புதுமை மாதா சிலை, யாழ்ப்பாணம் (1614)

புதுமை மாதா சிலை (Statue of Our Lady of Miracles) போர்த்துக்கேயர் காலத்தில் யாழ்ப்பாணக் கோட்டைக்குள் இருந்த புதுமைமாதா தேவாலயத்தில் வைக்கப்பட்டிருந்த மாதாவின் சிலை ஆகும். போர்த்துக்கேயர் ஒல்லாந்தரிடம் யாழ்ப்பாணத்தை இழந்த பின்னர், இச்சிலை இந்தியாவில் உள்ள கோவாவுக்கு எடுத்துச் செல்லப்பட்டது. அச்சிலை இப்போது கோவாவில் அமைந்துள்ள புனித பேதுரு தேவாலயத்தில் உள்ளது.

யாழ்ப்பாணம் புதுமை மாதா சிலை

வரலாறு

தொகு

யாழ்ப்பாணத்தைப் போர்த்துக்கேயர் தமது நேரடியான கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்கு முன்னர் போர்த்துக்கேயப் பாதிரியாரான பிரான்சிசுக்கோ டி எஸ் அந்தோனியோ நல்லூரில் ஒரு தேவாலயத்தைக் கட்டி அங்கே தங்கியிருந்தார். இது நிரந்தரமல்லாத பொருட்களினால் கட்டப்பட்டிருந்தது. பண்ணைத்துறைக்கு அருகில் புதிய தேவாலயமொன்றை அமைக்க விரும்பிய பாதிரியார் 1614 ஆம் ஆண்டில் கட்டிட வேலையைத் தொடங்கினார். இத்தேவாலயம் வெற்றி மாதா பெயரில் அமைக்கப்பட்டது. இந்தத் தேவாலயத்துக்காக மாதாவின் சிற்பம் ஒன்றைச் செய்வதற்காகத் தான் கொச்சியில் இருந்து கொண்டுவந்திருந்த மரத்துண்டு ஒன்றை உள்ளூர் மரச் சிற்பியான ஆனைக்குட்டி என்பவரிடம் பாதிரியார் ஒப்படைத்திருந்தார். கன்னி மேரி தனது குழந்தையான மகனைக் கையில் ஏந்தியிருப்பதுபோல் செதுக்கப்பட்ட இச்சிலையைச் செதுக்கிக்கொண்டு இருந்தபோதே பல புதுமைகள் ஏற்பட்டதாகச் சொல்லப்படுகிறது. இதைக் கேள்வியுற்ற பக்தர்கள் பெருமளவில் ஆனைக்குட்டி வீட்டுக்கு வந்து மேரியை வணங்கிச் சென்றனர். நிகழ்ந்தவற்றைக் கண்ட ஆனைக்குட்டி ஆச்சரியமும் பயமும் கொண்டவராக, செதுக்கி முடிக்கப்படாத சிலையைத் தேவாலயத்துக்கு எடுத்துச் செல்லுமாறு பாதிரியாரை வேண்டினார். 1614 யூலை 24 ஆம் தேதி[1][2] சிலை நல்லூர் நகர வீதிகளூடாக புதிய தேவாலயத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டது.

இச்சிலை தொடர்பில் நிகழ்ந்த புதுமைகள் காரணமாக இது புதுமை மாதா என அழைக்கப்பட்டதுடன், இதன் பெயரில் தேவாலயமும் புதுமை மாதா தேவாலயம் எனப் பெயர் மாற்றம் அடைந்தது.

மேற்கோள்கள்

தொகு
  1. Peiris, Edmund (1948). Marian Devotion in Ceylon.p.p 28-29. Chilaw , Ceylon: St Peter's Press.
  2. Peiris, Edmund. Chapters on the introduction of Christianity to Ceylon, taken from the Conquista [e]spiritual do Oriente of Friar Paulo da Trinidade [sic] O.F.M. Chapter 52 | University of Toronto Libraries. Edmund Peiris.