பான் முனை சண்டை

பான் முனை சண்டை (Battle of Cape Bon) என்பது இரண்டாம் உலகப் போரின் வடக்கு ஆப்பிரிக்கப் போர் முனையில் நிகழ்ந்த ஒரு கடற்படைச் சண்டை. நடுநிலக்கடலில் நடந்த இச்சண்டையில் இத்தாலியின் இரு குரூசர் ரக கப்பல்களை நேச நாட்டுப் போர்க்கப்பல்கள் மூழ்கடித்தன.

பான் முனை சண்டை
வடக்கு ஆப்பிரிக்கப் போர்முனையின் பகுதி
நாள் 13 டிசம்பர் 1941
இடம் நடுநிலக்கடல், பான் முனை, துனிசியா
நேச நாட்டு வெற்றி
பிரிவினர்
 ஐக்கிய இராச்சியம்
 நெதர்லாந்து
 இத்தாலி
தளபதிகள், தலைவர்கள்
ஐக்கிய இராச்சியம் ஜி. எச். ஸ்டோக்ஸ் இத்தாலி அண்டோனியோ டொஸ்கானோ 
பலம்
4 டெஸ்டிராயர்கள் 2 இலகு ரக குரூசர்கள்
1 டொர்பீடொ படகு
இழப்புகள்
0 2 இலகு ரக குரூசர்கள் மூழ்கடிக்கப்பட்டன
900+ மாண்டவர்

வடக்கு ஆப்பிரிக்கப் போர் முனையில் மேற்குப் பாலைவனப் போர்த்தொடர் நடந்து கொண்டிருந்த போது, இரு தரப்பினருக்கும் நடுநிலக்கடல் வழியாக தளவாடங்கள் அனுப்பப்பட்டன. எனவே நடுநிலக்கடலைக் கட்டுப்பட்டுத்த இத்தாலியக் கடற்படைக்கும் பிரிட்டானியக் கடற்படைக்கும் கடும் சண்டை நிகழ்ந்து வந்தது. நடுநிலக்கடலில் அமைந்துள்ள மால்டா தீவு தளத்திலிருந்து இத்தாலிய சரக்குக் கப்பல் கூட்டங்களை பிரிட்டானியக் கடற்படையும் வான்படையும் தாக்கி வந்தன. பிரிட்டானியக் கடற்படையின் இன்னொரு பிரிவு அலெக்சாந்திரியா துறைமுகத்திலிருந்து அச்சு நாட்டுக் கடற்படையினைத் தாக்கி வந்தது. டிசம்பர் 1941ல் அலெக்சாந்திரியா கடற்படைப் பிரிவில் சேர மூன்று பிரிட்டானிய டெஸ்டிராயர் ரக போர்க் கப்பல்களும் ஒரு டச்சு டெஸ்டிராயர் கப்பலும் நடுநிலக்கடல் வழியாக அனுப்பப்பட்டன. அதே நேரம் இத்தாலியிலிருந்து திரிப்பொலிக்கு வானூர்தி எரிபொருளை ஏற்றிக் கொண்டு இத்தாலிய குரூசர் ரக போர்க்கப்பல்களான ஆல்பெர்ட்டொ டி கிசானோ, அல்பெரிக்கொ டி பார்பியானோ இரண்டும் கிளம்பின. அதனை வழிமறித்து மூழ்கடிக்க பிரிட்டானிய கடற்படைப் பிரிவுக்கு உத்தரவிடப்பட்டது. டிசம்பர் 13, 1941ல் துனிசியாவின் பான் முனை (Cape Bon) அருகில் இக்கப்பல்களைத் நேச நாட்டு டெஸ்டிராயர்கள் தாக்கின. ஐந்தே நிமிடம் நடைபெற்ற இத்தாக்குதலில் இரு இத்தாலிய குரூசர் கப்பல்களும் மூழ்கடிக்கப்பட்டன. இத்தாலியக் கப்பல்களின் தளத்தில் அடுக்கப்பட்டிருந்த எரிபொருள் பீப்பாய்கள் தீப்பற்றிக் கொண்டதால், அக்கப்பல்கள் விரைவில் வெடித்து சிதறின. இதனால் அவற்றில் இருந்த இத்தாலிய மாலுமிகளிடையே பெரும் உயிரிழப்பு ஏற்பட்டது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பான்_முனை_சண்டை&oldid=1359560" இலிருந்து மீள்விக்கப்பட்டது