பிலிப்பு நேரி

பிலிப்பு நேரி (Philip Romolo Neri) (இத்தாலியம்: Filippo Neri) (சூலை 22, 1515 – மே 25, 1595), என்பவர் கத்தோலிக்க திருச்சபையின் குருவாகத் திகழ்ந்து, "உரோமை நகரின் திருத்தூதர்" என்னும் சிறப்புப் பெயர் கொண்டு, மறைமாவட்ட குருக்களுக்கான "இறைவேண்டல் சபை" (Congregation of the Oratory) என்றொரு அமைப்பை ஏற்படுத்தியவர் ஆவார்.

Saint Philip Neri
புனித பிலிப்பு நேரி
பிறப்பு(1515-07-22)22 சூலை 1515
புளோரன்சு, இத்தாலியா
இறப்பு27 மே 1595(1595-05-27) (அகவை 79)
ஏற்கும் சபை/சமயங்கள்உரோமன் கத்தோலிக்கம்
அருளாளர் பட்டம்11 மே 1615 by ஐந்தாம் பவுல் (திருத்தந்தை)
புனிதர் பட்டம்12 மார்ச் 1622 by பதினைந்தாம் கிரகோரி (திருத்தந்தை)
திருவிழாமே 26
சித்தரிக்கப்படும் வகைலீலி மலர்; குருத்துவ உடை; பற்றியெரியும் இதயம்
பாதுகாவல்உரோமை, ஐ.அ.நா. தனிப்படைகள், மகிழ்ச்சி, சிரிப்பு

இளமைப் பருவம்

தொகு

பிலிப்பு நேரி இத்தாலியின் புளோரன்சு நகரில் 1515, சூலை 22ஆம் நாள் பிறந்தார். வழக்குரைநரான பிரான்செஸ்கோ என்பவருக்கும் அவருடைய மனைவி லூக்ரேசியா தா மோஷியானோ என்பவருக்கும் கடைசிக் குழந்தையாக அவர் பிறந்தார். அவர்தம் பெற்றோர் அரசுப் பணி சேர்ந்த மேல்குடி மக்கள்.

சிறுபருவத்தில் பிலிப்பு நேரி பிளாரன்சு நகரில் இருந்த சாமிநாதர் சபையின் சான் மாற்கோ துறவிகளிடம் கல்விபயின்றார். அவருக்குப் பதினெட்டு வயது ஆனபோது அவருடைய பெற்றோர் பிலிப்பின் மாமனாராகிய ரோமுலோ என்பவரிடம் அனுப்பினார்கள்.[1] ரோமுலோ என்பவர் நேப்பிள்ஸ் நகருக்கு அருகே சான் ஜெர்மானோ என்னும் நகரில் பெரிய வணிகராக இருந்தார். பிலிப்பு தம் மாமனாரிடமிருந்து வணிகக் கலையைக் கற்றுத் தேர்ச்சிபெற்று, அவருடைய சொத்துக்கு உரிமையாளர் ஆவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ரோமுலோவின் அன்பும் மதிப்பும் பிலிப்புக்கு கிடைத்தாலும், அவருக்கு இவ்வுலக சொத்துக்களில் ஆர்வம் இருக்கவில்லை. எனவே அவர் 1533ஆம் ஆண்டு உரோமை நகருக்குச் சென்றார்.[1]

உரோமையில் ஆற்றிய பணி

தொகு

உரோமை நகருக்கு வந்த பிலிப்பு நேரி, முதலில் உயர்குடியைச் சேர்ந்த கலேயோட்டோ காச்சியா என்பவரின் வீட்டில் தனிப்பயிற்சி ஆசிரியராகப் பொறுப்பேற்றார். இரண்டு ஆண்டுகளுக்குப் பின் மூன்றாண்டு காலமாக அவர் அகுஸ்தீன் சபைத் துறவியரின் கீழ் கல்விபயின்றார்.A[1]

அதன்பின், அவர் உரோமை நகரில் ஏழைமக்கள் மற்றும் நோயுற்றோர் நடுவே பணிபுரிந்தார். அதன் காரணமாக மக்கள் அவரை "உரோமை நகரின் திருத்தூதர்" (Apostle of Rome) என்று அழைக்கலாயினர். அதே சமயம் அவர் சமுதாயத்தால் ஒதுக்கிவைக்கப்பட்ட பாலியல் தொழிலாளரின் நலனைக் கருத்தில் கொண்டு அவர்களிடையேயும் பணிபுரிந்தார்.

1538ஆம் ஆண்டிலிருந்து பிலிப்பு நேரி உரோமை நகரின் எல்லாப் பகுதிகளுக்கும் சென்று, மக்களை நேரடியாக சந்தித்து, உரையாடி, அவர்களைக் கடவுள் பற்றியும் ஒழுக்க நெறி பற்றியும் சிந்திக்கத் தூண்டினார்.

 
புனித பிலிப்பு நேரி

மூவொரு கடவுள் குழு உருவாக்கம்

தொகு

1548ஆம் ஆண்டு, பிலிப்பு நேரி பெர்சியானோ ரோசா என்னும் குருவோடு இணைந்து "திருப்பயணிகள் மற்றும் நோயுற்று குணமாவோருக்கான மூவொரு கடவுள் குழு" என்றொரு இயக்கத்தைத் தொடங்கினார்.[2] அக்குழுவின் நோக்கங்கள் இவை: உரோமை நகருக்குத் திருப்பயணமாக வரும் ஆயிரக்கணக்கான மக்களுக்கு பணிபுரிவது; மருத்துவ மனைகளிலிருந்து வெளியேறியும் வேலை செய்யத் திறனற்ற நிலையிலிருந்தோரின் துயரம் போக்குதல்.

அக்குழுவைச் சார்ந்தவர்கள் உரோமையில் சான் சால்வத்தோரே இன் காம்போ என்னும் கோவிலில் கூடி இறைவேண்டல் செய்தனர்; 40 மணி நற்கருணை ஆராதனை செய்தனர். இந்த பக்தி முயற்சியை முதன்முதலாக உரோமையில் அறிமுகம் செய்தவர் பிலிப்பு நேரி தான்[3]

இறைவேண்டல் சபை உருவாக்குதல்

தொகு

பிலிப்பு நேரி 1551ஆம் ஆண்டு மே 23ஆம் நாள் குருவாகத் திருநிலை பெற்றார். அதற்குமுன் அவர் கீழ்நிலைப் பட்டங்களையும் திருத்தொண்டர் பட்டத்தையும் பெற்றிருந்தார்.

குருவாகத் திருநிலை பெற்ற பிலிப்பு நேரிக்கு இந்தியா சென்று அங்கு கிறித்தவ மறையை அறிவிக்க வேண்டும் என்னும் பேரவா இருந்தது. ஆனால் அவருடைய நண்பர்கள் அவரிடம், கிறித்தவத்தை அறிவிக்க இந்தியா போக வேண்டிய தேவையில்லை, உரோமை நகரிலேயே அவருக்கு போதுமான வேலை இருக்கிறது என்று கூறியதைத் தொடர்ந்து, அவர் உரோமையிலேயே தமது பணியைத் தொடர்ந்தார்.

1556ஆம் ஆண்டு பிலிப்பு நேரி ஒருசில பணித்தோழர்களோடு புனித ஜெரோம் கோவிலில் ஒரு சிறு குழுவைத் தொடங்கினார். அதுவே பின்னர் "இறைவேண்டல் குழு" (Congregation of the Oratory) என்னும் பெயர்கொண்ட சபையாக மலர்ந்தது. தொடக்கத்தில் குழுவினர் மாலைவேளைகளில் கூடிவந்து, இறைவேண்டல் செய்வதிலும், திருப்பாக்கள் பாடுவதிலும், விவிலியம், திருச்சபைத் தந்தையர்களின் நூல்கள் மற்றும் மறைச்சாட்சியர் வரலாறு ஆகிய ஏடுகளிலிருந்து வாசிப்பதிலும் ஈடுபட்டனர். பின்னர் மறை சார்ந்த உரை நிகழ்த்தப்படும். தொடர்ந்து மறை சார்ந்த பொருள்கள் விவாதிக்கப்படும்.

இறைவேண்டல் குழுவினர் கூடியபோது விவிலியம் விளக்குகின்ற மீட்பு வரலாற்றிலிருந்து சில காட்சிகள் இசையாக வழங்கப்பட்டன. இதிலிருந்தே "oratorio" என்னும் இசைப் பாணி தோன்றியது. அக்குழுவினர் உரோமை நகரின் எல்லாப் பகுதிகளுக்கும் சென்று அங்குள்ள கோவில்களில் ஒவ்வொரு மாலை வேளையிலும் மறையுரை ஆற்றினர். இது முற்றிலும் புதியதொரு முயற்சியாக அமைந்தது.

பிலிப்பு நேரி பல கோவில்களில் ஒப்புரவு அருட்சாதனம் வழங்கினார். இவ்வாறு, பல மக்களைக் கடவுள்பால் ஈர்த்து, அவர்களை மறை நம்பிக்கையில் வளரச் செய்தார்.[2]

பணி விரிவாக்கம்

தொகு

உரோமையில் குடியேறியிருந்த புளோரன்சு நகர் மக்கள் 1564இல், தம் மண்ணின் மைந்தரான பிலிப்பு நேரி புதிதாகக் கட்டப்பட்ட தங்கள் கோவிலாகிய "புளோரன்சு நகரத்தாரின் புனித யோவான்" (San Giovanni dei Fiorentini) ஆலயம் வந்து பணிபுரிய வேண்டும் என்று விரும்பி வேண்டினர். நேரி அவ்வேண்டுகோளை ஏற்கத் தயங்கினார். ஆனால், திருத்தந்தை நான்காம் பயசின் இசைவோடு அப்பணியை ஏற்றார். ஆயினும் தொடக்கத்தில் இருந்த புனித ஜெரோம் கோவிலில்தான் அவருடைய சபை இருந்தது.[4]

1574இல் புளோரன்சு மக்கள் தம் கோவிலை அடுத்து ஒரு பெரும் நீளறை (oratory) கட்டியெழுப்பி, அதை பிலிப்பு நேரியின் சபையின் பயன்பாட்டுக்கு அளித்தார்கள். எனவே சபையின் தலைமையிடம் அங்கு மாற்றப்பட்டது. சபை வளர்ந்து, அதன் பணிகளும் விரிவடைந்தன. எனவே புதியதொரு கோவில் தேவைப்பட்டது. சாந்தா மரியா இன் வால்லிச்செல்லா என்னும் ஒரு சிறு கோவில் பிலிப்பு நேரிக்கு அளிக்கப்பட்டது. அக்கோவில் உரோமை நகரின் மையத்தில் அமைந்தது.

ஆயினும் அக்கோவில் மிகச் சிறியதாக இருந்ததால் பெரிய அளவில் ஒரு புதுக்கோவில் அவ்விடத்தில் கட்டப்பட்டது. அக்கோவிலின் பொறுப்பை ஏற்றதும் 1575ஆம் ஆண்டு, சூலை 15ஆம் நாள் திருத்தந்தை கொடுத்த ஆணையேட்டின்படி, பிலிப்பு நேரி "இறைவேண்டல் குழு" (Congregation of the Oratory) என்னும் சபையை அதிகாரப்பூர்வமாக அமைத்தார். அதன் உறுப்பினர் மறைமாவட்ட குருக்கள் ஆவர்.

புதிய கோவில் 1557இல் அர்ச்சிக்கப்பட்டது. இறைவேண்டல் குழுக் குருக்கள் புளோரன்சு கோவிலின் பொறுப்பைத் துறந்தனர். பிலிப்பு நேரி 1583 வரையிலும் புனித ஜெரோம் கோவிலிலேயே இருந்தார். சபைத் தலைவரான அவர் சபையின் தலைமையிடத்தில் தங்கி இருப்பதே முறை என்று திருத்தந்தை ஆணை பிறப்பித்த பின்னரே பிலிப்பு நேரி புதிய தலைமையிடம் சென்று தங்கினார். முதலில் அவர் மூன்று ஆண்டு பணிப்பொறுப்பு ஏற்றார். பின்னர் சபையினர் 1587இல் அவரை வாழ்நாள் முழுதும் தலைவராக இருக்கக் கேட்டுக்கொண்டனர்.

ஆனால் பிலிப்பு நேரி சபை முழுவதற்கும் தாமே தலைவராக இருக்கவேண்டும் என்று கருதவில்லை. எனவே, உரோமைக்கு வெளியே நிறுவப்பட்ட சபை இல்லங்கள் தன்னாட்சி கொண்டு செயல்படும் என்று அறிவித்தார். அந்த இல்லங்கள் வேறு இல்லங்களை நிறுவினால் அவையும் தனித்து செயல்படும் என்று வழிவகுத்தார். இந்த முறை திருத்தந்தை பதினைந்தாம் கிரகோரியால் 1622இல் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

 
புனித பிலிப்பு நேரியும் கன்னி மரியாவும். ஓவியர்: ஜோவான்னி பத்திஸ்தா தியேப்பொலோ

அரசியல் செயல்பாடு

தொகு

பிலிப்பு நேரி தம் காலத்தில் வழக்கமாக அரசியலில் நேரடியாக ஈடுபடவில்லை. ஒருமுறை மட்டும் அவர் அரசியலில் தலையிட்டார். 1593ஆம் ஆண்டு நடந்த ஒரு நிகழ்ச்சியில் அது வெளிப்பட்டது. பிரான்சு நாட்டு மன்னன் நான்காம் ஹென்றி கத்தோலிக்க சமயத்தைக் கைவிட்டு கால்வின் சபையை ஆதரிக்கத் தொடங்கினார். எனவே திருத்தந்தை எட்டாம் கிளமெண்ட் மன்னனை சபைநீக்கம் செய்தார். மன்னனின் தூதுவரை ஏற்க மறுத்தார். மன்னன் தான் தவறுசெய்ததை ஏற்றுக்கொண்ட பிறகும் திருத்தந்தை தண்டனையை அகற்ற முன்வரவில்லை. திருத்தந்தை பிடிவாதமாக இருந்தால் மன்னன் மீண்டும் கத்தோலிக்க சபையை விட்டு அகன்றுபோகும் இடர் இருந்ததை பிலிப்பு நேரி உணர்ந்தார். அதோடு பிரான்சு நாட்டில் உள்நாட்டுப் போர் எழும் ஆபத்தும் இருந்தது.

உடனே, பிலிப்பு நேரி தம் குழுவைச் சார்ந்தவரும் திருத்தந்தைக்கு ஆன்ம ஆலோசகராகவும் இருந்த பரோனியுஸ் என்பவரை அழைத்து, திருத்தந்தை மன்னனுக்கு எதிரான தண்டனையை விலக்கிக் கொள்ளாவிட்டால் அவருக்குப் பாவமன்னிப்பு அளிக்க வேண்டாம் என்றும், ஆன்ம ஆலோசகர் பதவியைத் துறந்துவிட வேண்டும் என்றும் பணித்தார். உடனடியாக திருத்தந்தை, கர்தினால்மார்களின் ஆலோசனைக் குழுவுக்கும் எதிராகச் சென்று, பிலிப்பு நேரியின் கருத்தை ஏற்றுக்கொண்டார்.[5]

இவ்வாறு தமக்கு சார்பாக பிலிப்பு நேரி துணிச்சலோடு செயல்பட்டதை ஹென்றி மன்னன் பல ஆண்டுகளுக்குப் பின்னரே அறிந்தார். சாதுரியமாகச் செயல்பட்ட பிலிப்பு நேரிக்கு மன்னன் தமது உளமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொண்டார்.

தாம் உருவாக்கிய இறைவேண்டல் குழுவின் தலைமைப் பதவியை பிலிப்பு நேரி தம் இறப்பு வரை வகித்தார். அவருக்குப் பின் பரோனியுஸ் தலைமைப் பொறுப்பை ஏற்றார்.

இறப்பும் வணக்கமும்

தொகு
 
பிலிப்பு நேரியின் கல்லறையில் அவரது உருவம்

பிலிப்பு நேரி 1595ஆம் ஆண்டு மே மாதம் 25ஆம் நாள் தம் எண்பதாவது வயதில் இறந்தார். அன்று நற்கருணைத் திருநாள். நாள் முழுதும் அவர் ஒப்புரவு அருட்சாதனம் வழங்கினார். தம்மைக் காணவந்தவர்களைப் பார்த்து உரையாடினார்.[6] ஏறக்குறைய நள்ளிரவில் பிலிப்பு நேரிக்கு இரத்தக்கசிவு ஏற்பட்டது. பரோனியுஸ் இறுதி மன்றாட்டுகளை செபித்தார். தம் குழு உறுப்பினரை ஆசிர்வதிக்க வேண்டும் என்று பரோனியுஸ் கேட்டார். பேசும் திறனை இழந்துவிட்ட பிலிப்பு நேரி கை சைகையால் சிலுவை அடையாளம் வரைந்து ஆசிர் வழங்கினார். அவரது உயிர் பிரிந்தது.

புனிதர் பட்டம்

தொகு

1615ஆம் ஆண்டு திருத்தந்தை ஐந்தாம் பவுல் பிலிப்பு நேரிக்கு முத்திப்பேறு பெற்ற பட்டம் வழங்கினார். 1622ஆம் ஆண்டு திருத்தந்தை பதினைந்தாம் கிரகோரி பிலிப்பு நேரிக்கு புனிதர் பட்டம் அளித்தார்.

பிலிப்பு நேரியின் திருவிழா மே 26ஆம் நாள் கொண்டாடப்படுகிறது. அவருடைய உடல் உரோமையில் புதிய கோவிலில் (Chiesa Nuova) அடக்கப்பட்டுள்ளது.[3]

குண நலன்கள்

தொகு

பிலிப்பு நேரி வாழ்ந்த காலத்தில் உரோமை நகரில் பல சீர்கேடுகள் நிலவின. குருகுலத்தினர் பலர் மக்கள் நலனின் அக்கறையின்றி இருந்தனர். அப்பின்னணியில் பிலிப்பு நேரி மக்கள் நடுவே பெயர் பெற்றவராகத் திகழ்ந்தார்; மக்களுக்குப் பணிபுரிவதில் மிகுந்த ஆர்வம் காட்டினார்.[7]

உயர்ந்தவர் தாழ்ந்தவர் என்று பாராமல், பிலிப்பு நேரி எல்லா மக்களோடும் சமமாகப் பழகினார். எப்போதும் மகிழ்ச்சியோடு காணப்பட்டார். கவலை தோய்ந்த முகத்தோடு வாழ்வதல்ல கிறித்தவம், மாறாக, மகிழ்ச்சியே கிறித்தவத்தின் அடையாளம் என்பது அவருடைய கொள்கையாக இருந்தது. அவர் நகைச்சுவைக்குப் பேர்போனவர். எனவே, எல்லா இடங்களிலும் மகிழ்ச்சியைப் பரப்புவதை அவர் தம் பணியின் இலக்காகக் கருதினார்.

 
பிலிப்பு நேரி சிலை. காப்பிடம்: கொன்கிரகாதோசு பெருங்கோவில், பிராகா நகர், போர்த்துக்கல்

இவ்வாறு, எல்லா மக்களாலும் அவர் பெரிதும் மதிக்கப்பட்டார். அவர் பல புதுமைகள் புரிந்தார் என மக்கள் அவரைப் போற்றினர். இறந்த பின் அவருடைய உடலைப் பரிசோதித்ததில் அவருடைய விலாவெலும்புகள் இரண்டு முறிந்து இருந்தது தெரிந்தது. 1545இல் உரோமையின் சுரங்கக் கல்லறையில் உருக்கமாக இறைவேண்டலில் ஈடுபட்டிருந்த போது, ஆழ்ந்த பக்தியின் விளைவாக அவருடைய இதயம் மிக விரிவடைந்து விலாவெலும்புகள் முறிந்தன என்று கருதப்பட்டது.

தமனி, சிரை விரிவால் பிலிப்பு நேரியின் விலாவெலும்புகள் முறிந்திருக்கலாம் என்று திருத்தந்தை பதினான்காம் பெனடிக்ட் முடிவுசெய்தார். பிலிப்பு நேரியின் வரலாற்றை எழுதிய பொன்னேல் மற்றும் போர்தே என்பவர்கள் கருத்துப்படி, பிலிப்பு நேரியின் விலாவெலும்பு முறிவு ஓரளவு இயற்கைக் காரணங்களாலும் ஓரளவு இயற்கை கடந்த காரணங்களாலும் நிகழ்ந்திருக்கலாம்.

பிலிப்பு நேரி கடவுள் மட்டில் கொண்டிருந்த அளவுகடந்த அன்பே அவருடைய இதய விரிவுக்குக் காரணம் என்று அவர் கருதினார். அதுபோலவே அவரிடம் ஆன்ம ஆலோசனை பெற்றவர்களும் கருதினார்கள்.[3]

பிரடெரிக் வில்லியம் ஃபேபர் என்பவர் பிலிப்பு நேரியின் குண நலன்களைப் பின்வருமாறு விவரிக்கிறார்: பிலிப்பு நேரி கடுமையான உபவாசங்களில் ஈடுபடவில்லை. மாறாக, அவர் ஒரு சாதாரண மனிதராக வாழ்ந்தார். அவர் சால்பு நிறைந்த, எல்லாரையும் மதிக்கின்ற, மகிழ்ச்சியோடு தோற்றமளிக்கின்ற மனிதர். உலக நடப்பு என்னவென்று அறிவதில் மிகுந்த ஆர்வம் காட்டினார். தகவல் பெறுவதிலும் கொடுப்பதிலும் ஈடுபட்டார். நன்முறையில் ஆடை அணிந்தவர் அவர். நகைச்சுவை மிகுந்த அவர் கூர்மையான உலக அறிவையும் கொண்டிருந்தார். அவருடைய அறையில் நவீன மரப்பொருள்கள் எளிமையான விதத்தில் இருந்தன. ஆனால் அவர் வறுமையில் வாடவில்லை.

அவர் நல்ல குடிமகனாக வாழ்ந்தார். எல்லாரோடும் பழகினார். அவருடைய சிறப்பை அறிந்த இயேசு சபையினர் அவரைத் தம் சபையில் சேர்க்க முயன்றார்கள். ஆனால் அவர் வழக்கமான துறவற வாழ்க்கையைத் தழுவ விரும்பவில்லை. மாறாக, புதிய முறையில் கிறித்தவ நம்பிக்கையை வாழ முயன்றார். அவரது பணியின்போது மக்களுக்கு மறையுரை ஆற்றுவதில் அவர் பெரிதும் கவனம் செலுத்தினார். தனி செபத்தில் நேரம் செலவழித்தார்.

"இன்று நான் என் வாழ்வை நன்முறையில் வாழ்ந்தால், நாளை என்ன நடக்கும் என்று நான் கவலைப்பட வேண்டியதில்லை" என்பது அவருடைய மன்றாட்டாக இருந்தது.[7]

எந்தவொரு பணியில் ஈடுபட்டிருந்தாலும், யாராவது அவரைத் தேடி ஆன்ம ஆலோசனை கேட்க வந்தால் உடனேயே அவர் புறப்பட்டுச் செல்லும் பழக்கம் கொண்டிருந்தார். அப்போது அவர் "கிறித்துவைச் சந்திப்பதற்காக, கிறித்துவை விட்டுச் செல்ல நாம் முன்வரவேண்டும்" (We must leave Christ for Christ) என்று அவர் கூறுவாராம்.

பிலிப்பு நேரி ஆழ்ந்த இறைப்பற்று கொண்டிருந்தார். அவர் பலமுறை பரவச காட்சிகள் கண்டதுண்டு. கடவுளோடு தனிமையில் இருப்பதையே அவர் வாழ்க்கையின் மிகப் பெரும் மகிழ்ச்சியாகக் கண்டார். அதே நேரத்தில், அவருடைய உதவியை நாடி யாராவது வந்தால் தனது இறைவேண்டலை விட்டுவிட்டு உடனடியாக ஓடிச் செல்வார். அவருடைய வாழ்வு முழுவதுமே "கடவுள் அனுபவத்தில் தோய்ந்த பிறரன்பு" என்னும் குறிக்கோளின் அடிப்படையில் அமைந்தது.[3]

பிலிப்பு நேரி ஒரு சீர்திருத்தவாதியாகச் செயல்படவில்லை. ஆனால் தம் அன்றாட மறைப்பணி வழியாக அவர் மனித உள்ளங்களைச் சீர்திருத்துவதில் ஈடுபட்டார். அவர் கத்தோலிக்க திருச்சபையின் போதனைகளை முற்றிலுமாக ஏற்றார். ஆனால் உலகைத் துறந்த வாழ்க்கையை விட, உலகில் முழுமையாக ஈடுபட்டு மக்களை நன்னெறியில் வழிநடத்துவதே சிறப்பு என்று அவர் கருதினார்.

இறைவேண்டல் குழு பரவுதல்

தொகு
 
பிலிப்பு நேரி. ஓவியர்: குவெர்ச்சீனோ. ஆண்டு: 1656

பிலிப்பு நேரி உருவாக்கிய இறைவேண்டல் குழு என்னும் சபை பெரும்பாலும் இத்தாலியிலும் பிரான்சிலும் பரவியது. 1760இல் மொத்தம் 58 இல்லங்கள் இருந்தன. 1611ஆம் ஆண்டு பாரிசு நகரில் ஏற்படுத்தப்பட்ட இறைவேண்டல் குழு இல்லம் மிகவும் புகழ்பெற்றது. அது பிரஞ்சு புரட்சியின்போது அழிவுற்றது.

இங்கிலாந்தில் பிர்மிங்காம் நகரில் 1847இல் ஓர் இல்லம் அமைக்கப்பட்டது. அதில் உறுப்பினராகச் சேர்ந்த ஒருவர் முத்திப்பேறு பெற்ற ஜான் ஹென்றி நியூமன் ஆவார்.[8].

இசைப் புரவலர்

தொகு

பிலிப்பு நேரி திரு இசையை வளர்ப்பதில் மிகுந்த ஆர்வம் காட்டினார். அவர் நிறுவிய இறைவேண்டல் குழு செபிக்க கூடும்போது "ஆன்ம இறைபுகழ்" பாட வேண்டும் என்று அவர் வழிவகுத்தார். இவ்வாறு, திரு இசை அமைத்தவர்களுள் தோமாசு லூயிசு தே விக்டோரியா, ஜோவான்னி பியெர்லூயிஜி தா பாலஸ்த்ரீனா ஆகியோர் உள்ளடங்குவர் என்று கருதப்படுகிறது.[9][10]

குறிப்புகள்

தொகு
  1. 1.0 1.1 1.2 M. Walsh, ed. Butler's Lives of the Saints. (HarperSanFrancisco: New York, 1991), 156.
  2. 2.0 2.1 M. Walsh, ed. Butler's Lives of the Saints. (HarperSanFrancisco: New York, 1991), 157.
  3. 3.0 3.1 3.2 3.3 "Addington, Raleigh (of the London Oratory), Saint Philip Neri" (PDF). Archived from the original (PDF) on 2014-05-28. பார்க்கப்பட்ட நாள் 2013-01-28.
  4. Ritchie, Charles Sebastian. "St. Philip Romolo Neri." The Catholic Encyclopedia. Vol. 12. New York: Robert Appleton Company, 1911. 20 Dec. 2012
  5. "St. Philip Neri, Confessor, Lives of Saints, John J. Crowley & Co., Inc". Archived from the original on 2013-06-02. பார்க்கப்பட்ட நாள் 2013-01-28.
  6. M. Walsh, ed. Butler's Lives of the Saints. (HarperSanFrancisco: New York, 1991), 157-8.
  7. 7.0 7.1 "St. Philip Neri". Saint of the Day. American Catholic. Archived from the original on 3 பிப்ரவரி 2013. பார்க்கப்பட்ட நாள் 21 December 2012. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  8. ஜான் ஹென்றி நியூமன்
  9. வார்ப்புரு:GroveOnline
  10. F. Danieli, San Filippo Neri. La nascita dell'Oratorio e lo sviluppo dell'arte cristiana al tempo della riforma. (San Paolo: Cinisello Balsamo, 2009).

வெளி இணைப்புகள்

தொகு
 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Philip Neri
என்பதில் ஊடகங்கள் உள்ளன.

வாழ்க்கை வரலாறுகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=பிலிப்பு_நேரி&oldid=3563735" இலிருந்து மீள்விக்கப்பட்டது