புனித மரியா பேராலயம்

புனித மரியா பேராலயம் (Basilica di Santa Maria Maggiore) என்பது உரோமையில் அமைந்துள்ள கோவில்களுள் புனித மரியாவுக்கு நேர்ந்தளிக்கப்பட்ட பழமையான ஒரு கோவில் ஆகும். இதன் முழுப்பெயர் இத்தாலிய மொழியில் Basilica Papale di Santa Maria Maggiore எனவும், இலத்தீன் மொழியில் Basilica Sanctae Mariae Majoris ad Nives எனவும் உள்ளது. இலத்தீன் பெயரில் உள்ளதுபோல, தமிழில் "பனிமய அன்னையின் கோவில்" என்று அழைக்கும் வழக்கமும் உண்டு. திருத்தந்தை மேலைத் திருச்சபையின் "முதுபெரும் தந்தை" (Patriarch) என்றும் அழைக்கப்பட்டதாலும், அப்பெயரோடு தொடர்புபடுத்தி மற்றும் நான்கு கோவில்கள் உரோமையில் "முதுபெரும் தந்தைக் கோவில்கள்" என்று அழைக்கப்பட்டன. அவை: புனித இலாத்தரன் யோவான் முதன்மைப் பேராலயம், புனித பேதுரு பேராலயம், புனித பவுல் பேராலயம், புனித இலாரன்சு கோவில் என்பனவாகும். இவற்றுள் முதல் மூன்றும் "உயர் பேராலயங்கள்" (Major Basilicas) என்னும் பெயர் கொண்டுள்ளன. புனித மரியா பேராலயத்துக்கும் இச்சிறப்புப் பெயர் உண்டு[1].

புனித மரியா பேராலயம்
Basilica Papale di Santa Maria Maggiore (இத்தாலியம்)
Basilica Sanctae Mariae Majoris ad Nives (இலத்தீன்)
உரோமை நகரில் புனித மரியாவுக்கு நேர்ந்தளிக்கப்பட்ட கோவில்களுள் மிகப்பெரியது "புனித மரியா பேராலயம்".
அடிப்படைத் தகவல்கள்
அமைவிடம்வத்திக்கான் நகர் உரோமை (வத்திக்கான் நகர-நாட்டு ஆட்சிக்கு உட்பட்டது)
புவியியல் ஆள்கூறுகள்41°53′51″N 12°29′55″E / 41.89750°N 12.49861°E / 41.89750; 12.49861
சமயம்உரோமன் கத்தோலிக்கம்
வழிபாட்டு முறைஇலத்தீன்
நிலைஉயர் பேராலயம்
தலைமைபெர்னார்து பிரான்சிசு லா
இணையத்
தளம்
Official Website

புனித மரியா கோவிலின் இன்னொரு பெயர் "லிபேரிய கோவில்" என்பதாகும். தொடக்க காலத்தில் திருத்தந்தை லிபேரியசு என்பவர் இதன் புரவலராக இருந்தார் என்னும் மரபின் அடிப்படையில் இப்பெயர் எழுந்தது. முதல் கோவில் கட்டடத்தோடு பிற்காலச் சேர்க்கைகள் நிகழ்ந்தன. 1348இல் நில நடுக்கத்தால் சேதம் ஏற்பட்டது. இருப்பினும் முதல் கோவிலின் கட்டட வரைவு மாற்றமுறாமல் இன்றுவரை உள்ளது சிறப்பாகும். இது உரோமையில் உள்ள பிற பெருங்கோவில்களுக்கு இல்லாத ஒரு கூறு ஆகும்.

கோவிலின் முன் வரலாறு

தொகு

இக்கோவில் உரோமை நகரில் "எசுக்குயிலின்" என்னும் ஒரு குன்றின்மீது கட்டப்பட்டது. தற்போது உள்ள கட்டடம் கி.பி. 432-440 ஆண்டுக் காலத்தில் திருத்தந்தை மூன்றாம் சிக்ஸ்துசு என்பவரால் எழுப்பப்பட்டு, புனித மரியாவின் வணக்கத்திற்கு அர்ப்பணிக்கப்பட்டது.

அதற்கு முன்னரே ஒரு கோவில் இருந்ததாகக் கிறித்தவ மரபு கூறுகிறது. அதன் பின்னணியில் ஒரு கதை உள்ளது. அது வருமாறு: உரோமையில் வாழ்ந்த பெருங்குடியைச் சார்ந்த யோவான் என்பவருக்கும் அவரது மனைவிக்கும் குழந்தைகள் இல்லை. தங்களது பெரும் செல்வத்தை யாருக்கு விட்டுச் செல்வது என்று அன்னை மரியா தங்களுக்குத் தெரிவிக்க வேண்டும் என்று அத்தம்பதியர் வேண்டிக்கொண்டனர். அவர்களது வேண்டுதலுக்கு இணங்க, அன்னை மரியா அவர்களுக்கு 358ஆம் ஆண்டு ஆகத்து மாதம் 4ஆம் நாள் இரவில் கனவில் தோன்றி, தமக்கென்று ஒரு கோவில் கட்டுமாறு கேட்டுக்கொண்டார். அக்கோவில் அமையவேண்டிய இடம் "எசுக்குயிலின்" குன்றம் என்றும், அக்குன்றில் எங்கு உறைபனி பெய்துள்ளதோ அதுவே கோவில் எழுப்பப்பட வேண்டிய இடம் என்றும் அன்னை மரியா கனவின்வழி தெரிவித்தார்.

ஆனால், ஆகத்து மாதம் கோடைகாலத்தின் உச்சக்கட்டம் என்பதாலும், உறைபனி பெய்வதற்கு எந்தவொரு வாய்ப்பும் இல்லை என்பதாலும் யோவானும் அவர்தம் மனைவியும் தங்கள் கனவின் பொருள் குறித்து வியந்துகொண்டிருந்தார்கள். எப்படியும் அன்னை மரியா கூறியது நடக்கும் என்னும் நம்பிக்கையில் எசுக்குயிலின் குன்றம் சென்று பார்த்தபோது அங்கே உண்மையாகவே உறைபனி பெய்திருப்பதையும் கோவில் கட்டடத்தின் எல்லை பனியில் வரையப்பட்டிருப்பதையும் கண்டு வியந்தார்கள்.

அதே இரவு, திருத்தந்தை லிபேரியசு என்பவருக்கும் அன்னை மரியா கனவில் தோன்றி, உறைபனி அடையாளம் கொடுக்கப்படுவதாகக் கூறினார். அவரும் பிற கிறித்தவர்களும் எசுக்குயிலின் குன்றுக்குச் சென்று, அன்னை மரியா கூறியதுபோலவே உறைபனி விழுந்த அதிசயத்தைக் கண்டு வியந்தார்கள். ஆகத்து கோடை வெயிலில் உறைபனி பெய்ததைக் கண்ட அனைவரும் கோவிலின் எல்லை பனியில் வரையப்பட்டதைக் கண்டனர். திருத்தந்தை லிபேரியசு அன்னை மரியாவுக்கு அங்கே ஒரு கோவில் கட்டி எழுப்பினார். 358இல் தொடங்கிய கட்டட வேலை 360இல் நிறைவுற்றது. சில வரலாற்றாசிரியர்கள் இக்கதையை ஒரு புனைவாகவே கருதுகின்றனர். திருத்தந்தை லிபேரியுசு அக்கோவிலை அன்னை மரியாவுக்கு நேர்ந்தளித்தார் என்னும் மரபுப் பின்னணியில் அதற்கு "லிபேரியக் கோவில்" என்றொரு பெயரும் உண்டு.

பின்னர் சிறிது காலம் அக்கோவில் பழுதடைந்த நிலையில் இருந்தது.

திருத்தந்தை மூன்றாம் சிக்ஸ்துசு காலத்துக் கோவில்

தொகு

கி.பி. 431ஆம் ஆண்டு நிகழ்ந்த எபேசு பொதுச் சங்கத்தில் அன்னை மரியா கடவுளும் மனிதருமாகிய இயேசுவை இவ்வுலகிற்கு ஈன்றளித்ததால் உண்மையாகவே "கடவுளின் தாய்" என்னும் வணக்கத்துக்கு உரியவர் (Theotokos = God-Bearer) என்னும் கிறித்தவக் கொள்கை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, திருத்தந்தை மூன்றாம் சிக்ஸ்துசு (432-440) என்பவர் புனித மரியா கோவிலைப் புதுப்பித்து, விரிவாக்கி, அழகுபடுத்தினார். கோவிலில் உள்ள "வெற்றி வளைவு" என்னும் பகுதி அத்திருத்தந்தை காலத்தைச் சார்ந்ததே. அதில் "ஆயர் சிக்ஸ்துசு கடவுளின் மக்களுக்குக் கொடையாக அளித்தார்" என்னும் பதிவு உள்ளது. மேலும் ஐந்தாம் நூற்றாண்டு கலை அம்சங்களில் முக்கியமான ஒன்று கோவிலின் நடு நீள்பகுதியை அணிசெய்கின்ற பதிகைக்கல் ஓவியங்கள் ஆகும். 440-461 ஆண்டுகளில் திருத்தந்தையாக ஆட்சிசெய்த திருத்தந்தை முதலாம் லியோ என்பவரும் கோவில் பணிகளைத் தொடர்ந்தார்[2].

 
"கன்னி மரியா உரோமை மக்களின் பாதுகாவல்". மிகப் பழைய மரியா ஓவியம். காலம்: நான்காம் நூற்றாண்டு (?)

கோவிலின் கட்டடப் பாணியும் கலையும்

தொகு

புனித மரியா பேராலயம் செவ்விய காலக் கலைப் பாணியோடு உரோமைக் கலைப் பாணியையும் இணைத்து எழுந்தது. அதே சமயத்தில் கிறித்தவக் கலை உருவாக்கமும் அங்கே நிகழ்ந்தது. குறிப்பாக, அன்னை மரியாவுக்கு வணக்கம் செலுத்தும் விதத்தில் அதுவரை கிறித்தவ உலகே கண்டிராத அளவுக்குச் சிறப்பான கோவிலை உருவாக்க வேண்டும் என்னும் நோக்கமும் இக்கோவில் சிறப்புற அமைந்ததற்குத் தூண்டுதலாயிற்று.

இரண்டாம் நூற்றாண்டின் அரச அரண்மனை வடிவில் இக்கோவில் அமைந்தது. மிக உயர்ந்த, விரிந்த நடு நீள்பகுதி; இரு பக்கங்களிலும் துணை நீள்பகுதிகள்; நடு நீள்பகுதி முடியும் இடத்தில் அதன் இருபக்கங்களையும் இணைக்கின்ற வளைவு ("வெற்றி வளைவு = Triumphal Arch); அரைவட்ட வடிவில் அமைந்த குவிமாடக் கூரைப்பகுதி - இதுவே கட்டடத்தின் அடிப்படை வரைவு. கோவிலின் நடு நீள்பகுதியிலும், "வெற்றி வளைவு" என்னும் இணைப்புப் பகுதியிலும் அமைந்த 5ஆம் நூற்றாண்டு கற்பதிகை ஓவியங்கள் மிகப் புகழ்பெற்றவை ஆகும். வெற்றி வளைவுக்குப் பின் அமைந்துள்ள குவிமாடக் கூரைப்பகுதியிலும் அழகிய கற்பதிகை ஓவியங்கள் உள்ளன. ஆனால் அவை காலத்தால் பிற்பட்டவை (13ஆம் நூற்றாண்டு).

நடு நீள்பகுதியைத் தாங்குகின்ற "ஏத்தன்சு பாணி" பளிங்குத் தூண்கள் மிகப் பழமையானவை. அவை பழைய மரியா கோவிலிலிருந்தோ மற்றொரு உரோமை கட்டடத்திலிருந்தோ பெறப்பட்டிருக்க வேண்டும். முப்பத்தாறு பளிங்குத் தூண்களும் நான்கு கருங்கல் தூண்களும் ஆங்குள்ளன.

14ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட மணிக்கூண்டு 240 அடி (75 மீட்டர்) உயரம் கொண்டதாக, உரோமை நகரிலேயே மிக உயரமானதாகத் திகழ்கின்றது. 16ஆம் நூற்றாண்டில் சீரமைக்கப்பட்ட உயர்ந்த உள்கூரை குழிப்பதிகை முறையில் அணிசெய்யப்பட்டு, தங்க முலாம் பூசப்பட்டு எழிலோடு விளங்குகிறது. அதை வடிவமைத்தவர் சூலியானோ சான்ங்கால்லோ என்னும் கலைஞர் ஆவார்.

கோவிலின் முகப்பு 12ஆம் நூற்றாண்டைச் சார்ந்தது. அத்தோடு ஒரு மேல்மாடம் 1743இல் திருத்தந்தை பதினான்காம் பெனடிக்ட் என்பவரால் சேர்க்கப்பட்டது.

கோவில் முற்றத்தில் அமைந்துள்ள தூண் 1614 -இல் எழுப்பப்பட்டது. இத்தூண் காண்சுட்டண்டைன் பேரரசரின் அரண்மனையிலிருந்து பெறப்பட்டதாகும். தூணின் அடிமட்டத்தில் கார்லோ மதேர்னோ வடிவமைத்த நீரூற்று உள்ளது.

கோவில் சீரமைப்புப் பணிகள்

தொகு

பல நூற்றாண்டுகளில் புனித மரியா கோவிலின் சீரமைப்புப் பணிகள் பல திருத்தந்தையர் ஆட்சிக்காலத்தில் நடந்தன. அந்த ஆட்சிக்காலங்கள்:

 
புனித மரியா கோவிலின் நடு நீள்பகுதி, பளிங்குத் தளம், தூண்வரிசை, "வெற்றி வளைவு" ஆகிவற்றின் எழில்மிகு தோற்றம்.

கோவிலின் கருவூலங்கள்

தொகு

புனித மரியா கோவிலில் கலையழகும் சமய முதன்மையும் பொருந்திய பல பொருள்கள் உள்ளன. அவற்றுள் சில கீழே குறிப்பிடப்படுகின்றன:

  • மணிக்கூண்டு: இது உரோமைவழிக் கலைப்பாணியில் ("Romanesque") 14ஆம் நூற்றாண்டில், திருத்தந்தை பதினொன்றாம் கிரகோரி அவிஞ்ஞோன் நகரிலிருந்து உரோமை திரும்பிய பின் எழுப்பப்பட்டது. 75 மீட்டர் உயரம் கொண்ட இம்மணிக்கூண்டில் ஐந்து பெரிய மணிகள் உள்ளன. அவற்றுள் ஒன்று "தவறிப்போன மணி" ("the lost one"; இத்தாலியம்: La Sperduta) என்று அழைக்கப்படுகிறது. ஒவ்வொரு இரவும் 9 மணிக்கு அந்த "தவறிப்போன மணி" மட்டும் தனக்கே உரித்தான தொனியில் ஒலித்து, மக்களை இறைவேண்டலுக்கு அழைக்கும்.
  • கோவிலின் நடுக்கதவு: இச்செப்புக் கதவில் மரியாவின் வாழ்க்கை நிகழ்ச்சிகள் வடிக்கப்பட்டுள்ளன. அக்காட்சிகளைச் சுற்றிலும் பழைய ஏற்பாட்டு இறைவாக்கினர், மரியாவை முன் குறிக்கும் நான்கு பழைய ஏற்பாட்டுப் பெண்மணிகள், நற்செய்தியாளர்கள் படிமங்கள் உள்ளன.
  • திருக்கதவு: இது இடது புறம் உள்ளது. இதை முத்திப்பேறு பெற்ற திருத்தந்தை இரண்டாம் யோவான் பவுல் 2001, டிசம்பர் 8ஆம் நாள் அர்ச்சித்தார். இக்கதவின் வலது பிரிவில் உயிர்த்தெழுந்த இயேசு மரியாவுக்குத் தோன்றும் காட்சி உள்ளது. இயேசுவின் முகச்சாயல் தூரின் சுற்றுத்துணி உருவச் சாயலில் (Shroud) உள்ளது. மரியாவின் முகம் பழைய கலைப்பாணியில் உள்ளது. கிணற்றருகே மரியாவுக்கு இயேசு பிறப்பின் அறிவிப்பு நிகழ்வதும், தூய ஆவி இறங்கி வருவதும் சித்தரிக்கப்பட்டுள்ளன. கீழ்ப்பகுதியில் எபேசு பொதுச்சங்கத்தில் மரியா "கடவுளின் தாய்" என்று அறிவிக்கப்பட்ட நிகழ்ச்சியும், இரண்டாம் வத்திக்கான் பொதுச்சங்கம் மரியாவை "திருச்சபையின் தாய்" என்று அறிவித்த நிகழ்ச்சியும் பதிக்கப்பட்டுள்ளன. கதவின் மேற்பகுதியில் திருத்தந்தை இரண்டாம் யோவான் பவுலின் பதவிச் சின்னமும் அவரது விருதுவாக்காகிய "என்னை முழுதும் உமக்குத் தந்தேன்" (Totus Tuus) என்னும் சொற்றொடரும் உள்ளன.
  • கோவிலின் தளம்: கோவில் தளம் முற்றிலுமாகப் பளிங்குக் கற்களால் ஆனது. கம்பளம் விரித்தாற்போல, கலைநுணுக்கத்தோடு வரிசைப்படுத்தப்பட்ட கல்வேலையை அங்கே காணலாம். அது 13ஆம் நூற்றாண்டில் பெரும் புகழ் பெற்ற "கொசுமாத்தி" (Cosmati) என்னும் குடும்பத்தாரால் வடிவமைக்கப்பட்டது. உரோமைப் பெருங்குடி மக்களாகிய இசுக்கோத்துசு பாப்பரோனி மற்றும் அவர்தம் மகன் யோவான்னி என்பவர்கள் கோவிலுக்கு அளித்த நன்கொடை அது.
  • வெற்றி வளைவில் அமைந்த கற்பதிகை ஓவியங்கள்: இவை மிகச் சிறப்பு வாய்ந்தவை. கி.பி. 431இல் நிகழ்ந்த எபேசு பொதுச்சங்கம் மரியாவைக் "கடவுளின் தாய்" (கடவுளைத் தாங்கியவர்) என்று அறிக்கையிட்டதைத் தொடர்ந்து, மரியாவின் புகழைப் பறைசாற்றவும், அவருக்கு வணக்கம் செலுத்தவும் இவ்வழகிய கற்பதிகை ஓவியங்கள் உருவாக்கப்பட்டன.

வெற்றி வளைவில் நான்கு படிமத் தொகுப்புகள் உள்ளன. மேலே இடதுபுறத்தில் மரியாவுக்கு இயேசுவின் பிறப்பு அறிவிக்கப்படுகிறது. மரியா உரோமை இளவரசி போல உடையணிந்துள்ளார். அவர்தம் கைகளில் ஊதா நிறத் திரையை நெய்துகொண்டிருக்கிறார். அவர் ஊழியம் செய்துவந்த எருசலேம் கோவிலுக்குக் காணிக்கையாகக் கொடுக்க அத்திரையை அவர் உருவாக்கிக்கொண்டிருக்கிறார்.

படிமத் தொகுப்பின் இடதுபுறத்தில் வானதூதர் மரியாவின் கணவர் யோசேப்புக்கு இயேசு பிறப்பை அறிவிக்கிறார். அடுத்த படிமத் தொகுப்பில் குழந்தை இயேசுவைக் கீழ்த்திசை ஞானியர் வணங்குகின்றனர். மாசில்லாக் குழந்தைகளை ஏரோது மன்னன் கொலைசெய்கிறான். நீல நிற மேலாடை அணிந்த பெண் எலிசபெத்து; அவர்தம் கைகளில் உள்ள குழந்தை திருமுழுக்கு யோவான். எலிசபெத்து தம் குழந்தையை எடுத்துக்கொண்டு ஓடிச்செல்ல அணியமாயுள்ளார்.

வெற்றி வளைவின் மேல்பகுதியில் வலது புறத்தில் உள்ள படிமத் தொகுப்புகள்: இயேசு எருசலேம் கோவிலில் காணிக்கையாக ஒப்புக்கொடுக்கப்படுகிறார். திருக்குடும்பம் எகிப்துக்குத் தப்பியோடும் காட்சியில் விவிலியப் புறநூல் செய்தியொன்று சித்தரிக்கப்பட்டுள்ளது. அதாவது அப்ரோதியசிசு என்னும் எகிப்து அரசன் திருக்குடும்பத்தைச் சந்தித்ததும் தன் தவற்றினை உணர்ந்து, பழைய சமயத்தைக் கைவிட்டு, இயேசுவை உலக மீட்பராக ஏற்று வணங்கினார். கடைசி படிமத்தில் கீழ்த்திசை ஞானியர் ஏரோது அரசனின் முன்னிலையில் வருகின்றனர்.

வெற்றி வளைவின் கீழ்ப்பகுதியில் ஒரு புறம் பெத்லகேம், மறுபுறம் எருசலேம் என்னும் நகர்கள் உள்ளன. இயேசு பெத்லகேமில் பிறந்தார்; எருசலேமில் உயிர்துறந்தார்.

இயேசு மீண்டும் வருவார் என்னும் பொருளில் வெற்றி வளைவின் மேல் நடுப்பகுதிப் படிமத் தொகுப்பு உள்ளது. நடுப்பகுதியில் ஓர் அரியணை உள்ளது. அதில் யாரும் அமரவில்லை. அதுவே கடவுளின் அரியணை. அதன்மேல் மணிமகுடமும் அதைச் சூழ்ந்து ஒரு போர்வையும் உள்ளன. அரியணையின் கால் பகுதியில் திருவெளிப்பாடு நூலும், இயேசு அறிவித்த புதிய சட்டத் தொகுப்பும் உள்ளன. அரியணையின் இருபுறமும் புனித பேதுருவும் புனித பவுலும் நிற்கின்றனர். பேதுரு யூதர் நடுவிலும் பவுல் பிற இனத்தார் நடுவிலும் இயேசுவின் நற்செய்தியை அறிவித்த திருத்தூதர்கள் ஆவர். அவர்களது தலைக்கு மேற்பகுதியி்ல் நான்கு நற்செய்தியாளர்களின் அடையாளங்களாகிய எருது, வானதூதர், சிங்கம், கழுகு ஆகியவை உள்ளன. இயேசு அறிவித்த நற்செய்தியை ஏற்று அதன்படி வாழ்வோர் கடவுளின் அரியணையை அணுகிச் சென்று, அவர்தம் வாழ்வில் எந்நாளும் பங்கேற்பர் என்பது இப்படிமத் தொகுப்புகளின் பொருள் ஆகும். இறைவாழ்வைத் தேடுவோர் ஆடுகள் வடிவில் சித்தரிக்கப்பட்டுள்ளனர். இறையியல் செறிவோடும் கலையழகோடும் வடிவமைக்கப்பட்ட இக்கற்பதிகை ஓவியங்கள் உலகப் புகழ் பெற்றவை.

அரியணையின் கீழ் மரியாவுக்கு அழகிய கோவிலை உருவாக்கிய திருத்தந்தை மூன்றாம் சிக்ஸ்துசு என்பவர் குறித்த சொற்றொடர் உள்ளது: "ஆயர் சிக்ஸ்துசு கடவுளின் மக்களுக்குக் கொடையாக அளித்தார்" (Xystus Episcopus Plebi Dei).

  • உள் குவிமாடக் கற்பதிகை ஓவியம்: இங்கே அமைந்துள்ள கற்பதிகை ஓவியம் இரு பகுதிகளாக உள்ளது. நடுப்பகுதியில் மரியா அரசியாக முடிசூட்டப்படும் காட்சி உள்ளது. இயேசுவும் அவர்தம் தாய் மரியாவும் அழகியதோர் அரியணையில் வீற்றியுள்ளனர். இயேசு மணிகள் பதித்த மகுடத்தைத் தம் அன்னை மரியாவின் தலையில் சூட்டுகிறார். இங்கே மரியா திருச்சபையின் அன்னையாக உள்ளார்; கடவுளின் தாயாக, உலக அரசியாகக் காட்டப்படுகிறார். கதிரவனும் வெண்ணிலவும், வானகத் தூதர்களும் அரியணையின் முன்னிலையில் வணங்கி நிற்கின்றனர். தூய பேதுரு, தூய பவுல், அசிசி நகர் தூய பிரான்சிசு ஆகியோரோடு திருத்தந்தை நான்காம் நிக்கோலாசு இடது புறம் நிற்கின்றார். இத்திருத்தந்தைதான் (ஆட்சி: 1288-1292) இக்கற்பதிகைத் தொகுப்பை உருவாக்கப் பணித்தவர்.

வலது புறத்தில் திருமுழுக்கு யோவானும், நற்செய்தியாளர் யோவானும், புனித அந்தோனியும், நன்கொடையாளர் கர்தினால் கொலோன்னாவும் நிற்கின்றனர்.

இப்படிமத் தொகுதியின் கீழ் நடுப்புறத்தில் "மரியா துயில்கொள்ளுதல்" (Dormitio Mariae) என்னும் காட்சி உள்ளது. மரியாவின் இறப்பு இவ்வாறு குறிக்கப்படுகிறது. இடது பகுதியில் மரியா இயேசுவைப் பெற்றெடுத்த காட்சியும், வலது பகுதியில் மரியா இயேசுவைக் கீழ்த்திசை ஞானியருக்குக் காட்டுகின்ற காட்சியும் உள்ளன. இவ்வாறு மரியாவின் பெருமை இப்பெருங்கோவிலில் பறைசாற்றப்படுகிறது.

ஆதாரங்கள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=புனித_மரியா_பேராலயம்&oldid=3895806" இலிருந்து மீள்விக்கப்பட்டது