பிரசாந்த் பூசண்

பிரசாந்த் பூசண் (Prashant Bhushan) (பிறப்பு 1956) ஓர் இந்திய வழக்கறிஞர்.[1] தமது தந்தை சாந்தி பூசணுடன் இணைந்து மக்கள் குறைகேட்பு ஆணையர் சட்டமுன் வரைவினைத் தயாரிப்பதில் உதவி புரிந்துள்ளார். இந்திய அரசு இந்த சட்ட முன்வரைவினை முன்னெடுத்துச் செல்ல அமைத்துள்ள கூட்டுக்குழுவில் குடிமக்கள் சார்பான ஐந்து உறுப்பினர்களில் இவரும் ஒருவர். தந்தையும் மகனும் கூட்டுக்குழுவில் இடம்பெறுவது குறித்த விவாதங்கள் எழுந்துள்ளன.

பிரசாந்த் பூசண்
பிரசாந்த் பூசண்
பிறப்பு15 அக்டோபர் 1956 (1956-10-15) (அகவை 67)
தேசியம்இந்தியர்
படித்த கல்வி நிறுவனங்கள்அலகாபாத் பல்கலைக்கழகம்
பணிவழக்கறிஞர், சமூக ஆர்வலர்
பெற்றோர்சாந்தி பூசண்

இளமை தொகு

பிரசாந்த் சாந்தி பூசணின் மகனாவார். தில்லிப் புறநகர் நொய்டாவில் வசிக்கிறார். சாந்தி பூசண், குமுத் பூசண் இணையரின் நான்கு குழந்தைகளில் மூத்தவர் பிரசாந்த். அவர்தம் தந்தை ஒரு வழக்கறிஞர், சமூகச் செயல்பாட்டாளர். அவர் மொரார்ஜி தேசாய் அரசில் மத்திய சட்ட அமைச்சர் ஆக இருந்தவர் ஆவார்.[2] ஐ.ஐ.டி சென்னை மற்றும் பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தில் சிறிது காலம் பயின்ற பிரசாந்த் அலகாபாத் பல்கலைக்கழகத்தில் சட்டப் பட்டம் பெற்றார். 1974 ஆம் ஆண்டில் இந்திரா காந்தியின் தேர்தலை ஒதுக்கி வைத்த வழக்கு குறித்த ஒரு புத்தகமான "தி கேஸ் தட் ஷூக் இந்தியா" (The Case that Shook India) வை எழுதினார்.[3][4]

பணிவாழ்வு தொகு

பிரசாந்த் தன் தந்தையால் பொதுச் செயல்பாட்டில் ஈர்க்கப்பட்டார். மனித உரிமைகள், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, அரசு ஊழியர்களின் பொறுப்புக்கூறல் ஆகியவை அவரின் முக்கிய ஆர்வங்களாக இருந்து வருகின்றன. அவர் பொது நல வழக்கு மையம் (சிபிஐஎல்), சிவில் உரிமைகளுக்கான மக்கள் சங்கம் (பி.யூ.சி.எல்), மற்றும் பன்னாட்டளவிலான வெளிப்படைத்தன்மை (Transparency International) (இந்தியா) உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளுடன் தொடர்புடையவர்.[5] நீதித்துறை பொறுப்புக்கூறல், சீர்திருத்தங்களுக்கான பிரச்சாரத்தின் செயற்குழுவின் அழைப்பாளராகவும் உள்ளார்.[6]

நீதித்துறைப் பணியின் மூலம் மக்களுக்கு உதவிகள் புரிந்து வந்துள்ளார். அவருடைய 15 ஆண்டு வழக்கறிஞர் பணிக்காலத்தில் 500க்கும் மேற்பட்ட பொதுநல வழக்குகளைத் தொடர்ந்துள்ளார். தூய்மையான நீதித்துறை அமைய சீர்திருத்தங்களுக்காகப் போராடி வருகிறார். பொது நல வழக்குகளுக்கு ஊதியம் வாங்காமல் பணியாற்றி வருகிறார். அவரைப் பொறுத்தவரை, அவர் தனது நேரத்தின் 25 விழுக்காட்டை மட்டுமே ஊதிய வழக்குகளுக்குச் செலவிடுகிறார். மற்ற வழக்கறிஞர்கள் வாங்கும் தொகையில் ஐந்து விழுக்காட்டை மட்டுமே வசூலிக்கிறார். மற்ற தொழில்முறை வழக்கறிஞர்களின் ஒழுக்கப் பிறழ்வை பிரசாந்த் விமர்சித்துள்ளார். மேலும் தனது வாடிக்கையாளர் "அறத்தின் அடிப்படையில் சரியானவர்" என்று அவர் உணர்ந்தாலன்றி அவர் ஒருபோதும் ஒரு வழக்கை எடுப்பதில்லை என்று கூறுகிறார்.[7]

ஏப்ரல் 2011இல் ஜன் லோக்பால் மசோதாவை வடிக்க அரசு அமைத்த கூட்டுக்குழுவில் இடம் பெற்றுள்ளார்.[8]

நீதித்துறையின் பொறுப்பு தொகு

எந்தவொரு வழக்கறிஞரின் தேவையும் இல்லாமல் மக்கள் தங்கள் சொந்த வழக்குகளை நடத்தக்கூடிய ஒரு வெளிப்படையான, நேர்மையான சட்ட அமைப்பைத் தான் அவர் எதிர்பார்க்கிறார். 1990 ஆம் ஆண்டில், அவரும் அவரது தந்தையும் நீதித்துறையில் ஊழலை எதிர்த்துப் போராடுவதற்காக நீதித்துறை பொறுப்புக்கூறல் குழுவை (சி.ஜே.ஏ) அமைத்தனர். இந்த அமைப்பு சில வழக்கறிஞர்கள் முன்னாள் நீதிபதிகள் ஆகியோரைக் கொண்டிருந்தது. ஊழல் குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக உச்சநீதிமன்ற நீதிபதி வி.ராமசாமி பாராளுமன்றத்தால் குற்றஞ்சாட்டப்படாததால், 1993 இல் பிரசாந்த் இந்த விவகாரத்தில் அதிகக் கவனம் செலுத்தத் தொடங்கினார். 2007 ஆம் ஆண்டில், பிரசாந்தும் அவருடைய தந்தையும் சி.ஜே.ஏவைக் குடிமக்களை உள்ளடக்கியதாக விரிவுபடுத்தி நீதித்துறை பொறுப்பு மற்றும் சீர்திருத்தத்திற்கான பிரச்சாரத்தை (சி.ஜே.ஏ.ஆர்) உருவாக்கினர்.[9]

2009 ஆம் ஆண்டில், பிரசாந்த் பூஷண் ஆர்வலர் சுபாஷ் சந்திர அகர்வாலுக்காக வாதாடி உச்சநீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்ற நீதிபதிகளைத் தகவல் அறியும் உரிமை சட்டத்துக்கு உட்படுத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். பிரசாந்தின் இந்தச் செயலால் நீதிபதிகள் தங்கள் சொத்துக்களை அறிவித்து நீதிமன்ற வலைத்தளங்களில் வெளியிட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.[10]

2009 ஆம் ஆண்டு ஒரு நேர்காணலில், பிரசாந்த் உச்சநீதிமன்றத்தில் 16 முன்னாள் தலைமை நீதிபதிகளில் குறைந்தது பாதி பேர் ஊழல் மிக்கவர்கள் என்று குற்றம் சாட்டினார்.[10][11] இதற்காக, ஹரிஷ் சால்வே 2010 இல் அவர் மீது அவமதிப்பு வழக்கு பதிவு செய்தார். அதற்கு பதிலளித்த பிரசாந்த், அந்த நீதிபதிகள் ஏன் ஊழல்வாதிகள் என்று தாம் உணர்ந்தது பற்றிய ஒரு விளக்கத்தைக் கொடுத்தார். நீதிபதிகள் விசாரணையில் இருந்து விடுபடுவதால், ஆவணச் சான்றுகளைப் பெறுவதில் உள்ள சிரமத்தைப் பிரசாந்தும் அவருடைய தந்தையும் குறிப்பிட்டனர்.[12] இந்தச் செய்தியில் கருத்து தெரிவித்த முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி கிருஷ்ண ஐயர், ஒன்று - பிரசாந்தும் அவருடைய தந்தையும் "தவறான குற்றச்சாட்டுகளை" முன் வைத்ததற்காகத் தண்டிக்கப்பட வேண்டும் அவர்களின் குற்றச்சாட்டுகளை ஆராய்வதற்குத் தன்னாட்சி அதிகாரம் கொண்ட அமைப்பு நிறுவப்பட வேண்டும் என்று கூறினார்.[13]

நீதிமன்ற அவமதிப்பு சட்டத்தின் சில உட்பிரிவுகள் பத்திரிகைகள் நீதித்துறையில் ஊழலை அம்பலப்படுத்துவதை திறம்படத் தடுக்கின்றன என்று அந்தச் சட்டத்தில் திருத்தம் செய்ய பூஷண் பரிந்துரைத்துள்ளார். ஒரு நீதிபதிக்கு எதிராக முதல் தகவல் அறிக்கையைப் பதிவு செய்ய, இந்தியத் தலைமை நீதிபதியின் அனுமதியைப் பெற வேண்டியிருக்கிறது. தலைமை நீதிபதியின் அனுமதியின்றி முதல் தகவல் அறிக்கையைப் பதிவு செய்ய இன்று வரை இந்திய மக்களுக்கு அதிகாரம் இல்லை. இந்தச் சட்ட விதியைப் பிரசாந்த் மிகக் கடுமையாக எதிர்த்து வருகிறார்.[14]

அரசின் பொறுப்பு தொகு

1990 ஆம் ஆண்டில், பிரசாந்த் போஃபோர்ஸ் ஊழல் குறித்து "போஃபோர்ஸ், ஒரு தேசத்தின் விற்பனை" என்ற புத்தகத்தை எழுதினார்.[4]

பாராளுமன்றத்தின் ஒப்புதல் இல்லாமல் இந்துஸ்தான் பெட்ரோலியம், பாரத் பெட்ரோலியம் ஆகியவற்றைத் தனியார்மயமாக்குவதில் இருந்து மத்திய அரசை உச்ச நீதிமன்றம் தடுத்த வழக்கில் 2003 இல் சிபிஐஎல்(CPIL) ஒரு பெரிய வெற்றியைப் பெற்றது.[15] சிபிஐஎல் ஆலோசகராக, ராஜீந்தர் சச்சார், பிரசாந்த் ஆகியோர், நிறுவனங்களில் மறு முதலீடு செய்வதற்கான ஒரே வழி - 1970 களில் தேசியமயமாக்கப்பட்ட சட்டங்களை ரத்து செய்வதோ திருத்துவதோ தான் என்று வாதிட்டனர்.[16]

ஊழல் குற்றச்சாட்டுக்கு உத்தரபிரதேசத்தின் தலைமைச் செயலாளராக நீரா யாதவைப் பதவியில் இருந்து நீக்கக் கோரி ஒரு மனுவில் பிரசாந்த் சிபிஐஎல் நிறுவனத்தை பிரதிநிதித்துவப்படுத்தினார். ஐந்து சிபிஐ ஊழல் வழக்குகள் மற்றும் 23 துறை நடவடிக்கைகளில் யாதவ் பெயரிடப்பட்டார். இந்த மனுவின் அடிப்படையில் அக்டோபர் 2005 இல் உச்சநீதிமன்றம் முலாயம் சிங் மாநில அரசு, நீராவைப் பதவியில் இருந்து நீக்குமாறு உத்தரவிட்டது.[17] உத்தரபிரதேசத்தில் ஒரு இந்திய நிர்வாக சேவை அதிகாரி ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளான முதல் வழக்கு இதுவாகும்.[18]

பிப்ரவரி 2006 இல், லோக் சேவக் சங்கத்தின் ஆலோசகராக இருந்த பிரசாந்த், எம்.பி. உள்ளூர் பகுதி மேம்பாட்டுத் திட்டம் (எம்.பி.எல்.ஏ.டி.எஸ்) அரசியலமைப்பு ரீதியாகச் செல்லுபடியாகாது என்று உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். "ஒரு தொலைக்காட்சி நிறுவனம் அண்மையில் ஒரு ஸ்டிங் வீடியோவை ஒளிபரப்பியது, அதில் சில எம்.பி.க்கள் இந்தத் திட்டத்தின் கீழ் கையூட்டு வாங்கியதாகத் தெரிகிறது. சாதாரண கட்டுப்பாடுகள் எதுவும் பயன்படுத்தப்படவில்லை என்றும், இந்த திட்டம் ஊழலை வளர்க்கிறது" என்றும் பிரசாந்த் கூறினார்.[19] அதே ஆண்டில், பிரசாந்த் வேறொரு மனுவில் சிபிஐஎல்- சார்பில் பெப்சிகோ மற்றும் கோகோ கோலா ஆகியன மீது வழக்குத் தொடர்ந்தார். பெப்சிகோ, கோகோ கோலா ஆகிய நிறுவனங்கள் தங்கள் பானங்களில் உள்ள தீங்கு விளைவிக்கும் பொருட்கள் குறித்து பொதுமக்களை எச்சரிக்கத் தவறிவிட்டன என்றும், தவறான விளம்பரங்களின் மூலம் சிறு குழந்தைகளைக் கவர்ந்திழுக்கின்றன என்றும் அவ்வழக்கில் பிரசாந்த் வாதாடினார்.[20]

பாமோலின் எண்ணெய் இறக்குமதி முறைகேட்டில் பி.ஜே. தாமஸ் மீது குற்றம் சாட்டப்பட்டிருந்தது. அந்தக் குற்றச்சாட்டு நிலுவையில் இருந்தும் பி.ஜே.தாமஸை மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையராக அமர்த்தியதை எதிர்த்து பிரசாந்த் ஒரு பொதுநல மனுவைத் தாக்கல் செய்தார். பிரசாந்தின் இந்த மனுவின் காரணகாக, மார்ச் 2011 இல், உச்சநீதிமன்றம் பி.ஜே. தாமசின் பணியமர்த்தத்தை நிறுத்தியது.[10]

2 ஜி அலைக்கற்றை வழங்கியதில் இருந்த முறைகேடுகளைக் கண்டு, இந்திய அரசுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்ததில் சிபிஐஎல் அமைப்புடன் இணைந்து பிரசாந்த் செயல்பட்டார். 2001 ஆம் ஆண்டின் விலைகளின் அடிப்படையில் 2008 ஆம் ஆண்டில் அலைக்கற்றை வழங்குவதன் மூலமும், போட்டி ஏலச்சீட்டு முறையைப் பின்பற்றாததன் மூலமும் 15.53 பில்லியன் டாலர்களை இழந்துவிட்டதாக சிபிஐஎல் மனு குற்றம் சாட்டியது.[21] இதனால், 2 ஜி அலைக்கற்றை ஏலத்தில் நடந்த முறைகேடுகள் குறித்து விசாரிக்குமாறு சிபிஐக்கு உச்ச நீதிமன்றம் கேட்டுக் கொண்டது. விசாரணையின் விளைவாக தொலைத் தொடர்பு அமைச்சர் ஆ.இராசா பதவி விலகினார். பின்னர் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, யூனிடெக் வயர்லெஸ் அதிகாரிகள், ரிலையன்ஸ் ஏடிஏஜி அதிகாரிகள் உட்பட மற்றவர்களுடன் கைது செய்யப்பட்டார்.[10] முன்னாள் தொலைத் தொடர்பு அமைச்சர் தயாநிதி மாறன், மலேசியாவின் மேக்சிஸ் குழுவிற்கு விற்க ஏர்செல் உரிமையாளருக்கு தேவையற்ற அழுத்தம் கொடுக்கவில்லை என்ற சிபிஐ அப்போது உச்சநீதிமன்றத்தில் கூறியது. சிபிஐயின் அந்த வாதம் தவறு என்று சொன்ன பிரசாந்த், 2011 செப்டம்பரில் அதற்கான சான்றுகளை முன்வைத்தார். சிபிஐயின் விசாரணை "நேர்மைக்குக் குந்தகம்" என்று பிரசாந்த் கூறினார்.[22] ஜனவரி 2012 இல், எஸ்ஸார் குழுமம் மற்றும் லூப் மொபைல் போன்ற நிறுவனங்களுக்கு எதிராக சிபிஐ ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் குற்றச்சாட்டுகளைச் சுமத்தத் தவறியது ஏன் என்று பிரசாந்த் கேள்வி எழுப்பினார்.[23] பிரசாந்தின் இந்த வழக்கின் காரணமாக பிப்ரவரி 2012 இல் உச்சநீதிமன்றம் அலைக்கற்றை ஒதுக்கீடு சட்டத்துக்குப் புறம்பானது என்று அறிவித்தது.[24]

இதன் பிறகு, நிலக்கரித் தொகுதி ஒதுக்கீட்டில், சில நிறுவனங்களுக்கு மட்டும் பதவியில் இருந்த அரசியல்வாதிகள் சட்டவிரோதமாக சாதகமாக இருந்தார்கள் என்பதைப் பிரசாந்த் கவனித்தார். இது நியாயமானதாக இல்லை என்பதால் இந்திய ஒன்றிய அரசின் நிலக்கரி தொகுதி ஒதுக்கீட்டை நீக்கக் கோரி பூஷண் 2012இல் ஒரு பொதுநல மனுவைத் தாக்கல் செய்தார். இந்த வழக்கின் விளைவாக, உச்சநீதிமன்றம் 1993 முதல் நிலக்கரித் தொகுதி ஒதுக்கீட்டை ஆராய்ந்தது. கோவாவில் சட்டவிரோத இரும்புத் தாது பிரித்தெடுப்பதை எதிர்த்து பூஷண் ஒரு பொதுநல மனுவைத் தாக்கல் செய்தார், இது உச்சநீதிமன்றம் தலையிட்டு அங்கு அனைத்து சுரங்க நடவடிக்கைகளையும் நிறுத்த வழிவகுத்தது.[10]

பிரசாந்த், வியாபம் மோசடி தொடர்பாக நடந்து வரும் பொதுநல மனுவில் உண்மையை வெளிக்கொண்டு வந்த ஆனந்த் ராய்க்காக உச்சநீதிமன்றத்தில் வாதாடி வருகிறார்.

கே வி சவுத்ரியின் பணியமர்த்தத்தையும் பிரசாந்த் மிகக் கடுமையாக பிரசாந்த் எதிர்த்தார்.[25][26] சவுத்ரி அமர்த்தப்பட்ட பின்னர், பிரசாந்த் பூஷண் காமன் காஸ் அமைப்பின் சார்பில் இந்திய உச்சநீதிமன்றத்தில் அவருடைய பணியமர்த்தலை எதிர்த்து வழக்கு தொடர்ந்துள்ளார்.[27]

நேரடித் தாக்குதல் தொகு

அக்டோபர் 12, 2011 அன்று அவரது அலுவலக அறையில் தொலைக்காட்சி ஒன்றின் நேர்முகத்திற்காகக் கூடியிருந்தபோது மூன்று வலதுசாரி அமைப்பைச் சார்ந்த இளைஞர்களால் அடித்து உதைக்கப்பட்டார். பிரசாந்தின் சம்மு காசுமீர் நிலையை எதிர்த்து இத்தாக்குதல் நிகழ்த்தியதாகக் கூறப்படுகிறது.[28]

நக்சலியம் தொகு

பழங்குடியினர் ஆதிக்கம் செலுத்தும் பகுதிகளில் நக்சல் கிளர்ச்சியாளர்களுக்கு எதிரான வன்முறையைப் பயன்படுத்துவதை பிரசாந்த் விமர்சித்துள்ளார். சுரங்க நடவடிக்கைகள் மற்றும் தொழில்மயமாக்கலுக்காக பழங்குடியினரின் நிலங்களை அகற்றுவதே ஆபரேஷன் பசுமை வேட்டையின் உண்மையான நோக்கம் என்று அவர் குற்றம் சாட்டியுள்ளார். அவரைப் பொறுத்தவரை, விரைவான தொழில்மயமாக்கல் பழங்குடிப் பகுதிகளில் மாசு மற்றும் இடப்பெயர்வு மூலம் "அழிவுகரமான வளர்ச்சிக்கு" வழிவகுத்தது.[29]

ஏப்ரல் 2010 இல் 76 காவல்துறையினர் கொல்லப்பட்ட டான்டேவாடாவில் நடந்த மாவோயிச தாக்குதலுக்குப் பிறகு, நக்சல் எதிர்ப்பு நடவடிக்கைகளை இந்திய ஒன்றிய அரசு ஒரு போராக அறிவித்ததாசு தான் இதுபோன்ற "பதிலடி"களை அப்பாவி மக்கள் எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது என்று அவர் விமர்சித்தார். நிலைமையை மாற்றி, அமைதியைக் கொண்டு வர, நக்சல்களுக்கு எதிரான ஆயுத நடவடிக்கைகளை இந்திய அரசு நிறுத்தி வைக்க வேண்டும், அதற்கு பதிலாக பழங்குடியினருக்கு உணவு, உள்கட்டமைப்பு ஆகியவற்றை வழங்குவதில் கவனம் செலுத்த வேண்டும் என்று அவர் கூறினார்.[30]

ஏப்ரல் 2012 இல், மாவட்ட ஆட்சியரைப் பணயக்கைதியாக வைத்திருந்த மாவோயிஸ்டுகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவதில் மத்தியஸ்தராகச் செயல்பட மறுத்தபோது காங்கிரஸ் தலைவர்கள் பிரசாந்தை விமர்சித்தார்கள். மாவட்ட ஆட்சியரை நிபந்தனைகள் எவையும் இல்லாமல் விடுவிக்குமாறு மாவோயிஸ்டுகளுக்கு அவர் வேண்டுகோள் விடுத்தார். இதே போல, இந்திய அரசும் முறையான கோரிக்கைகளை விசாரித்து பணியாற்ற வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.[31]

மரண தண்டனைக்கு எதிரான குரல் தொகு

பிரசாந்த் மரண தண்டனைக்கு எதிரானவர். 2008 மும்பை தாக்குதலில் தனியாகப் பிடிக்கப்பட்ட பயங்கரவாதியாக இருந்த அஜ்மல் கசாப்பைத் தூக்கிலிட்டதற்கு எதிராகப் பேசினார். [29] நித்யா ராமகிருஷ்ணனுடன் சேர்ந்து, டிசம்பர் 13 ஆம் தேதி என்னும் தடைசெய்யப்பட்ட ஆவணப்படத்திற்கான ஆலோசகராக இருந்தார்.[32]

பிற வழக்குகள் தொகு

1990 ஆம் ஆண்டில், போபால் விசவாயு வழக்கு உச்ச நீதிமன்றத்தால் மீண்டும் விசாரிக்கப்பட்டது. அந்த நிகழ்வில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்குவதில் தீர்வை பிரசாந்த் திறம்படப் பெற்றுத் தந்தார். இது யூனியன் கார்பைட் கார்ப்பரேஷனின் முன்னாள் தலைவர் வாரன் ஆண்டர்சன் (இப்போது உயிருடன் இல்லை) மீதான வழக்கை மீண்டும் திறந்தது.[10]

சர்தார் சரோவர் அணையை எதிர்க்கும் நர்மதா பச்சாவ் அந்தோலன் ஆர்வலர்களுக்கு பிரசாந்த் உதவினார்.[5] ஆறு வருட விசாரணைகளுக்குப் பிறகு, அக்டோபர் 2000 இல் உச்ச நீதிமன்றம் அத் திட்டத்தை மீண்டும் தொடங்க அனுமதிக்க தீர்ப்பளித்தது. பிரசாந்த் இந்த முடிவை "நீதிபதிகள் தங்கள் முன் எந்தச் சான்றும் இல்லாமல் வைக்கப்பட்ட உண்மைகளை" ஏற்றுக் கொண்டதாக விமர்சித்தார்.[33] சர்தார் சரோவர் அணை மீதான தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தின் முன் ஆர்ப்பாட்டம் நடத்தியதற்காக மேதா பட்கர், பிரசாந்த் பூஷண் மற்றும் அருந்ததி ராய் ஆகியோர் நீதிமன்றத்தை அவமதித்ததாகக் குற்றம் சாட்டி 2001 பிப்ரவரி மாதம் இந்திய உச்ச நீதிமன்றத்தில் குற்றவியல் மனு தாக்கல் செய்யப்பட்டது. அணை விசாரணையில் நீதிபதிகளை வெளிப்படையாக விமர்சித்ததற்காக நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டுக்கு அருந்ததி ராய் ஆளானபோது பிரசாந்த் அவரை ஆதரித்தார். மார்ச் 2002 இல் அருந்ததி ராய்க்கு ஒரு நாள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.[34]

பிரசாந்த் இந்தோ-அமெரிக்க சிவில் அணுசக்தி ஒப்பந்தத்தை எதிர்ப்பவர்களுள் ஒருவர் ஆவார் [9] அவர் அணுசக்தியை எதிர்க்கிறார். மேலும் கூடங்குளம் அணுமின் நிலையத்தை நிறுவுவதற்கு எதிராக அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்கத்தை ஆதரித்தார்.[35]

அக்டோபர் 2014 இல் நடத்தப்பட்ட டெல்லி நீதித்துறை சேவைகள் தேர்வில் கீழ் நீதிமன்ற நீதிபதிகளைத் தேர்ந்தெடுப்பதில் ஊழல், குழு மனப்பான்மை எனக் கூறப்படும் குற்றச்சாட்டுக்கு எதிராக 2015 ஆகஸ்டில் பிரசாந்த் உச்சநீதிமன்றத்தில் ஒரு பொதுநல மனுவை தாக்கல் செய்தார். பொது நல வழக்கின் விளைவாக, உச்சநீதிமன்றம் அந்த ஆவணங்களை முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதியும் முன்னாள் சட்ட ஆணையத் தலைவர் நீதிபதியுமான பி.வி.ரெட்டி சரிபார்க்க வேண்டும். பின்னர் மேலும் 12 நீதிபதிகளை சேவையில் சேர்க்க வேண்டும் என்று பரிந்துரைத்தது. ஆட்சேர்ப்பு நடைமுறைகளில் வெளிப்படைத்தன்மையை அதிகரிப்பது போன்ற நீண்டகால முறையான சீர்திருத்தத்திற்கான வழிகாட்டுதல்களை உச்ச நீதிமன்றம் வெளியிட வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் கேட்டுக் கொண்டது.[36]

சிபிஐ தலைவரை அமர்த்துவது தொடர்பான வழக்கில் இந்திய உச்சநீதிமன்றத்தில் விசாரணை தொடர்பாக, பிப்ரவரி 1, 2019 அன்று வக்கீல் பூஷனுக்கு ட்வீட் செய்ததற்காக இந்திய அட்டர்னி ஜெனரலும் இந்திய அரசும் அவமதிப்பு நடவடிக்கைகளைத் தொடங்கினர்.[37]

ஆகஸ்ட் 14 அன்று நீதித்துறைக்கு எதிரான அவதூறான ட்வீட்களை வெளியிட்டதற்காக இந்திய உச்ச நீதிமன்றத்தால் அவர் குற்றவாளி என அறிவிக்கப்பட்டுள்ளார்.[38]

ஆம் ஆத்மி கட்சி தொகு

பிரசாந்த் நீண்ட காலமாக ஐக்கிய முற்போக்குக் கூட்டணி (யுபிஏ) அரசை விமர்சித்து வந்தார். 2012 ஆம் ஆண்டில், ஆம் ஆத்மி கட்சியை அவர் இணைந்து நிறுவினார், மற்ற அரசியல் கட்சிகள் ஊழல் நிறைந்தவை என்று கூறினார்.[10]

பாஜகவின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி ஊழல் மிக்கவர் என்றும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸின் "கைப்பாவை" என்றும் பிரசாந்த் குற்றம் சாட்டினார்.[39] ஆர்.எஸ்.எஸ் பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு ஆதரவளிப்பதாக அவர் குற்றம் சாட்டினார், மேலும் ஆர்.எஸ்.எஸ் உடனான பிஜேபியின் தொடர்புகளை விமர்சித்தார்.[40][41]

2015 டெல்லி தேர்தலுக்கு முன்னர், கட்சியின் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் தனது விருப்பப்படி வேட்பாளர்களைத் தேர்ந்தெடுத்ததாக பிரசாந்த் குற்றம் சாட்டினார்.[42] தேர்தலுக்குப் பிறகு, மார்ச் 4, 2015 அன்று, பிரசாந்த், யோகேந்திர யாதவ் ஆகியோர் ஆம் ஆத்மி கட்சியின் அரசியல் விவகாரக் குழு கட்சி விரோத நடவடிக்கைகள் மற்றும் டெல்லி தேர்தலில் கட்சியின் தோல்விக்கு உழைத்ததாகக் குற்றம் சாற்றியது. பிரசாந்த், யோகேந்திரா ஆகிய இருவரும் இக்குற்றச்சாட்டுகளை மறுத்தனர். 28 மார்ச் 2015 அன்று, ஆம் ஆத்மி கட்சியின் தேசிய செயற்குழுவில் இருந்து நீக்கப்பட்டனர். அவரும் யோகேந்திராவும் பின்னர் ஸ்வராஜ் அபியான் என்ற புதிய அரசியல் இயக்கத்தை உருவாக்கினர்.[43] ஏப்ரல் 2015 இல், அவர்கள் ஆம் ஆத்மி கட்சியின் ஒழுங்காற்றுக் குழுவால் கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்டனர்.[44]

குடும்ப வாழ்க்கை தொகு

பிரஷாந்த் முன்னாள் வழக்கறிஞரான தீபாவை மணந்தார். இவ்விணையருக்கு மூன்று மகன்கள் உள்ளனர் [10]

நூல்கள் தொகு

இவர் இரு நூல்களை எழுதியுள்ளார் :

  • "The Case That Shook India” (about the case challenging the election of the Prime Minister, Mrs. Indira Gandhi, which led to the declaration of Emergency and the suspension of civil liberties in India in 1975)
  • "Bofors: The Selling of a Nation" (about the Bofors scam and its unraveling) .

மேலும் பார்க்க தொகு

நேர்முகங்கள் தொகு

மேற்கோள்கள் தொகு

  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2012-10-11. பார்க்கப்பட்ட நாள் 2011-04-12.
  2. Lall, Rashmi Roshan (10 April 2011). "Citizen Anna and agent Prashant". The Times of India இம் மூலத்தில் இருந்து 2011-11-06 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20111106001338/http://articles.timesofindia.indiatimes.com/2011-04-10/special-report/29402905_1_bofors-case-prashant-bhushan-narmada-dam. 
  3. Sharma, Nagendar (19 December 2010). "The man who put Raja in the dock". Hindustan Times இம் மூலத்தில் இருந்து 2014-01-11 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20140111124230/http://www.hindustantimes.com/Comment/ColumnsOthers/The-man-who-put-Raja-in-the-dock/Article1-640152.aspx. 
  4. 4.0 4.1 Peri, Mahesh (6 January 2014). "Prashant Bhushan: "Engage in issues of public interest!"". Careers360. http://university.careers360.com/articles/Prashant-Bhushan-Engage-in-issues-of-public-interest. 
  5. 5.0 5.1 "Legal Luminaires – Prashant Bhushan". Unilawonline. Archived from the original on 25 ஏப்பிரல் 2012. பார்க்கப்பட்ட நாள் 27 ஏப்பிரல் 2012.
  6. "Working Committee". Campaign for Judicial Accountability and Judicial Reforms. பார்க்கப்பட்ட நாள் 30 April 2012.[தொடர்பிழந்த இணைப்பு]
  7. "Who Is Prashant Bhushan?". https://www.outlookindia.com/blog/story/who-is-prashant-bhushan/2478. 
  8. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2011-11-06. பார்க்கப்பட்ட நாள் 2011-04-12.
  9. 9.0 9.1 Simha, Vijay (6 September 2008). "The House of Bhushan". 5. Tehelka இம் மூலத்தில் இருந்து 5 ஜனவரி 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20130105031447/http://www.tehelka.com/story_main40.asp?filename=Ne060908thehouseofbhushan.asp. 
  10. 10.0 10.1 10.2 10.3 10.4 10.5 10.6 10.7 Nair, Harish V. (3 November 2013). "PIL warrior Prashat Bhushan: Scams, isolation and his beliefs". Mail Today. http://indiatoday.intoday.in/story/prashat-bhushan-coal-scam-2g-radia-tapes/1/321465.html. 
  11. Bhushan, Prashant (9 December 2009). "My Honest And Bonafide Perception". Outlook. http://www.outlookindia.com/article.aspx?263230. பார்த்த நாள்: 7 October 2013. 
  12. "Chief Injustices – Excerpts from a milestone affidavit". Tehelka. 2 October 2010 இம் மூலத்தில் இருந்து 23 நவம்பர் 2010 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20101123154100/http://www.tehelka.com/story_main47.asp?filename=Ne021010Chief_Injustices.asp. பார்த்த நாள்: 27 April 2012. 
  13. Nayar, Kuldip. "Judiciary on Trial". Pakistan: Dawn. http://www.dawn.com/2010/10/22/judiciary-on-trial-by-kuldip-nayar.html. பார்த்த நாள்: 27 April 2012. 
  14. "Conversation with Prashant Bhushan". Bar & Bench. 25 October 2010. Archived from the original on 29 October 2010. பார்க்கப்பட்ட நாள் 27 April 2012.
  15. Rautra, Samanwaya; Vincent, Pheroze L. (4 March 2011). "Feather in cap for graft fighters". The Telegraph. http://www.telegraphindia.com/1110304/jsp/nation/story_13665807.jsp. பார்த்த நாள்: 26 April 2012. 
  16. Ramakrishna, G. V. (2004). Two Score and Ten: My Experiences in Government. Academic Foundation. பக். 301. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:81-7188-339-7. https://books.google.com/books?id=d4KUbiQ-9KoC&pg=PA301. 
  17. Bhatnagar, Rakesh (6 October 2005). "Mulayam honours SC verdict, Neera Yadav goes". DNA. http://www.dnaindia.com/india/report_mulayam-honours-sc-verdict-neera-yadav-goes_4761. பார்த்த நாள்: 2012-04-29. 
  18. "Those who make the grade". Tehelka. 11 May 2005 இம் மூலத்தில் இருந்து 8 பிப்ரவரி 2012 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20120208012724/http://www.tehelka.com/story_main14.asp?filename=hub110505those_who_CS.asp. பார்த்த நாள்: 27 April 2012. 
  19. "MPLADS comes under judicial scrutiny". Outlook. 16 February 2006 இம் மூலத்தில் இருந்து 29 April 2012 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20120429030711/http://news.outlookindia.com/. பார்த்த நாள்: 29 April 2012. 
  20. "Court to hear cola case after 6 weeks". The Times of India. 5 August 2006 இம் மூலத்தில் இருந்து 3 ஜனவரி 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20130103083732/http://articles.timesofindia.indiatimes.com/2006-08-05/india/27800209_1_soft-drinks-cola-case-coca-cola. பார்த்த நாள்: 29 April 2012. 
  21. "ED tells SC that 2G spectrum scam probe is underway". India Telecom Monthly Newsletter (Information Gatekeepers Inc): 6. October 2010. https://books.google.com/books?id=qByYM-awD_MC&pg=PA6. 
  22. "2G scam: NGO to counter CBI on Maran". The Times of India. 7 September 2011 இம் மூலத்தில் இருந்து 3 ஜனவரி 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20130103135307/http://articles.timesofindia.indiatimes.com/2011-09-07/india/30122554_1_maxis-group-aircel-t-ananda-krishnan. பார்த்த நாள்: 28 April 2012. 
  23. "2G scam: SC seeks CBI, ED response on charges they are soft". The Indian Express. 5 January 2012. http://www.indianexpress.com/news/2g-scam-sc-seeks-cbi-ed-response-on-charges-they-are-soft/896206/. பார்த்த நாள்: 28 April 2012. 
  24. "Dr. Subramanian Swamy ...Petitioner versus Union of India and others ...Respondents". Keralaw. 2 February 2012. பார்க்கப்பட்ட நாள் 26 April 2012.[தொடர்பிழந்த இணைப்பு]
  25. [1]
  26. "Archived copy". Archived from the original on 30 சூலை 2015. பார்க்கப்பட்ட நாள் 29 சூலை 2015.{{cite web}}: CS1 maint: archived copy as title (link)
  27. "Petition in SC Challenging Appointment of CVC and VC".
  28. வழக்குரைஞர் பிரசாந்த் பூஷண் மீது தாக்குதல் தினமணி செய்தி
  29. "Ending The Cycle of Violence". Outlook. 30 April 2010. http://www.outlookindia.com/article.aspx?265284. 
  30. "Naxal attack: Rights group criticises government". NDTV. 9 April 2010 இம் மூலத்தில் இருந்து 1 ஆகஸ்ட் 2014 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20140801012834/http://www.ndtv.com/article/india/naxal-attack-rights-group-criticises-government-19540. 
  31. "Renuka Chaudhary slams Prashant Bhushan for refusing to mediate for releasing abducted collector". News Track India. 24 April 2012. http://www.newstrackindia.com/newsdetails/2012/4/24/30-Renuka-Chaudhary-slams-Prashant-Bhushan-for-refusing-to-mediate-for-releasing-abducted-collector.html. பார்த்த நாள்: 28 April 2012. 
  32. "December 13 beamed after court nod". The Telegraph. 14 December 2002. http://www.telegraphindia.com/1021214/asp/nation/story_1479887.asp. பார்த்த நாள்: 29 April 2012. 
  33. Popham, Peter (22 October 2000). "Arundhati Roy furious at dam decision". London: The Independent. https://www.independent.co.uk/news/world/asia/arundhati-roy-furious-at-dam-decision-634956.html. பார்த்த நாள்: 29 April 2012. 
  34. Gezari, Vanessa (7 March 2002). "Top court jails defiant activist in India; Acclaimed novelist fights dam project". Chicago: Chicago Tribune. http://articles.chicagotribune.com/2002-03-07/news/0203070395_1_contempt-anti-dam-supreme-court. பார்த்த நாள்: 29 April 2012. 
  35. "Prashant Bhushan assures AAP's support to agitation against Kudankulam nuclear plant". The Times of India. 29 December 2013 இம் மூலத்தில் இருந்து 2014-01-01 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20140101030325/http://articles.timesofindia.indiatimes.com/2013-12-29/india/45674389_1_kudankulam-nuclear-power-project-aap-movement-against-nuclear-energy. 
  36. livelaw (2016-04-13). "How to prevent allegations of favoritism in judicial exams? SC asks Delhi HC to reply to Bhushan's suggestions". Live Law (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2016-05-02.
  37. "Contempt Petition against Prashant Bhushan for Rafale comments". 1, Law Street (in அமெரிக்க ஆங்கிலம்). 2019-02-18. பார்க்கப்பட்ட நாள் 2019-02-20.
  38. https://timesofindia.indiatimes.com/india/sc-holds-prashant-bhushan-guilty-of-contempt-for-derogatory-tweets-against-judiciary/articleshow/77539450.cms
  39. "Prashant Bhushan takes on Narendra Modi, calls him a Reliance puppet". India: The Economic Times. 9 January 2014. http://articles.economictimes.indiatimes.com/2014-01-09/news/46030315_1_prashant-bhushan-narendra-modi-bjp-mla. 
  40. "Will BJP snap its ties with RSS, asks AAP's Prashant Bhushan". India: The Economic Times. 8 February 2014. http://articles.economictimes.indiatimes.com/2014-02-08/news/47148820_1_rss-prashant-bhushan-sister-organisations. 
  41. "Will BJP snap its ties with RSS, asks Prashant Bhushan". India: Daily News and Analysis. 8 February 2014. http://www.dnaindia.com/india/report-will-bjp-snap-its-ties-with-rss-asks-prashant-bhushan-1960355. 
  42. Prashant Bhushan accuses Kejriwal of selecting candidates with money and muscle power to win?
  43. Yogendra Yadav, Prashant Bhushan sacked from AAP national executive
  44. AAP expels Yogendra Yadav, Prashant Bhushan

வெளியிணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=பிரசாந்த்_பூசண்&oldid=3811850" இலிருந்து மீள்விக்கப்பட்டது