பிங்கெனின் ஹில்டெகார்ட்
பிங்கெனின் ஆசிர்வதிக்கப்பட்ட ஹில்டெகார்ட் (Blessed Hildegard of Bingen) (இடாய்ச்சு:Hildegard von Bingen; இலத்தீன்:Hildegardis Bingensis) (1098 – 17 செப்டம்பர் 1179), மற்றும் புனித இல்டெகார்ட், ரைனின் இறைவாக்கினர் என்றும் அறியப்படும் இவர் ஓர் எழுத்தாளர், இறை இசையமைப்பாளர், மெய்யியலாளர்,கிறித்தவ உள்ளுணர்வாளர், இறைக்காட்சியாளர், செருமானிய கன்னியர் மடத்தின் தலைவியாக இருந்தவரும், பன்முக திறனாளரும் ஆவார்.[2] இவர் கத்தோலிக்கத் திருச்சபையில் பெண் இறைவாக்கினர் என்று அங்கீகரிக்கப்பட்ட முதல் பெண் ஆவார்.
பிங்கெனின் ஹில்டெகார்ட் | |
---|---|
இல்டெகார்ட் ஞானம் பெறுவதையும் அதனை தமது எழுத்தரும் செயலருமானவருக்கு சொல்விப்பதும் லிபெர் சிவியசு (Liber Scivias) சித்திரமொன்றில் | |
மறைவல்லுநர்; ஆதீனத்தலைவர்; ரைனின் இறைவாக்கினர் | |
பிறப்பு | 1098 பெர்மெர்சீம் வோர் டெர் யோகே |
இறப்பு | செப்டம்பர் 17, 1179 ரைன் ஆற்றுக்கரை பிங்கென் | (அகவை 81)
ஏற்கும் சபை/சமயங்கள் | ரோமன் கத்தோலிக்கம், ஆங்கிலிக்க ஒன்றியம், லூதரனியம் |
புனிதர் பட்டம் | 10 மே 2012[1] இல், வத்திக்கான் நகரம் by திருத்தந்தை பதினாறாம் பெனடிக்ட் |
முக்கிய திருத்தலங்கள் | ஐபிங்கென் மட ஆலயம் |
திருவிழா | செப்டம்பர் 17 |
1136ஆம் ஆண்டில் சக கன்னியர்களால் ஆதீனத்தலைவியாக தேர்ந்தெடுக்கப்பட்ட இல்டெகார்ட் 1150ஆம் ஆண்டில் ரூபரட்சுபெர்க்கில் ஓர் மடத்தையும் 1165ஆம் ஆண்டு ஐபிங்கெனில் ஓர் மடத்தையும் நிறுவினார். இவரது ஆக்கமான ஓர்டோ விர்சுதும் (Ordo Virtutum) கிறித்தவ சமய நாடகங்களுக்கு ஓர் முன்னோடியாகும்.[3] சமயவியல், தாவரவியல் மற்றும் மருத்துவத் துறைகளில் இவர் பல நூல்களை எழுதியுள்ளார். மேலும் இவரது படைப்புகளில் கடிதங்கள், சமயப் பாடல்கள், கவிதைகள் மற்றும் நாடகங்களும் அடங்கும். சிறு சித்தரிப்புகளையும் மேற்பார்வையிட்டுள்ளார்.
வாழ்க்கை வரலாறு
தொகு1098ம் ஆண்டு ஜெர்மனியின் உயர்குலத்தில் பணக்காரக் குடும்பத்தில் ஹில்டெகார்ட் பிறந்தார். தனது 8வது வயதில் பெனடிக்ட் சபை துறவு மடத்துக்குக் கல்வி பயிலச் சென்றார். 18வது வயதில் அக்கன்னியர் மடத்திலேயே சேர்ந்து துறவு வாழ்வை மேற்கொண்டார். 20 ஆண்டுகள் கழித்து 1136ம் ஆண்டில் துறவு மடத்தின் தலைவியானார். அதற்கு அடுத்த நான்கு ஆண்டுகள் இறைக் காட்சிகளைக் கண்டார் என்பர். 1140ம் ஆண்டு முதல் 1150ம் ஆண்டுவரை அக்காட்சிகளைப் படங்களோடும் விளக்கங்களோடும் எழுதி வைத்துள்ளார். இதற்கிடையில் இக்காட்சிகள் உண்மையானதா எனக் கண்டறிவதற்கு திருத்தந்தை மூன்றாம் யூஜின் ஒரு விசாரணைக் குழுவை அனுப்பினார். இக்காட்சிகள் உண்மையானவை என அக்குழு திருத்தந்தைக்கு அறிக்கை சமர்ப்பித்தது.
ஹில்டெகார்ட், தெற்கு ஜெர்மனி, சுவிட்சர்லாந்து, பாரிஸ் எனப் பல இடங்களுக்குப் பயணம் செய்து போதித்து வந்தார். இவரது மறையுரைகளைக் கேட்டவர் அனைவரும் அவர் பக்கம் ஈர்க்கப்பட்டனர். எழுத்துவடிவிலும் மறையுரைகளைத் தருமாறு அவர்கள் கேட்டுக் கொண்டனர். ஹில்டெகார்ட் தனது வாழ்வின் இறுதிக் கட்டத்தில் துன்பம் அனுபவித்தார். திருச்சபையிலிருந்து விலக்கி வைக்கப்பட்டிருந்த இளம் கிறிஸ்தவர் ஒருவர் இறந்த போது அவருக்கு கிறிஸ்தவ முறைப்படி அடக்கச் சடங்கை நிறைவேற்றினார். இதனால் கடுமையாக எதிர்க்கப்பட்டார். இந்தக் கிறிஸ்தவர் மரணப்படுக்கையில் தனது தவறுகளுக்காக வருந்தி திருவருட்சாதனங்களையும் பெற்றார் என்பது இவர் தரப்பு வாதம். இதனால் இவரது கன்னியர் இல்லம் விலக்கி வைக்கப்பட்டது. இதனைக் கடுமையாய் எதிர்த்தார் ஹில்டெகார்ட். பின்னர் அது இவ்விலக்கு நீக்கப்பட்டது. 1179ம் ஆண்டு செப்டம்பர் 17ம் தேதி தனது 81வது வயதில் இவர் இறந்தார்.
பேரரசர்கள், திருத்தந்தையர்கள், ஆயர்கள், அருள்சகோதரிகள் மற்றும் உயர்குலப் பிரபுக்களுக்கு எழுதிய நூற்றுக்கு மேற்பட்ட கடிதங்கள், ஒரு நாடகம் உட்பட 72 பாடல்கள், ஏழு புத்தகங்கள் உட்பட ஹில்டெகார்ட் எழுதியவை இன்றும் உள்ளன. இவர் எழுதிய இசைக் குறிப்புகள் இக்காலத்திலும் வாசிக்கக்கூடிய வடிவில் உள்ளன. இவரது எழுத்துக்களில் அறிவியல், கலை, மதம் ஆகிய அனைத்துத் துறைகளும் இருக்கின்றன. ஒவ்வொரு மனிதரையும் இறைவனின் சாயலாகப் பார்த்த இவர், சமூகநீதிக்காவும், ஒடுக்கப்பட்டோரின் விடுதலைக்காவும் அயராது உழைத்தவர். 12ம் நூற்றாண்டில் திருச்சபையில் பெரும் மாற்றத்திற்கும் சீர்திருத்தத்திற்கும் வித்திட்டவர் இவர் என நம்பப்படுகின்றது.
புனிதர் பட்டமளிப்பு
தொகுஇவருக்கு முறைமையான புனிதர் பட்டமளிப்பு நிகழவில்லை எனினும் இவரின் பெயர் புனிதர்கள் பட்டியலில் இருந்தது, இவரின் புனிதர் பட்ட நிலையில் இருந்த குழப்பத்தை நீக்க திருத்தந்தை பதினாறாம் பெனடிக்ட், 10 மே 2012 இவரின் பக்தியை அதிகாரப்பூர்வமான ஒன்றாக அறிவித்தார். இவரை திருச்சபையின் மறைவல்லுநர் என 7 அக்டோபர் 2012இல் திருத்தந்தை பதினாறாம் பெனடிக்ட் அறிவித்தார்
இசையும் எழுத்தும்
தொகுஇவர் அறுப்பத்து ஒன்பது இசைத் தொகுப்புகளை செய்தவர். அதில் அதிகம் அறியப்பட்டது "நல்லொழுக்கங்களின் விளையாட்டு" (ஓர்டா விர்டட்டும்) ஆகும். இவர் இசைத்தொகுப்புகள் செய்ததோடு மூன்று நூல்களையும் எழுதியுள்ளார். அவை,
- சிவியாசு (வழியை அறி) - கி. பி. 1151ல் எழுதி முடிக்கப்பட்டது.
- இலிபெர் விட்டே மெரிடோரியம் (வாழ்க்கைகான தகுதிகள்)
- இலிபெர் இடிவினோரம் ஒபெரம் (கடவுளின் செயல்கள்)
மேலும் இவர் இயற்கைசார் ஆய்வு நூலையும் (ஃபிசிசியா) எழுதியுள்ளார். இவர் தன் நூல்களில் தன்னென உருவாக்கிக் கொண்ட இருபத்தி மூன்று தனி எழுத்துருக்களையும் பயன்படுத்தினார்.
தற்காலத்தில்
தொகுவிண்வெளியில் உள்ள ஒரு குறுங்கோளுக்கு இவரின் பெயரான ஹில்டெகார்ட் என்பதையும் சேர்த்து 898 ஹில்டெகார்ட் எனப் பெயர் இடப்பட்டுள்ளது. கி. பி. 1999ஆம் ஆண்டில் பி. பி. சி. யின் ஆவணப் படமான "பின்செனின் ஹில்டெகார்ட்" திரைப்படம் இவரின் நினைவால் இயற்றப்பட்டது. இதில் பட்ரீசியா ரௌட்லட்சு ஹில்டெகார்டாக நடித்திருந்தார். கி. பி. 2012ஆம் ஆண்டில் மேரி சர்ராட்டு தான் எழுதிய இலுமினேசன்சு என்னும் புதினத்தில் இவரின் வாழ்க்கை வரலாற்றை எழுதி இருக்கிறார்.
மேற்கோள்கள்
தொகு- ↑ "St. Hildegard". கத்தோலிக்க கலைக்களஞ்சியம் (ஆங்கிலம்). (1913). நியூயார்க்: இராபர்ட் ஆபில்டன் நிறுவனம்.
- ↑ Bennett, Judith M. and Hollister, Warren C. Medieval Europe: A Short History (New York: McGraw-Hill, 2001), 317.
- ↑ Some writers have speculated a distant origin for opera in this piece, though without any evidence. See: [1]; alt ஆப்பெரா, see Florentine Camerata in the province of Milan, Italy. [2] and [3]
வெளியிணைப்புகள்
தொகு- Hildegard Center for the Arts, A Faith Based Fine Arts Center in Lincoln Nebraska
- International Society of Hildegard von Bingen Studies
- A Hildegard FAQ Sheet பரணிடப்பட்டது 2011-08-24 at the வந்தவழி இயந்திரம்
- Hildegard Von Bingen
- "St. Hildegard". கத்தோலிக்க கலைக்களஞ்சியம் (ஆங்கிலம்). (1913). நியூயார்க்: இராபர்ட் ஆபில்டன் நிறுவனம்.
- Hildegard of Bingen Documents, History, Sites to see today, etc.
- திருஅவையில் திருப்புமுனைகள் – புனித ஹில்டெகார்டு[தொடர்பிழந்த இணைப்பு] - வத்திக்கான் வானொலி