீக்கின் கொடியின் கீழ் முஸ்லிம் பெண்களை ஒன்றிணைக்கத் தொடங்கினார். வங்காளத்தில் பஞ்சம் மற்றும் மிகவும் மோசமான சுகாதார நிலைமைகள் இருந்தபோது, பாதிக்கப்பட்டவர்களுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க தனது தோழர்களுடன் நடவடிக்கை எடுத்தார். 1946ஆம் ஆண்டில், முஸ்லிம்கள் பரந்த அளவில் படுகொலை செய்யப்பட்டபோது, இவர் ஆறுதலளிக்கச் சென்று பாதிக்கப்பட்ட குடும்பங்களைக் கவனித்து விதவைகள் மற்றும் குழந்தைகளுக்கு உதவினார். 1946 இந்திய மாகாண தேர்தல்களுக்கு முன்னர், இவர் மற்ற பிரபல முஸ்லிம் பெண்களுடன் சேர்ந்து, பஞ்சாப் முழுவதும் பிரச்சாரம் செய்தார். 1947 ஆம் ஆண்டில், பாக்கித்தான் உருவான பின்னர், இந்தியாவில் இருந்து உள்வரும் அகதிகளின் மறுவாழ்வுக்காக இவர் பணியாற்றினார். அதன் பிறகு இவர் முஸ்லிம் லீக்கின் மாகாணத் தலைவரானார்.[2][4][3]

மரணமும் மரபும் தொகு

பாத்திமா பேகம் 1958இல் இறந்தார். [2] பிரிட்டிசு இந்தியாவின் முதல் பெண் முஸ்லிம் பத்திரிகையாளர் என்ற பெருமை இவருக்கு கிடைத்தது.[4][3] பாக்கித்தான் சுதந்திரத்திற்கு முன்னும் பின்னும் முஸ்லிம் பெண்கள் குறிப்பிடத்தக்க பங்கைக் கொண்டிருந்தனர். இவர் குறித்து பாக்கித்தானின் ஆராய்ச்சி சங்கத்தின் இதழில் வெளிவந்தது. [4][3]

மேற்கோள்கள் தொகு

  1. Sharmain Siddiqui. "Profile of Fatima Begum". Accessing Muslim Lives (accessingmuslimlives.org) a US university website. பார்க்கப்பட்ட நாள் 18 January 2020.
  2. 2.0 2.1 2.2 2.3 2.4 Sharmain Siddiqui. "Profile of Fatima Begum". Accessing Muslim Lives (accessingmuslimlives.org) a US university website. பார்க்கப்பட்ட நாள் 18 January 2020.
  3. 3.0 3.1 3.2 3.3 Zarina Patel (14 August 2019). "The unsung heroes of Pakistan Movement". Business Recorder (newspaper). https://fp.brecorder.com/2019/08/20190814506360/. 
  4. 4.0 4.1 4.2 4.3 4.4 4.5 Naumana Kiran (1 July 2017). "Fatima Begum: A Narrative of Unsung Hero of Pakistan Movement" (PDF). University of the Punjab (pu.edu.pk) website (A Research Paper). பார்க்கப்பட்ட நாள் 18 January 2020.
  5. Singh, Armajit (2008), Foundation of Pakistan: A Study of the Women Leadership of the Punjab Provincial Muslim League. J.R.S.P., Vol. 45, No. 1