பிஜய ஜெனா
பிஜயா ஜெனா (Bijaya Jena, டோலி ஜெனா அல்லது பிஜோயா ஜெனா என்றும் அழைக்கப்படுகிறார்) ஒடிசாவின் கட்டக்கில் ஆகத்து 16 ஆம் நாள் பிறந்த, இவர் ஓர் இந்திய நடிகை, திரைப்பட இயக்குநர், தயாரிப்பாளர் ஆவார்.[1] இவர் ஒடிய மொழித் திரைப்படமான தாரா படத்தை இயக்கியதற்காக இந்திய தேசிய திரைப்பட விருதை (சிறந்த இயக்குநர்) பெற்றார்.
பிஜய ஜெனா | |
---|---|
பிஜய ஜெனா (டோலி ஜெனா) | |
பிறப்பு | 16 ஆகத்து கட்டக், ஒடிசா |
தேசியம் | இந்தியர் |
பணி | இயக்குநர், தயாரிப்பாளர் |
ரசியா சுல்தான் படத்தில் லைலாவாக நடித்த ஜெனா பின்னர் சில ஒடிய படங்களில் நடித்தார். பல படங்களில் நடித்த நிலையில், இவர் சொந்தமாக பல திரைக்கதைகளைகளை எழுதி படங்களை இயக்கும் பணியில் ஈடுபட்டார்.[2] இவர் 1992 முதல் 1995 வரை திரைப்படம் மற்றும் தொலைக்காட்சிக் கல்லூரியின் நிர்வாகக் குழுவில் பணியாற்றினார்.
ஆரம்ப கால வாழ்க்கை
தொகுமூன்று பிள்ளைகளில் இளையவராக ஜெனா பிறந்தார். இவரது தாயார் ஜமீந்தார் பின்னணியில் இருந்து வந்தவர். இவரது தந்தை, மறைந்த பி. சி ஜெனா ஒரு குடிசார் பொறியாளர் ஆவார். வளரிளம் பருவத்தில், ஜெனா திரைப்படம் மற்றும் தொலைக்காட்சிக் கல்லூரியில் சேர்ந்தார். அதில் திரைப்பட நடிப்பில் பட்டயப் படிப்பை படித்தார்.
நடிப்பு வாழ்க்கை
தொகுஜெனா இந்தி மற்றும் ஒடிய மொழித் திரைப்படங்களிலும், ஏக் க்கானி, விக்ரம் பேட்டால், பரம் வீர் சக்ரா போன்ற தொலைக்காட்சித் தொடர்களிலும், கோகோலின் இன்ஸ்பெக்டர் ஜெனரல், மகேஷ் எல்குஞ்ச்வாரின் அக்ஸ் அவுர் ஐனா போன்ற தொலைக்காட்சி நாடகங்களிலும் நடித்துள்ளார். ஒடிய திரைப்படமான ஜகா பாலியா படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகைக்கான மாநில விருதைப் பெற்றார். கே. ஏ. அப்பாசின் தி நக்சலைட்ஸ், கமல் அம்ரோஹியின் ரஸியா சுல்தான், கேதன் மேத்தாவின் ஹோலி போன்ற இந்தித் திரைப்படங்களில் நடித்துள்ளார். சிறந்த ஒடியா திரைப்படத்திற்கான தேசிய விருதைப் பெற்ற ஹக்கிம் பாபுவில் இவர் நடித்துள்ளார். நிக்கோலஸ் மேயர் இயக்கிய இஸ்மாயில் மெர்ச்சன்ட்டின் பிரித்தானிய திரைப்படமான தி டிசீவர்ஸிலும் ஜெனா நடித்துள்ளார்.[3][4]
எழுத்து, இயக்கம், தயாரிப்பு வாழ்க்கை
தொகு1992 இல், ஜீனா ஒடியா மொழித் திரைப்படமான தாரா மூலம் இயக்குநராக அறிமுகமானார். இப்படத்தை இணைந்து எழுதி, தயாரித்தார். மேலும் முதன்மைப் பாத்திரத்திலும் நடித்தார்.[5] தாரா படமானது முக்கிய திரைக்கதை எழுத்தாளராக இருந்த பிமல் தத்தின் சிறுகதையை அடிப்படையாகக் கொண்டது. தாரா படம் சுமார் US$20,000 செலவில் முடிக்கப்பட்டது. இதற்கு ஜெனா குடும்ப உறுப்பினர்கள் மற்றும் தேசிய மற்றும் மாநில அரசு நிறுவனங்களிடமிருந்து கடன் வாங்கினார். இப்படம் 1992 ஆம் ஆண்டு சிறந்த ஒடியா திரைப்படத்திற்கான தேசிய விருதைப் பெற்றது. நடுவர் குழுவின் தலைவர் அடூர் கோபாலகிருஷ்ணன் ஜெனாவை ஒரு நம்பிக்கையூட்டும் இயக்குநர் என்று வர்ணித்தார். தாரா 1992 பிரான்சின் மார்சேயில்ஸ் இன்டர்நேஷனல் டு சினிமா Au Feminin மற்றும் 1992 கெய்ரோ சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது.
ஜெனாவின் இரண்டாவது படமாக, இந்தி படமான அபாஸ் (1997) ஆகும்.[6] இப்படத்தை ஜெனா நடித்து, உரையாடல் எழுதி, இயக்கி, தயாரித்தார். படத்தின் செலவு தோராயமாக US$60,000 ஆகும். படத்தின் கதை ஆலோசகராக இஸ்த்வான் கால் இருந்தார். அபாஸ் 1997 பிரான்சில் ஃபெஸ்டிவல் இன்டர்நேஷனல் டு ஃபிலிம் டி லா ரோசெல், 1997 மலேசியா, பினாங்கு திரைப்பட விழா, 1997 கெய்ரோ சர்வதேச திரைப்பட விழா போன்ற திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டது. 2013 இல், அபாஸ் பிபிசி சேனல் 4, பிபிசியில் "100 வருட இந்திய சினிமா" கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக ஒளிபரப்பப்பட்டது. இது அக்டோபர் 2014 இல் மொரிசியஸ் ஒலிபரப்பு நிறுவனத்தால் காட்டப்பட்டது.
2016 ஆம் ஆண்டில், தனபாணி ("தி சர்வைவர்") திரைப்படத்தை உருவாக்க ஜெனா திட்டமிட்டுள்ளார். மறைந்த கோபிநாத் மொகந்தியின் ஒடியா புதினத்தைத் தழுவி ஜெனா திரைக்கதை எழுதினார். திரைக்கதையானது இந்திய தேசிய திரைப்பட மேம்பாட்டுக் கழகத்தால் அங்கீகரிக்கப்பட்டது.[7]
மேற்கோள்கள்
தொகு- ↑ "Bijaya Jena: Movies, Photos, Videos, News, Biography & Birthday | eTimes". timesofindia.indiatimes.com. பார்க்கப்பட்ட நாள் 2021-02-05.
- ↑ "Bijaya Jena". IMDb. பார்க்கப்பட்ட நாள் 2016-12-20.
- ↑ Das, Pranab; Das, Ajit; Das, Hemanta; Jaya (2000-01-01), Hakim Babu, பார்க்கப்பட்ட நாள் 2016-12-20
- ↑ "Merchant Ivory Productions". www.merchantivory.com. பார்க்கப்பட்ட நாள் 2016-12-20.
- ↑ "An Actor and a Director" தி இந்து
- ↑ Abhaas IMDb.
- ↑ Indo French co production பரணிடப்பட்டது 29 சூலை 2017 at the வந்தவழி இயந்திரம் Bollywood Trade website 2016.
வெளி இணைப்புகள்
தொகு- அதிகாரப்பூர்வ இணையதளம்
- ஐ.எம்.டி.பி இணையத்தளத்தில் பிஜய ஜெனா
- "Bijaya Jena". Author biography on Huffington Post.